Chapter 05

0Shares

தடக்.. தடக்கென்று.. சீராக ரயில் ஓடிக் கொண்டிருந்தது.. ஏஸி கம்பார்ட்மென்டில் எதிரும்.. புதிருமாய்.. அர்ஜூனும், தர்ஷிணியும் அமர்ந்திருந்தார்கள்.. அவர்கள் தேன்நிலவைக் கொண்டாட கோவா போய்க் கொண்டிருந்தார்கள்..

கார்கோ புல்சர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் அவன் இன்னும் கவர்ச்சியாக இருந்தான்.. சும்மாவே அவனைப் பார்த்தால் அலைபாய ஆரம்பிக்கும் தர்ஷிணியின் மனது.. இப்போது அதிகமாய் அலைபாய ஆரம்பித்தது..

அவள் மனதை மறைக்க.. ஜன்னல் கண்ணாடியின் வழி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. அவளை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் முகம் கடுத்தான்..

‘ஏன்.. இவளுக்கு, என் முகத்தைக் கண்டால் ஆகாதா..’

அவன் வேண்டுமென்றே கால்களை நீட்டி அமர்ந்து கொண்டான்.. அவளது முழங்காலில் அவனது முழங்கால் இடிக்க.. அவள் பதறிப் போய் ஒடுங்கி உட்கார்ந்தாள்.. அவனுக்கு இன்னமும் கோபம் அதிகரித்தது..

‘பெரிய.. கற்புக்கரசி.. நான் அவள் மேல் பட்டால், அவள் கற்பு குறைந்து விடுமாம்.. இவள் கற்பை யாருக்காக கட்டிக் காக்கிறாள்..?’

அவன் எழுந்து பாத்ரூமை நோக்கி நடந்தான்.. எழும் போது.. அவனது முழங்கை அவள் மேல் நன்றாக பட்டது.. போகும் போது அவளை உராய்ந்து கொண்டே போனான்..

தர்ஷிணியின் முகம் சிவந்து விட்டது.. அவனது உடல்பட்ட இடங்கள் சிலிர்க்க.. அவளது மனதில் ஆசைக் கனல் மூண்டது..

‘காதல் என்ற நோய்க்கு..

காதலே மருந்து..’

அவசரமாய் மனம் சிறு கவிதையொன்றைச் சொன்னது..

அவள் உணர்ச்சி வேகத்தில் கண் கலங்கினாள்.. இமைகளைச் சிமிட்டி அதை அடக்கிக் கொண்டாள்.. அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த பெரியவரின் புருவங்கள் மேலேறின..

‘பாவம்.. இந்தப் பெண் தனியாகப் போகுது போல.. அந்த தடிப்பயல்.. இவளிடம் வம்பு பண்ணிக் கொண்டிருக்கிறானே.. காலை நீட்டுகிறான்.. கையைப் போடுகிறான்.. போதாக் குறைக்கு.. அவளை உரசியபடி எழுந்து போகிறான்..’ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..

அர்ஜூன் அப்போது தர்ஷிணியின் அழகைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்..

‘ராட்ஸஸி.. யார் இவளை.. இவ்வளவு அழகாக இருந்து தொலைக்கச் சொன்னது..? என் கையில் தாலியையும் வாங்கிக் கொண்டு என்னை.. எவனோ ஒருவன் போல் முறைத்துக் கொண்டு வருகிறாள்.. இந்த லட்சணத்தில் தேன்நிலவை வெற்றிகரமாய் கொண்டாட என் ஃபிரண்ட்ஸ்.. டிப்ஸ் வேறு தந்திருக்கிறார்கள்.. அவர்களுக்குத் தெரியுமா என் அவதி.. அவளைத் தொடவும் முடியாமல்.. விடவும் முடியாமல்.. நான் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்..’

சற்று நேரம்.. வாசல் பக்கமாக நின்று கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்தான்..

தூரத்தில் அவன் வரும்போதே.. தர்ஷிணியின் கண்களில் மின்னல் வெட்டியதை அவன் கவனித்து விட்டான்..

‘இரக்கமில்லாதவள்.. என்னைக் காணோமென்று தவித்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் அதை வெளியே மட்டும் காட்டிக் கொள்ள மாட்டாள்.. இவளுக்கு இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்..?’

அவன் மீண்டும் அவளைப் பார்த்தவாறு வந்து.. அவள் மேல் உராய்ந்தபடி கடந்து சென்று அவளெதிரில் அமர்ந்தான்.. அவள்.. உதட்டைக் கடித்தவண்ணம் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.. அவன் அவளைப் பார்த்த வண்ணம் கைகளை வேண்டுமென்றே நீட்டி.. சோம்பல் முறித்தான்.. அவனது கைகள் அவள் மீது பட.. அவள் குறுகிக் கொண்டாள்..

அவ்வளவுதான்.. அந்தப் பெரியவர் கோபத்துடன் எழுந்து அவனது சட்டையைப் பிடித்தார்..

“ஏண்டா.. அப்போதிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. நீ கையை நீட்டுற.. காலை நீட்டுற.. அந்தப் பெண்ணின் மேல் – எருமை மாடு.. குட்டிச் சுவரின் மேல் உராய்வது போல் உராய்ந்து கொண்டு போகிற.. போதாக் குறைக்கு அந்தப் பெண்ணை முழித்து.. முழித்து பார்க்கிற.. நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிற..? உனக்கெல்லாம் அக்கா.. தங்கச்சி.. இல்லையா..?”

தர்ஷிணி.. பதறி எழுந்து.. விளக்கம் சொல்ல வார்த்தை வராமல்.. அதிர்ச்சியுடன் தடுமாறி நிற்க.. அர்ஜூன் அவளை ‘இது.. போதுமா..?’ என்பது போல் பார்த்தான்.. மற்ற இருக்கையில் இருந்தவர்கள் அவர்களைச் சுற்றிக் கொள்ள – அர்ஜூன் அமைதியாக அவரின் கைகளை விலக்கி விட்டு, தன் சட்டையை நீவி விட்டுக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தான்..

“எப்படி சார்.. இவ்வளவு கரெக்டாக கண்டுபிடித்தீங்க..? ஆமாம்.. எனக்கு அக்கா.. தங்கை இல்லைதான்..”

“யு.. எவ்வளவு திமிராகப் பதில் சொல்கிறாய்..?”

“நான் பிறந்ததில் இருந்து இப்படித்தான்..”

“ஏய்ய்.. அந்தப் பெண்ணின் முகத்தைப் பாருடா..”

“வண்டி கிளம்பியதில் இருந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்.. உங்களுக்குத்தான் 

அது பொறுக்கவில்லை.. அது ஏன்னும் எனக்குத் தெரியவில்லை..”

“அடப்பாவி.. இப்படி நியாயவதி போல் பேசுகிறாயே..”

“நான் நியாயவாதியேதான்.. அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்..”

“இந்தப் பெண் யாரோ.. எவரோ..”

“அது உங்களுக்குத்தான்.. எனக்கு இந்தப் பெண் யாரோ.. எவரோ.. இல்லை..”

“எவ்வளவு அடாவடியாய் பேசுகிறான் பாருங்கள்.. டி.டி.ஆர். சார்.. நல்ல நேரத்தில் வந்தீங்க.. இந்த ஆளை விசாரிங்க..”

அவர்களின் அருகே வந்த டி.டி.ஆர்.. புருவம் தூக்கினார்.. “என்ன மேடம்.. என்ன தகராறு..?” என்று தர்ஷிணியிடம் வினவினார்..

‘இவனுக்கு என்னைக் கண்ணுக்கு தெரிகிறதா..? என் அழகான பெண்டாட்டியைத்தான் தெரிகிறது..?’ அர்ஜூன் மனதிற்குள் பொறுமினான்..

“நத்திங் சார்.. இவர், என் ஹஸ்பெண்டை தவறாக நினைத்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்..” தர்ஷிணி முகம் சிவக்க விளக்கம் கொடுத்தாள்..

“ஹஸ்பெண்டா..” அந்தப் பெரியவர் திகைத்து விழிக்க..

‘முதல் முறையாய் அவள் வாயால் என்னைத் தன் புருஷன் என்று சொல்லியிருக்கிறாள்..’ அர்ஜூனின் மனதில் சாரல் அடித்தது..

“ஏம்மா.. இவர் உன் புருஷனா..?”

“ஆமாம் சார்..”

அந்தப் பெரியவர்.. அர்ஜூனின் கைகளைப் பிடித்து.. “ஐ ஆம் ஸாரி..” என்று அசடு வழிந்தார்..

“நல்லாப் பிரச்னையைக் கிளப்பினீங்க போங்க.. சார்.. இவங்க டிக்கெட்டில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் அர்ஜூன்னு தான் போட்டிருக்கிறது..” டி.டி.ஆர் விளக்கம் கொடுத்து விட்டு நகர்ந்தார்..

அந்தப் பெரியவர்.. புது மணமகள் போல வெட்கப்பட்டுக் கொண்டு.. ஆயிரம் முறை அர்ஜூனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு.. அவருடைய இருக்கையில் போய் அமர்ந்தார்..

அர்ஜூன் பல்லைக் கடித்தபடி தர்ஷிணியை முறைத்தான்.. அவள் தலைகவிழ்ந்தபடி தன் இடத்தில் அமர.. அவனும் அவளுக்கு எதிரே அமர்ந்தான்..

இப்போது நன்றாகவே கால்களை அவள் பக்கம் நீட்டினான்.. அவள் கால்களை விலக்கிக் கொள்ள வில்லை.. பெரியவர்.. இனி இந்தப் பக்கம் திரும்பியே பார்க்கக் கூடாது என்று மனதில் சபதம் போட்டுக் கொண்டவராய்.. முகம் திருப்பிக் கொண்டார்..

அவனது கால்களின் தொடுகை உணர்வு.. தர்ஷிணியின் மனதில் ஓர் இன்ப அவஸ்தையை உண்டு பண்ணியது.. அவள் மெதுவாய் கால்களை நகர்த்தினால்.. அவன் சரிந்து மீண்டும் அவள் கால்களின் மேல் பட்டான்..

‘கள்ளன்..’ அவள் பல் கடித்து அவனது சேஷ்டையை மனதிற்குள் ரசித்தாள்..

‘பிடிவாதக்காரன்.. ஸ்கூல் டயத்தில் பண்ணிய அழும்பு அப்படியே இன்னும் மாறாமல் இருக்கிறது..’

அவனது முன் நெற்றியில் படிந்து, கலைந்திருந்த தலைமுடியில்.. விரல் விட்டுக் கோத.. அவள் மனம் துடித்தது..

அந்த ரயிலின் மெல்லிய ஊஞ்சலாட்டத்தில்.. தாள லயம் மாறாத.. அதன் சீரான சப்தத்தில்.. அவள் மனதில் அவன் மீது காதல் பிறந்தது.. அவளது நெஞ்சம் மாறியது..

‘மாறியது நெஞ்சம்..

மாற்றியவர் யாரோ..

காரிகையின் உள்ளம்..

காண வருவாரோ..’

அவளது மனம் பாடியது.. அவள் ஒயிலாக சரிந்து அமர்ந்து.. அவனைப் பார்த்தாள்.. அவன் விழி மூடி சற்றுமுன் நிகழ்ந்த நிகழ்வைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.. அவன் பாராதபோது அவனைப் பார்ப்பது அவளுக்கு சுகமாக இருந்தது..

‘ஆடை தந்து.. மலர் வாடை தந்து.. மண

மேடை வந்தவனைக் கண்டு..

ஆசை முந்திவர.. நாணம் பிந்திவர..

பேசிப் பார்க்கும் நினைவுண்டு..

அம்மம்மா.. அம்மா..

இந்த நேரம்.. அந்த நெஞ்சில்..

என்ன நினைவோ..?’

– மனதில் பாடல் தொடர்ந்து ஒலித்தது.. அவன் கண் திறந்து அவளைப் பார்க்க.. அவசரமாய் அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்..

‘பாராதது போல் என்னைப் பார்க்கிறாள்..

சேராதது போல் என்னில் சேர்கிறாள்..

     இவள் காதல் தந்தவள்.. அன்று மோதல் கொண்டவள்..

என்று சேர்ந்து என்னில் கலப்பாளோ..?’

அவன் மனம் அவசரக் கவிதை சொன்னது.. அவள் மனதில் அவனைப் பற்றிய பாடல் இருக்க.. இருவரும் அதை வாய் விட்டுச் சொல்லாமல்.. வாயிருந்தும் ஊமைகளாய் அந்த ரயில் பயணத்தை ரசித்தவாறு சென்றனர்..

ரயில் நின்றது.. அர்ஜூன் எழுந்து பெட்டியையும்.. பைகளையும் எடுத்துக் கொண்டான்.. அவள் ஒன்றை வாங்கிக் கொள்ள முயல.. கொடுக்க மறுத்து.. ரயிலை விட்டு இறங்கி பெட்டியை தரையில் வைத்து விட்டு.. அவள் பிளாட்பாரத்தில் இறங்க கை கொடுத்தான்..

அவள் தயங்கவும்.. அவன் முறைத்தான்.. அவள் அவசரமாய் அவன் கரம்பிடித்துக் கொண்டு.. தரையில் கால் பதித்தாள்..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link