Chapter 06

0Shares

தங்க நிறத்தில் மண் துகள்கள் மின்னிக் கொண்டிருந்த கோவா கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள் அர்ஜூனும்.. தர்ஷிணியும்.. 

கையிலிருந்த செல்போனில்.. கண்ணுக்குத் தென்படுகிற இயற்கைக் காட்சிகளை படம் பிடித்தபடி தர்ஷிணி வந்து கொண்டிருந்தாள்..

‘என்னவோ சுற்றுலாவுக்கு வந்தது போல் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருக்கிறாளே.. பக்கத்தில் புருஷன்காரன் இருக்கிறான் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா..?’

அர்ஜூன் எரிச்சலுடன் அவளைக் கனல்பார்வை பார்த்தான்.. அந்த நொடியில் கண்ணில் தென்பட்ட ஆண், பெண் ஜோடிகளின் நெருக்கத்தைப் பார்த்தது முகம் சிவக்க.. அர்ஜூனைப் பார்த்த தர்ஷிணி.. அவனது கனல் பார்வையைக் கண்டதும்.. கண் திருப்பிக் கொண்டாள்..

‘அடக்கவுளே.. அந்த ஜோடிகளைப் போல.. என்னையும் நீ கொஞ்சுன்னு நான் கேட்பது போல் நினைத்து விட்டானோ.. இவனுக்குத்தான் என்னைப் பிடிக்காதே.. எதிரியைப் போல் நினைத்துக் கொண்டிருக்கிறானே.. அப்புறம் என்னை இந்தப் பார்வை பார்க்காமல் வேறென்ன செய்வான்..?’

அவள் அதற்குப்பின் மறந்தும் அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.. அதை உணர்ந்த அர்ஜூனுக்கு கடல் காற்றும்.. கனல் காற்றாய் மாறி விட்டது.. அவன் பல்லை நறநறவென்று கடித்தான்..

உறவினர் கூட இல்லாத தனிமை.. அறிமுகம் இல்லாத புதிய ஊர்.. காலையில் எழுந்து வேலைக்கு ஓட வேண்டுமென்ற கடமைத் தளைகள் இல்லாத நாள்.. கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் கருத்தைக் கவரும் கடலும் இயற்கைக் காட்சிகளும்.. அருகில் அழகான புத்தம்புது மனைவி.. தென்படும் இடங்களில் எல்லாம் பார்க்க நேரும் ஆண்.. பெண்ணின் நெருக்கம்..

அர்ஜூனின் உடல் சூடேறியது.. ‘இப்படி ஒரு சூழ்நிலையில் அவள் இணக்கமாக நடந்து கொண்டால் எப்படியிருக்கும்..’ என்ற எதிர்பார்ப்பு அவன் மனதில் எழுந்தது..

‘எப்படி வருகிறாள் பார்.. ஜடம்.. கண்ணுக்கு முன்னால் எல்லோரும் இப்படி இழைகிறார்களே.. அதைப் பார்த்துக் கூட இவளுக்குள் எந்த உணர்ச்சியும் உண்டாகவில்லையா..? ம்ஹூம்.. எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறாளே.. ஜென்மம்.. இவளுக்குத்தான் என்னைக் கண்டால் பிடித்துத் தொலைக்க மாட்டேன் என்கிறதே..’

அவள் என்னமோ.. இயல்பாக மணலைத் தட்டியபடி யதார்த்தமாகத்தான் அவனை பார்த்து வைத்தாள்.. ஆனால் மனதிற்குள் பொங்கிக் கொண்டிருந்த அர்ஜூன் அவளுடன் சண்டைக்குப் போனான்..

“என்னடி.. பார்க்கிற..?”

“நான் சும்மாதான் பார்த்தேன்..”

“இதுதான் நீ சும்மா பார்க்கும் லட்சணமா..?”

“ஏங்க.. இப்போ.. நான் எப்படித்தான் பார்த்தேன்னு நீங்க நினைக்கறீங்க..?”

“ஏண்டி.. கண்ணகி மதுரையைப் பார்த்த பார்வையை நீ என்னைப் பார்த்து வைத்து விட்டு.. அதுக்கு வியாக்கினம் வேறு பேசுகிறாயா..?”

“வியாக்கினமும்.. வில்லங்கமும்.. உங்களுக்குத்தான் தெரியும்.. எனக்குத் தெரியாது..”

“ஆமாம்.. உனக்கு ஒன்றுமே தெரியாது.. கையில் பீடிங் பாட்டிலோடு உட்கார்ந்திருக்கும் பேபி நீ..”

“நான் என்னை அப்படிச் சொல்லிக் கொண்டேனா..?”

“வாய்விட்டுச் சொன்னால்தானா..? நீ காட்டுகிற பிலிம் அந்த ரேஞ்சுக்குத்தானே இருக்கிறது..?”

“அர்ஜூன்..”

“ஹ.. புருஷன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறாயே..”

“ஹலோ.. புருஷனின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டதெல்லாம் அந்தக் காலம்..”

“இப்போ.. புருஷனின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிற காலமா..? நீ இந்தக் காலத்துப் பெண்ணில்லையா..? விளக்கம் சொல்… அடச் சொல்லும்மா..”

‘எப்படிப் பேசுகிறான்..’ தர்ஷிணிக்கு கண்கள் கலங்கி விட்டன.. அவள் கண்களில் நீர் மல்க அவனைப் பார்த்தாள்..

அவளது விழி நீரைக் கண்டதும் அவனுக்குள் இனம்புரியாத திருப்தி முளைத்தது..

‘ஒரு வார்த்தை சொன்னால் தாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறாளே.. இவளுக்கு என்மேல் புருஷன் என்ற உணர்வு இல்லாமல் இல்லை.. அப்புறம் ஏன் இப்படி நடிக்கிறாள்..?’

தர்ஷிணி உற்சாகம் இழந்தவளாய் அவனுடன் அறைக்குத் திரும்பினாள்.. 

“ஹூம்.. சென்னைக்கும், கோவாவுக்கும் என்னடி பெரிய வித்தியாசம் இருக்கு..?”

“எனக்கு சொல்லத் தெரியவில்லை.. அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்..”

“அங்கேயும் கட்டிலின் அந்த ஓரமாய் நானும்.. இந்த ஓரமாய் நீயும் படுக்கப் போகிறோம்.. அதற்கு எதற்கு வெட்டியாய் காசை செலவு பண்ணி கோவாவுக்கு வரவேண்டும்..”

அவள் முகம் சிவக்க.. முகம் திருப்பிக் கொண்டாள்.

‘உன்னை யார் கட்டிலின் அந்த ஓரத்திலேயே இருக்கச் சொன்னது..? தேவையென்றால் என்னைத் தேடி வர மாட்டாயா..? உனக்கு நான் தேவையில்லை.. இவளில்லாமல் வேறு ஒருத்தியின் கழுத்தில் நாம் தாலி கட்டியிருந்தால் இந்த தேன்நிலவை நாம் என்ஜாய் பண்ணியிருக்கலாமேன்னு நினைக்கிறாய்.. அதைச் 

சொல்ல மாட்டாமல்தான் இந்தப் பொறுமல்.. பொறுமுகிறாய்..’

அவளது மனம் படும் பாட்டை அவன் வேறுவிதமாகப் புரிந்து கொண்டான்..

‘உடனே முகத்தைத் திருப்பிக் கொள்.. ஏன்.. என் முகத்தைப் பார்க்க பிடிக்கவில்லையா..? உனக்கு நான் தேவையில்லையா..? நான் கட்டிய தாலிக்கு 

மட்டும் அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறாயே.. என் உணர்வுகளையும் அதுபோல் மதிக்க மாட்டாயா..? ஏன், கட்டிலில் படுத்திருப்பவள்.. தூக்கத்தில் கூட என் மேல் கை போட மறுக்கிற..? உன்னிடமிருந்து ஒரு சிறு பார்வை வந்தால்கூட எனக்குப் போதுமே.. அந்தப் பார்வையால் அழைக்கக்கூட நீ மறுக்கிறாயே.. அப்புறம் ஏன் புருஷனென்று உருகுகிற..? ஊருக்காகவா..? உறவுக்காகவா..? உனக்காக இல்லையா..? எனக்காக நீ இல்லையா..?’

அந்த இரண்டு முட்டாள்களும், மனதில் நினைப்பதை வாய்விட்டுச் சொல்லியிருந்தால்.. அந்த தேன்நிலவு இன்பமாகக் கழிந்திருக்கும்.. அவர்கள் அதைச் செய்யவில்லை.. நினைப்பதையெல்லாம் வாய்விட்டுச் சொல்ல.. ஏனோ மனித ஜீவன்களுக்கு வாய்ப்பதில்லை..

அவள் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தாள்.. அவளைத் தொட்டு ஆள முடியாத தாபத்துடன் இருந்தவன் கோபம் கொண்டான்..

“என்னடி வாய்க்குள் முணுமுணுக்கிற.. எதையும் வெளிப்படையாய் பேசி உனக்குப் பழக்கமில்லையா..?”

“வேண்டாம் அர்ஜூன்..”

“ஏண்டி கத்துகிற..? நீ என்ன முணுமுணுத்த..? அதைச் சொல்லு முதலில்..”

“வெட்டியாய் பணத்தை செலவழித்து என்னை கோவாவுக்கு அழைத்துக் கொண்டு வாங்கன்னு நான் உங்களிடம் கெஞ்சினேனா.. இல்லை ஜாடை மாடையாய் சொன்னேனா..?”

‘அதையெல்லாம் நீ செய்ய வேண்டும்ன்னுதானே நான் எதிர்பார்க்கிறேன்.. ஆனால் கல்லுளி மங்கி.. நீ அதைச் செய்து விடுவாயா..?’

அவன் கோபத்துடன் முகம் கருத்தான்..

“இப்போ நீ என்னதான் சொல்ல வருகிற..?”

“நீங்க கூப்பிட்டீங்க.. நான் உங்க பின்னால் வந்தேன்..”

அவளது வார்த்தையில்.. ‘நீ படுக்கையில் அழைத்திருந்தால் நான் உன் பக்கத்தில் வந்திருப்பேன்..’ என்ற மறை பொருள் தொனித்தது..

அவனோ.. ‘கடமைக்காக நான் உன் பின்னால் வந்தேன்..’ என்று அவள் சொல்வதாக நினைத்துக் கொண்டான்.. அவனுக்கு கோபம் தலைக்கேறி விட்டது..

“ஸோ.. தாலி கட்டிவிட்ட கடமைக்காக என் பின்னால் வந்தவள் நீ..”

‘எதைச் சொன்னால்.. எப்படிப் பொருள் கொள்கிறான் பார்..’ அவளது மனம் பொறுமியது..

“ஆமாம்.. இப்ப அதுக்கு என்னங்கறீங்க..?”

“அப்படியே.. சுடிதார் போட்ட பேட்டை ரவுடிதாண்டி நீ..”

“நீங்கள் மட்டும் யார்..? ஜீன்ஸ் போட்ட பேட்டை ரவுடிதானே..? என்னைச் சொல்ல வந்துவிட்டீங்களா..?”

“ஆமாமாம்.. நான் ஒரு வார்த்தை சொன்னால் நீ பதினைந்து வார்த்தைகளைத் திருப்பிச் சொல்லு.. விளங்கி விடும்..”

“அந்த ஒரு வார்த்தையைச் சொல்லாமல் வாயை அடக்கி இருக்க உங்களால் முடியாதா..?”

“என்னை அடக்குவதிலேயே குறியாய் இருக்கிறாய்..”

அடங்க மறுத்த உணர்வுகளை அடக்கப் போராடிக் கொண்டிருந்தவன்.. மனதில் தாகத்தோடு கேட்டான்..

“நீங்களும் என்னை அடக்க வேண்டியதுதானே.. யார் உங்களை தடுத்ததாம்..”

அவள் மீண்டும் அவனை அழைக்கும் வார்த்தைகளைக் கூறினாள்.. ஆனால் அது அவனது மரமண்டையில் ஏறாமல் அவன் சண்டையை வளர்ப்பதிலேயே குறியாக இருந்தான்.. தர்ஷிணியின் மனம் வலித்தது.. 

‘இவன் என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டானா.. கிட்ட நெருங்கி வரவே மாட்டானா.. வாழ்நாளெல்லாம் இப்படி இவனுக்காக நான் மறுகி நிற்பதிலேயே கழிந்து விடுமா..?’

அவர்கள் இரவு சாப்பிடப் போகையில் மௌனமாகவே போனார்கள்… அறையின் இதமான மெல்லிய வெளிச்சத்தில்… எதிரே முகத்தில் சோகம் ததும்ப அமர்ந்திருந்தவளைப் பார்க்கும் போது.. ஒரு தேவதையின் கோட்டுச் சித்திரத்தைப் பார்ப்பது போலவே அவனுக்கு இருந்தது.. அந்த ஏஸி ஹால் முழுவதும் மெல்லிய ஆங்கில இசை நிறைந்திருந்தது.. அவன் மனதில் இதம் பரவியது.

அவளை அவன் விரும்பினான்.. அவளது இந்த அருகாமையில் மனம் குளிர்ந்தான்… அழகான தேவதையைப் போன்ற மனைவி கிடைக்க தான் கொடுத்து  வைத்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான்..

அவளோ, அவன் தன்னை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு பார்வையை தழைத்துக் கொண்டாள்..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link