Chapter 11

0Shares

‘மாளவிகா.. யார் அவள்..?’

தர்ஷிணிக்கு தூக்கம் வரவில்லை.. புரண்டு.. புரண்டு படுத்தாள்.. ‘அமெரிக்காக் காரியாமே.. அவள் வந்ததால் மாமனாரைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு அர்ஜூன் வர மறுத்து விட்டானாமே.. தர்ஷிணியை விட மாளவிகா அர்ஜூனுக்கு உயர்வாகப் போய் விட்டாளா..?’

செல்போனை எடுத்தாள்.. மணி பார்த்தாள்.. பதினொன்றை தாண்டிக் கொண்டிருந்தது.. பேசலாமா என்று நினைத்தாள்.. அவன் பேசினானா.. என்று தோன்ற.. அந்த நினைவை மாற்றிக் கொண்டாள்..

 ‘யார் அந்த நிலவு..?

உனக்கும்.. எனக்கும்.. ஊடே வருவது..?

உறவைக் கூட மறக்க வைப்பது..?’

-என்று.. செய்தியொன்றை அவனுக்கு அனுப்பி வைத்தாள்.. கண்மூடித் தூங்க முயன்றாள்..

அர்ஜூனின் போன், செய்தி வந்ததை அறிவிக்கும் போது.. அவன் அப்போதுதான் மாளவிகாவை அவள் தங்கியிருந்த உறவினர் வீட்டில் இறங்கி விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..

காரை நிறுத்தி விட்டு இறங்கி.. வீட்டுக்குள் வந்தவன்.. தமிழ்செல்வி அழைப்பதைக் கேட்டுத் தயங்கி நின்றான்..

“ஏன் அர்ஜூன்.. தர்ஷிணியின் அப்பாவைத்தான் டிஸ்ஜார்ஜ் பண்ணியாச்சே.. இன்னும் ஏன் தர்ஷிணி அங்கேயே இருக்க வேண்டும்..? நம் வீட்டுக்கு அழைத்து வந்து விடு..”

“நீங்கள் கிளம்பி வரும் போது அவளும் உங்களுடன் புறப்படவில்லையா..?”

“இல்லையேப்பா.. ‘நானும் வருகிறேன்’னு அவள் சொல்வாள்ன்னு தான் நானும் உன் அப்பாவும் எதிர்பார்த்தோம்.. ஆனால் அவள் அப்படிச் சொல்லவுமில்லை.. எங்களுடன் கிளம்பி வரவுமில்லை..”

“நீங்கள் கூப்பிடவில்லையா..?”

“எப்படிப்பா கூப்பிடுவது..? அவளுடைய அம்மாவாவது.. ‘இனி நானாக பார்த்துக் கொள்வேன்.. தர்ஷிணி கிளம்பட்டும்’ன்னு ஒருவார்த்தை சொல்லியிருக்கணும்.. அவங்களும் சொல்லவில்லை.. அப்புறம் எப்படி.. அவளைக் கூப்பிடுவது..?”

“ம்.. அவளாக வருகிறேன்னு சொல்லும் வரை அவள் அங்கேயே இருக்கட்டும்மா..”

“ஏண்டா..?”

“அவள் இங்கே வந்து அவளுடைய அப்பாவைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்.. அதற்கு அவள் அவருடைய உடம்பு முழுதாய் குணமாகும் வரை அங்கேயே இருப்பது பெட்டர் இல்லையா..?”

“என்னவோடா.. எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.. கல்யாணம் பண்ணி வந்த பின்னால்.. புருஷன் வீடுதான் தன் வீடுன்னு ஒரு பொண்ணு நினைக்கணும். இவளானா.. அப்பாவுக்கு உடம்பு சரியாகாமல் வரமாட்டேன்னு பிடிவாதம் பண்ணிக்கிட்டு இருக்காளே..”

தமிழ்செல்வி புலம்பியபடி போய்விட.. அர்ஜூன், மனதில் இருந்த உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுகிப் போன முகத்துடன் படியேறினான்..

‘அப்பாம்மாவுடன் கிளம்பி வரவில்லையா..?’

அறைக்கதவை திறந்து மூடினான்.. உடைமாற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.. செல்போனை எடுத்து தலைமாட்டில் வைக்கப் போன போது.. செய்தி பற்றிய அறிவிப்பு தெரிய.. படித்துப் பார்த்தான்..

‘நீ யார் அதைக் கேட்க..’ என்று பதில் செய்தி அனுப்பலாமா என்று யோசித்தவன்.. அந்த நினைவைக் கைவிட்டான்..

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று நினைத்தவாறு கண்மூடிக் கொண்டான்.. விழிக்குள் அந்தக் காட்சி வந்தது..

அவன் கைபிடித்து இழுக்க.. அவள் அவன் மேல் விழுகிறாள்.. அவன் இறுக்கி அணைத்து அவள் இதழ் நோக்கிக் குனியும் போது..

‘ச்சே..’ என்ற வார்த்தையுடன் அவனை உதறிவிட்டு எழுந்து கொள்கிறாள்.. 

அர்ஜூன் தூங்க அன்று வெகுநேரமானது..

தர்ஷிணி பொறுமை இழந்து கொண்டிருந்தாள்.. அவள் அனுப்பும் செய்திகளுக்குப் பதில் இல்லை.. அவனோடு பேச அவளுக்கு மனம் இல்லை..

இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வந்து விட்டுப் போகும் தமிழ்செல்வியின் முகத்தில் மாற்றம் தெரிந்தது..

“அவர் எப்படியிருக்கிறார் அத்தை..?” என்று தர்ஷிணியாக விசாரித்த போது..

“அதுகூட உனக்கு நினைப்பிருக்கா..?” என்று கேட்டுவிட்டுப் போய் விட்டாள்..

மறுமுறை மாமியார் வந்தபோது தர்ஷிணி.. தனிமையாய் அவள் பக்கத்தில் அமர்ந்து பேச்சுக் கொடுத்தாள்..

“என்னைப் பற்றி அவர் கேட்டாரா அத்தை..?”

“ம்ம்.. கேட்டான்..”

தர்ஷிணியின் மனம் பரபரப்பானது.. அவசரமாக “என்னைப் பற்றி என்ன சொன்னார் அத்தை..?” என்று ஆவலுடன் கேட்டாள்..

“என்னத்தைச் சொல்லுவான்.. அவளாக இங்கே வருகிறேன்னு சொல்கிற வரைக்கும் அங்கேயே இருக்கட்டும்ன்னு சொன்னான்.. வேறு என்ன சொல்வான்..?”

‘அவ்வளவுதானா.. வேறு ஒன்றும் இல்லையா..’ நெஞ்சம் கசந்தாள் தர்ஷிணி..

அவளாக போக விரும்பினால்தான் அங்கே போக வேண்டுமா..?

அது அவள் வீடில்லையா..? அவன் அவளுடைய கணவன் இல்லையா..?

மனம் முரண்டியது..

தமிழ்செல்வி விடைபெற்றுக் கிளம்பு போது.. ‘நானும் வருகிறேன்’ என்று சொல்ல அவளது நாவு துடித்தது.. இயல்பான ரோசம் அதைத் தடுக்க – அவள் வாய் மூடிக் கொண்டாள்..

  ‘நான் வர நினைத்தால்தான்

   வர வேண்டுமா..?

   ஒருவேளை.. நான் வர நினைக்காவிட்டால்..?’

– என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.. இத்தனை நாள் பதில் செய்தி அனுப்பாமல் இருந்தவன்.. இதற்கு மட்டும் உடனே பதில் செய்தி அனுப்பினான்..

 ‘நினைத்தது போல நீயிருக்கலாம் – என்

நிழல்கூட அதைத் தடுக்காது..’

– அவள் விக்கித்துப் போய் விட்டாள்.. இதை அனுப்பியது அர்ஜூன்தானா..? அந்த அளவுக்கு அவளை அவன் வெறுத்து விட்டானா..?

முதல் முறையாக தமிழ்செல்விக்கு அவளாக போன் பண்ணிப் பேசினாள்..

“அவர் சாப்பிட்டு விட்டாரா அத்தை..?”

“எங்கேம்மா நேரா நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிடுகிறான்.. அவனுடைய ஃபிரண்ட் மாளவிகா வந்தாலும் வந்தாள் – இவனுக்கு அவளோடு ஊர் சுற்றவே நேரம் சரியாய் இருக்கு..” போனை வைத்து விட்டாள்..

தர்ஷிணியின் கால்களின் அடியில் பூமி நழுவியது.. பெண் மனம் விழித்துக் கொண்டது.. இனியும் பொறுமை காக்கக் கூடாது.. அதே சமயம்.. அவன் அழைக்காமல் அவன் வீட்டிற்கு செல்லவும் கூடாது..

‘என்ன செய்யலாம்..?’

யோசித்தாள்..

புத்திசாலி தர்ஷிணிக்கு யோசனை உடனே உதயமானது.. தமிழ்செல்விக்கு உடனே போன் போட்டாள்.

“அத்தை..”

“என்னம்மா..”

“சுமங்கலி விரதம் இருக்கிறேன் அத்தை..”

“நல்ல காரியம் பண்ணுகிறாய்..”

“அது முடிந்து விட்டது..”

“அப்படியா..?”

“அதற்காக.. அவரும்.. நானும் சேர்ந்து இன்றைக்கு அம்மன் கோவிலுக்குப் போய் அர்ச்சனை பண்ண வேண்டும்..”

“அவனிடம் சொன்னாயா..?”

“போன் பண்ணினேன் அத்தை.. ரிங் போய்க் கொண்டே இருக்கிறது.. அவர் எடுக்கவில்லை..”

“அவன் வீட்டிற்கு வந்ததும் அனுப்பி வைக்கிறேன்.. நீ கவலையே படாதே..”

“அப்புறம்.. இன்னொரு விஷயம் அத்தை..”

“சொல்லும்மா..”

“கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நேரே நம் வீட்டிற்குத்தான் நாங்கள் வரவேண்டும்.. ஆயிரம்தான் இருந்தாலும் இது என் அம்மா வீடு..”

தமிழ்செல்வியின் காதுகளில் தேனாறு பாய்ந்தது..

“என் தங்கமே..” என்று அவள் மகிழ்ந்து போய் விட்டாள்..

“நீ அவனுடன் கிளம்பி நம் வீட்டிற்கு வந்து விடும்மா.. அங்கே உன் அப்பா குணமாகி விட்டார்தானே..”

“குணமாகாவிட்டாலும்.. அவரைப் பார்த்துக் கொள்ள அம்மா இருக்கிறாங்க.. நான் என் புருஷனைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா..”

‘இல்லாவிட்டால் அந்த மாளவிகா என் புருஷனைத் தூக்கிக் கொண்டு போய் விடுவாளே..’ என்று மனதிற்குள் தர்ஷிணி சொல்லிக் கொண்டதை அறியாதவளாக தமிழ்செல்வி புல்லரித்துப் போனாள்..

“இந்த வார்த்தைகளை உனக்கு எப்படிச் சொல்றதுன்னு நான் தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. நீயே சொல்லிக் கேட்கும் போது.. என் மனசு குளிர்ந்து போகுது மருமகளே..”

“ஆனால்.. அத்தை.. நானாகக் கிளம்புவது போல் இருந்தால், அம்மா.. என்னை சுயநலம் பிடித்தவள்ன்னு நினைத்துவிட மாட்டாங்களா..”

“அவனை உன் அம்மாவிடம் சொல்லச் சொல்கிறேன்.. நீ கவலைப்படாமல் ரெடியாய் இரு..”

போனை வைத்துவிட்டு.. தர்ஷிணி.. தயாராகப் போனாள்.. மாலை நேரத்தில் அழகாக அலங்கரித்து அவன் வரவிற்காகக் காத்திருந்தாள்.. அவனும் வந்தான்.. அவளை எவளோ ஒருத்தியைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு முன்னறையில் அமர்ந்தான்..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link