Chapter 14

0Shares

மறுநாள் காலையில் அறைக்கதவு பலமாய் தட்டப்படும் சப்தம் கேட்டு அர்ஜூன் விழித்துக் கொண்டான்.. அருகே தர்ஷிணி படுத்திருந்தாள்.. எழுந்து சென்று கதவைத் திறந்தான்.. தமிழ்செல்வி காபியோடு நின்றிருந்தாள்..

“என்னம்மா.. நீங்க காபி கொண்டு வரீங்க..”

“தர்ஷிணி எங்கேடா..?”

“படுத்திருக்கிறாள்..”

“இன்னுமா எழுந்திருக்கவில்லை.. அவள் இப்படிப் படுத்துத் தூங்கும் ஆள் இல்லையேடா..”

தமிழ்செல்வி உள்ளே வந்து தர்ஷிணியை தொட்டு எழுப்ப முயன்றாள்.. அவளது கைபட்ட தர்ஷிணியின் மேனி அனலாய்க் கொதித்தது..

“என்னடா.. இப்படிக் காய்ச்சல் அடிக்குது.. நீ இதைக் கவனிக்காமல் என்ன செய்கிற..”

அர்ஜூன் அவசரமாய் அவளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.. கொதித்தது..

“தர்ஷிணி.. தர்ஷிணி..”

அவள் மெதுவாகக் கண் விழித்தாள்.. எழுந்து கொள்ள முயன்றாள்.. அவளால் முடியவில்லை..

அர்ஜூன் அவசரமாய் சட்டையை போட்டுக் கொண்டு அவளின் இடுப்பில் கை கொடுத்துத் தூக்கிக் கொண்டு படி இறங்கினான்..

வாழைத்தண்டு போல் அவனது கைகளில் சோர்ந்து கிடந்தவளைப் பார்க்கும் போது அவன் மனம் வலித்தது..

‘ராத்திரி நன்றாகத்தானே இருந்தாள்..’

அதன்பின் ஏன்.. நன்றாக இல்லாமல் போனாள் என்பது அவனுக்குப் புரிந்தது.. அவன் மனம் கனத்தது.. ‘பாவி.. ஏண்டி என்னைப் பார்த்து அப்படி வாய்விட்டுத் தொலைத்த..’

தர்ஷிணி தேறி எழுந்திருக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது.. உடல் நிலை சரியான பின் வழக்கமான வேலைகளை அவள் செய்ய ஆரம்பித்தாள்..

“இதையெல்லாம் நான் செய்துக்க மாட்டேனா..? என் டிரஸ்ஸை செலக்ட் பண்ணிக் கொள்ளக்கூட முடியாத குழந்தையா நான்..? ஏன் உன் உடம்பை அலட்டிக் கொள்கிறாய்..?”

அவன் என்னவோ கரிசனமாகத்தான் கேட்டான்.. அவள் வெறுமையாய் பதில் சொன்னாள்..

“இதை மட்டும்தானே என்னால் செய்ய முடியும்..? இந்த உரிமையைக் கூட எனக்குத் தர மறுக்கிறீங்களா..?”

அவனுக்கு அவளைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.. அவளிடம் சிரித்துப் பேச முயன்றான்.. அவள் ஓரிரு வார்த்தைகளில் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.. பாட்டுப் பாடுவது அவளுக்குப் பிடிக்கும் என்பதால் பாட வைக்க முயன்றான்..

“தர்ஷிணி ஒரு பாட்டுப் பாடேன்..”

 “காலமகள் வழியினிலே ஓடும் நதி..

      கன்னமகள் விழியினிலே ஆடும் விதி..

நதியோடு செல்லும் வெள்ளம் ஊருக்காக..

    விதியோடு செல்லும் உள்ளம் யாருக்காக..”

அவ்வளவுதான்.. அர்ஜூன் அரண்டு போய் விட்டான்..

“தர்ஷிணி.. உனக்கு ஒரு கும்பிடு.. உன் பாட்டுக்கு ஒரு கும்பிடு.. தயவு செய்து உன் அழுவாச்சி பாட்டை நிறுத்திக் கொள் தாயே..”

அவள் அதற்கும் பதில் பேசாமல் பாட்டை நிறுத்திக் கொண்டாள்..

‘இவளை எப்படி மாற்றுவது..’

அவள் விரும்பியபடி அவளுடன் இசைந்து வாழ்ந்து விட்டால்.. அவள் இயல்பாகி விடுவாள்.. ஆனால்.. அர்ஜூனின் மனம்.. அவள் சொன்ன சிறுசொல்லில் சிக்கித் தவிக்கிறதே..

அவன் அதே சிந்தனையோடு இருக்கும் போது.. மாளவிகாவிடமிருந்து அவனுக்குப் போன் வந்தது..

“சொல் மாளவிகா..” என்று அவளிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு குளிக்கப் போனான் அவன்..

அவன் குளித்து விட்டு வருமுன்னர்.. தர்ஷிணி அவன் போனை எடுத்து மாளவிகாவின் நம்பரை தன் செல்லில் பதிவு பண்ணிக் கொண்டதை அவன் அறியவில்லை..

அன்று மாலை அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மாளவிகாவிடமிருந்து அவனுக்கு போன் வந்தது..

“அர்ஜூன்.. உன்னிடம் அவசரமாய் பேச வேண்டும்..”

“நீ ஊருக்குப் போக இன்னும் இரண்டு நாள்கள் இருக்கின்றதே மாளவிகா..”

“ஏன் இதைச் சொல்கிறாய்..?”

“இல்லை.. நாம் நாளை பார்த்துக் கொள்ளலாமே..”

“இன்றைக்கு என்ன.. நாள் நன்றாக இல்லையா..?”

“அதில்லை.. மாளவிகா.. தர்ஷிணி எனக்காகக் காத்திருப்பாள்..”

“அவளைப் பற்றிப் பேசத்தான் நான் உன்னைக் கூப்பிட்டேன்..”

“அவளைப் பற்றி நீ பேச என்ன இருக்கிறது..?”

“நிறைய இருக்கிறது..”

“புரியவில்லை..”

“நேரில் வா புரியும்..”

“முதலில் நீ என்னவென்று சொல்லு..”

“தர்ஷிணி என்னைப் பார்க்க சற்றுமுன் வந்திருந்தாள்.. இந்த விவரம் போதுமா..? இல்லை.. இன்னும் கொஞ்சம் வேண்டுமா..?”

“நான் நேரில் வருகிறேன்..”

மாளவிகா அவளுடைய உறவினர் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் அவனுக்காக காத்திருந்தாள்..

“என்ன ஆச்சு மாளவிகா..?”

“தர்ஷிணி இன்று மதியம் எனக்குப் போன் பண்ணி என்னைச் சந்திக்கணும்னு சொன்னாள்..”

“அவளுக்கு உன் போன் நம்பர் எப்படித் தெரியும்..?”

“உன் செல்போனிலிருந்து எடுத்திருக்கலாம்..”

“ஓ..”

“அது ஈஸிதானே அர்ஜூன்..”

“அப்புறம்.?”

“நான் அவளை இதே பூங்காவிற்குத்தான் வரச் சொன்னேன்.. ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாள்..”

“என்னிடம் சொல்லியிருந்தால் நானே காரில் கூப்பிட்டுக் கொண்டு வந்திருப்பேனே..?”

“உனக்குத் தெரியாமல் இருக்க வேண்டும்னுதானே அவள் உன்னிடம் சொல்லாமல் வந்திருக்கிறாள்..?”

“எனக்குத் தெரியாமல் ஏன் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்..?”

“அர்ஜூன்..”

“என்ன மாளவிகா..?”

“அவள் என்னிடம் என்ன கேட்டாள் தெரியுமா..?”

“என்ன கேட்டாள்..?”

“உன்னை இரண்டாம் தாரமாக நான் மேரேஜ் பண்ணிக்கணும்னு கேட்டாள் அர்ஜூன்.”

“என்ன சொல்கிறாய் மாளவிகா..?”

அர்ஜூன் அதிர்ந்து போய் நின்று விட்டான்.. தர்ஷிணி இந்த அளவுக்குப் போகக் கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.. அவனுக்கு விவாகரத்து கொடுக்கப் போகிறாளா..? அவன் மாளவிகாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்.. அவள் என்ன செய்வதாக இருக்கிறாள்..? அவளும் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்வாளா..?

ஆனால் அது இல்லை என்றாள் மாளவிகா..

“அவள் தெளிவாய் பேசுகிறாள் அர்ஜூன்.. உன்னை நேசிக்கிறாளாம்.. நீ இல்லாத வாழ்க்கையை அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதாம்.. அதனால்..”

“அதனால்..?”

“அவள் அந்த வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வேலைக்காரி போல் முடங்கிக் கொள்வாளாம்.. நான் அதற்கு மட்டும் அவளை அனுமதித்தால் போதுமாம்.. உன்னைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாலே அவளுக்குப் போதுமாம்.. உன் நிழலில் வாழும் சந்தோஷத்திலேயே மீதியிருக்கும் வாழ்நாளை அவள் கழித்து விடுவாளாம்..”

கேட்கவே சகிக்கவில்லை அர்ஜூனுக்கு.. அது எப்படி அவளால் இதைச் சொல்ல முடிகின்றது.. இதை நினைத்துப் பார்க்கக் கூட அர்ஜூனால் முடியவில்லையே..

அவள் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்க.. அவள் கண் எதிரில் இன்னொருத்தியுடன் அவன் குடும்பம் நடத்துவதா..? அவனால் அது முடியுமா..?

தாலியும்.. திருமணமும் வாழ்வில் ஒருமுறைதான் என்ற கொள்கையோடும் நம்பிக்கையோடும் வளர்ந்தவன் அவன் வாழ்பவன் அவன்..

தர்ஷிணியைப் பிடிக்காத போதும்.. அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்ட பின் முழுமனதாகக் காதலிக்க ஆரம்பித்தவன் அர்ஜூன்..

அப்படியிருக்க.. அவளை விட்டு இன்னொருத்தியை அவன் தொடுவதா..?

“ஐ ஆம் ஸாரி மாளவிகா.. அவள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள்..” என்று சங்கடத்துடன் கூறினான் அர்ஜூன்..

“அதுதான் தெளிவாகத் தெரிகிறதே.. என் கேள்வி என்னவென்றால் அவளுடைய மனதைப் பாதித்தது யார் என்பதுதான்..”

“வேறு யார்.. எல்லாம் நான்தான்..”

“நீயா.. உன்னால் இப்படிச் செய்ய முடியாதே..?”

“நீ தோழி என்ற எல்லைக்குள் நிற்பவள்.. கணவன் – மனைவிக்குள் வரும் அந்தரங்க சண்டைகள் பற்றி உனக்குத் தெரியாது.. அதை உன்னிடம் சொல்லவும் என்னால் முடியாது..”

“ஐ ஸீ.. ஆனால் அர்ஜூன்.. நீ அவளை மிகவும் ஆராதித்தவன்..”

“இப்போதும் ஆராதிக்கிறேன்..”

“அதனால்தான் உனக்கு மறுமணம் செய்து விட்டு மூலையில் அவள் முடங்கி விடத் தயாரானாளா..?”

“என்னைக் கொல்லாதே மாளவிகா..”

“என்ன நடந்ததுன்னு நீயும் என்னிடம் சொல்ல மாட்டன்னு.. இதற்குத் தீர்வு காணாமல் நானும் நிம்மதியாய் அமெரிக்காவிற்குப் போக முடியாது.. என் நிலையையும் நீ கொஞ்சம் யோசித்துப் பார் அர்ஜூன்..”

அர்ஜூன் சங்கடத்துடன்.. மேம்போக்காக அவர்களின் பிரச்னையைக் கூறினான்..

“ஸோ.. அவள் உன் மனது புண்படும்படி ஒருவார்த்தையைச் சொல்லி விட்டாள்.. அதை மறந்து அவளைத் தொட உன்னால் முடியவில்லை..?”

“ம்ம்..”

“அர்ஜூன்.. இப்படிச் செய்தால் என்ன..?”

“என்ன செய்யலாம் என்கிறாய்..?”

“பழிக்குப் பழி.. ரத்தத்திற்கு ரத்தம்.. இதையெல்லாம் நீ கேள்விப்ட்டிருக்கிறாயா..?”

“நீ சினிமா அதிகம் பார்ப்பாயா..?”

“பார்த்தால் தப்பில்லை..”

“இப்போது நீ என்ன சொல்ல வருகிறாய்..?”

“இதைப்போல மூன்றாவது ஒரு வாக்கியமும் இருக்கு..”

“என்ன அது..”

“வார்த்தைக்கு வார்த்தை..”

அர்ஜூனின் முகம் பிரகாசமானது.. அவன் ஆனந்தத்துடன் மாளவிகாவைப் பார்த்தான்..

“அதை எப்படிச் செய்வது..?”

“செம ஈஸி.. அவள் பாணியிலேயே போய்.. அவள் உன்னை என்ன முறையில் டீஸ் பண்ணினாளோ.. அதே முறையில் நீ பதிலுக்கு திட்டி.. அவளை டீஸ் பண்ணிவிடு.. உன் மனம் சமாதானம் ஆகி விடும்.. அதற்குப் பின்னால் அவளுடன் இசைந்து வாழப்பார்..”

“தேங்க்ஸ் மாளவிகா..”

“எதுக்கு தேங்க்ஸ் சொல்கிறாய்..?”

“புத்திசாலித்தனமாய் என் பிராப்ளத்தை சால்வ் பண்ணியதற்கு..”

“தேங்க்ஸிற்கு பதில் வேறு ஒன்று சொல்கிறாயா அர்ஜூன்..?”

“சொல் மாளவிகா.. செய்கிறேன்..!”

“என்னை மேரேஜ் பண்ணிக் கொள்கிறாயா..? அதுதான் தர்ஷிணியே சம்மதித்து விட்டாளே..!”

அர்ஜூன் அவளை அதிர்ந்து நோக்க.. அவளோ அவனைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தாள்..

அர்ஜூன் வீட்டிற்குப் போகும் போது.. மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டான்.. அதை மறைவாக வைத்துக் கொண்டு, விடு.. விடென்று மாடிக்குப் போய் விட்டான்..

தர்ஷிணி கையில் காப்பியோடு அறைக்குள் வந்தாள்.

“என்னது இது..?”

“காப்பி..”

“விஷமில்லையே..?”

“அர்ஜூன்..”

“அலட்டிக்காதேடி.. முதலில் கதவைச் சாத்து..”

அவள் புரியாமல் கதவைத் சாத்தி தாழிட்டாள்.. அர்ஜூன் காபியைப் பருகியபடி அவளிடம் மல்லிகைப்பூவை விட்டு எறிந்தான்..

அவள் முகத்தில் பட்டு அது கீழே விழுந்தது.. அவள் குனிந்து எடுத்தாள்..

“என்ன அதுன்னு தெரியுதா..?”

“பூ..”

“ஏன் உன்னிடம் கொடுக்கிறேன் தெரியுமா..?”

“தெரியவில்லை..”

“நீ தலையில் வைத்துக் கொடுத்தால்தான்.. மாளவிகா வைத்துக் கொள்வாளாம்.. இதைப்பற்றி ஏதோ ஒரு பாட்டு இருக்கிறதாமே..”

“ம்ம்.. இருக்கிறது..”

“எங்கே பாடு..”

அவள் துயரத்துடன் அவனைப் பார்த்தாள்.. அவன் இரக்கமில்லாமல் உறுமினான்..

“ம்ம்.. பாடு..”

அவள் கண் கலங்கப் பாடினாள்..

“சூடிக் கொடுத்தவள் நான் தோழி..

சூடிக் கொண்டவளே நீ வாழி..”

– அவள் பொறுக்க முடியாமல் விம்மி அழ.. அர்ஜூன் அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் அணைத்துக் கொண்டான்..

“வேண்டாம்டி.. அழாதே..”

அவள் நம்ப முடியாதவளாக அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள்.. அர்ஜூன், அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து.. அவள் நெற்றியில் முத்தமிட்டு.. இதழ் தேடிக் குனிந்தான்.. அவள் மனம் படபடத்தது.. கடைசி வினாடியில் அவளை உதறித் தள்ளி விட்டான்.. அவள் கட்டிலில் விழுந்தாள்..

“ச்சே..” என்றவன் வெளியே போய் விட்டான்.. அவன் திரும்பி வந்து பார்க்கும் போது அவள் தன் கையில் கத்தியால் கிழித்துக் கொண்டிருந்தாள்..

“அடிப்பாவி.. என்ன காரியம் செய்கிற..”

அவன் அவசரமாய் கத்தியைப் பிடுங்கிப் போட்டான்.. அவள் கையின் ரத்தப் பெருக்கு நிற்க கட்டுப் போட்டு விட்டான்.. மருமகளைக் காணோம் என்று தேடி வந்த தாயிடம் அவளுக்கு தலைவலி என்று சொன்னான்.. தமிழ்செல்வி போனதும், கதவைத் தாழிட்டு விட்டு.. தர்ஷிணியின் அருகில் அமர்ந்தான்..

“தர்ஷிணி..”

“….”

“என்னைப்பார்..”

அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.. கண்ணுக்கு முன்னால் தெரிந்த சூனிய வெளியை வெறித்துக் கொண்டிருந்தாள்..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link