Chapter 03

0Shares

காரை ஓட்டிக் கொண்டிருந்த பரணிதரனின் முகத்தில்தான் எத்தனை நிறைவு.. அவன் கண்களில் ஏக்கம் இருந்தது.. நெற்றியில் சுருக்கங்கள் இருந்தன.. ஆனாலும் அவனது மனது நிறைந்திருந்ததை முகம் பிரதிபலித்தது.. நண்பனின் மன நிறைவில் தானும் நிறைவடைந்தான் இளங்கோ.. காருண்யத்தின் மொத்த உருவம்.. ஏழைப் பங்காளன்.. தொழிலாளிகளின் ஆதர்ச நாயகன்.. தரன் டெக்ஸ்டைல்ஸின்  துணிகள் உலகத்தரம் வாய்ந்தவை.. அந்த மில்லுக்கென்று பெரிய பெயர் உண்டு.. தனித்துவம் உண்டு.. அங்கே வேலை பார்ப்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.. அப்படிப்பட்ட மில்லின் எம்.டி என்ற கர்வம் பரணிதரனிடம் துளியளவும் இருக்காது.. தொழிற்சங்கவாதிகளை எதிரிகளைப் போலப் பார்க்காமல் இன்முகத்துடன் எதிர் கொள்வான்.. அவர்கள் கேட்பது நியாயமான கோரிக்கைகளாக இருந்தால் தடை சொல்லாமல் உடனடியாக செய்து கொடுத்து விடுவான்.. அவர்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் இவனாக செய்தவைகளே அதிகம்.. மொத்தத்தில் தொழிலாளிகள் போற்றும் முதலாளி அவன்..

அவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவனின் மனது ஒரு சின்னப் பெண்ணிடம் சிக்கியிருந்தது.. அவன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் பெண்களின் மீது அவனுக்கு நாட்டமில்லை.. அவனுக்குத் தெரியும்.. அவன்மீது ஆர்வம் கொள்பவர்கள் அவனுடைய ஸ்டேட்டஸிற்காகவும், சொத்துக்களுக்காவும், பணத்திற்காகவும்தான் போட்டியிடுகிறார்கள் என்பது.. அவனது மனம் தேடும் ‘அவள்..’ அப்படியல்ல.. அவனை அவனுக்காகவே நேசிப்பவள்.. அதை உண்மையென்று இந்த உலகமே ஒப்புக் கொள்ளும்.. பரணிதரனின் மீதான அவளது காதல் அப்பழுக்கற்றது.. ஆகாயம் போன்றது..

கோயம்பத்தூரைக் கார் தொட்டு விட்டது.. ஓய்வெடுக்காமல் உடனடியாக காரை எடுத்து விட்டவனை இளங்கோ ஏனென்று கேட்கவில்லை.. ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் செய்வான்.. ஒருநாள்கூட ஓய்வெடுக்க முனைந்ததில்லை.. கோவையிலிருந்து கிளம்பும் கார் சென்னையைத் தொட்டதும் அவன் வழக்கமாக தங்கும் ஹோட்டலுக்கு விரையும்.. குளித்து உடை மாற்றி.. மதிய உணவை வயிற்றில் போட்டால் கண்களைச் சுழற்றிக் கொண்டு ஒரு தூக்கம் வரும்.. தூங்கலாம் என்று மெத்தையின் மீது விழுவான் இளங்கோ.. உடனே செல்போனில் அழைப்பு வந்து விடும்.. கொலை வெறியாவான்.. சண்டை போடப் போகிறவனைப் போலக் கதவை அடைத்து விட்டு பரணிதரனின் அறைக்குப் போகிறவன்..

“போகலாமா பரணி..?” என்று கை கட்டி, வாய் பொத்தி, அவன் காலில் விழாத குறையாக கேட்பான்..

“ம்ம்ம்..” என்பவனுடன் காரில் ஏறி.. கடற்கரைக்குச் சென்று.. ‘அவள்..’ வந்ததும் பரணிதரனை விட்டுப் பிரிந்து நடந்து.. கடலலையில் கால் கடுக்க நின்று விட்டு.. ‘அவள்’ சென்றதும் திரும்பி வருகிறவனை அக்கடா என்று படுக்க விடுவானா பரணிதரன்..

“க்விக்.. இன்னும் ஆறே நிமிசத்தில் நீ காருக்கு வந்துரனும்..” என்று விரல் சொடுக்குவான்..

போடா நீயுமாச்சு.. உன் காருமாச்சு.. என்று சொல்லத்தான் நினைப்பான்.. வாயில் வரும் வார்த்தைகளோ வேறு மாதிரி வந்து தொலைக்கும்..

“ஆறுநிமிசம் எதுக்கு பரணி.. இதோ.. ரெண்டே நிமிசத்தில ஓடி வந்து விட மாட்டேனா..?”

பரணி சொல்வதுதான் இளங்கோவிற்கு வேத வாக்கு.. 

தரன் டெக்ஸ்டைலில் அவனை பரணிதரன் ஜெனரல் மேனேஜராக்கியிருக்கிறான் என்பதற்காக அவன் அந்த விசுவாசத்தைக் காட்டவில்லை.. பரணிதரனின் இளகிய மனதிற்காகவும், ஆதரிக்கும் குணத்திற்காகவும்தான் அவன் ‘எள்’ என்றால்.. இவன் இதயம் நல்லெண்ணையாக நின்றான்..

“மலரே..! மௌனமா..?”

காரிலிருந்த சி.டி பாடியது.. பரணிதரனின் முகம் மென்மையானதை அந்த மெல்லிய வெளிச்சத்திலும் கண்டு கொண்டான் இளங்கோ..

“மௌனமே.. பேசுமா..?”

‘என்றைக்குடா நீங்க பேசுவீங்க..?’

இளங்கோவிற்குக் கவலையாக இருந்தது.. காவியக் காதல்தான் பரணிதரனின் காதல்.. அது வெல்ல வேண்டுமே.. பரணிதரன் உயிராய் நினைக்கும் ‘அவள்..’ பொள்ளாச்சியைச் சேர்ந்தவள்தான்.. அவளுடைய தகப்பன் பொள்ளாச்சிக்காரர்.. அவள் பரணிதரனை அறியாதவள் அல்ல.. பிறந்த போது பிறந்த சொந்தம் அவர்களுடையது.. அவள்.. மலரின் மென்மையும், நிலவின் தன்மையும் கொண்டவள்..

மலர் நிலா..! அதுதான் அவளது பெயர்..

“எப்படிடா இவ்வளவு பொருத்தமா பெயர் வைச்சிருக்காங்க..?” பரணிதரன் சிலிர்த்துப் போவான்.. இளங்கோவிற்கு அதுபோன்ற சிலிர்ப்பெல்லாம் வந்ததில்லை.. ரத்னாவைப் போன்ற ஒருத்தியின் கழுத்தில் மாலையிடும் விதி படைத்தவன் என்பதினாலோ என்னவோ அவனுக்குள் இதுபோன்ற கவிநயக் கற்பனைகள் வருவதில்லை.. வாழ்க்கை யாருடன் யாரைப் பிணைக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருக்கிறதோ.. அதையறியாமல் கற்பனை செய்து என்ன பயன் என்று காலம் அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தவோ என்னவோ.. இதைப் பற்றி யாருக்குத் தெரியும்..? சம்பந்தப்பட்ட இளங்கோவுக்கே தெரியாதே..

“உன் வீடு வந்திருச்சு இளங்கோ..” பரணிதரன் அறிவுறுத்தினான்..

“வந்திருச்சா..?” தூக்கிவாரிப் போட்டவனாக திடுக்கிட்டு விழித்தான் இளங்கோ..

“நீயெல்லாம் குடும்பஸ்தனாடா..? சென்னைக்குப் போய் திரும்பி வந்திருக்கோம்.. வீட்டுக்கு வந்திட்டோமேன்னு சந்தோசப் படுவியா.. அதை விட்டுட்டு களவு போன கம்யூட்டர் போல அலையலையா முழிக்கிறான்..”

“மிஸ்டர் எம்.டி..”

“சொல்லு..”

“இரண்டு டவுட்ஸ்..”

“கேட்டுத் தொலை..”

“டவுட் நம்பர் ஒன்.. சென்னைக்குப் போனோம்.. சென்னைக்குப் போனோம்ன்னு சொல்கிறீங்களே.. அங்கே போய் என்னத்தைப் பார்த்தோம்..? ஒரு மாயாஜால்..? ஸ்கை வாக்..?”

“கடற்கரையைப் பார்த்தோமே மிஸ்டர் ஜி.எம்..”

“அதைத்தானே கண்டேன்.. வேறு எதைக் கண்டேன்..?”

“வேறு எதையும் காண வேண்டுமென்ற ஆசையுடன்தான் என்னுடன் சென்னைக்கு வந்தாயா நண்பா..? இந்த விவரத்தை உன் மனைவியின் காதுகளில் போட்டு விட்டுச் செல்லவா கண்ணா..?”

“ஏனுங் மச்சான் இந்த கொலைவெறி..? என்ற வூட்டுக்காரி  என்ற குரவளையை நெறிக்கட்டுமுன்னா மச்சான் பிளான் பண்றீங்கோ..?”

“தெரியுதில்ல.. வாயைப் பொத்திக்க.. ரத்தினம் போல பெண்டாட்டி இருக்கிறப்ப மாயாஜால், ஸ்கைவாக்குன்னு ஏண்டா அலையனும்னு நினைக்கிற..?”

“இனி நினைக்கலைடா.. போதுமா.. டவுட் நம்பர் டூ..”

“இது என்ன..?”

“களவு போன ஆட்டைப் போல முழிக்கறன்னுதான சொல்வாங்க.. நீயென்ன ஆட்டுக்குப் பதில் கம்யூட்டரைக் கொண்டு வந்திட்ட..”

“அது அந்தக்காலம்டா..”

“இது..?”

“இந்தக் காலம்டா.. இறங்கு.. இறங்கு.. நேரமாச்சு..”

“விட்டா என்னை விட்டு வாசலிலே தள்ளி விட்டு விடுவ போல..”

முகத்தை முழ உயரத்துக்குத் தூக்கி வைத்துக் கொண்டு இறங்கிய இளங்கோ வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.. கதவைத் திறந்த ரத்னா அவளது முகத்தை ஆறு முழ உயரத்துக்குத் தூக்கி வைத்திருந்தாள்.. இளங்கோவுக்கு அப்படியே ஓடி விடலாம் போல இருந்தது.. எங்கே ஓடுவது என்றுதான் தெரியவில்லை..

‘வர, வர வாழ்க்கை பிக் பாஸ் வீடு போல ஆகிருச்சு.. ஓடவும் முடியலை.. ஒளியவும் இல்லை..’

பெருமூச்சுடன் உள்ளே வந்தவனின் முகத்தின் முன் சொடக்குப் போட்டாள் அவனது தர்ம பத்தினி..

“ஏனுங் மச்சான்.. காரில உங்க எம்.டி கூட உக்காந்துக்கிட்டு வந்தப்ப.. கலகலன்னு பேசிக்கிட்டே வந்தீங்க.. வூட்டுக்குள்ள வந்து என்ற மூஞ்சியப் பாத்ததும் பேஸ்தடிச்சதப் போல ஆகிட்டிங்க.. என்ன..? இப்படியே எங்கேயாச்சும் ஓடிப் போயிடலாம்ன்னு தோணுதுங்களாக்கும்..?”

எப்படி அவன் மனதை மிகச் சரியாக எடைபோடுகிறாள் என்று அவனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.. அதை வாய்விட்டுச் சொல்லிப் பாராட்டி விட முடியுமா..?

“டயர்டா வந்திருக்கேண்டி ரத்னா..” கெஞ்சுதலாகச் சொன்னான்..

“அதுக்கு நான் என்ன பண்ணட்டுங்க மச்சான்.. ஊர், ஊராச் சுத்திட்டு வந்தா டயர்டாத்தான் இருக்கும்.. நான் வேணும்னா வென்னீரப் போட்டுக் குளிப்பாட்டி, கை, காலப் பிடிச்சு விடட்டுமா..?”

உஷ்ணத்துடன் கேட்டவளிடம் ஊம் என்று சொல்ல ஆசையாகத்தான் இருந்தது.. அவள் கொதிக்கும் வெந்நீரை அவன் மீது வீசிக் கையைக் காலை உடைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில்..

“உனக்கெதுக்கு வீண் சிரமம்..? ஹீட்டர் ஸ்விட்சைப் போட்டு விட்டா பத்தே நிமிசத்தில கொதிக்க கொதிக்க வெந்நீர் வந்திரும்.. குளிச்சுட்டுப் படுத்துத் தூங்கி எழுந்திரிச்சா உடம்பு சொடக்கு எடுத்து விட்டதைப் போல ஆகிரும்..” என்று உஷாராகச் சொன்னான்..

“விவரம்தான்.. மச்சான் மனசில நான் கை, கால் பிடிச்சு விடனும்ங்கிற நினைப்பு இருந்திருக்கும் போல..”

“அப்படியெல்லாம் நான் நினைப்பேனா ரத்னா..? யாரு நீ..?”

“அந்த நினைப்பு மனசில இருந்தா இப்படி மாசா மாசம் சென்னைப் பக்கம் ஊர் சுத்தப் போவிங்களா மச்சான்..?”

அடுத்த ஒருமணி நேரத்துக்கு அவள் செய்த லட்சார்ச்சனனையை மட்டும் பரணிதரன் கேட்டிருக்க வேண்டும்.. நண்பனுக்குக் கூறாமல் சன்யாசம் வாங்கிக் கொள் என்று அறிவுரை செய்திருப்பான்..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link