Chapter 04

0Shares

இரண்டு பக்கமும் அடர்ந்து நின்ற தென்னந்தோப்புகளை ரசித்துப் பார்த்தாள் மலர்நிலா.. இயற்கையுடன் கூடிய குளிர்காற்றை சுவாசித்து எத்தனை நாள்கள் ஆயிற்று என்று ஏக்கமாக இருந்தது.. காற்றின் வேகத்தில் தென்னங்கீற்றுக்கள் ஓர்வித தாள லயத்துடன் அசைவதை அவள் சங்கீதம் என்பாள்.. அவளது அண்ணன் மகேந்திரனோ.. ‘சப்தம்’ என்பான்.. ஒரே ஓசை அண்ணன், தங்கை இருவருக்கும் வேறுபட்ட உணர்வுகளைக் கொடுப்பது எப்படி..?

“நீ வாழ்க்கைக்கு உதவாத கற்பனைகளில் காலம் கழிக்கிற மலர்..” மகேந்திரன் முகத்தைச் சுளிப்பான்..

அடிக்கடி அவன் சொல்வதுதான் என்றாலும் மலர்நிலாவின் மனம் வலிக்கும்.. அவள் மௌனமாகி விடுவாள்.. மௌனம் என்பது அவளது அடையாளமாகவே ஆகி விட்டது.. எதையும் பேச முடியாமல் போகும் போது மௌனத்தில் புதைந்து விடுவது வசதியான ஒன்று.. மௌனம் அடைக்கலம் தரும்.. ஆறுதல் தரும்.. இளைப்பாறுதல் தரும்..

மகேந்திரன் மட்டுமல்ல.. அவர்களின் சித்தப்பாவான வினோத்தும் இதையேதான் சொல்வார்.. சிறுவயதில் மகேந்திரனுக்கு அவர் ஆதர்ச நாயகர்.. அவனுக்கு அவரை மிகவும் பிடிக்கும்.. தந்தையின் சொல்லுக்கு அடங்காதவன், சித்தப்பாவின் சொல்லுக்கு எளிதாக கீழ்படிவான்.. அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வான். இப்போது அப்படியில்லை..

மலர்நிலாவுக்கு மட்டும் அவரைப் பிடிக்காதா என்ன..? பிடிக்கும்தான்.. அதற்காக அவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பின்பற்ற பிடிக்காது.. அவளுக்கும் மனம் இருக்கிறது.. அதில் சில நினைவுகள் இருக்கின்றன.. அந்த நினைவுகளின் உன்னதத்தை அவளது குடும்பம் உதாசீனம் செய்தது.. அவள் மௌனத்தில் தன்னை புதைத்துக் கொண்டு மனதளவில் தனிமைப்பட்டாள்..

அருகம்புல் அடர்ந்த வரப்பில் செருப்பில்லாமல் நடப்பது சுகமானதாக இருந்தது.. பனியில் நனைந்திருந்த புற்களின் ஜில்லிப்பு பாதங்களை கூசச் செய்து.. ஊடுருவி உடல் முழுவதும் பரவிப் படர்ந்ததில் ஓர் புத்துணர்வை அவள் உணர்ந்தாள்.. சுழித்தோடிய வாய்க்கால் நீரின் சலசலப்புக் கூட சங்கீதம் போல் அவளைத் தாலாட்டியது.. இதையும் மகேந்திரன் மறுத்திருக்கிறான்..

“கல்லை விட்டு எறிந்து பார்.. இந்த சங்கீதம் காணாமல் போயிடும்..” என்றவன் சொன்னதை செய்தும் காட்டியிருக்கிறான்..

இதுபோன்ற விதண்டாவாதங்கள் வினோத்திடமிருந்து அவனுக்கு வந்தவை.. அவர்களின் தந்தையான சம்பத் இப்படிப் பேச மாட்டார்.. அறிவும், நிதானமும் அவரது அடையாளங்கள்.. அவரால்தான் மலர்நிலா சொல்பேச்சைக் கேட்க மறுக்கிறாள் என்று வினோத் குதிப்பார்.. அதை மகேந்திரனும் வழி மொழிவான்..

சில தருணங்களில் வினோத் என்ன சொல்கிறார் என்பது காதில் விழாமலே சித்தப்பா சொல்வதுதான் சரி என்று அவன் சொன்ன சம்பவங்களும் உண்டு.. வினோத்தின் மனைவி இந்துபிரியாவே அதைக் குறித்துக் கேலி செய்ததும் உண்டு..

“மகி.. உன் சித்தப்பா உன்னைத்தான் குறை சொல்லிக் கொண்டிருந்தார்.. இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியை ரன் பண்ணிக்கிட்டு.. காத்தடிக்கிறப்ப மாவை எக்ஸ்போட் பண்ற.. மழை பெய்கிறப்ப உப்பை இம்போர்ட் பண்றன்னு கழுவிக் கழுவி ஊற்றிக்கிட்டு இருந்தார்.. அதைக் காதில் வாங்காம நீ சித்தப்பா சொல்கிறதுதான் சரின்னு சத்தம் போட்டுக்கிட்டு வர்ற.. என்ன ஆச்சு உனக்கு..?”

அதற்காகவே கொக்கைப் போலக் காத்திருக்கும் மலர்நிலா கிடைக்கும் வாய்ப்பை இறுக்கிப் பற்றிக் கொண்டு தமையனின் காலை வாரி விடுவாள்..

“ஒன்னும் ஆகலை சித்தி.. அண்ணனுக்கு ஒரு வேண்டுதல்..”

அவள் எதையோ சொல்லிக் கிண்டல் பண்ணப் போகிறான் என்பது இந்துப்பிரியாவுக்கும் தெரியும்.. இருந்தும் தெரியாதவளைப் போல விழி மலர்த்தி..

“வேண்டுதலா..?” என்று ஒன்றும் அறியாதவளைப் போலக் கேட்பாள்..

“வேண்டுதல்தான் சித்தி.. சித்தப்பா என்ன சொன்னாலும் காதில வாங்கிக்காம.. ‘ஜிங்க்ச்சா.. ஜிங்க்ச்சா..’ன்னு ஜால்ரா போடற வேண்டுதல்..”

“அப்படிங்கற..?”

“ஆமாம்ங்கிறேன் சித்தி..”

பெண்கள் நகைப்பதைப் பொருட்படுத்தாமல் புறங்கையை வீசி வாயைக் குவித்து ஊதித் தள்ளி விடும் அண்ணன் மகனை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ளும் வினோத்துக்கு அண்ணன் மகன்தான் மூத்த மகன்.. அவருடைய பிள்ளைகளான பதினைந்து வயது அஜய்யும்.. பத்து வயது அஜந்தாவும் அண்ணன் பிள்ளைகளுக்கு அடுத்துத்தான்..

அவர்தான் அப்படியென்றால்.. அவருடைய அண்ணன் சம்பத்திற்கும் அவரது மனைவி மாலதிக்கும் ‘வினோத்தான்’ மூத்த மகன்.. அவர்களுடைய பிள்ளைகள் அவருக்கு அடுத்தபடிதான்..

பொள்ளாட்சி வட்டாரத்திலேயே சம்பத், வினோத்தின் அண்ணன், தம்பி பாசம் பிரசித்தமானது.. வேதாச்சலம், சங்கீதா தம்பதியினர்க்கு சம்பத், வினாத் என இரண்டே பிள்ளைகள்தான்.. முன்னூறு ஏக்கர் நிலபுலன்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் மற்ற உறவு முறைகளைப் போலப் பக்கத்திலிருந்த கோயம்பத்தூரில் மில்லைத் தொடங்காமல் சென்னையில் கால் பதித்தார்கள்..

“ஏன் கண்ணு.. இந்தா இருக்கிற கோயம்பத்தூரில மில்லைக் கட்டினா.. எனக்கும் உன்ற அம்மாவுக்கும் சந்தோசமா இருக்குமில்ல.. அதை விட்டுட்டு எங்கிட்டோ இருக்கிற மெட்ராஸ் பட்டினத்தில ஜவுளிக்கடை வைக்கப் போறன்னு சொல்றியே கண்ணு..” வேதாச்சலம் சொல்லிப் பார்த்தார்..

“இல்லைங்.. நம்ம உறவுமொறையெல்லாம் கோயம்பத்தூரிலேயே குமிஞ்சிருக்கோமுங்.. சென்னையில பெரிசா ஆறுமாடி கட்டிடம் கட்டி.. அதில ஜவுளி முதற்கொண்டு நகை வரைக்கும் அத்தனையையும் விற்கனும்னு மனசுக்குள்ள ஆசைங்..” சம்பத் பணிவாக சொல்லி விட்டார்..

வினோத்தும் சம்பத்தின் பேச்சை ஆதரிக்க.. வேதாச்சலம் பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை முனை முறியாமல் அள்ளிக் கொடுத்து விட்டார்.. இணை பிரியாத அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக.. ‘சம்பத்’ ‘வினோத்’ இருவரின் பெயர்களிலும் உள்ள முதலெழுத்தை வைத்து.. ‘சவி ஸ்டோர்..’ என்று ஆரம்பித்தார்கள்.. ஆறுமாடி கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வகையான பொருள்கள் விற்பனை செய்யப் பட்டன..

தரைத்தளத்தில் பெண்களுக்கான சேலை, சுடிதார், நவின உடைகள், நைட்டி, என்று இருந்தன.. முதல் தளம் ஆண்களுக்கானது.. இரண்டாம் தளம் பட்டு வகைகள்.. மூன்றாம் தளம் நகைகள்.. நான்காம் தளத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் மளிகையிலிருந்து பிளாஸ்டிக் டப்பாக்கள் வரை கிடைத்தன.. ஐந்தாம் தளத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான சைக்கிள்கள்.. விளையாட்டுப் பொருள்கள்.. அதில் சிறிய கண்ணாடி ரூமில் வாசனைதிரவிய வகைகள்.. ஆறாம் தளத்தில் பேக்கரி.. சிறிய உணவகம்.. பாதிக் கட்டிடம், பாதி ரூஃப் கார்டன் என்று பிரித்துக் கட்டப்பட்ட அழகான தளம்..

சென்னையில் ‘சவி’ ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்ட போது சம்பத்திற்குத் திருமணமாகி மகேந்திரன் பிறந்திருந்தான்.. அவனுக்கு நான்கு வயதானபோது சம்பத்தும், வினோத்தும் சென்னையில் பெரிதாக கட்டப்பட்டிருந்த பங்களாவுக்கு குடி போனார்கள்.. வேதாச்சலமும் சங்கீதாவும் பொள்ளாச்சியை விட்டு வரமுடியாது என்று சொல்லிவிட.. சம்பத்தின் மனைவி மாலதி சென்னையில் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்..

கொழுந்தனை மகனாக நினைக்கும் வாத்சல்யம் கொண்டவள் மாலதி.. பெயரிவர்கள் இருவரும் அவ்வபோது சென்னை வந்து போவார்கள்.. சம்பத்தும் வினோத்தும் ‘சவி ஸ்டோர்’ முன்னேற இரவு பகலாக பாடுபட்டார்கள்.. ஆள் மாற்றி ஆள் ஸ்டோரில் இருப்பார்கள்.. வெகு விரைவில் ‘சவி ஸ்டோர்’ பெயர் பெற்று விட்டது..

மகேந்திரனுக்கு ஆறு வயதான போது மலர்நிலா பிறந்தாள்.. வினோத் என்ஜினியரிங் பட்டதாரி.. சம்பத் முதுகலைப் பட்டதாரி.. வினோத்திற்கு ஐ.டி கம்பெனியொன்று ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை அடிமனதில் இருந்தது.. தமையனிடம் அதைச் சொன்னால், தம்பி தனித்துத் தொழில் பண்ண விரும்புகிறானோ என்று நினைத்து விடுவார் என்பதினால் அதை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருந்தார்..

மலர்நிலாவுக்கு நான்கு வயதானபோது வினோத்திற்குத் திருமணம் பேசி நிச்சயித்தார்கள்.. பெண் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவள்.. பெண் பார்க்கப் போன போது குண்டுக் கன்னங்களும்.. வண்டு விழிகளுமாக.. நான்கு வயது மலர்நிலா இந்துபிரியாவின் சேலை முந்தானையைப் பிடித்து இழுத்து..

“சித்தி.. உன்னப் பிடிச்சிருக்கு..” என்று சொன்னாளாம்.. அத்துடனும் நிறுத்தாமல் கைகளை நீட்டி..

“தூக்கிக்கோ..” என்றிருக்கிறாள்..

குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்ட இந்துபிரியாவுக்கு மலர்நிலாவின் மீது பிரியம் அதிகம்..

“நீ உன் சித்தப்பா போலவே தெனாவெட்டாய் உட்கார்ந்திருந்தடா..” என்று மகேந்திரனை வம்புக்கு இழுப்பாள்..

இந்துபிரியா வெகு இயல்பாக சம்பத்தின் குடும்பத்துடன் ஒன்றிப் போனாள்.. தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று பேச்சுக்குக்கூடச் சொன்னதில்லை.. அஜய்யும், அஜந்தாவும் பிறந்த பின்னால்.. கணவருக்கு ஐ.டி கம்பெனி வைக்கும் ஆசை இருக்கிறது என்பதை மட்டும் சம்பத்திடம் சொன்னாள்.. அதையும் மாமனார், மாமியாரிடம் சொல்லவில்லை.. அவளின் அந்த குணம் சம்பத்தை நெகிழ வைத்தது..

“உங்களைப் பிரியனும்னு அவர் நினைக்கலை மாமா.. ஐ.டி கம்பெனியொன்னை ஆரம்பிக்கனும்னுதான் நினைக்கிறார்..”

பதவிசாக அவள் சொன்ன வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்தார் சம்பத்..

‘ஹஹ’ கம்யூட்டர் சொலுசன் நிர்மாணிக்கப்பட்டது..

பிள்ளைகள் வளர்ந்தார்கள்.. இதோ.. மலர் நிலாவுக்கு இருபத்தி இரண்டு வயது.. அஜய் பதினைந்து வயதில் இருந்தான்.. அஜந்தாவுக்கு பத்து வயது.. மகேந்திரனுக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள்.. மகேந்திரனின் மனைவி ரூபிணி பிறந்தது கோயம்பத்தூர்.. மருமகனுக்கு தனித்துத் தொழில் இருக்க வேண்டும் என்று ரூபிணியின் தந்தை நிபந்தனையிட.. சம்பத் எகிறிக் குதித்தார்.. தமையனைச் சமாதானம் செய்த வினோத் மகேந்திரனுக்கு தனித்து தொழில் நடத்த அனுமதி வாங்கித்தந்தார்..

மகேந்திரன் ‘மகி இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்..’ கம்பெனியைத் திறந்தான்..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link