Chapter 05
“மலரு.. ஏ மலரு..”
சங்கீதாவின் அழைப்பில் மலர்நிலவுக்கு சிரிப்பு வந்தது.. இது போல ராகம் போட்டுக் கூப்பிட வேண்டாம் என்று பலமுறை அவள் சொல்லிவிட்டாள்.. சங்கீதா..
“அதுக்கென்ன கண்ணு.. என்ற கண்ணு சொல்லிட்டா சரிதான்..” என்பாள்.. அந்த வாக்குறுதியெல்லாம் நீர் மேல் எழுத்தாக.. காற்றோடு காணாமல் போய்விடும்.. அடுத்த முறை அழைக்கும் போது..
“ஏ..ஏ..ஏ.. மலரு..” தான்..
‘இந்தப் பாட்டியைத் திருத்தவே முடியாது..’
வரப்பில் வழுக்கி விடாமல் ஊன்றி கால் வைத்து நடந்தாள்.. வயலின் முடிவில் தென்னந்தோப்பு வந்தது.. வரப்போரம் கழட்டிப் போட்டிருந்த செருப்புக்களை கால்களில் மாட்டிக் கொண்டு புள்ளி மானைப் போல ஓடினாள்.. பொள்ளாச்சிக்கு வந்ததிலிருந்து இப்படித்தான்.. சந்தோசமாக இருக்கிறாள்.. அது ஏன் என்பது அவளது ஆழ் மனதுக்குத் தெரியும்..
‘பக்கத்தில்தான் கோயம்பத்தூர் இருக்கு.. அங்கே அவன் இருக்கான்..’
நாவடியில் வெல்லம் கரைவதைப் போன்ற இனிப்பு அவளது மனதில் கரைந்து நிரம்பி வழிந்தது.. பிறரறியா இனிப்பு.. அவள் மட்டுமே ருசிக்கும் இனிப்பு.. இதுவரை அவளைத் தேடி அவன்தான் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறான்.. அவனைக் காண அவள் கோயம்பத்தூர் வந்ததில்லை..
‘நான் பொள்ளாச்சிக்கு வந்திருப்பது அவனுக்குத் தெரியுமா..?’
தெரியப்படுத்த வேண்டும்.. ஆனால் எப்படி..? மலர்நிலாவுக்கு பரணிதரனின் போன் நம்பர் தெரியாது.. அவளுடைய போன் நம்பரை அவன் அறிந்திருக்கலாம்.. பேசியதில்லை.. அவன் வரும் நாளை அவள் யூகித்து விடுவாள்.. அவளுக்குச் சிரமம் வைக்காமல் விடுமுறை தினங்களில்தான் அவன் சென்னைக்கு வருவான்.. மாதத்தின் முதல் வாரம்.. அந்த தினங்களில் அவள் தோழியைப் பார்க்கப் போவதாகச் சொல்லி விட்டுக் கடற்கரைக்குச் சென்று விடுவாள்.. உழைப்பாளர் சிலையருகே காரை நிறுத்தி விட்டுக் காத்திருக்க நினைப்பாள்.. எதிரே அவனது கார் நின்றிருக்கும்.. அவள் காரை விட்டு இறங்கும் போது அவனது கண்கள் மின்னும்.. குறிப்பிட்ட மரத்தடியில் அவளது கார் நிற்க.. அங்கிருக்கும் மரபெஞ்சில் அமர்ந்து அவனை மௌனமாக அவள் பார்ப்பாள்.. மணிக்கணக்காக நீளும் அந்த பார்வை பரிமாற்றம் இருள் பரவும்போதுதான் முடிவுக்கு வரும்..
“பார்த்தேன்.. ரசித்தேன்..
பக்கம் வரத் துடித்தேன்..
உனைத் தேன் என நான் நினைத்தேன்..”
அவனது காரில் இசைக்கும் சிடி அவன் மனதைச் சொல்லும்..
அவனிருக்கும் கோயம்பத்தூரின் அருகாமைக்கு அவள் வந்திருக்கிறாள் என்ற நினைவே அவளை இறக்கை கட்டிப் பறக்க வைத்தது..
“பாத்து ஓடி வா கண்ணு.. தோப்பில செத்தையும் குப்பையுமா இருக்கு.. முள்ளு தைச்சுறப் போகுது..” சங்கீதா கரிசனத்துடன் சொன்னாள்..
“முள்ளா..? நம்ம தோப்பிலா..? பார்க் மாதிரி படுசுத்தமா இருக்கு.. இங்க போய் குப்பையும் கூளமுமா இருக்குன்னு கதை அளக்கறீங்களே பாட்டி..”
மலர்நிலா சங்கீதாவைக் கட்டிக் கன்னத்தில் முத்தமிட்டாள்.. உடுத்தியிருந்த பட்டுச் சேலையின் முந்தானையால் பேத்தியின் முகத்திலிருந்த வியர்வைத் துளிகளை துடைத்து விட்ட சங்கீதா..
“ஏன் அம்மணி.. தோப்புக்கு வந்தா சேரில உக்காந்து இளநித் தண்ணியைக் குடிச்சுக்கிட்டே காத்தாடப் பேசிக்கிட்டு இருக்கனும் அம்மணி.. இப்படியா வேர்க்க விறுவிறுக்க சுத்திப் பாப்பாக..” என்று அங்கலாய்த்தாள்..
கொட்டும் அருவியைப் போல பம்ப் செட் மோட்டாரிலிருந்து தண்ணீர் அகன்ற நீச்சல் குளம் போன்ற சிமிண்ட் தொட்டியில் விழுந்து கொண்டிருந்தது.. பம்ப் செட் ரூம் டைல்ஸ் பதிக்கப்பட்ட பெரிய அறையாக இருந்தது.. அதில் வயர் பின்னப்பட்ட குறுங்கட்டில்கள், பிளாஸ்டிக் சேர்கள் அடுக்கப் பட்டிருக்கும்.. அன்று அவையெல்லாம் மோட்டார் அருகே இருந்த சிமிண்ட் தரையில் போடப்பட்டு மலர்நிலாவின் குடும்பத்தினர் உட்கார்ந்திருந்தார்கள்.. மகேந்திரனும், அஜய்யும் தண்ணீர் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருக்க.. இந்து பிரியா மைத்துனன் மகனையும், தன் மகனையும் உற்சாகப் படுத்திக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. அஜந்தா தானும் தண்ணீர் தொட்டிக்குள் குதிக்க வேண்டும் என்று அடம் பிடிக்க.. அவளுக்கு ஜலதோசம் பிடித்து விடும் என்று வினோத் அதட்டிக் கொண்டிருந்தார்.. வெற்று மார்பும்.. இறுக்கிப் பிடித்த சார்ட்ஸீமாக மகேந்திரன் தண்ணீரில் நீந்தியதை ஓரக்கண்ணால் பார்த்து கிறங்கிக் கொண்டிருந்தாள் ரூபிணி.. புது மனைவி.. ‘சைட்’ அடிக்கிறாள் என்பது மகேந்திரனுக்கும் தெரியும்.. அவளது விழிகளில் தெரிந்த கிறக்கத்தை அவன் பாராதது போல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.. மலர்நிலாவைக் கண்டதும் துணைக்கு ஆள் வந்து விட்ட உற்சாகத்துடன் அஜந்தா குதித்தாள்..
“வா அக்கா.. நாமும் குதிக்கலாம்.. நீயில்லாம நான் மட்டும் இருக்கிற தைரியத்தில.. இந்த அண்ணாவும், அஜய்யும் தண்ணியில் ஆட்டம் போடறாங்க.. நான் பாப்பாவாம்.. தண்ணியில ஆடினா கோல்டு பிடிச்சுக்குமாம்.. இந்த அண்ணன்களை மட்டும் கோல்டு பிடிக்காதா..? ஆக்சுவலா கோல்டு பாப்பாவுக்குத்தானே அக்கா பாவம் பார்க்கும்..?”
பத்துவயது அஜந்தாவின் கேள்விக்கு ஆமாம் என்று தலையாட்டி அவளையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் குதித்து விடலாம்தான்.. அப்படிச் செய்ய முடியாமல் இரண்டு தடைகள் இருந்தன.. முதலாவது அஜந்தாவிற்கு சில்லென்ற குளிர்நீர் ஒத்துக் கொள்ளாது.. உடனே மூக்கை உறிஞ்ச ஆரம்பித்து விடுவாள்.. இரண்டாவது மலர்நிலாவிற்கு மனதில் அசை போட சில நினைவுகள் இருந்தன.. அவளைப் பொறுத்தவரை அந்தத் தோப்பும்.. கிணறும் நினைவுச் சின்னங்கள்.. அவளது குழந்தைப் பருவத்தில் மனதில் பதிந்த ஓவியத்தின் அடையாளங்கள்.. அந்த நாளில் நடந்த ஓர் நிகழ்விற்கு அவளை அழைத்துச் செல்லும் தேர் பூட்டிய குதிரைகள்..
“நீ வேற.. இந்த தடிமாட்டு தாண்டவராயன்களிடம்தான் கோல்டு பயப்படும்.. பாப்பாவிடம் பயப்படாது.. அதனால நீயும் நானும் இப்படி உட்கார்ந்து இவங்க மேல தண்ணியை அள்ளி வீசி டிஸ்டர்ப் பண்ணலாம்.. அண்ணி.. நீங்களும் ஜாயின் பண்ணிக்கறிங்களா..?” மலர்நிலா அழைக்க..
“ஸோ.. நைஸ்..” என்று துள்ளலுடன் வந்தாள் ரூபிணி..
மாமனார், மாமியார், சின்னமாமனார், சின்ன மாமியார் என்று குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்ற சங்கடத்துடன் தள்ளி நின்றவளுக்கு மலர்நிலாவின் அழைப்பு சந்தோசத்தைத் தந்தது.. அக்கா தண்ணீரில் குதிக்க மறுத்து விட்டாளே என்று உதட்டைப் பிதுக்கி அழுக ஆயத்தமான அஜந்தா.. அக்காவும் அண்ணியும் கலகலத்து சிரித்தபடி தண்ணீரை அள்ளி அண்ணன்களின் மீது விசி எறிந்த விளையாட்டில் ஈர்க்கப்பட்டவளாக அழுகையை கைவிட்டு தானும் இணைந்து கொண்டாள்.. மெல்ல அவர்கள் இருவரையும் விட்டு விலகி நடந்த மலர்நிலா கிணற்றின் விளிம்பில் நின்று உள்ளே எட்டிப் பார்த்தாள்.. வட்ட வடிவமான கிணற்றின் உள்பக்கம் சிமிண்ட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.. கிணற்றுக்குள் இறங்க கல்லினால் ஆன படிக்கட்டுக்கள் செறுகப் பட்டிருந்தன..
“மலர்…”
மலர்நிலா இமைகளை இறுக்கமாக மூடினாள்.. இது அவள் எதிர்பார்த்ததுதான்.. அவள் கிணற்றை எட்டிப் பார்ப்பதை வினோத் கவனித்து விடுவார் என்பதினால்தான் அவள் தோப்புக்குள் வந்ததுமே கிணற்றருகே செல்லாமல் வயலைச் சுற்றிப் பார்ப்பதைப் போல ஓடி விட்டாள்..
“இங்கே என்னம்மா செய்கிற..?”
வினோத்தின் ஊடுறுவும் விழிகள் அவளது மனத்தைப் படிப்பதை உணர்ந்தும் உணராததைப் போல..
“ச்சும்மா.. வேடிக்கை பார்க்கிறேன் சித்தப்பா..” என்றாள் மலர்நிலா..
“கிணற்றில் வேடிக்கை பார்க்க என்னம்மா இருக்கு..?”
“எத்தனையோ இருக்கு சித்தப்பா..”
அழுத்தமாகச் சொன்னாள் அவள்.. இந்தக் கிணற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் நினைவலைகள் இரவும் பகலும் அவளை ஆக்ரமித்து நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருப்பதை அறிந்தும் அறியாதவரைப் போல வினோத் கேட்ட கேள்வி அவள் மனதை ரணமாக்கியது..
அவர் மனதைப் படிக்கத் தெரிந்தவர்தான்.. உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பவர்தான்.. ஆனால்.. யதார்த்தவாதி, தேவையற்ற நினைவுகளும், குற்ற உணர்வுகளும் வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ விடாது என்று உபதேசிப்பவர்..
“தோப்பில் இதை விட அதிகமா ரசிக்க ஆயிரம் இருக்கும்மா.. தென்னங்கீற்று.. கொய்யாமரம்.. வானம்.. காற்று.. பறவைகள்ன்னு அங்கே வந்து உட்கார்ந்து ரசிம்மா..”
அவளைவிட அழுத்தமான குரலில் அவளை அழைத்தார் வினோத்.. துடிக்கும் இதழ்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்த அண்ணன் மகளின் விழிகளில் இழையோடிய கோபத்தை அலட்சியம் செய்தார்.. புரியாதவரைப் போல அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்தார்..
“நான் என்ன சின்னக் குழந்தையா சித்தப்பா..?” மலர்நிலாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது..
“சில விசயங்களில் நீ இன்னும் சின்னக் குழந்தைதான்..”
கடினமான முகத்துடன் சொன்ன வினோத் அண்ணன் குழந்தைகளுடன் நண்பரைப் போல பழகுபவர்.. மலர்நிலா எதைக் கேட்டாலும் செய்து கொடுப்பார்.. ஒன்றே ஒன்றைத்தவிர..
அவரது அடக்குமுறையில் மனம் குமுறியவளாக மலர்நிலா முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.. ஊருக்கு வந்திருக்கும் உற்சாகம் குறைந்து போனது..
‘எத்தனை வருசங்கள்..!’
மலர்நிலாவுக்கு பனிரெண்டு வயதானபோது பொள்ளாச்சிக்கு வந்தது.. இந்த பத்து வருடங்களாக அவளை பொள்ளாச்சிப் பக்கம் வர விடவில்லை.. அதற்கு முன்னால் கோடை விடுமுறையை அவளது குடும்பம் பொள்ளாச்சியில்தான் கழிக்கும்.. அந்த வசந்தகாலம் திரும்பி வருமா..?
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.