Chapter 06
நண்பகல் உணவு விருந்து போல இருந்தது.. வீட்டை நிறைத்து மகன்களும், மருமகள்களும், பேரன்களும், பேத்திகளும், பேரன் மனைவியும் குழுமியிருந்த சந்தோசத்தில் வேதாச்சலமும் சங்கீதாவும் ஒரு சுற்று பருத்ததைப் போல பொழிவுடன் இருந்தார்கள்.. பத்து வருடங்களாக மகன்களும், மருமகள்களும் மட்டுமே வந்து போன வீடு அது.. அதிலும் இரண்டு மகன்களும் சேர்ந்து வரமாட்டார்கள்.. சம்பத்தும் மாலதியும் பொள்ளாச்சிக்கு வந்தால் வினோத்தும இந்துபிரியாவும் சென்னை வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எடுத்துக் கொண்டு இருந்து விடுவார்கள்.. வினோத்தும் இந்துபிரியாவும் வருபோது சென்னையில் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சம்பத்தும் மாலதியும் கைமாற்றிக் கொள்வார்கள்..
மகேந்திரனுக்குத் திருமணமானவுடன் புதுமனைவியுடன் விருந்துக்கு வந்து தாத்தா பாட்டியுடன் ஒரு வாரம் தங்கியிருந்து விட்டுப் போனான்.. அவனுக்கு பொள்ளாச்சி வீட்டுக்கு வர மிகவும் பிடிக்கம்.. அந்தக்கால பாணியில் தேக்கு மரக் கடைசல்களுடன் கூடிய மிகப்பெரிய வீடு அது.. தாத்தா பாட்டியைப் பார்க்க என்று அடிக்கடி வருவான்.. வினோத்தும் இந்துபிரியாவும் வரும்போது அஜய்யையும் அஜந்தாவையும் அழைத்துக் கொண்டு வருவார்கள்.. மலர்நிலா மட்டும்தான் இந்த பத்து வருடங்களாக பொள்ளாச்சிக்கு வந்ததே இல்லை.. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது பேத்தியை பார்க்க என்று வேதாச்சலமும் சங்கீதாவும் சென்னைக்கு வந்து விடுவார்கள் என்பதினால் தாத்தா, பாட்டியைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்ற மலர்நிலாவின் கோரிக்கை எடுபடாமல் போனது..
நண்பகல் விருந்துக்குப் பின்னர் கண்களைத் தூக்கம் சுழற்ற எல்லோரும் அவரவர் அறைகளில் தஞ்சம் புகுந்தார்கள்.. மலர்நிலாவுக்கு ‘ஹப்பா’ என்றிருந்தது.. இனி கரைச்சலில்லாமல் அவள் அக்கடா என்று விச்ராந்தியாக கட்டிலில் சரிந்து விட்டத்தைப் பார்த்தபடி அவனைப் பற்றிய நினைவுகளை அசை போடலாம்..
‘பரணிதரா..’
மலர்நிலா புரண்டு படுத்தாள்.. மனதுக்குள் சொல்லிக் கொள்வதுதான்.. அவள்தான் அவனிடம் பேசுவதே இல்லையே.. ஒற்றைப் பார்வைக்காக ஓர் நாள்முழுவதும் காரை ஓட்டி வருபவனின் அரிதான காதலின் வசீகரி அவளல்லவா..
‘உய்ய.. உய்ய.. தீராததுடா.. உன் மீதான என் காதல்..’
கண்மூடித் தவித்தாள் மலர்நிலா.. அவன் மீதான அவளது தவிப்பு முற்றுப் பெறாத ஓர் தொடர்கதையாகவே இருந்தது.. அவனது விரல்கூட அவள்மீது பட்டதில்லை.. எட்ட அமர்ந்து தொட்டுப் படரும் பார்வை மட்டுமே அவனுக்கும் அவளுக்குமான ஆலிங்கனமாக இருந்திருக்கிறது.. இருந்தும் அவனைப் பார்க்க வேண்டும் போல உடலில் பற்றும் தேடல் தீ அவளைச் சுட்டுப் பொசுக்குகிறதே.. அதன் தீவிரம் எத்தகையது என்பதை எவறறிவார்..?
இது காதல்.. காமமல்ல.. அவனது ஒற்றைப் பார்வையில் இற்று விழும் அவளுக்கு மட்டும்தான் தெரியும்.. காமமில்லா காதலின் வலிமை எத்தகையது என்பது..
அவனது ஒற்றைப் பார்வை தராத சுகத்தையா அவனது விரல் தீண்டும் ஸ்பரிசம் தந்துவிடப் போகிறது..?
அவள் மனதில் தேடல் உடல் சேர்வதற்கான தேடலில்லை.. ஒருவருக்காக மற்றொருவர் உருகிக் கரைந்து கொண்டிருக் கிறார்களே.. அவர்களது மனம் படும் பாட்டை அறிந்தவர் யார்..? இது இரு உயிர்கள் சேர்வதற்கான தேடல்..
மலர்நிலாவின் விழிகளில் வழிந்த கண்ணீர் தலையணையை நனைத்தது.. அறை மூடியிருக்கிறது.. கதவு தாழிடப்பட்டிருக்கிறது என்ற நிம்மதியில் அவள் சத்தமில்லாமல் அழுதாள்.. அவனது நினைவுகளில் அழுவது கூட சுகம்தான்.. இதோ.. கோயம்பத்தூருக்கு அருகில் வந்து விட்டாள்.. அவள் பொள்ளாச்சிக்கு வந்திருப்பதை பரணிதரன் அறிவானா என்பது கூடத் தெரியவில்லை.. தூது சொல்ல எந்த வழியுமில்லை.. அப்படியே தூதனுப்பினாலும் அவளை அவ்வளவு எளிதாக அவன் பார்த்துவிட முடியாது.. பொள்ளாச்சி சென்னையல்ல.. இங்கே கடற்கரை இல்லை.. அவனைக் காண்பதற்காக காத்திருக்க உழைப்பாளர் சிலையில்லை.. அதனருகே மரமில்லை.. மரத்தடி நிழலில்லை.. அவனிருக்கும் ஊரருகே.. அவனிருக்கும் திசை நோக்கி ஓடிவிடத் துடிக்கும் பாதங்களுக்கு ஒத்தடமிட்டு ஆறுதல் தருவது அவனைப் பற்றிய நினைவுகள் தான்..
ஓர்நாள் அவனது விரல் தீண்டுவாள்.. வலிமையான அவன் விரல்களிடையே அவளது மென் விரல்கள் சிறைபடும் நாளுக்காகத்தான் அவளது இந்தக் காத்திருப்பு.. அவனை எப்படி கரம் பிடிப்பது..? வழி தெரியவில்லை.. அவளது மனமறிந்த அவளது குடும்பத்திற்கு அவள் மனதின் வலி தெரியவில்லை.. அவர்கள் நியாயம் அவர்களுக்கு.. அவனுக்கான அவளது நியாயத்தை கண்டு கொள்ள மறுக்கிறார்கள்.. நியாயத்திற்கான நியாயத்தின் குரலை செவி மடுக்காமல் புறக்கணிக்கிறார்கள்.. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் காத்திருப்பு மட்டும்தான்.. என்றாவது ஓர்நாள் பிருத்விராஜன் குதிரையில் வந்து சம்யுத்தையைக் கொய்வது கொண்டு போனதைப் போல.. அவளது பரணிதரன் வந்து அவளைக் கொய்து கொண்டு போவான்.. அதுவரை அவள் காத்திருப்பாள்.. அவனது விரல்பட்டு நோகக் காத்துக்கிடந்தது வழியறியாத அப்பேதையின் தேகம்..
“கடன் பட்டேன் உன்னிடம்.. உன் மனமெல்லாம் என்னிடம்..” அவளது இதழ்கள் முணுமுணுத்தன..
‘கடன்பட்டவரின் நெஞ்சம் எப்படி மலையைச் சுமப்பதைப் போல கனக்கும் என்பதை இலங்கேஸ்வரன் அறிவான்.. உங்களுக்கு ஏன் அது புரியவில்லை சித்தப்பா..’ மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்..
கடன் பட்டாற் நெஞ்சம் போல கலங்கினானே இலங்கை வேந்தன்.. மலர்நிலாவும் கடன் பட்டிருக்கிறாளே.. பனிரெண்டு வயதில் பட்ட கடன் அது.. இந்த பத்து வருடங்களாக அவள் மனதில் சுமந்து கொண்டிருக்கும் பாரம் அது..
அதை இறக்கி வைக்க முடியாது.. இளைப்பாற வைக்கத்தான் முடியும்.. எதிலிருந்து வேண்டுமானாலும் தப்பித்து விடலாம்.. துரத்தும் நினைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது..
மலர்நிலா முகத்தைத் தலையணையில் புதைத்தாள்.. சோர்ந்திருந்த இமைகள் மூடிக் கொண்டன.. மூடிய விழிகளுக்குள் முகம் முழுவதும் புன்னகை படற பரணிதரன் வந்து நின்றான்.. அவனுக்கும் அவளுக்குமான பத்து வருட நினைவுகள் கலைந்து குவிந்து கசங்கலாக மனதில் வந்து அலைமோதின.. மீள முடியாத நினைவுகள்.. மீள விரும்பாத நினைவுகள்.. கலைந்து கிடந்த அவனது நினைவுகளை பிரித்தெடுத்து அடுக்கிப் பார்த்தாள்.. அணைப்பதற்கு இந்த நினைவு.. அழுவதற்கு இந்த நினைவு.. எழுதிட இந்த நினைவு.. ஏங்கிட இந்த நினைவு.. தவிப்புக்கு இந்த நினைவு.. துடிப்புக்கு இந்த நினைவு..
எத்தனையெத்தனை நினைவுகள்.. அத்தனை நினைவுகளும் அவளது மனதின் ஆழத்தில்.. மௌனத்தில் திரையமைத்து அவற்றை யாரும் உணர்த்திடாத வண்ணம் பொக்கிசம் போல பாதுகாத்துக் கொண்டிக்கிறாள்.. வினோத்தின ஊடுறும் பார்வையும்.. முடிச்சிடும் புருவங்களும்.. உன்னை நான் அறிவேன் என்று உணர்த்திக் கொண்டே இருந்தன.. அவள் நேர்பார்வையுடன் அதை எதிர் கொண்டாள்.. அவள் மனதுக்கு எது நியாயம் என்று பட்டதோ அதை அவள் செய்கிறாள்.. அவள் வாழ்வைத் தீர்மாணிக்கும் உரிமை அவளுக்கு இல்லையா..?
பெண்ணென்று தன்னை அவள் உணர்ந்ததும்.. உணர்வதும் பரணிதரனின் பார்வையில் மட்டும்தான்.. அவளுக்கான அவனது தேடலில் அவள் மனதில் உண்டாகுமே ஓர் கர்வம்..! அதற்கு ஈடென்று எதுவும் இல்லை.. அவன் அவளை கௌரவப் படுத்தினான்.. அவனுக்குத் தேவை அவள் மட்டுமே என்பதை உணர்த்தினான்.. அவளை மேக வீதியில் நடக்க வைத்தான்.. அவன் தரும் அந்த போதை மகத்தானது..
‘என்னை எனக்காகவே மட்டும் காதலிக்கிறவன் நீ.. உன்னிடம் மட்டுமே நான்.. நானாக முடியும்.. என் மீதான உனது தேடலை நானறிவேன்.. அது ஆன்மாவின் தேடல்.. என்னிடத்தில் உன்னால் வேறு எவரையும் பொருத்திப் பார்க்கக்கூட, முடியாதெனும் போது.. நான் எப்படி உன்னை விட்டுக் கொடுப்பேன்..?’
நினைவுகளின் கனம் தாங்க முடியாத அயர்வில் அவள் மெல்ல உறக்கத்தில் மூழ்கி அமிழ்ந்து போனாள்.. ஆழ்ந்த நித்திரையில் அவளிருந்த போது அறைக்கதவு உடைபடுவதைப் போலத் தட்டப்பட்டது.. சென்னை வீட்டில் அறைக்கு அறை காலிங் பெல் பொருத்தப் பட்டிருக்கும்.. பொள்ளாச்சி வீட்டில் கனமான தேக்கு மரக் கதவுதான் பாவம் அடிவாங்கும்..
“யாரு..?” கண்களைக் கசக்கியபடி எழுந்த மலர்நிலா கதவைத் திறந்தாள்..
“தூங்கு மூஞ்சி.. காபி வேணாமா..?” சிரித்த முகமும் கையில் ஆவி பறக்கும் காபிக் கப்புமாக இந்து பிரியா உள்ளே வந்தாள்..
“தேங்க் யு சித்தி..” கட்டிலில் உட்கார்ந்து காபியை உறிஞ்சியபடி இந்துபிரியாவைப் பார்வையிட்டாள் மலர்நிலா..
உயர்தரபட்டும்.. வைர நகைகளும்.. பின்னலில் பூவுமாக மிளிர்ந்தாள் இந்துபிரியா.. மலர்நிலாவிடம் பேசியபடி கட்டிலில் பட்டுப்புடவையையும் வைர நகைகளையும்.. நெருக்கித் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தையும் வைத்தாள்.. மலர்நிலா புருவங்களை கேள்வியுடன் உயர்த்தினாள்..
“எங்கேயாச்சும் வெளியே போகிறோமா சித்தி..”
இந்துபிரியா ஓர்நொடி தடுமாறுவதைப் போல இருந்தது.. மறுநொடியில் இருண்ட முகத்தில் வலிய வரவழைத்துக் கொண்ட பொழிவின் பின்னால் ஒளிந்து கொண்டவளாக தலையசைத்தாள்..
“ஆமாண்டா மலர்.. க்விக்.. சீக்கிரமாக் குளிச்சுட்டு ரெடியாவியாம்.. நாங்கள்ளாம் எப்பவோ ரெடி..”
“எங்கே போகிறோம் சித்தி..?”
“யாருக்குத் தெரியும்.. குடும்பத்தோட கிளம்பனும்னு உத்தரவு.. உன் சித்தப்பாவிடம் யார் கேள்வி கேட்கிறது..?”
“அவரோட பாஸ்.. நீங்க கேள்வி கேட்கிறது..”
மலர்நிலா கேலி செய்தபடி குளியலறைக்குள் போய் விட்டாள்.. இந்துபிரியா பெருமூச்சுடன் கட்டிலில் உட்கார்ந்தாள்.. எங்கும் செல்லப் போவதில்லை.. அந்த வீட்டிற்குத்தான் விருந்தினர்கள் வரப் போகிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும்..
மலர்நிலாவுக்கு அது தெரியாதே.. அது தெரிய வரும் போது எப்படி எதிர் கொள்வாள்..?
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.