Chapter 07

0Shares

ஆழ்ந்த மை வண்ணத்தில் பட்டுப்புடவை..! கெட்டி ஜரிகையில் பார்டர்.. உடல் முழுவதும் தங்கப் புள்ளிகளாய் ஜரிகை.. ஜரிகை வண்ணத்தில் கைகளுக்கு மை வண்ண அன்னப் பறவைகள் வரிசை கட்டியிருக்கும் வேலைப்பாடு கொண்டு ரவிக்கை.. மலர்நிலா அந்தப் புடவையில் அழகிலும் வேலைப்பாட்டிலும் மயங்கி நின்றாள்.. ஆவலுடன் அதை எடுத்து விரித்துப் பார்த்தவள் விழிகள் மலர..

“இது யாருடைய ஸாரி சித்தி..? அண்ணியுடையதா..?” என்று கேட்டாள்..

“உன்னுடையது..” என்றாள் இந்துபிரியா..

“என்னுடையதா..? இது என் ஸாரி இல்லை சித்தி..”

“புதிதா எடுத்தது மலர்..”

“யாருக்கு எடுத்தது..? யார் எடுத்தது..?”

“உனக்காக.. நாங்க எடுத்தது..”

“நாங்கன்னா..?”

“நம்ம ஃபேமிலியில் எடுத்ததுன்னு அர்த்தம்.. போனவாரம் நானும் அக்காவும் ஷாப்பிங் போனப்ப எடுத்துட்டு வந்தோம்..”

“ஜாக்கெட்கூட தைத்து ரெடியா இருக்கே..”

“ஆமாம்.. உன் பிளவுஸ் ஒன்றை எடுத்துக் கொண்டு போயிருந்தோமா.. வரும் வழியிலேயே டெய்லர் ஷாப்பில் தைக்கக் கொடுத்து விட்டு வந்து விட்டோம்.. மறுநாளே பிளவுஸ் ரெடி.. “

“ஓகே சித்தி.. இதை சென்னையிலேயே குடுத்திருக்கலாமே..”

“பிளவுஸ் ரெடியானதும் சர்ப்ரைஸ் கிப்டா ஸாரியையும் பிளவுஸையும் கொடுக்கலாம்ன்னு பிளான் பண்ணியிருந்தோம்.. ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில பிளானை மறந்து இதை எங்க துணிகளோடு பேக் பண்ணிட்டேன்..”

கதை என்னவோ நன்றாகத்தான் இருந்தது.. ஆனால் நம்பும்படியாகத்தான் இல்லை.. சேலையின் அழகு மனதை மயக்கினாலும் எதற்காக இப்போது புதுப்புடவையும், வைர நகைகளும் என்ற சந்தேகம் மனதில் தட்ட யோசனையானாள் மலர்நிலா..

சேலையை இந்துபிரியாதான் கொண்டு வந்திருக்கிறாள்.. மாலதி பெண்ணின் அறைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.. அது ஏன் என்ற நினைவுடன் சித்தியைப் பார்த்தாள்..

“சீக்கிரம் மலர்.. எல்லோரும் காத்திருக்கிறாங்க இல்ல..” இந்துபிரியா அவசரப் படுத்தினாள்..

“எல்லோரும் காத்திருக்கிறாங்களா..? யார் காத்திருக்கிறாங்க..?” மலர்நிலாவின் சந்தேகம் வலுத்தது..

நாக்கைக் கடித்தபடி இந்துபிரியா சுதாரித்துக் கொள்வது தெளிவாகவே தெரிந்தது..

“வேற யார் காத்திருப்பாங்க..? எல்லாம் நம் வீட்டு ஆள்கள் தான் காத்திருக்கிறாங்க.. அவுட்டிங் போகிறோம்ன்னு சொன்னேனா இல்லையா..?”

“காலையில்தான் தோப்புக்குப் போய் விட்டு வந்தோம்..”

“காலையில் தோப்புக்குப் போனா சாயங்காலம் எங்கேயும் போகக் கூடாதுன்னு எழுதிக் கிழுதி வைத்திருக்கா..?”

“இல்லைதான் சித்தி.. இது சென்னையா இருந்தா நீங்க சொல்வது சரி.. பட்.. நாம இப்ப பொள்ளாச்சியில இருக்கிறோம் சித்தி.. சாயங்காலம் அவுட்டிங் போகிறதுக்கெல்லாம் நோ சான்ஸ்..”

மலர்நிலா விடாமல் வாதாட இந்துபிரியா பொறுமையிழந்து எரிச்சல் பட்டாள்..

“மலர்..” கடுமையான அவளது குரலில்..

‘பூனைக்குட்டி வெளியில் வருது..’ என்று நினைத்துக் கொண்டாள் மலர்நிலா..

“என்ன சித்தி..”

“சொன்னதை செய்.. இத்தனை கிராஸ் கொஸ்டின் கேட்காதே.. வீட்டில் லேடிஸ் எல்லாம் பட்டும் வைரமுமா கிளம்பறப்ப நீ மட்டும் சிம்பிளா இருந்தா நல்லா இருக்காது.. வா.. வந்து இந்த ஸாரியைக் கட்டு..”

மலர்நிலா மறுக்கவில்லை.. ஏதோ நடக்கப் போகிறது என்று அவளது உள்ளுணர்வு சொல்லி விட்டது.. என்னதான் நடக்கும் என்பதை பார்த்து விடலாமே.. பெரியவர்களுக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால் அவர்களது வாரிசான அவளுக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கும்..

மலர்நிலா பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டாள்.. இந்துபிரியா அவளுக்குத் தலைவாரி தழையப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தை சூட்டி விட்டாள்.. இந்துப் பிரியாவுடன் இணைந்து கொண்ட ரூபிணி மலர்நிலாவுக்கு மெலிதாக ஒப்பனை செய்துவிட.. இருவருமாக வைர நகைகளை மலர்நிலாவுக்கு அணிவித்து விட்டு தள்ளி நின்று அழகு பார்த்து திருஷ்டி கழித்தார்கள்.. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த மலர்நிலாவுக்கே..

‘வாவ்..’ என்று ரசிக்கத் தோன்றியது..

ஒப்பனையில்லாமலே அவள் தேவதையைப் போல இருப்பாள்.. அழகிய பட்டுப் புடவையும்.. அதன் அழகுக்கு அழகு சேர்த்த வேலைப்பாடுகளுடன் கூடிய ரவிக்கையும்.. வைர நகைகளும்.. மல்லிகைப்பூவுமாக.. தேவதைகளுக்கும் அதி தேவதையாக மிளிர்ந்தாள்..

‘இப்ப பரணி மட்டும் இருந்திருக்கனும்..’

அந்த நேரத்திலும் அவனது நினைவு அவள் மனதை வட்டமிட்டது.. காட்டன் சேலையிலும், சுடிதாரிலும் அவளைப் பார்க்கும் போதே அவன் விழிகளில் மயக்கம் வழியும்.. இந்த அலங்காரத்தில் அவளைப் பார்த்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு பறந்திருப்பான்..

மின்னலாக மனதில் ஓர் எண்ணம் தோன்ற.. செல்போனில் ஓர் ‘செல்ஃபி’ எடுத்து அந்த நொடியின் அலங்காரத் தோற்றத்தைப் பத்திரப் படுத்தி சேகரித்துக் கொண்டாள் மலர்நிலா.. என்றாவது ஓர்நாள் அவனுக்கு அவள் சொந்தமாவாள்.. அப்போது அவனிடம் காட்டும் புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே..

“இங்கேயே இருங்க.. நான் கூப்பிடறப்ப வந்தாப் போதும்..”

இந்துபிரியா கீழே விரைந்து விட்டாள்.. நடக்கும் நாடகத்தைப் பார்த்தும் பார்க்காதவளைப் போல பதுமையாக மலர்நிலா உட்கார்ந்திருந்தாள்.. ரூபிணி நாத்தனாரைப் பார்ப்பதைத் தவிர்ப்பதை மனதுக்குள் குறித்துக் கொண்டாள்..

“அண்ணி..” மலர்நிலா அறியாப் பெண் போல அழைத்தாள்..

“ம்ம்ம்.. என் என்ன மலர்..” ரூபிணி தந்தியடித்தாள்..

“ஏன் உங்களுக்கு இப்படி வியர்க்குது..? ஏஸி ஓடலையா..?”

கையில் ஏஸி ரிமோட்டை வைத்தபடி வேண்டுமென்றே கேட்டவள் அண்ணாந்து பார்த்து விட்டு..

“ஏஸி ஓடுதே..” என்றாள்..

ரூபிணி அவசரமாக கைக்குட்டை கொண்டு முகத்தில் துளிர்த்த வியர்வையை ஒற்றிக் கொண்டு..

“டென்சன் மலர்.. அதான்.. வியர்க்குது..” என்றாள்..

“எதுக்கு டென்சன்..?” மலர்நிலா துளைத்தாள்..

‘நீ இப்படிக் கேள்வி மேல கேள்வியாய் கேட்டுத் துளைக்கிற பாரு.. அதனால்தான் டென்சன்..’ இந்துபிரியா வந்து சேர்கிறாளா என்று கதவை ஏக்கத்துடன் பார்த்தாள் ரூபிணி..

‘இந்த சின்ன மாமியார் பெரிய சித்ராங்கி… கெட்டிக்காரத்தனமா என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிருச்சு..’

மைத்துனரின் மருமகள் அவளைத் தாளித்துக் கொட்டிக் கொண்டிருப்பதை அறியாதவளாக ஒரு வழியாக வந்து சேர்ந்தாள் இந்துபிரியா..

“வா ரூபிணி.. நாம் மலரைக் கூப்பிட்டுக்கிட்டுப் போகனும்..”

“ஹலோ.. என்ன சித்தி.. பிளே பண்றிங்களா..? நானென்ன நடக்க முடியாம தவழ்ந்துக்கிட்டு இருக்கிற சின்னப் பப்பாவா..? இல்ல வழி தெரியாம காட்டுக்குள்ளே ஏதும் மாட்டிக்கிட்டு இருக்கேனா..? நீங்க கை பிடித்துத் தூக்கிக்கிட்டு போகப் போகிறதைப் போல ஃபிலிம் காட்டறிங்களே.. நம்ம வீட்டு மாடியில இருந்து ஹாலுக்கு இறங்கிப் போக என்னைக் கைத்தாங்கலா நீங்க ரெண்டு பேரும் காவல் காத்து.. அணைத்துக் கூப்பிட்டுக்கிட்டுப் போகனுமா..? காமெடியா இருக்கு சித்தி..”

‘எனக்கு டிராஜடியா இருக்கு..’ ரூபிணிக்கு தலை காய்ந்தது..

இந்த விiளாயட்டுக்கே நான் வரவில்லை என்று ஓடிவிடலாம்.. பக்கத்தில்தான் கோயம்பத்தூர் இருக்கிறது.. கோயம்பத்தூரில்தான் ரூபிணியின் பிறந்தவீடு இருக்கிறது.. அப்படி ஓட முடியாமல் மகேந்திரனின் மனைவி.. அந்த குடும்பத்தின் மருமகள் என்ற கடமை தடுத்து நிறத்தியது..

“ம்ப்ச்.. சொன்னாக் கேட்கனும் மலர்..”

இந்துபிரியா ஒரு புறமும்.. ரூபிணி மறுபுறமுமாக அடை காக்க.. நடுவில் நடந்து படியிறங்கிய மலர்நிலா.. அப்படி ஹாலில் யார்தான் இருக்கிறார்கள் என்று பார்வையை சுழல விட்டாள்.. கண்ணெதிரே விரிந்த காட்சியில் அவளது முகம் கடினமானது.. கண்கள் கூர்மையாகின.. பார்வையில் நெருப்புப் பொறி பறந்தது..

கோட் சூட்டில் ரேமண்ட் விளம்பர மாடலைப் போல கால்மேல் கால் போட்டு படு தோரணiயாக இருந்தவனை அவள் நன்கு அறிவாள்.. இந்து பிரியாவின் அண்ணன் மகன் அவன்.. மலர்நிலாவை பலமுறை அவன் பார்த்திருக்கிறான்.. பெங்களூரில் ஐ.டி கம்பெனி நடத்துபவன் அடிக்கடி சென்னைக்கு வருவான்.. அவன் வரும் போதெல்லாம் மலர்நிலாவை ஆசையுடன் வட்டமிடுவான்..  மலர்நிலா அவனிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டாள்..

இந்துபிரியாவின் பெற்றோரும், அண்ணனின் குடும்பமும் அங்கே இருந்தார்கள்.. அவர்கள் எப்போது வந்தார்கள் என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் மலர்நிலா.. உள்ளூரைச் சேர்ந்த உறவினர்கள் ஹாலை நிறைத்திருக்க.. நடுவில் பழங்கள், பூக்கள், இனிப்புக்கள், என்று தாம்பாளத் தட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தன.. அவற்றில் ஒரு தட்டில் பட்டுப்புடவை.. இன்னொரு தட்டில் நகைப் பெட்டிகள்..

‘என்ன நடக்குது..?’

மலர்நிலா பல்லைக் கடித்தபடி ஹாலில் கால் பதித்தாள்.. அவளுக்கென்று சேர் போடப்பட்டிருக்க.. அதில் உட்காரச் சொன்னார்கள்.. சிலையைப் போல அமர்ந்தாள்.. இந்துபிரியாவின் அண்ணன் மகன் அவளை உரிமையுடன் பார்வையிட.. இவள் முறைத்தாள்.. நிச்சயதார்த்தப் பத்திரிக்கை வாசிக்கப்பட்டு.. தாம்பூலத் தட்டுக்கள் மாற்றப்பட கைகளில் எடுக்கப்பட்டபோது புயலென எழுந்தாள்.. அவள் என்ன செய்யப் போகிறாள் என்று மற்றவர்கள் யூகம் செய்வதற்குள் தட்டுக்கள் இரண்டையும் படு வேகமாகத் தட்டி விட்டாள்.. தாம்பூலத் தட்டுக்கள் பறந்து சுவரில் மோதி பழங்களும் வெற்றிலை பாக்கும்.. புடவையும், நகைகளும் கவிழ்ந்து சிதறின..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link