Chapter 09
“உன்னிடம் இதை நாங்க எதிர்பார்க்கலை மலர்..”
அழுத்தம் திருத்தமான குரலில் குற்றம் சாட்டினார் வினோத்.. மலர்நிலா நிச்சயதாம்பூலத் தட்டுக்களை தட்டி விட்ட வேகத்தில் இந்துபிரியாவின் அண்ணன் குடும்பத்தினர் உடனடியாக கிளம்பி விட்டார்கள்.. இந்துபிரியா மன்னிப்பு கேட்டு மன்றாடியும் அவர்கள் நிற்கவில்லை..
“தங்கை குடும்பம்ன்னு நினைத்தோம்.. அவளோட மைத்துனன் குடும்பம்ன்னு பிரித்துப் பார்க்கலை..”
பேச்சோடு பேச்சாக அவர்கள் பிரிவினைக் குண்டைத் தூக்கிப் போட்டதில் சங்கீதாவுக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது..
‘ஒற்றுமையா இருக்கிற அண்ணன், தம்பிகளின் குடும்பங்கள் பிரிஞ்சு நின்னுருமோ.. அம்மா.. தாயே.. விஷ்ணு துர்க்கை..! நீதான் கண் திறந்து என் புள்ளைகளைக் காப்பாத்தனும்தாயே..’ அவளது தாய் மனம் பரிதவித்தது..
“உன் வீட்டில பெண்ணெடுக்கனும்னு ஆசைப்படறோம்ன்னு இந்துவிடம் சொன்னோம்.. அதுக்கென்ன அண்ணான்னு என் தங்கையும் சொன்னா.. நம்பிக் கிளம்பி வந்தோம்.. அவ கொடுத்த வாக்குக்கு என்ன மதிப்புன்னு இங்கே வந்து பார்த்த பின்னால்தானே தெரியுது.. இந்து..! நீ அவசரப் பட்டுட்ட.. அஜந்தாவைப் பத்தி முடிவெடுக்க உனக்கு உரிமை இருக்கு.. உன் ஹஸ்பெண்டின் அண்ணன் மகளைப்பத்தி முடிவெடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கு..?”
“அண்ணா.. கொஞ்சம் பொறுமையா இருங்க..”
“இன்னும் பொறுமையா இருந்து வேறு எந்த அவமானத்தை வாங்கிக் கட்டிக்கச் சொல்கிறம்மா.. உன்னைப் பெண் கொடுத்ததுக்கு எங்களுக்குக் கிடைத்த மரியாதை போதும்..”
“நான் பேசறேன் அண்ணா..”
“உன் பேச்சுக்கு இந்தக் குடும்பத்தில் மதிப்பிருக்குன்னா இன்னமும் நினைத்துக்கிட்டு இருக்கிற..? ஆர் யு மேடு..? உன்னை செல்லாக் காசுக்குக் கூட இந்தக் குடும்பம் மதிக்கலைன்னு இன்னுமா புரியலை..? உன் பேச்சுக்கு மதிப்பிருந்திருந்தா நிச்சய தாம்பூலத் தட்டுக்கள் பறந்திருக்காது இந்து..”
“அவளிடம் நாங்க எந்த விவரமும் சொல்லலை அண்ணா..”
“சொல்லியிருந்தா மட்டும் உன் மைத்துனர் மகள் சந்தோசமாக நிச்சயதாம்பூலத் தட்டில் இருந்த புடவையைக் கட்டி.. நகைகளைப் பூட்டி.. மாலையைப் போட்டு.. சபையில் உட்கார்ந்திருப்பாள்ன்னு எங்களை நம்பச் சொல்கிறியா..? உன் கூடப் பிறந்ததினால் உன்னைப் போலவே நானும் முட்டாளா இருப்பேன்னு நினைத்து விட்டியா..? இல்லை இந்து.. அதை மறக்காதே..”
“நாம் உட்கார்ந்து பேசலாம்..”
“உட்கார்ந்து பேசுவதா..? இந்த வீட்டிலா..? உன் வீட்டில் உட்கார்ந்து பேசக் கூப்பிடு.. தங்கை வீடென்று நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உட்கார்ந்து பேசறேன்.. இங்கே வேண்டாம்.. நாங்கள் அப்போதே சொன்னோம்.. பெங்களூரும் சென்னையும் பக்கம், பக்கம்.. நாம் அங்கேயே நிச்சயதார்த்தத்தை நடத்திக் கொள்ளலாம்ன்னு.. நீயும், உன் குடும்பமும் கேட்கலை.. பொள்ளாச்சிதான் உங்க பூர்விகம்.. மகேந்திரனின் கல்யாண நிச்சயதார்த்தம் இங்கே நடக்கலை.. அதற்கு உறவுக்காரங்க எல்லாம் சண்டைக்கு வந்து விட்டாங்க.. மலர்நிலாவின் நிச்சயதார்த்தம் இங்கேதான் நடக்கனும்.. கல்யாணத்தை வேண்டுமானால் பெங்களூரில் நடத்திக்கலாம்ன்னு ஒற்றைக்காலில் நின்றீங்க.. இப்ப என்ன ஆச்சு..? அங்கேயாவது சென்னையோடு இந்த விசயம் நின்றிருக்கும்.. இங்கே உங்க சொந்த பந்தம் முன்னால் நாங்க மூக்கறுபட்டது தான் மிச்சம்..”
அவர்கள் கத்தியபடி வாசலுக்குப் போக மலர்நிலா அவளுக்கான சேரில் எதுவும் நடக்காததைப் போல உட்கார்ந்து கொண்டாள்.. எதற்காக அவளது குடும்பம் பொள்ளாச்சியில் நிச்சயதார்த்தத்தை நடத்திவிட யத்தனித்தார்கள் என்பது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.. பத்து வருடங்களாக பொள்ளாச்சிப் பக்கம் வர விடாமல் காவல் காத்தவளைக் கையோடு பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தது இதற்குத்தானா..?
பொள்ளாச்சியில் நிச்சயதார்த்தம் நடந்தால் அது பரணிதரனுக்குத் தெரிந்து விடும்.. அவன் அவளது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விலகி நின்று விடுவான்.. அதுதானே அவளது குடும்பத்தின் திட்டம்..
‘இவங்களுக்கு பரணியும் நானும் மீட் பண்ணுவது தெரிந்திருக்கனும்.. என்னிடம் கேட்டால் நான் ஆமாம்.. பரணியைத்தான் விரும்புகிறேன்.. அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி விடுவேன்ங்கிற பயத்தில கேட்காமல் இருந்திருக்காங்க.. என் போக்கில விட்டுப் பிடிக்கிறாங்களா..? திடிர்ன்னு பொள்ளாச்சியில சொந்த பந்தம் மத்தியில நிறுத்தி வைத்து நிச்சயம் பண்ணிவிட்டா ‘நோ அதர் வே’ன்னு நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளத் தயாராகி விடுவேன்னு தப்புக் கணக்குப் போட்டுட்டாங்க.. என்னை எவ்வளவு பெரிய இக்கட்டில் மாட்டி விட்டாலும் சரி.. நான் பரணியைத்தவிர வேறு எவனையும், கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதிக்கவே மாட்டேன்..’
எவ்வளவு கெஞ்சியும் நிற்காமல் இந்துபிரியாவின் அண்ணனின் குடும்பம் பறந்து விட்டது.. வீட்டுக்குள் வந்த வினோத் மலர்நிலாவையே தீர்க்கமாகப் பார்த்தார்.. குற்றம் சாட்டும் அவரது பார்வையை குற்ற உணர்வின்றி எதிர்கொண்டாள் மலர்நிலா..
“நாங்க உன்னை ஒழுங்கா வளர்த்திருக்கோம்ன்னு நம்பினேன் மலர்..”
“ஒழுக்கக் கேடா நான் எதையும் செய்து விடவில்லை சித்தப்பா.. ஒன்றையே நினைத்து அதில் நிலைத்து நிற்கிறேன்..”
“உன்னை நம்பி வாக்குக் கொடுத்த பெரியவங்களை சொந்த, பந்தம் முன்னால் சொந்த ஊரில், பூர்விக வீட்டில் வைத்து அவமானப் படுத்தி விட்டு இத்தனை நிமிர்வாய் பேசுகிறாயே.. எங்கிருந்து இந்த நெஞ்சழுத்தம் வந்தது உனக்கு..?”
“என்னைப் பெற்ற அப்பாவிடமிருந்தும்.. வளர்த்த சித்தப்பாவிடமிருந்தும் வந்தது சித்தப்பா.. யாரைக் கேட்டு நீங்க வாக்குக் கொடுத்தீங்க..? சம்பந்தப்பட்ட என்னிடம் கேட்டிங்களா..? சொந்த ஊருக்குப் போகலாம்ன்னு பொய் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு வந்து கழுத்தில் கத்தியை வைப்பதைப் போல.. திடிர் நிச்சயதார்த்த விழாவில நிற்க வைத்தீங்களே.. எதுவும் பேச முடியாம நான் இருந்துட்டா கையைக் கட்டிக் காவலில் வைப்பதைப் போலக் கல்யாணத்தை முடித்து விடலாம் என்கிற எண்ணம்தானே உங்களுக்கு.. இதை நானும் உங்களிடம் எதிர்பார்க்கலை சித்தப்பா..”
“கழுத்தில் கத்தி வைத்தோமா..? இந்துவின் அண்ணன் மகனுக்கு என்ன குறை..?”
‘குறை..’ என்ற வார்த்தையில் வினோத் கொடுத்த அர்த்தம் எதற்கானது என்பதை புரிந்து கொள்ள முடியாதா முட்டாளா மலர்நிலா..! அவள் உதட்டைக் கடித்தபடி அவரைப் போலவே தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்தாள்..
“அவருக்கு எதுவுமே குறைவில்லை சித்தப்பா.. என் மனதில் அவர்மேல அன்பிருக்கு.. பாசமிருக்கு.. மரியாதை இருக்கு.. அவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவள் கொடுத்து வைத்தவள்..”
“பார்த்தாயா.. உண்மையை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய்.. அந்த கொடுத்து வைத்த பெண் நீயாக இருக்கனும்னு நாங்க ஆசைப்படறதில் என்ன தவறு இருக்கும்மா..? இந்துவின் அண்ணன் மகனாக அவர் இருப்பது எங்களுக்கு வசதியாகப்போனது.. இந்துவைக் கேட்கச் சொன்னோம்.. தங்கை கேட்டால் இந்துவின் அண்ணன் தட்டவே மாட்டார்.. அப்படி இந்துவை முன்னால் நிறுத்தி நாங்க பேசி முடித்த சம்பந்தம் இது.. எளிதில் கிடைக்கக் கூடிய சம்பந்தமில்லை இது..”
“எதுக்கு இத்தனை ரிஸ்க் எடுக்கணும் சித்தப்பா.. இதனால் தேவையில்லாம சித்திக்கு மனவேதனை.. அவங்களுக்கும் அவங்க அண்ணனுக்கும் மனத்தாங்கல்.. சித்தியின் அண்ணன் மகன் கிடைப்பதற்கு அரிய மாப்பிள்ளைதான்.. அதில் சந்தேகமே இல்லை.. பட்.. என் மனதில் அவர்மீது எண்ணமில்லையே சித்தப்பா.. என் மனம் வேறு ஒருவரிடம் இருக்கிறதே..”
அதுவரை பேசாமல் இருந்த சம்பத் தம்பியை நிமிர்ந்து பார்த்தார்.. பேச்சை வளர்க்காதே என்று அவரது பார்வை வினோத்தை எச்சரித்தது.. எதனால் அந்த நிச்சயதார்த்தம் நின்று விட்டது என்பதை அறியும் ஆவலில் உள்ளூரில் இருந்த நெருங்கிய உறவினர்கள் ஹாலில் உட்கார்ந்திருந்த சேர்களை விட்டு எழுந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. வீடு முழுவதும் வேலையாள்கள் வேறு.. பேச்சு வளர்ந்தால்.. அவர்கள் எதைக் கேட்டு விடக் கூடாது என்று மலர்நிலாவை கேள்வி கேட்காமல் தவிர்த்து வந்தார்களோ.. அதைக் கேட்க வேண்டி வந்து விடும்.. இப்போதே மலர்நிலா பாதி விவரத்தை உடைத்து விட்டாள்..
மகேந்திரன் தங்கையை அதட்டவுமில்லை.. ஆதரிக்கவுமில்லை.. ரூபிணிக்கோ, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.. அஜய் அறிந்தும், அறியாமலும் திருதிருக்க.. அஜந்தா முற்றிலும் அறியாதவளாக..
“அக்காவை எதுக்காக திட்டறிங்கப்பா..?” என்று வினோத்திடம் சண்டைக்குப் போனாள்..
“உன் அக்கா ஒரு முட்டாள்.. அதற்காகத்தான் சண்டை போட்டுகிறேன்.. அறிவிருக்கிற யாராவது உன் மாமன் மகனைப் போன்ற அழகனை வேண்டாம்ன்னு சொல்லிட்டு.. காலை
விந்தி, விந்தி நடக்கிறவனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைப்பாளா..?” மைத்துனனின் குடும்பம் அவமானப் பட்டு விட்ட கோபத்தில் அண்ணனின் விழிகள் விடுத்த எச்சரிக்கையை சட்டை செய்யாமல் சொல்லி விட்டார் வினோத்..
“சித்தப்பா..” உயிர் துடிக்க மலர் நிலா அலறிய அதே நேரத்தில்..
கோயம்பத்தூரின் மிகப்பெரிய மில்லான ‘தரன் டெக்ஸ்டைல்ஸ்’ ன் முதலாளி பரணிதரன் வீட்டுக்குக் கிளம்ப தன் சீட்டை விட்டு எழுந்தான்.. இடதுகாலை விந்தி, விந்தி நடக்க ஆரம்பித்தான்.. அவனைத் தொடர்ந்த இளங்கோவின் மனதில்..
‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்..
தரத்தினில் குறைவதுண்டோ..?’ என்ற பாடல் ஒலித்தது.
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.