Chapter 10

0Shares

“வேண்டாம் சித்தப்பா..”

விரல் நீட்டி எச்சரித்த மலர்நிலாவின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள் மாலதி..

“யாரைப் பார்த்து விரல் நீட்டற.. அவர் உன் சித்தப்பா.. பெரியவங்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவியா..? இப்படித்தான் உன்னை நாங்க வளர்த்தோமா..? பெத்தவங்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தர்ற.. உன்னாலே எனக்குப் பெரும் துன்பம் டி..” பொங்கினாள்..

“அண்ணி.. நானும் மலரும் பேசிக்கிட்டு இருக்கோமில்ல.. நீங்க ஏன் தலையிடறிங்க.. சட்டுன்னு அடிச்சுட்டிங்களே..”

“அடித்து வளர்த்திருந்தா இப்படி நம்ம முகத்தில கரியைப் பூசியிருக்க மாட்டா தம்பி.. செல்லம் கொடுத்து வளர்த்தோமில்ல.. அதுதான் இப்படி பெத்தவங்களையும், வளர்த்தவங்களையும் பாடாய் படுத்திக்கிட்டு நிற்குது.. பெத்தவயிறு பத்தி எரியுது..”

மாலதி விசும்பி அழுதாள்.. கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகளை கைநீட்டி அடித்து விட்ட துயரம்.. உறவினர்கள் முன்னிலையில் மகளை அடிக்க நேர்ந்து விட்ட சூழல்.. நல்ல சம்பந்தம் கை நழுவிப் போய் விட்ட ஏமாற்றம்.. உடன்பிறந்தவளைப் போல பாசம் காட்டிய கொழுந்தன் மனைவிக்கு மரியாதை குறைவை மலர்நிலா உண்டு பண்ணி விட்டாளே என்ற சங்கடம்.. ஒற்றுமையாக இருக்கும் குடும்பம் பிரிந்து விடுமோ என்ற பதட்டம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து அவள் மனதை பிசைந்து கொண்டிருந்தது..

சம்பத் எதுவும் பேசவில்லை.. மலர்நிலாவைக் கண்டித்து அவர் பேசியதே இல்லை.. வினோத் அதற்காக கோபப்படும் போதெல்லாம் மௌனப் பார்வையுடன் நகர்ந்து விடுவார்.. அந்த நிச்சயதார்த்தத்தை வினோத் முடிவு செய்த போது சம்பத் ஆட்சேபிக்கவில்லை.. அதே சமயம் ஆதரிக்கவுமில்லை..

“இது சரியா வரும்ன்னு நினைக்கறியா..?” என்று மட்டும் கேட்டார்..

“சரியா வராதுன்னு நாமா முடிவு கட்டக்கூடாது அண்ணா.. சரியா வராதுன்னு யோசித்துக்கிட்டுக் கை கட்டிக்கிட்டு இருந்தா இதுக்கு முடிவுதான் என்ன..?” ஆத்திரப்பட்டார் வினோத்..

“மலர்நிலாவின் மனதில் என்ன இருக்கிறதுன்னு நமக்குத் தெரியும் வினோத்.. அவளுக்கு விருப்பமில்லாத கல்யாண நிச்சயதார்த்தத்தை ஏற்றுக்குவான்னு எனக்குத் தோணலை..”

“அவ மனதில் இருக்கிற எண்ணத்தை நிறைவேற்றி விடலாம்ன்னு சொல்கிறீங்களா..?”

அழுத்தத்துடன் கேட்ட தம்பியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெருமூச்சு விட்டார் சம்பத்.. என்னவென்று பதில் சொல்வது..

“நான் சொல்வதைச் சொல்லிட்டேன்.. அதற்கு மேல் உங்க விருப்பம்.. நடப்பது நடக்கட்டும்..”

மாலதி சம்பத்தைப் போல வெளிப்படையாக பேசவில்லை யென்றாலும் தயங்கினாள்.. அவள் பொள்ளாச்சியில் பிறந்தவள்.. இந்துபிரியாவைப் போல ‘எடுத்தேன்.. கவிழ்த்தேன்..’ என்று முடிவெடுக்க அவளால் முடியாது..

“வினு..” அவள் கையைப் பிசைந்த போது..

“நீங்க சும்மா இருங்க அண்ணி..” என்று அடக்கி விட்டார் வினோத்..

“அதுக்கு இல்லை தம்பி.. பொள்ளாச்சியில என் பொறந்த வீட்டில என்ன சொல்வாங்களோ..”

“உங்களுக்குக் கூடப் பிறந்தவங்க யாருமேயில்லை.. அப்படியிருந்தா தாய்மாமன்களிடம் கலந்துக்காம ஏதும் செய்யக் கூடாதுன்னு சொல்லலாம்.. அத்தை, மாமாகிட்ட மட்டும்தான் சொல்லனும்..”

“அதான பெரிய பிரச்னை..”

“அதை நான் ஃபேஸ் பண்ணிக்கறேன்.. நீங்க கவலைப்படாதீங்க.. இந்துவோட அண்ணன் மகனுக்கு நம்ம மலரைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதில உங்களுக்கு ஒன்றும் அப்ஜெக்சன் இல்லைதானே..”

இருக்கிறது என்றா சொல்ல முடியும்..? கூட்டுக் குடும்பமாக இருக்கிறவர்கள்… மைத்துனன் மனைவியென்ற பிரிவினை பார்க்காமல் உடன் பிறந்தவளைப் போல ஒன்றுபட்ட மனதுடன் இருக்கும் இந்துபிரியா.. தன் பிள்ளைகளுக்கும், மைத்துனரின் பிள்ளைகளுக்கும் என்றுமே அவள் பிரித்து பேதம் பார்த்ததில்லை.. இப்படியிருக்கையில் தான் பொள்ளாச்சியில் பிறந்தவள்… இந்துபிரியாவின் அண்ணன் பெங்களூரைச் சேர்ந்தவர்.. அவர் வீட்டில் பெண் கொடுத்தால் சொந்த ஊரில் நெருங்கிய உறவினர்கள் சிலரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று எடுத்துச் சொல்ல முடியாது..

எல்லாக் குடும்பங்களிலும் இந்த உறவுச் சிக்கல்கள் உண்டு.. குடும்பங்களில் மட்டுமல்ல.. நட்பிலும் சிக்கல் வரும்.. இவருடன் பேசினால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ.. அவரிடம் பேசுவதற்கு இவர் கோபித்துக் கொள்வாரோ என்று பார்த்துப் பார்த்துப் பழக வேண்டியிருக்கும்..

சிக்கலில்லாத உறவும் நட்பும் காணக் கிடைக்காதவை..

மாலதி மனதில்லாமல்தான் பொள்ளாச்சிக்கு கிளம்பி வந்தாள்.. மலர்நிலாவை அலங்கரித்துத் தயார் படுத்தும் வேலையிலிருந்து மறைமுகமாக விலகிக் கொண்டு இந்து பிரியாவின் தலையில் அதைக் கட்டி விட்டாள்..

“உள்ளூர் சொந்த, பந்தங்க வந்துக்கிட்டு இருக்காங்க இந்து.. யார், எவர்ன்னு எனக்குத்தான் தெரியும்.. உனக்குத் தெரியாதில்ல..? நான் கீழே இவங்களை ரிஸீவ் பண்ணி உட்கார வைக்கிற வேலையைப் பார்த்துக்கறேன்.. நீ மாடிக்குப் போய் மலர்நிலாவை எழுப்பி ரெடி பண்ற வேலையைப் பார்த்துக்கயேன்..” கெஞ்சுதலாக அவள் கேட்டதில்..

“கவலையே படாதீங்க அக்கா.. மலரை ரெடி பண்ண நானாச்சு..” என்று தானாக தலையைக் கொடுத்து மாட்டிக் கொண்டாள் இந்துபிரியா..

இப்படி நடந்து விட்டதே என்று அவளுக்கு ஆத்திரம்தான்.. எங்கு தேடினாலும் மலர்நிலாவைப் போல அழகு, படிப்பு, சொத்துடன் இந்துபிரியாவின் அண்ணன் மகனுக்குப் பெண் கிடைக்காதென்பது அரிதுதான்.. அத்துடன் பிறந்த வீட்டுச் சொந்தத்தில் மைத்துனர் மகளை திருமணம் செய்து வைத்தால் புகுந்த வீட்டில் இந்துபிரியாவின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்ற கணக்கீடு நடக்காமல் போனதில் வருத்தம்தான்.. ஆனாலும் மலர்நிலா அடி வாங்குவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

இந்துபிரியா நல்லவள்.. சென்னையில் குடியிருந்தாலும் வினோத்தின் வேர் பொள்ளாச்சியில் இருந்தது.. சம்பத்தின் மனைவியான மாலதி பொள்ளாச்சியில் பிறந்தவளாக இருந்தாள்.. போதாக்குறைக்கு சம்பத்தின் மகன் மகேந்திரனுக்கு மணம் முடித்த ரூபிணி பிறந்த ஊர் கோயம்பத்தூராக இருந்து வைத்ததில் இந்துபிரியாவுக்குள் ஓர் தனிமையுணர்வு வந்து விட்டது.. ஏதேனும் ஓர் வழியில் தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களுடன் இணைந்து விட்டால் அந்த தனிமையுணர்வு மறைந்து விடும் என்று அவள் நினைத்தாள்..

இந்துபிரியா சீதனமாக கொண்டு வந்த சொத்துக்களை விட சரிமடங்கு அதிகமான சொத்துக்கள் மாலதிக்கு தாய் வீட்டுச் சீதனமாக கிடைத்திருந்தது வேறு அவள் மனதை பாதித்தது.. மகேந்திரனின் மனைவியான ரூபிணிக்கு கோயம்பத்தூரில் ஜவுளிக் கடையொன்றையும், பங்களா ஒன்றையும் எழுதி வைத்திருந்ததில் இந்துபிரியாவுக்கு என்னடா இது என்று ஆகிவிட்டது.. அவளது புகுந்த வீட்டினரின் வகையறாக்கள் பெண்களுக்கு அதிக அளவில் சொத்துக்களை அளிப்பது அவளது கருத்தில் பதிந்தது.. அவளது மூளை வேலை செய்தது..

‘அப்படின்னா.. மலர்நிலாவுக்கு எவ்வளவு செய்வாங்க..!’

உன்னிப்பாகக் கண்காணித்ததில் மலர்நிலாவின் பெயரில் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தையே கட்டி வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.. அது போக கோவையில் ஓர் பங்களா.. குன்னூரில் ஓர் பங்களா.. பரம்பரை வைர நகைகள்.. அடிக்கடி வாங்கிக் குவிக்கும் புதிய தங்க, வைர நகைகள் தனி..

இத்தனை சொத்துக்களுடன் அழகு மிக்க மலர்நிலாவை அடுத்தவர் வீட்டுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதா..? இந்து பிரியாவின் அண்ணன் மகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் இந்துபிரியாவுக்கு புகுந்த வீட்டில் முக்கியத்துவமும் அதிகரிக்கும்.. அவளது பிறந்த வீடு, சம்பத்தின் சம்பந்தி வீடாக ஆகிவிடும்.. மலர்நிலாவின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் இந்துபிரியாவின் அண்ணன் மகனுக்குக் கிடைக்கும்..

இந்துபிரியாவின் அண்ணன் மகன் அழகானவன்.. செக்கச் செவேலென்ற நிறுத்துடன் அரவிந்த சாமியைப் போல இருப்பான்.. பெற்றவர்களுக்கு ஒரே மகன்.. பெங்களூரில் சொந்தமாக ஐ.டி கம்பெனி நடத்துகிறான்..

மலர்நிலாவுக்கு அவன் பொருத்தமான மாப்பிள்ளைதான்.. இந்துபிரியாவின் அண்ணன் மகன் என்பதினால் சொந்தமாகவும் இருந்தான்.. மறுக்க ஒரு காரணமில்லை.. ஆனாலும் சம்பத்தாலும், மாலதியாலும் முழு மனதாக சம்மதம் சொல்ல முடியவில்லை..  மலர்நிலாவின் அண்ணன்.. வீட்டுக்கு மூத்தமகன்.. மகேந்திரனே மௌனம் சாதித்தான்.. வேதாச்சலமும், சங்கீதாவும் இதைப்பற்றித் தங்களிடம் பேசவே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்..

ஒட்டு மொத்த குடும்பமும் கையைப் பிசைந்ததில்..

“நானென்ன தனி ஆளா..?” என்று வெகுண்டாள் இந்துபிரியா..

“நீங்கள்ளாம் ஒன்று.. நான் மட்டும் தனி.. அப்படித்தானே..?”

இந்த ஒரு கேள்வியால் உலுக்கப்பட்ட சம்பந்தின் குடும்பம் இந்துபிரியாவின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தது.. என்றைக்கு இருந்தாலும் மலர்நிலாவின் திருமணத்தைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்..? எத்தனை நாள்கள்தான் தள்ளிப் போடுவது..? அவளது திருமணத்தில் ஆயிரம் பஞ்சாயத்துக்கள் வந்து சேரும் என்பதினால்தானே.. தங்கைக்குத் திருமணமான பின்புதான் தன்னுடைய திருமணம் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த மகேந்திரனை அதட்டிச் சம்மதிக்க வைத்து ரூபிணியை திருமணம் செய்து வைத்தார்கள்.. 

“குடும்பத்தில நடக்கிற முதல் கல்யாணம்.. வில்லங்கமில்லாம நடக்கனும்..” மாலதியின் கண்ணீர் வென்றது..

அடுத்து நடக்க இருக்கும் மலர்நிலாவின் திருமணம் வில்லங்கம் நிறைந்ததாகத்தான் இருக்கும் என்பதை அவள் குடும்பம் சர்வ நிச்சயமாக கணித்து வைத்திருந்தது.. வில்லங்கத்தை எதிர் கொள்ள பயந்து அவர்கள் நாள்களை நகர்த்திக் கொண்டிருக்க..

‘வந்து பார் வட்டப் பாறைக்கு..’ என்று இந்துபிரியா வில்லங்கத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து விட்டாள்.. அதற்கு வினோத்தும் பக்கவாத்தியம் வாசித்து விட்டார்..

எது நடந்ததோ.. அது இந்துபிரியாவின் மனது பிரகாரம் நடக்கவில்லை..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link