Chapter 11

0Shares

“அக்கா.. ப்ளீஸ்.. மலரை அடிக்காதீங்க..”

இந்துபிரியா மலர்நிலாவின் அருகே வந்து தலையைக் கோதி விட்டாள்.. அடிபட்ட கன்னத்தைத் தொட்டுக்கூடப் பார்க்காமல் வலியைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்தாள் மலர்நிலா.. அவளை அடித்து விட்ட துயரத்தில் மாலதிதான் அழுதாள்.. ஏன் அடித்தீர்கள் என்று வினோத் கேட்டார்.. அடிக்க வேண்டாம் என்று இந்துபிரியா தடுத்தாள்.. மலர்நிலா மட்டும் ஒருவார்த்தை கூடப் பேசவில்லை.. கண் கலங்கவில்லை.. வலியால் துடிக்கவில்லை.. சங்கீதாவின் பாஷையில் சொல்வதாக இருந்தால் இடித்த புளி போல இறுகிப் போயிருந்தாள்..

“பாருடி.. உன் சித்தி உனக்காக பரிந்துக்கிட்டு வருகிறதைப் பாரு.. இவளோட அண்ணன் குடும்பத்தைத்தான் நீ மனம் நோக வைத்து அனுப்பியிருக்க.. இவ உனக்காக பரிந்துக்கிட்டு வர்றா..”

“வேண்டாம்மா.. எனக்காக யாரும் பரிவு காட்ட வேணாம்.. சித்தி ப்ளீஸ்.. எனக்கு உங்க ஃபேமிலியை இன்சல்ட் பண்ணனும்ங்கிற எண்ணமில்லை பட்.. எனக்கு விருப்பமில்லாம எங்கேஜ்மென்டை நடத்தினா இப்படித்தான் நான் ரியாக்ட் பண்ணுவேன்.. இதுதான் நடக்கும்..”

“கேட்டியா இந்து.. இவளுக்குப் போய் நீ பரிந்துக்கிட்டு வர்றியே.. இவ இப்படித்தான் இருப்பா.. நம்மை நிம்மதியில்லாம அடிப்பா..”

“பொறுமையா இருங்க அக்கா.. நாம் மலரிடம் கேட்காமல் எஸ்கேஜ்மெண்டை நடந்த நினைத்தது நம்ம தப்பு.. இவ கோபத்திலும் நியாயம் இருக்கு.. சின்னப் பெண்தானே.. நாம எடுத்துச் சொன்னா புரிந்துக்குவா..”

“எதைப் புரிந்துக்குவேன் சித்தி..?”

“மலர் கூல் டவுன்.. இப்போதைக்கு எதுவும் பேச வேணாம்..”

“அப்போ.. நாளைக்கு இதைக் கண்டினியூ பண்ணுவீங்க..? ஸ்டாப் பண்ணவே மாட்டிங்க..?”

“அடம் பிடிக்காதே மலர்.. உன்னைப் போன்ற பெண்ணுக்கு என் அண்ணன் மகனைப் போல கம்ப்ளீட்மேனைத்தான் சூஸ் பண்ணுவாங்க.. ஒரு ஹேண்டிஹேப்ட் மேனை சூஸ் பண்ண மாட்டாங்க..”

“சித்தீ…” ரௌத்ரமானாள் மலர்நிலா..

“வேண்டாம் சித்தி..” வினோத்தை எச்சரித்ததைப் போலவே விரலை உயர்த்தி எச்சரித்தாள்..

“மலர்..” மாலதியின் கோபக்குரலை அலட்சியம் செய்து..

“ஸ்ஸ்ஸ்..” என்று ஆள்காட்டி விரலை தன் வாயில் வைத்து தாயை அடக்கினாள்..

“யாரும் பேசக் கூடாது.. பேச வேண்டியதை விட அதிகமாகவே எல்லோரும் பேசிட்டிங்க.. இனி நான் பேசுவேன்.. நீங்கள்ளாம் கேட்க மட்டும்தான் செய்யனும்.. வாயைத் திறக்கவே கூடாது..”

அவளது உக்கிரத்தில் அங்கு கூடியிருந்த உறவினர்கள் தங்களுக்குள் சன்னமான குரலில் விவாதிக்க ஆரம்பித்தார்கள்.. அவர்களது விவாதத்தின் சாராம்சம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை தெரிந்து வைத்திருந்த வினோத் முகத்தைச் சுளித்தார்..

“எங்களை அடக்கறது இருக்கட்டும்.. முதலில் நீ அடங்கு எந்த இடத்தில் எதைப் பேசனும்.. எதைப் பேசக் கூடாதுங்கிற சென்ஸ் இல்லாத பப்பா இல்லை நீ..”

“இது எந்த இடம் சித்தப்பா.. எனக்குத் தெரியாம எனக்கான நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்து விட நீங்க செலக்ட் பண்ணியிருந்த இடம்.. இவங்களையெல்லாம் நானா வரவழைச்சிருக்கேன்..? நீங்கதானே வர வைச்சிருக்கீங்க.. எதுக்கு வர வைச்சீங்க..? 

மலர்நிலா அவளுக்காக காத்திருக்கிற பரணிதரனை கை கழுவிட்டு என்னோட மைத்துனன் மகனுக்குக் கழுத்தை நீட்டப் போகிறான்னு காட்டத்தானே வர வைச்சீங்க..?”

“மலர்..” வினோத் அதட்டினார்..

“தேவையில்லாம மத்தவங்க பெயரைச் சொல்லாதே..”

“எனக்கு பரணிதரன்தான் தேவை சித்தப்பா.. அவர் பெயரை ஒருதடவை என்ன.. ஆயிரம் தடவை சொல்வேன்..”

“அறிவைக் கடன் கொடுத்து விட்டுப் பேசாதே.. உனக்கு அவன் இணையில்லை.. அவனும் நீயும் சேர்ந்து நடந்து போனா பார்க்கிறவங்க கேலி செய்வாங்க..”

“அப்படிக் கேலி செய்கிறவங்களிடம் நான் சொல்வேன்.. இப்படிக் காலை விந்தி, விந்தி நடக்கனும்னு என் பரணிக்கு ஒன்றும் தலைவிதி கிடையாது.. நீங்களா இருந்தா பகையாளிக் குடும்பத்துப் பிள்ளை தண்ணியில தத்தளிச்சா காப்பாத்தப் போகாம வேண்டும் அந்தக் குடும்பத்துக்குன்னு விலகி நடந்திருப்பீங்க.. பரணி ஈரமனதுக்காரர்.. காப்பாத்தக் குதிச்சவரு காலை உடைத்துக்கிட்டு பிள்ளையைக் காப்பாத்திட்டாரு.. அப்படி அவர் செய்யலைன்னா அந்தப் பெண்ணைப் புதைச்ச இடத்தில புல் என்ன.. மரமே முளைத்து அடையாளம் தெரியாம ஆகியிருக்கும்.. அப்படி அவர் செய்யாம போனதுதான் குற்றம் சித்தப்பா..”

“சொல்லாதே..”

மாலதி சரிந்து அமர்ந்து அழுதாள்.. சங்கீதாவின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் துடைக்கத் துடைக்கப் பெருகிக் கொண்டே இருந்தது.. வேதாச்சலம் கோபத்துடன் மகன்களைப் பார்த்து விட்டுத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டார்.. சம்பத்தின் முகத்தில் ஈயாடவில்லை.. ரூபிணி மகேந்திரனின் கையில் கிள்ள.. அவன் அவளது கையைத் தட்டி விட்டுத் தள்ளி நின்றான்..

“நல்லாக் கேளு கண்ணு.. அப்படியாவது.. உன்ற அப்பனுக்கும் சித்தப்பனுக்கும் பழசெல்லாம் நினப்புக்கு வருதான்னு பாப்போம்.. ஏம்பா சம்பத்து.. வினோத்து.. சின்னப் பொண்ணுக்கு இருக்கிற நன்றியில கொஞ்சமாவது உங்க ரெண்டு பேருக்கும் இருக்குதாப்பா.. பரணிதரன் யாரு..? நம்ம உறவு மொறை.. என்னமோ ஊரான் வீட்டுப் பயலைப் பேசறதைப் போல பேசறியே.. ஏம்பா வினோத்து அவன் உன்ற அக்கா மகன்தானே..?” வயதில் பெரியவராக இருந்த உறவினர் ஒருவர் கோபப்பட்டார்..

“யாருங்க பெரியப்பா அக்கா மகன்..? எங்க அப்பாவுக்கு நானும் என் அண்ணனும்தான் பிள்ளைகள்.. வேற யாருமில்லைங்..” வினோத் எகிறினார்.. 

“உன்ற அப்பன் ஒற்றை பிள்ளைதான்.. உன்ற தாத்தனைப் பெத்த தாத்தனுக்கு ரெண்டு புள்ளைக.. மறந்துட்டியா கண்ணு..?”

“அதுக்கென்னங்..?”

“என்னவா..? உன்ற தாத்தன் கூடப் பிறந்த சின்னத் தாத்தனுக்கும் ஒற்றைப் பிள்ளைதான்.. பேரு சோமசுந்தரம்.. உங்கப்பாவுக்கு சொந்தச் சித்தப்பா மகன்.. உன்ற சித்தப்பா.. அந்த சித்தப்பனுக்கு ஒற்றை மகள்.. பேரு துளசி..”

“இந்த உறவு மொறை வரைபடம் இப்ப எதுக்குங்க பெரியப்பா..?”

“உறவு மொறைய நீ மறந்து போயிட்டயே கண்ணு.. அதான் நான் வரைபடம் வரைஞ்சு காமிக்க வேண்டியிருக்கு.. உன்ற அண்ணன் பிள்ளைகளுக்கும் உன்ற பிள்ளைகளுக்கும் பரணிதரன் யாருன்னு தெரிய வேணாமா..?”

“எவனோ ஒருவனைப் பத்தி எங்க வீட்டுப் பிள்ளைக தெரிந்துக்க வேண்டிய அவசியமில்லைங்..”

“அவசியமா, அவசியமில்லையான்னு அப்புறமா பார்த்துக்கலாம்.. இப்ப பரணிதரன் யாருங்கிறதை உன்ற வீட்டுப் பிள்ளைகளுக்கும் உன்ற பொஞ்சாதிக்கும் சொல்லிரலாம்.. அம்மணி இந்துப்பிரியா.. நீ கேண்டிக்கேப்புடுன்னு சொன்ன பரணிதரன் வேற யாருமில்லம்மா.. உன் மாமனாரோட தம்பி மகள் வயிற்றில் பிறந்தவன்.. உன்ற வூட்டுக்காரனுக்கு அக்கா மகன்..”

“வாட்..?” இந்துபிரியா கணவரைப் பார்க்க.. அவர்.. 

“ஏய்ய்.. சுற்றி வளைத்துச் சொந்தம்டி..” என்று தலையில் அடித்துக் கொண்டார்..

“ஸோ.. வாட்..?”

“அதைத்தாண்டி நானும் கேட்டுக்கிட்டு இருக்கிறேன்.. இந்து.. நீ பிள்ளைகளைக் கூப்பிட்டுக்கிட்டு மாடிக்குப் போ..”

வினோத் என்னவோ எளிதாகச் சொல்லி விட்டார்.. இந்துபிரியா அழைத்தால் அஜந்தாவும், அஜய்யும் நகர்ந்தால் தானே..

“நோ மாம்..” அஜந்தா மலர்நிலாவுக்கு காவலாள் போல தமக்கையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நகர மறுத்தாள்..

“ஐ ஆம் நாட் டயர்டு மம்மி..” அஜய் சட்டமாக அங்கேயிருந்த சோபாவில் ஒட்டிக் கொண்டான்..

“பிள்ளைகளை ஏங்கன்னு தொந்தரவு பண்ற.. அதுகளுக்கு சொந்த பந்தத்தைப் பற்றித் தெரிஞ்சுக்கனும்னு ஆசை.. விட்டிரு கண்ணு.. இங்ஙன பாரு அம்மணி.. உன்ற மாமனாருக்கு கூடப் பிறந்த பிறப்புன்னு யாருமில்லைதான்.. ஆனா சித்தப்பன் மகனா சோம சுந்தரம் இருந்தான்.. அவனோட மகள்தான் துளசி.. ஒற்றை மகள்.. உன் மாமனாருக்கு இருக்கிற சொத்தைப் போல சரிபங்கு சொத்து இந்தப் பொள்ளாச்சியில அந்தப் புள்ளைக்கு இருக்கு.. துளசிய கோயம்பத்தூரு மில் ஓனர் சிரிதரனுக்குக் கட்டிக் குடுத்தாக.. அவருக்கு ஆண் ஒன்னு, பெண் ஒன்னுன்னு ரெண்டு புள்ளைக.. பையன் பேரு பரணிதரன்.. பொண்ணு பேரு பவித்ரா.. துளசியோட புருசன் கிரிதரன் ஒன்னும் ஆப்பை சாப்பையான ஆளில்ல அம்மணி.. பரம்பரை கோடிஸ்வரர்..”

இந்து பிரியாவுக்கு அந்தப் பேச்சே பிடிக்கவில்லை.. அவளது அண்ணன் பணக்காரர்தான்.. ஆனால் கிரிதரன் அளவுக்குப் பணக்காரரில்லை..

“கதை கேட்க எனக்கு நேரமில்லை மாமா.. தலைக்கு மேல வேலையிருக்கு..”

பிள்ளைகள் வந்தால் வரட்டும்.. வராவிட்டால் போகட்டும் என்று இந்துபிரியா தடதடவென மாடிப்படிகளில் ஏறி விட்டாள்.. முகம் சுருங்கிப் போன பெரியவர்..

“இதெல்லாம் நல்லதுக்கு இல்லை வேதாச்சலம்.. உன்ற பேத்தி மனசில பரணிதரன் இருக்கிறான்னு நம்ம உறவு மொறைக்கு தெரிஞ்சு போச்சு.. அது மனசுப்பிரகாரம் பரணிக்கே கட்டிக் கொடு.. வேற இடத்தில கட்டிக் கொடுக்க நினைச்ச.. நம்ம உறவுமொறயில இருந்து உன் குடும்பத்தைத் தள்ளி வச்சிருவோம்..” என்று எச்சரித்து விட்டுப் போய் விட்டார்..

அன்று இரவு மலர் நிலா சாப்பிடவுமில்லை.. தூங்கவுமில்லை..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link