Chapter 12

0Shares

பொள்ளாச்சியின் பெருந்தனக்காரர் சோணாச்சலத்திற்கு இரண்டு புதல்வர்கள்.. முத்தவர் மருதாச்சலம்.. இளையவர் தணிகாசலம்.. அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாகத்தான் பாசப்பயிரை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்குத் திருமணமாகி மனைவிகள் வந்தவுடன் பாசப்பயிருக்கு நீர் வார்க்க மறந்து விட்டுக் காதல் மனைவியின் முந்தானை முடிச்சுக்குள் சிறை பட்டுப் பிரிந்தார்கள்..

வாய்க்கால் தகராறு, வரப்புத் தகராறில் ஆரம்பித்த சண்டை சொத்தைப் பிரிப்பதில் வந்து நின்றது.. ஆற்றுப் பாசன வயலையும் தென்னந்தோப்பையும் மருதாச்சலம் கேட்டார்.. அனைத்தையும் அவருக்குக் கொடுத்து விட்டுத் தான் என்ன நாக்கு வழிப்பதா 

என்று இளையவர் கோபப் பட்டார்.. வார்த்தைகள் தடித்தன.. இருவருக்கும் பெண் கொடுத்த சம்பந்தகாரர்கள் ஒருவர் மீது ஒருவர் கை வைக்க.. என் மாமனார் மீது உன் மாமனார் எப்படி கை வைக்கலாம்..? என் மைத்துனன் மீது உன் மைத்துனன் எப்படி எகிறிப் பாயலாம்..? என்று அண்ணனும் தம்பியும் அடித்துக் கொண்டு விலகி நிற்க.. பகை ஆரம்பமானது..

அறுவடைக் காலம்.. திருவிழா நேரம் என்று இரு வீட்டுக்கும் அவர்களது மாமனார் வீடுகளில் இருந்து ஆள்கள் வந்து போகும் போதெல்லாம் ஜாடைப் பேச்சும், சண்டைசச்சரவுகளும் கொடிகட்டிப் பறக்க.. ஆரம்பித்த பகை முற்றி அண்ணனும் தம்பியும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதுகூடப் பாவம் என்று விரோதிகளாக விலகி நிற்க வைத்தது..

மருதாச்சலத்திற்கு ஒரே மகன்.. தணிகாசலத்திற்கும் ஒரே மகன்.. பெற்றவர்கள் சொத்தைக் கொடுக்கும் போது கூடவே பகையையும் கொடுத்து விட்டுப் போக.. தங்கள் காலத்தில் மருதாச்சலத்தின் மகன் வேதாச்சலமும்.. தணிகாசலத்தின் மகன் சோமசுந்தரமும்.. பகை குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்..

வேதாச்சலத்தின் பிள்ளைகளான சம்பத்தும், வினோத்தும் வழிவழியாக வந்த பகையை வளர்க்கவில்லையென்றாலும்.. சோமசுந்தரத்தின் குடும்பத்தோடு உறவு கொண்டாட மாட்டார்கள்.. விலகியே நிற்பார்கள்..

சோமசுந்தரத்திற்கு ஒரே பெண்.. துளசி.. பெயரைப் போலவே சாத்வீகமானவள்.. அழகென்றால் அழகு.. அப்படியொரு அழகு.. பொள்ளாச்சியின் தங்கப் பதுமையென்று அவளைச் சொல்வார்கள்..

துளசிக்கு உடன் பிறந்த அண்ணன், தம்பியென்று யாரும் இல்லாத ஏக்கம்.. என் அண்ணன் என்று சம்பத்தையும், என் தம்பி என்று வினோத்தையும் குறிப்பிட்டுப் பேசுவாள்.. சோமசுந்தரம் கண்டித்தாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டாள்..

வாய்க்கால் வரப்புகளில் சம்பத்தை எதிர்கொள்ள நேரும் போதெல்லாம் அவளது விழிகளில் பாசம் வழியும்.. சம்பத்தின் மனது உருகி விடும்.. வினோத் இந்த பாசவலைக்குள் எல்லாம் சிக்கிக் கொள்ளும் ரகமில்லை.. பாசக்கார துளிசியின் பார்வையை ‘யார் நீ’ என்ற ஒட்டாத பார்வையுடன் கடக்க வினோத்தால் மட்டுமே முடியும்..

துளசியின் அழகுக்கு பெரிய இடத்தில் வாழ்க்கை கிடைத்தது.. தரன் டெக்ஸ்டைல்ஸின் சொந்தக்காரர் கிரிதரனுக்கு அவளைப் பெண் கேட்கிறார்கள் என்ற செய்தியில் சங்கீதா ஆற்றாற்றுப் போனாள்.

“எம்புட்டுப் பெரிய இடத்து சம்பந்தம் தெரியுமா..? போகுது போ.. துளசி நல்ல பொண்ணு.. அவ மனசுக்கு பெரிய இடத்தில வாழ்க்கைப் படப் போறா..”

அப்பேற்பட்ட பெரிய இடத்தில் பிறந்த பரணிதரனைத்தான் சங்கீதாவின் மகன் வினோத் குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார்..

திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போன துளசி.. தன் பிள்ளைகளுக்கு பிறந்த வீட்டைப் பற்றிய கதைகளைச் சொல்லும் போது சம்பத்தும், வினோத்தும் அவளுக்கு அண்ணன், தம்பி என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாள்..

சம்பத் திருமணமானவுடன் சென்னைக்குச் சென்றுவிட அவரும் வினோத்தும் சென்னைவாசிகளாகி விட்டனர்.. ‘சவி ஸ்டோர்..’ ‘ஹஹ’ கம்ப்யூட்டர் சொலுசன்.. என்று அண்ணன் தம்பிகளின் தொழில்கள் விரிவடைந்து அவர்கள் முற்றிலுமாக சென்னை நகரவாசிகளாகி விட்டாலும் குழந்தைகளின் விடுமுறை தினங்களைக் கழிக்க பொள்ளாச்சிக்குத்தான் வருவார்கள்.. அப்படி அவர்கள் வரும் தினங்களில் துளிசியும் தன் குடும்பத்துடன் பிறந்த ஊருக்கு வந்து செல்வதுண்டு.. அப்போதும்.. திருவிழா காலங்களிலும்.. இரு குடும்பத்தினருக்கும் பொதுவான உறவினர்களின் வீட்டு விசேகங்களிலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் குழந்தைகள் குடும்பப் பகை தெரியாமல் பேசிப் பழகுவார்கள்..

அஜய் குட்டிப் பையன்.. அஜந்தா கைக்குழந்தை.. குழந்தைப் பிராயத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் அறிய மாட்டார்கள்.. மகேந்திரன் பரணிதரனுடன் சிநேகிதமாகப் பேசிப் பழகுவான்.. வண்டாடும் கண்களும்.. குண்டுக் கன்னங்களுமாக வசீகரிக்கும் மலர்நிலாவின் மீது பரணிதரனுக்குத் தனிப் பிரிய முண்டு.. அதிலும் வீட்டில் திட்டுவார்கள் என்பதினால் ரகசியமாக அவனிடம் கிசுகிசுவென அவள் பேசும் போது வெகுவாக ரசிப்பான்.

“ஏன் இப்படிப் பேசற..?”

“சித்தப்பா பார்த்துட்டா திட்டுவார்..”

“ஏனாம்..?”

“உங்க ஃபேமிலி எனிமி ஃபேமிலியாமே..?”

விழி மலர்த்தி.. இமை கொட்டி அவள் புரியாமல் வினவும் அழகில் சொக்கிப் போவான் அவன்..

“அப்படியா..? எப்ப ஃபைட் பண்ணினாங்களாம்..”

“ஐ டோன்ட் நோ..”

“அப்புறம் எப்படி எங்க ஃபேமிலியை எனிமி ஃபேமிலின்னு சொல்கிற..? ம்ம்ம்..?”

புருவங்களை உயர்த்தி அவன் மடக்கும் போது பதில் சொல்லத் தெரியாமல் அவள் திருதிருவென்று விழிப்பாள்.. அவன் ரசித்துச் சிரிப்பான்..

“உன் அண்ணனும் நானும் பிரண்ட்தானே..”

“யெஸ்.. யெஸ்..”

“அவன் ஒன்றும் உன் சித்தப்பாவைப் பார்த்துப் பயப்படலையே..”

“அவன் பாய்.. நான் கேர்ள்..”

“ஓ..”

“பாய்ஸெல்லாம் அப்பாம்மாகிட்டயும், சித்தப்பா சித்திகிட்டயும் பயப்பட மாட்டாங்க.. வெளியில் தனியாய் சுற்றப் போவாங்க.. அப்படிச் சுத்தறப்ப உங்களோட பிரண்ட்ஷிப் வைத்துக்குவாங்களா இருக்கும்.. கேர்ள்ன்னா அப்படியில்லை.. தனியா எங்கேயும் போகக் கூடாது.. ஃபேமிலியுடன்தான் இருக்கனும்.. ஸோ.. என்னால் சத்தமா பேச முடியாது..”

கண்களை உருட்டி உருட்டி விளக்கம் சொல்வாள்.. அவளை விட வயதில் பெரியவனிடம் வியாக்கினம் பேசுகிறாளே.. அவன் அவளை கேலியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறானே என்றெல்லாம் அவளுக்குப் புரியாது.. அந்த அறியாமை பரணிதரனை வசீகரிக்கும்..

மலர்நிலாவுக்குத் தண்ணீர் என்றால் மிகவும் பயம்.. ஆற்றோரமாக மகேந்திரனுடன் சுற்றிப் பார்க்க வந்தவள் தவறி தண்ணீருக்குள் விழுந்து விட்டு ‘லபோ.. திபோ..’ என்று அலறி மயக்கம் போட்டு விட்டாள்.. மகேந்திரன் தலையில் அடித்துக் கொண்டு அவளைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போனான்.. மறுநாள் பரணிதரனைப் பார்க்க வந்தபோது மலர்நிலா காய்ச்சலில் விழுந்து விட்டாள் என்று சொன்னான்.. பரணிதரனுக்குக் கவலையாகி விட்டது..

“உன் தங்கைக்கு நீச்சல் தெரியாதா..?”

“தெரியாது பரணி.. சென்னையில் எங்க பங்களாத் தோட்டத்தில் ஸ்விம்மிங் பூல் இருக்கு.. இவளுக்கு ஸ்விம்மிங் கத்துக் கொடுக்க டிரை பண்ணினோம் இவ தண்ணியில இறங்க மாட்டேன்னு அழுது ரகளை பண்ணி மயக்கம் போட்டுட்டா.. கொஞ்ச நாள் கழித்துச் சொல்லிக் கொடுத்துக்கலாம்ன்னு தள்ளிப் போட்டோம்.. அந்தக் கொஞ்ச நாள் இன்றைக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது.. மலர்நிலாவுக்கு தண்ணின்னா அவ்வளவு பயம்..”

“ஓ..” வென்று உதட்டைக் குவித்துக் கேட்டுக் கொண்ட பரணிதரனுக்குத் தெரியாது.. மலர்நிலாவுக்குத் தண்ணீரின் மீதான பயம் ஒருநாள் போய் விடும்.. அந்த ஒருநாளை அவன்தான் அவள் வாழ்வில் தரப் போகிறான்.. அதற்குப் பின்னால் அவள் நீச்சலைக் கற்றுக் கொண்டு அதில் கை தேர்ந்தவளாகி.. மீனைப் போலத் தண்ணீரிலேயே மிதக்க ஆரம்பிப்பாள் என்பது..

டிசம்பர் மாதம் வரும் அரையாண்டு விடுமுறை வந்தது.. பனிரெண்டு வயதான மலர்நிலாவும் தன் குடும்பத்தோடு பொள்ளாச்சிக்கு வந்தாள்.. பத்தொன்பது வயதான கல்லூரி மாணவன் பரணிதரனும் தன் தாய்வீட்டு ஊரான பொள்ளாச்சிக்கு வந்தான்.. அவனுடைய அம்மாவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பிலிருந்து திரும்பும் போது.. வழியில் வேதாச்சலத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்பின் கிணற்றுக்குள் இருந்து மலர்நிலாவின் அலறல் ஒலியைக் கேட்டான்..

பரணிதரன் டி.வி.எஸ் அப்பாச்சியை ஓட்டிக் கொண்டிருந்தான்.. மலர்நிலாவின் அலறல் ஒலியைக் கேட்டதும் வண்டியைத் தோப்புப் பக்கமாகத் திருப்பி.. கிணற்றருகே நிறுத்தி விட்டு ஓடிச் சென்று எட்டிப் பார்த்தான்.. தண்ணீரின் மேலே எழுந்த மலர்நிலாவின் தலை மறுபடியும் தண்ணிரில் மூழ்க இவன் வேகமாக கிணற்றில் குதித்தான்..

மலர்நிலா தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்.. அவளைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற பதட்டம் மட்டுமே பரணிதரனின் மனதில் இருந்ததில்.. அவன் கிணற்றிலிருந்து நீண்டிருக்கும் படிக்கற்களை ஒட்டி நிற்கிறான் என்பதை மறந்து போனவனாக.. தள்ளிச் சென்று குதிக்காமல் அப்படியே குதித்து விட்டான்.. கனமான கற்படிகளில் அவனது இடதுகால் மோதியது.. கால் உடைந்ததை உணராமல் அவன் நீரில் மூழ்கி.. மலர்நிலாவை நெருங்கிப் பிடித்து இழுத்துக் கரை சேர்த்து விட்டான்..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link