Chapter 15
ஆறடிக்கும் மேல் உயரம்.. அடர்ந்த மீசை.. செதுக்கி வைத்த ரோமானிய சிற்பம் போன்ற முகம்.. கார்கோ சர்ட், ஜீன்ஸில் இருந்தான்.. கூலிங்கிளாஸை அலட்சியமாக சட்டைப் பையில் மாட்டியிருந்தான்.. காற்றில் பறந்த முன்னுச்சி முடி அவனது நெற்றியில் படிந்திருந்தது கவர்ச்சிகரமாக இருந்தது..
“யாருடி இவன்.. ஹீரோ மாதிரி இருக்கான்..”
மலர்நிலாவின் கூட வந்த தோழி விட்ட ஜொள்ளை மலர்நிலா ரசிக்கவில்லை.. அவளை முறைத்தாள்.. அதற்குள் மலர்நிலாவின் கார் வந்துவிட இன்னும் கொஞ்ச நேரம் இருக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடன் காரில் ஏறிக் கொண்டாள்..
“ஸ்கூல் வாசலில் நம்ம கார் நிற்கிறதை நீங்க பார்க்கலையாம்மா..?”
கேள்வி கேட்ட டிரைவருக்கு வாய்க்கு வந்த பதிலைச் சொல்லிவிட்டு ஜன்னல் கண்ணாடி வழியாக பரணிதரனைப் பார்த்தாள்.. அவன் தலைமுடியைக் கோதுவதைப் போல விரல்களை அசைத்து விடை கொடுத்தான்.. அன்று முழுவதும் மலர்நிலா சந்தோசமாக இருந்தாள்.. நீச்சல் குளத்தில் மிதந்தாள்..
‘மறுபடியும் வருவானா..?’
இந்தக் கேள்வி அவள் மனதில் சுழற்றியடித்துக் கொண்டிருந்தது.. வந்தான்.. அவன் வந்தான்.. மாதாமாதம்.. குறிப்பிட்ட ஓர் தினத்தில் அவளைப் பார்க்க அவன் வந்தான்.. அந்த தினம்.. எந்த தினம் என்பதை அவளது மனம் கணக்கிட்டு கண்டு கொண்டது.. அவன் வரும் அந்த நாளுக்காக அவள் காத்திருக்க ஆரம்பித்தாள்..
பத்தாம் வகுப்பைத் தாண்டி அவள் பிளஸ் ஒன், பிளஸ் டூ படித்தாள்.. பள்ளியிறுதியை முடித்து என்ஜினியரிங் கல்லூரியில் கால் பதித்தாள்.. வருடங்கள் ஓட ஓட.. அவளது அழகும் பொழிவும் கூடிக் கொண்டே இருந்தன.. சின்னஞ்சிறுமியாக இருந்த போதே அவன் மனதைக் கவர்ந்தவள்.. பருவ வயதில் அவனைப் பைத்தியமாக்கினாள்.. பரணிதரனின் மனம் முழுதும் அவள்தான்.. சிறுமிப் பருவத்தைக் கடந்து ஓர் யட்சக் கன்னிகையாய் அவன் நினைவில் நர்த்தனமாடினாள்..
பரணிதரன் இப்போது எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு ‘தரன் டெக்ஸ்டைல்ஸ்’ மில்லின் எம்.டியாகியிருந்தான்.. வேலைகளும் பொறுப்புக்களும் அவனது நேரத்தை தின்று கொண்டிருந்தன.. அத்தனை வேலைகளிலும் அவளைப் பார்க்க மாதாமாதம் சென்னைக்கு வந்து விடுவான்..
பொத்தி வைக்கும் மல்லிகைப்பூவின் வாசம் அதன் இருப்பிடத்தை உணர்த்தி விடும்.. காதலும் அது போல்தான்.. மலர்நிலாவிடம் தென்பட்ட மாற்றத்தை வினோத் உணர்ந்து விட்டார்.. அண்ணன் மகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்.. பரணிதரன் மாதாமாதம் மலர்நிலாவைப் பார்ப்பதற்காகவே சென்னைக்கு வந்து செல்கிறான் என்ற விவரம் அவருக்குத் தெரிந்து விட்டது..
மலர்நிலா பரணிதரனை விரும்புகிறாளா என்ற கேள்விக்கே இடமில்லாமல் அவளது செல்போனில் பரணிதரனின் போட்டோக்களைப் பத்திரப் படுத்தியிருந்தாள்.. வினோத் வீட்டினருடன் கலந்து ஆலோசித்தார்..
“மலருக்கு பரணியைப் பிடித்திருந்தா மேரேஜ் பண்ணி வைத்துவிட வேண்டியதுதானே..?” மகேந்திரன் கேட்டான்..
மகனை சம்பத் அதட்டவில்லை என்பதை மனதுக்குள் குறித்துக் கொண்டார் வினோத்.. மாலதியும் பேசாமல் இருந்தாள்.. இந்துபிரியா மட்டும் முகம் சுளித்தாள்..
“என்ன பேசற நீ..? நம்ம மலரை ஒரு ஹேண்டிஹேப்டு பெர்சனுக்கு மேரேஜ் பண்ணி வைப்பதா..? அறிவோடுதான் பேசறியா..?”
“அவன் ஹேண்டிஹேப்டா ஆனதுக்கு யார் காரணம் சித்தி..?”
“நீதான் காரணம்.. உன்னால்தான் மலர் தன்னந்தனியாத் தோப்புக்குப் போனா.. கிணற்றில் விழுந்தா.. ஸோ.. அதுக்குப் பிராயச்சித்தம் பண்றதா இருந்தா நீ பண்ணு.. மலரின் லைஃபை ஸ்பாயில் பண்ணனும்னு நினைக்காதே..”
அடிபட்ட பார்வையுடன் மகேந்திரன் வேகமாக போய் விட்டான்.. அதற்குப் பின்னால் மலர்நிலாவின் காதலைப்பற்றி அவன் ஆதரவாகவும் பேசவில்லை.. எதிர்பாகவும் பேசவில்லை.. தனக்குள் இறுகிப் போனான்..
“இன்றைக்கு நேற்று வந்த பகையில்லை அண்ணா.. நம்ம தாத்தா காலத்தில இருந்து இருக்கிற பகை.. காரணமில்லாமலா நம்ம வீட்டுப் பெரியவங்க அவங்க வீட்டைத் தள்ளி வைச்சிருப்பாங்க..? அவங்க காப்பாத்தின மான, ரோசத்தை நம்ம காலத்தில காற்றில பறக்க விட்டு விடுவதா..?”
மனைவியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருந்த வினோத்.. சோமசுந்தரம் குடும்பத்தினரின் மீது இருந்த குடும்ப பகையை மறக்கக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.. துளசியின் கணவர் கிரிதரன் பெருத்த கோடிஸ்வரராக இருந்ததில் வினோத்தின் மனதில் சன்னமான பொறாமை இருந்தது..
பொள்ளாச்சியில் வேதாச்சலத்தின் குடும்பம்தான் வசதி வாய்ப்பில் உயர்ந்திருந்த குடும்பம்.. சம்பத்தும், வினோத்தும் சென்னையில் தொழில் தொடங்கி வெற்றி வெற்று விட்டதில் அவர்களது குடும்பப் பெருமை அதிகரித்திருந்தது.. பொள்ளாச்சியில் உறவினர் வட்டாரத்தில் நடக்கும் விசேசங்களில் சம்பத்தும் வினோத்தும் கலந்து கொள்ளும் போது அவர்களுக்குத்தான் முதல் மரியாதையும், கவனிப்பும் கிடைக்கும்.. அது போன்ற விசேச நிகழ்வு ஒன்றில் அண்ணனும், தம்பியும் கலந்து கொண்ட போது திடிரென்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது..
“கோயம்பத்தூரு மில்லு ஓனரு வந்திருக்காருங்கண்ணா..”
விசேச வீட்டினர் ஓடி தடபுடலாக மரியாதை செய்து அழைத்து வந்து கிரிதரனை முதல் வரிசையில் உட்கார வைத்தார்கள்.. கணவருடன் வந்திருந்த துளசி யதேச்சையாகத் திரும்பி சம்பத்தையும் வினோத்தையும் பார்த்து வைத்தாள்.. அதை தலைகனம் மிக்க கர்வப் பார்வையென்று வினோத் கொதித்துப் போனார்..
“பார்த்தீங்களா அண்ணா.. உங்க ரெண்டு பேரையும்விட என் புருசன் பெரிய ஆளுன்னு திமிரா அந்த துளசி பார்க்கிறதை..”
சம்பத்துக்கு அப்படித் தோன்றவில்லையென்றாலும்.. அவர்கள் இருக்கும் இடத்தில் கிரிதரனுக்கு முதல் மரியாதை கிடைப்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.. வேலையிருப்பதைப் போல அவர்கள் இருவரும் எழுந்து வந்து விட்டார்கள்.. அதற்குப் பின்னால் கிரிதரன் கலந்து கொள்ளும் எந்த விசேசங்களிலும் இவர்கள் அதிக நேரம் இருக்க மாட்டார்கள்..
“அவன் மகனுக்கு நம்ம மலரைக் கொடுக்கிறதா..?”
வினோத் கேட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.. அவர்கள் வீட்டில் பெண் கொடுத்தால் ஊரார் நம்மை என்னவென்று நினைப்பார்கள் என்று கேட்டார் வினோத்.. மூன்று தலைமுறையாய் தொடர்ந்து வரும் பகையை மறந்து உறவு கொண்டாடுவது சாத்தியமா என்று பல்லைக் கடித்தார்.. துளசியின் மகனுக்குப் பெண் கொடுப்பது சோமசுந்தரத்திடம் வேதாச்சலம் தோற்றுப் போனதற்குச் சமம் என்று அடித்துச் சொன்னார்.. வினோத் எடுத்து வைத்த வாதங்கள் எல்லாம் குடும்பப் பெருமையையும், குலப் பெருமையையும் உள்ளடக்கியதாக இருந்ததில் எதையும் மறுத்துப் பேச முடியாமல் வாய்க்குப் பூட்டுப் போட்டு மாலதியும், சம்பத்தும் வினோத்துடன் இசைந்து போனார்கள்..
மலர்நிலாவுக்கும் பொள்ளாச்சிக்குமான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.. மூத்த பேத்தியைப் பார்க்க வேண்டுமென்றால் வேதாச்சலமும் சங்கீதாவும் சென்னைக்கு
வந்து பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டார்கள்.. வேதாச்சலத்திற்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை..
“அறிவிருக்காடா உனக்கு..?” சம்பத்தை தனிமையில் கடிந்து கொண்டார்..
“சின்னவனுக்குத்தான் புத்தியில்லன்னா உனக்கெங்கே போச்சு புத்தி..? கடன் கொடுத்துட்டியா..? எதுக்காக நம்ம வீட்டுப் பொண்ணை சொந்த ஊர்ப்பக்கம் வரவிடாம சிறை வைக்கிற..? கட்டிக் கொடுத்த பின்னால அடிக்கடி வர முடியுமாடா..? அது வரைக்குமாவது நம்ம வீட்டுப் பொண்ணு ஊருப்பக்கம் வந்து எங்களோட இருந்து சந்தோசமா நாலு வார்த்தை பேசிச் சிரித்தா என்ன ஆகிறப் போகுது..?”
“அப்பா.. அந்த கிரிதரனோட மகன்..” சம்பத் தயங்கினார்..
“பரணிக்கு மலரைக் கட்டிக் கொடுத்தாத்தான் என்ன..? நம்ம உறவு மொறையிலேயே அவன்தான் பெருங்கொண்ட பணக்காரன்.. உனக்கு ஒன்னு தெரியுமா..? மலரைக் காப்பாத்த அவன் தண்ணிக்குள்ள குதிச்சதிலதான் கால் அடிபட்டிருச்சுன்னு நம்ம உறவு மொறையில அத்தனை பேருக்கும் தெரியும்.. அதுக்குப் பின்னால நீயும் உன் தம்பியும் மலரை பொள்ளாச்சிப்பக்கம் கூப்பிட்டுக்கிட்டு வராம சென்னைக்குள்ளேயே பூட்டி வைச்சிருக்கீங்கன்னும் பேச்சு பரவிருச்சு.. பரணிதரனுக்குத்தான் மலரைக் கட்டிக் கொடுக்கனும்னு நம்ம உறவு மொறையில பேசிக்கிறாங்க.. அதுதான் நியாயம்ன்னு என்கிட்டேயே சொல்கிறாங்க.. இல்லேன்னு சொல்றதில நியாயம் இருக்கா..? சொல்லு..”
“மூணு தலைமுறை பகைப்பா..”
“என் பேத்தி காலத்தில அது மறைஞ்சதா இருக்கட்டுமே..”
“வினோத் ஒப்புக்கனுமே..”
அது.. அங்குதான் வில்லங்கம் இருந்தது.. வினோத்திடம் பேச முடியாது.. பேசினாலும் எடுபடாது என்று வேதாச்சலமும் சங்கீதாவும் தலையில் அடித்துக் கொண்டு சென்னைக்கு வந்து போனார்கள்..
வினோத் மலர்நிலாவும் பரணிதரனும் சந்தித்துக் கொள்வதை தடை செய்யவில்லை.. அது தெரியாததைப் போலவே இருந்தார்..
“சும்மா பார்த்துக்கிறாங்க இந்து.. பேசிக்கிறது இல்லை.. அவன் அங்கே காருக்குள்ளே உட்கார்ந்திருக்கிறான்.. மலர் தள்ளி.. பெஞ்சில சாய்ந்து உட்கார்ந்துக்கிறா.. பக்கத்தில கூட உட்காருகிறது இல்லை.. இதைத் தெரிஞ்சதாக் காட்டிக்காம இருக்கிறதுதான் பெட்டர்..”
திட்டம் போட்டு காய் நகர்த்தினார் வினோத்.. பொள்ளாச்சியில் உறவினர் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் பரணிதரனுக்கு தலைகுனிவு ஏற்படும்.. மலர்நிலா இந்துபிரியாவின் அண்ணன் மகனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்று அவன் விலகிப் போய் விடுவான்.. யார் கண்டது..? உடனடியாக அவனது திருமணம் நடந்தாலும் நடக்கலாம்..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.