Chapter 16
ஆவி பறக்கும் காபி தம்ளருடன் அறையைத் திறந்தாள் சங்கீதா.. காலியாக இருந்த கட்டில் அவளை வரவேற்றது..
‘மலருக் கண்ணு எங்கே போயிருச்சு..?’
பாத்ரூம் கதவைத் தட்டினாள்.. திறந்து கொண்டது.. அங்கும் பேத்தி இல்லையென்பதில் மனதுக்குள் லேசான பதட்டம் தொற்றிக் கொண்டது.. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மாடியிலிருந்த மற்ற அறைகளில் தேடினாள்.. கீழே மலர்நிலா இல்லை.. அங்கிருந்துதானே சங்கீதா வருகிறாள்..
“யாரைத் தேடறிங்க பாட்டி..?”
ஹாலை ஒட்டியிருந்த பால்கனியிலிருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த அஜந்தா கேட்டாள்.. மாடி ஹாலின் சோபாவில் கால்மாடு, தலைமாடாகச் சரிந்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான் அஜய்..
“உன்ற அக்காவைத் தேடறேன் கண்ணு.. டேய் அஜய்.. மலரைப் பார்த்தியா..?”
அஜய்யின் காதுகளில் சங்கீதாவின் கேள்வி நுழைந்ததிற்கான அசைவு சிறிதளவு கூட இல்லை.. அவன் செல்போனில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவனைப் போல உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்..
‘அப்புடி என்னதான் இருக்குது இந்த போனில..’ முகவாயில் கை வைத்தாள் சங்கீதா..
“பாட்டி.. அவனைக் கேட்டா செவிடு மாதிரிதான் இருப்பான்.. என்கிட்டக் கேளுங்க.. நான் சொல்றேன்.. அக்கா மொட்டை மாடியில் இருக்கு..” அஜந்தா சொன்னாள்..
“அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கு..?”
“யாருக்குத் தெரியும்..? தலைவிரி கோலமா வானத்தையே அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருக்கு.. வானிலை ஆராய்ச்சி பண்ணுதோ என்னவோ..”
‘என்னடா இது.. என்ற சின்ன பேரன் செல்போனில ஆராய்ச்சி பண்றான்னா.. என்ற பெரிய பேத்தி வானிலை ஆராய்ச்சி பண்ணுதாமில்ல.. வர வர என்ற வூடு ஆராய்ச்சி மையமா ஆகிப் போயிருச்சே..’
சங்கீதா மொட்டை மாடிக்குப் போனாள்.. அஜந்தா சொன்னதைப் போலத் தலைமுடியை விரிய விட்டு நின்றிருந்தாள் மலர்நிலா.. முதல் நாள் மாலை பின்னலிட்டு பூ அலங்காரம் பண்ணியதைக் கலைத்து விட்டு விரிய விட்ட முடியை கிளிப் போட்டு அடக்கவில்லை.. ஏதோ சபதம் செய்யப் போகிறவளைப் போல.. விரிந்த கூந்தலுடன் தூங்கி விட்டாள்.. விழித்து எழுந்ததும் அதே தலைவிரி கோலத்தோடு மொட்டை மாடிக்கு வந்து விட்டாள் போல..
முழங்கால்களைத் தாண்டி நீண்டிருந்த கருங்கூந்தலின் வனப்பில் பெருமிதம் கொண்டாள் சங்கீதா.. சென்னையில் வளர்ந்தாலும் பெண்மையின் மிளிர்வுடன் நீண்ட கூந்தலை வெட்டாமல் பின்னலிட்டு அழகு பார்க்கும் பேத்தியின் அழகில் அவளுக்குள் கர்வம் வந்தது..
‘மாலதியின் வளர்ப்பாச்சே..’
இந்து பிரியாவின் மீது சங்கீதாவுக்குப் பிரியம் இல்லாமல் இல்லை.. ஆனாலும் சின்ன மருமகளின் நாகரிகத்துடன் சங்கீதாவுக்கு ஏனோ ஒட்டுதல் வர மறுத்தது.. மலர்நிலா நீண்ட முடியும், சுடிதாருமாக இருந்தால்.. அஜந்தா குட்டை முடியும் ஜீன்ஸ் குர்த்தாவுமாக இருந்தாள்.. அஜந்தாவின் வயதில் மலர்நிலா பொள்ளாச்சிக்கு வரும் போது பட்டுப் பாவாடையும் சட்டையுமாகத்தான் இருப்பாள்..
“மலருக் கண்ணு..”
பாட்டியின் அழைப்பில் திரும்பிய மலர்நிலாவின் இமைகள் வீங்கி, கண்கள் சோர்ந்திருந்தன.. சங்கீதாவின் மனதில் பச்சாதாபம் எழுந்தது.. பேத்தி என்ன தவறு செய்தால் என்று அவளுடைய மகன்கள் இருவரும் இந்தப் பாடு படுத்துகிறார்கள்..?
“ஏங் கண்ணு.. இங்க வந்து நிக்கிற.. காலையில காபித் தண்ணியக் கூடக் குடிக்காம மொட்டை மாடிக்கு வந்துட்டியே..”
“மனசே சரியில்ல பாட்டி..”
மலர்நிலாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது..
“ஊஹீம்..” அதட்டினாள் சங்கீதா..
“என்ற பேத்தி கண்ணில ஒத்தச் சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது.. இப்ப என்னத்த குடி முழுகிப் போச்சுன்னு அழுகிற நீ..?”
“எதுவும் ஆகலையா..?”
“எதுவுமே ஆகல கண்ணு..”
“மனச்சாட்சி இல்லாம பேசாதீங்க பாட்டி.. நேத்து ஈவினிங் இந்த வீட்டில என்ன டிராமா நடந்ததுன்னு பார்த்துக்கிட்டுத்தான இருந்தீங்க.. நீங்களும் தாத்தாவும் இதுக்கு உடந்தைதானே..? என் மனசு தெரிஞ்சும் பெங்களூர்காரங்களை நிச்சயம் பண்ண வரச் சொல்லியிருக்கீங்க.. உங்க காபியும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. போயிருங்க இங்கிருந்து..”
“அடியாத்தி.. என்ற பேத்தி கோவிச்சுக்கிட்டா நானும் உன்ற தாத்தானும் எங்கிட்டு போவோம்..? சொல்லு கண்ணு.. நிச்சயம் பண்ண வந்தவுக வேத்து மனுசங்களா இருந்தா வேணாமுன்னு அதட்டலாம்.. உன்ற சித்தப்பனோட மைச்சினன் மகனுக்கு பாக்கு வெத்தலை மாத்த வர்றாங்க.. மறுத்துப் பேச முடியுமா கண்ணு..”
“மறுத்துப் பேசாம பெண்ணைத் தூக்கிக் கொடுத்துரலாம்ன்னு நினைத்தீங்களா..? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது..?”
“என்ற பேத்தி சொல்லித்தான் அவளைப் பத்தி நாங்க தெரிஞ்சுக்கனுமாக்கும்.. உன்ற மனசுக்குப் பிடிக்காத நிச்சயத்தை நீ நடத்த விட மாட்டன்னு எனக்கும் உன்ற தாத்தனுக்கும் அப்பவே தெரியும் கண்ணு.. பாக்கு வெத்தலை மாத்தறதை.. நீ நிப்பாட்டிட்டா பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்டமில்லைன்னு ஆகிரும்.. குடும்பம் உடையாது.. அதுவே நாங்க மறுத்துப் பேசினா.. என்ற அண்ணன் மகனுக்குப் பொண்ணக் கொடுக்கறத தடுக்கறீங்களான்னு உன்ற சித்தி சண்டைக்கு வந்திருவா.. ஏற்கனெவே அவ பெங்களூரில் பொறந்து வளர்ந்தவன்னு நாமள்ளாம் அவளைத் தள்ளி வைச்சிட்டு ஒன்னாச் சேந்து கும்மியடிக்கிறதாய் அவ மனசில ஒரு நினைப்பிருக்கு.. இப்ப இதுவும் சேர்ந்துக்கிட்டாக் கேக்கவே வேணாம்.. நிச்சயமாக் குடும்பம் உடைஞ்சிரும் கண்ணு..”
“நான் உடைஞ்சாப் பரவாயில்லையா பாட்டி.. என் மனசு சுக்கு நூறானாப் பரவாயில்லையா..?”
“ஏங்கண்ணு இப்படிப் பேசற.. முதல்ல இந்தக் காபித் தண்ணியக் குடி சொல்றேன்..”
சங்கீதா வற்புறுத்தி பேத்தியின் கையில் காபித் தம்ளரைத் திணித்தாள்.. அவள் குடித்து முடித்ததும் மொட்டை மாடியின் கைபிடி சுவரில் உட்கார்ந்து பேத்திக்கு ஆலோசனை வழங்கினாள்..
“இங்ஙன பாரு கண்ணு.. ஆடுற மாட்ட ஆடிக் கறக்கனும்.. பாடற மாட்டப் பாடிக் கறக்கனும்..”
“நான் எதைச் சொன்னா.. நீங்க எதைச் சொல்கிறீங்க.. எனக்கு மாடுன்னாலே பயம் பாட்டி.. பால் கறக்கற வேலையெல்லாம் எனக்கு சரிவராது..”
“ஏங்கண்ணு சோதிக்கிற..? பாட்டின்னா பழமொழி சொல்ல வேணாமா..?”
“அதுக்குன்னு எந்த நேரம் பழமொழியை அள்ளி விடறதுன்னு இல்லையா..? இப்பப் போய் பழமொழி சொல்வீங்களா..?”
“அத விடு கண்ணு.. இப்ப உனக்கு நம்ம துளசியோட மகன் பரணியைத்தான் கட்டிக்க இஷ்டம்ன்னு ஊரு பூரா பரவிருச்சில்லயா..?”
“ஆமாம்..”
“உன்ற அப்பன் யோசிப்பான்.. வேற மாப்பிள்ளையைக் கொண்டு வந்தாலும் இந்தக் கதைதான் நடக்கும்ன்னு அவன் மனசில ஒரு பயம் வந்திருக்கும்.. பரணியைக் கட்டிக்கத்தான் உனக்கு இஷ்டம்ன்னு வந்திருக்கிற பேச்சு மறையாதேன்னு மலைப்பான்..”
“அப்ப.. அப்பா எனக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பார்க்க மாட்டாருன்னு சொல்கிறீங்க.. இல்லையா பாட்டி..?” குதூகலித்தாள் மலர்நிலா..
“இல்லை கண்ணு..” சிரிக்காமல் தலையை ஆட்டி மறுத்தாள் சங்கீதா..
“என்ன பாட்டி நீங்க.. இப்படியும் பேசறிங்க.. அப்படியும் பேசறிங்க..”
“உன்ற அப்பன்தான் மலைப்பான்.. உன்ற சித்தப்பன் எதற்கும் அஞ்ச மாட்டான்.. மறுபடியும் இந்தக் கல்யாணப் பேச்சை எடுப்பான்.. பொள்ளாச்சியில நடத்தினாத்தானே வம்புன்னு சென்னைக்குத் தன்னோட மச்சினன் குடும்பத்தை வரச்சொல்லுவான்.. வழக்கம் போல குடும்பம் பிரிஞ்சிரும்ன்னு உன்ற அப்பனும், அம்மாவும் கையைப் பிசைய.. நானும் உன்ற தாத்தானும் வாயிருந்தும் ஊமைகளா நிப்போம்..”
“எனக்குத்தான் சித்தியின் அண்ணன் மகனைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே..”
“அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கே..”
“நிச்சயத்தை நிறுத்திட்டேனே..”
“மறுபடியும் நிச்சயத்தை நடத்தலாமே..”
“எத்தனை முறை நடத்தினாலும் நான் நிறுத்துவேன் பாட்டி.. பரணியைத் தவிர வேறு யாரையும் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்.”
“இதைப் பரணியிடம் சொல்லிட்டியா கண்ணு..?”
“வாய் விட்டுச் சொன்னால்தானா..?”
“வாயிருக்கிறது சொல்கிறதுக்குத்தான கண்ணு..?”
மலர்நிலா யோசனையுடன் சங்கீதாவைப் பார்த்தாள்.. அவள் புருவங்களை உயர்த்தி இறக்கினாள்.. ஞானகுரு போல சங்கீதா வழிகாட்டி நிற்பதை மலர்நிலாவின் அறிவு புரிந்து கொண்டது.. இமைகள் படபடக்க.. கைவிரல் நகத்தைக் கடித்தாள்..
“மாலதி சொன்னா.. மாசாமாசம் இந்தப் பரணி உன்னப் பாக்க வருவானாமில்ல.. நீயும் போவியாம்.. ரெண்டு பேரும் எதிரும் புதிருமா உக்காந்து உத்து உத்துப் பாத்துக்குவீகளாம்.. ஒத்த வார்த்தைப் பேச மாட்டிகளாம்.. சும்மாதான பாத்துக்கிருதுக.. நாம விசாரிக்க வேணாம்.. தெரிஞ்சதாக் காட்டிக்கவும் வேணாம்ன்னு வினோத் சொல்லுவானாம்.. மௌனமாக் காதலிச்சா மலையேற முடியாது மலருக்கண்ணு.. பேசாத காதல் ஊத்திக்கும்..”
“ஊத்திக்குமா..? ஹ..! பாட்டி.. வெளுத்துக் கட்டறிங்க போங்க..”
“நான் வெளுத்துக் கட்டறது இருக்கட்டும்.. இனி.. நீ வெளுத்துக் கட்டப் பாரு.. இன்னைக்குச் சாயங்காலம் நம்ம உறவுமொறையில ஒரு கல்யாண ரிசப்சனுக்குப் போகோனும்.. உன்ற தாத்தாவுக்குச் சொந்தக்காரங்க.. பொண்ணு வீடு பொள்ளாச்சி.. மாப்பிள்ளை வீடு கோயம்பத்தூர்.. கொங்கு மண்டலத்தில இருக்கிற அத்தனை உறவு மொறையும் ரிசப்சனுக்கு வருவாக.. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சாச்சரி.. உன்னைத் தனியா விட்டுட்டுப் போனா ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிரும்ன்னு பயமுறுத்திக் கூப்பிட்டுக்கிட்டுப் போகப் பாக்கிறேன்.. அதுக்கு மேலே.. பேத்தி.. உன் சமத்து..”
பார்த்தனுக்குச் சாரதியாக பகவான் கிருஷ்ணன் தேரோட்டிப் பாதை காட்டினார்.. பேத்திக்கு சாரதியாக பாட்டி சங்கீதா பேசிப் பழக பாதை காட்டினாள்..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.