Chapter 19

0Shares

திருமண வரவேற்பிலிருந்து வந்ததும் இந்துபிரியா நேராக அவளது அறைக்குப் போய் விட்டாள்.. எதிர்பார்த்ததுதான் என்று அஜய் தோளைக் குலுக்கிக் கொண்டான்.. இப்போதைக்கு சண்டை ஸ்டார்ட் ஆகாது.. இந்துபிரியா புத்திசாலி.. படைபலம் இல்லாமல் மோத மாட்டாள்.. அவளது படைபலம் ஊட்டிக்குப் போயிருக்கிறது.. அது வந்தவுடன் தான் அணுகுண்டைப் பற்ற வைக்க வேண்டும்.. அதுவரை அமைதிகாப்பதே உசிதம்..

“நல்லவேளை.. நைட் டின்னரை முடிச்சாச்சு..” அஜய் வயிற்றைத் தடவினான்..

“உனக்கு உன் பிரச்னை..” அவன் முதுகில் மொத்தினான் மகேந்திரன்..

“உங்களுக்கு வேற பிரச்னை அண்ணா..”

“ஏண்டா.. வீட்டுக்குள்ள பிரச்னை வந்தா ஃபேஸ் பண்ணாம எஸ்கேப்பாவியா..? எம்டன்டா நீ..”

“ஃபேஸ் பண்ணினாலும் இந்த வீட்டின் இளவல்ன்னு என் பேச்சைக் காதில போட்டுக்கப் போறீங்களா..? ரெண்டும் கெட்டான் வயசும்பீங்க.. எப்படா இருபது வயதைத் தாண்டுவேன்னு இருக்கு.. டீன் ஏஜில வாயைத் திறந்தாலும் வம்பு.. திறக்கலைன்னாலும் வம்பு.. பேச வந்தா.. நீ பெரியவன் ஆகலைம்பீங்க.. பேசாம இருந்தா, பதினைந்து வயதாகுதே.. இன்னும் நீ சின்னப் பையனாம்பீங்க.. இம்சைண்ணா..”

“போதும்டா டேய்..”

மகேந்திரன் படு கேசுவலாக இருந்ததில் ரூபிணிக்கு ஆச்சரியமாக இருந்தது.. அவளுக்குத்தான் ‘கெதுக்.. கெதுக்..’ என்று இருந்தது.. எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் இந்துபிரியா குடும்பத்தினருடன் பேசாமல் இறுகிய முகமாக இருந்தது அவளது மனதுக்கு கஷ்டமாக இருந்தது..

“அத்தை..” என்று அவள் பேச முயன்றாலும் இந்துபிரியா..

‘யார் நீ..?’ என்று ஓர்பார்வை பார்த்து விட்டு ஒதுங்கிக் கொண்டாள்..

அவள் அப்படி இருப்பவளே அல்ல.. இந்துபிரியா காட்டிய புதுமுகம் ரூபிணியை பாடாய் படுத்தியது..

“என்ன அத்தை இப்படி இருக்கிறாங்க..?” ரகசியக் குரலில் மாலதியிடம் கேட்டாள்..

“எல்லாம் என் தலைவிதி..” மாலதி யாருக்கும் தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டு புலம்பினாள்..

சம்பத் நடந்தவை நன்மையா, தீமையா என்று தலைமுடியைப் போட்டுப் பிய்த்துக் கொள்ளாத குறையாக யோசித்துக் கொண்டிருந்தார்.. சங்கீதாவின் கண்சாடையில் மூத்த மகனின் பக்கத்தில் அமர்ந்தார் வேதாச்சலம்.. சங்கீதாவும் அருகில் உட்கார்ந்து கொண்டாள்..

“இப்ப என்னாச்சுன்னு இம்புட்டு விசனப் படோனும்..?” வேதாச்சலம் ஆரம்பித்து வைக்க..

“அதானே..” என்று தொடர்ந்தாள் சங்கீதா..

“எதுவும் ஆகலையா..? சொந்த பந்தம் கூடியிருக்கிற ஒரு பங்சனில என் மகள் மேடையேறிக் காதல் பாட்டுப் பாடி அந்தப் பரணிதரன் மேல சாஞ்சு நிக்கிறா.. அது எனக்கு தலை குனிவு இல்லையா..?” சம்பத் பொங்கினார்..

“அதே கூடின கூட்டத்தில.. கிரிதரன் தன் குடும்பத்தோட உன்கிட்ட வந்து வலியக்கப் பேசி கை கொடுத்துப் பெண் கேட்டாரே.. அது உனக்குத் தலை நிமிர்வில்லையா..?” வேதாச்சலம் சுட்டிக் காட்டினார்..

“நாம ஒன்னும் கொறைச்சுப் பொழைக்கலைதான் சம்பத்து.. ஆனாலும்.. அந்த கிரிதரன் நம்ம உறவு மொறையில பெரிய ஆளுன்னு நாங்க சொல்லித்தான் உனக்குத் தெரியனுமாக்கும்.. அவரு மகனுக்குப் பொண்ணு கொடுக்க.. ‘நான், நீ’ன்னு போட்டி போட்டுக்கிட்டு காத்துக்கிடக்காங்க.. அவரு ஏன் நம்ம வீட்டில பொண்ணுக் கட்டனும்னு நினைக்கோனும்..? அவரு மகன் நம்ம பொண்ணு மேல ஆசைப்படறாப்புலன்னுதான..? அத நினைச்சுப் பாரு சம்பத்து..” சங்கீதா எடுத்துச் சொன்னாள்..

“ஆனா.. அந்தப் பரணி.. காலு..” சம்பத்தாலேயே அதற்கு மேல் பேச முடியவில்லை..

“அது ஆராலே வந்தது..? மலரு சொலறதிலயும் ஒரு நியாயம் இருக்கில்ல.. சின்னப்புள்ள மனசில தன்னக் காப்பாத்தப் போய்த்தான் பரணி காலில அடிபட்டிருச்சுன்னு பசுமரத்தாணி போல பதிஞ்சிருச்சு.. அத மாத்த முடியுமா..? பரணிக்குப் பொண்ணு கொடுக்க அடிச்சுக்கிட்டுக் கிடக்கறவங்களுக்கு இந்தக் குறை பெரிசாத் தெரியலையே.. பரணியோட படிப்பு, மில்லு, பணம், சொத்து பத்துதான பெரிசாத் தெரியுது.. அப்புடி பொண்ணுக் கொடுக்க பறக்கறவங்க ஆரும் ஏப்ப, சாப்பயில்ல.. உன்னவிட கோடிஸ்வரனுங்க கண்ணு.. சொல்லிப்புட்டேன்..” வேதாச்சலத்துக்கு கோபம் வந்து விட்டது..

“என்னமோ.. நம்ம அம்மணிக்கு அந்தப் பரணியைப் பிடிச்சிருக்கிறதப் போல.. அந்தப் பரணிக்கும் நம்ம அம்மணியைப் பிடிச்சுப் போச்சு.. அதனால உனக்கு இந்த சம்பந்தம் எளிசாப் போயிருச்சா கண்ணு..?” சங்கீதா எரிச்சல் பட்டாள்..

சம்பத் பெருமூச்சுடன் மாலதியைப் பார்த்து..

“நீ என்ன சொல்கிற..?” என்று கேட்டார்..

“நான் சொல்கிறதுக்கு என்ன இருக்கு..? அத்தையும், மாமாவும் சொன்னதைத்தான் நானும் சொல்லப் போறேன்.. மலர் மனசில அந்தப் பரணித்தம்பி மேல நினைப்பிருக்கிறது தப்புன்னு என்னாலயும் சொல்ல முடியல.. அது நியாயம்தான்னு தோணுது..” தயக்கத்துடன் சன்னக்குரலில் பேசினாள் மாலதி..

இந்துபிரியா ஏதும் எழுந்து வந்து மாடிப்படியில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறாளோ என்ற பதைப்பு அவள் முகத்தில் தெரிந்தது..

“மகி..” சம்பத் மகனைப் பார்த்தார்..

“அவன் என் பிரண்டுப்பா.. நல்லவன்.. மலரைக் காப்பாற்றப் போய் அவனுக்கு ஒரு குறை உண்டாகிருச்சு.. ஒரு நாளாவது அதைச் சொல்லிக் காட்டியிருப்பானா..? வெளியில் பேசினதா நீங்களோ, நானோ கேள்விப் பட்டிருக்கோமா..? மலருக்கு அவனைத்தான் பிடிச்சிருக்கு.. எல்லா வகையிலும் அவன் நம்மைவிட பல மடங்கு உயர்ந்தவன்.. சொந்தம் வேற.. அவனுக்குப் பெண் கொடுக்க எதுக்குத்தான் இவ்வளவு தயங்கறிங்களோ தெரியலை..” மகேந்திரன் தன் கருத்தைச் சொல்லி விட்டான்..

“அப்படிங்கற..?” சம்பத் தாடையைச் சொறிய..

“பெரியப்பா என்னோட ஒப்பினியனக் கேக்கலயே..” என்று அஜய் கையைத் தூக்கினான்..

“நானு.. நானு..” அஜந்தாவும் கூட்டுச் சேர்ந்து கொண்டதில் சம்பத்தின் முகத்திலிருந்த பதட்டம் குறைந்து சிரிப்பு அரும்பியது..

“ஆமாமாம்.. இந்தப் பெரிய மனுசங்களையும் சேர்த்துக்கங்க..” மகேந்திரன் அஜய்யையும், அஜந்தாவையும் இரண்டு கைகளிலும் இழுத்துத் தோள்களில் கைபோட்டான்..

அந்தக் காட்சியைப் பார்த்த சம்பத்தின் மனம் இதம் கொண்டது.. இந்த ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டுமே என்ற கவலைவர மறுபடியும் முகம் வாடினார்..

“ஏங்கண்ணு.. உன்ற முகம் வாடுது..?” மகனின் முக வேறுபாடை வேதாச்சலம் கண்டுபிடித்து விட்டார்..

“வினோத்துக்கு என்ன பதிலைச் சொல்கிறதுப்பா.. நாம எல்லோரும் ஒன்னு கூடிக்கிட்டு அவனோட மச்சினன் மகனுக்குப் பொண்ணைத் தரலைன்னு நினைத்துவிட மாட்டானா..?” சம்பத் மருகினார்..

“நினைப்பான்தான்..” சங்கீதாவும் வேதனைப் பட்டாள்..

“ஏற்கனெவே சின்னத்தை எங்களுடன் பேசலை.. நாங்க பேசினாலும் பதில் பேசாம உம்முன்னு இருந்தாங்க.. வீட்டுக்கு வந்தவுடன் மாடிக்குப் போயிட்டாங்க..” மெல்லிய குரலில் சொன்னாள் ரூபிணி..

“ஊட்டியில இருந்து அவன் வந்துவிடட்டும்.. எல்லோரும் சேர்ந்து எடுத்துச் சொல்லுவோம்.. கேட்காம எங்கே போயிடப் போறான்.. இப்ப நேரமாச்சு.. எல்லோரும் தூங்கப் போங்க..”

வேதாச்சலம் உத்தரவிட்டதில் குடும்ப மாநாடு கலைந்து அவரவர் அறைகளுக்குப் படுக்கப் போய் விட்டார்கள்..

மலர்நிலா இந்துப்பிரியாவைப் போலவே, வீட்டுக்கு வந்ததும்  மாடிக்கு ஓடி விட்டாள்.. அன்றைய மாலையும், முன்னிரவு மறக்க முடியாத பொழுதுகளாக அவளை இன்ப லாகிரியில் ஆழ்த்தி விட்டிருந்தன.. திட்டமிட்டு அவள் எதையும் செய்யவில்லை.. அன்று மாலை உறவினரின் திருமண வரவேற்பு இருப்பதைப் பற்றிக்கூட அவளுக்குத் தெரியாது.. சங்கீதா கோடு போட்டாள்.. இவள் ரோடு போட்டு ஜாக்பாட் அடித்து விட்டாள்..

‘ஜாக்பாட் மாதிரி சான்ஸ் கிடைச்சா விட்டு வைப்பேனா..?’

மலர்நிலாவுக்குக் குதூகலமாக இருந்தது..

‘கலக்கிட்டடி மலர்நிலா..’ என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டாள்.. தூக்கம் வரவில்லை.. கண்களை மூடினால் பரணிதரன்தான் வந்தான்.. மலரே.. மௌனமா என்று கேட்டான்.. விடியும் போது மலர் தூங்கிப் போனாள்..

நண்பகல் பொழுதில் வினோத் வந்தார்.. வந்ததும் மனைவியைத் தேடி மாடிக்குப் போய் விட்டார்.. செல்போனில் தகவல் போயிருக்கும் என்று மாலதியும் ரூபிணியும் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.. மதிய உணவுக்கு வந்த வினோத்தின் முகம் ஜிவுஜிவுத்திருந்தது..

“மலர்.. மலர்..” என்று சப்தமாக அழைத்தார்.

மலர்நிலா வருவதற்குள் மகேந்திரன் வந்தான்..

“என்ன சித்தப்பா..?” என்று கேட்டான்..

“உன் பெயரென்ன..? மலரா..?” வினோத் முறைத்தார்..

“இல்லைதான்.. என் பெயர் மகேந்திரன்தான்.. நான் யாருன்னு எனக்குத் தெரியும் சித்தப்பா.. உங்களுக்குத்தான் அது மறந்து போச்சு..” நிதானமாகச் சொன்னான் மகேந்திரன்..

“என்னடா மறந்து போச்சு..”

“நான் உங்களுக்கு அண்ணன் மகன்.. மலருக்கு அண்ணன்.. மகி இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியோட எம்.டிங்கிற அத்தனை விவரமும் உங்களுக்கு மறந்து போச்சு.. எவனோ, தெருவில் போகிற வழிப் போக்கனை ட்ரீட் பண்ணுகிறதைப் போல என்னை ட்ரீட் பண்ணுகிறிங்க..”

முதன் முறையாக தன் சித்தப்பாவிடம் கடுமையாக பேசினான் மகேந்திரன்..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link