Chapter 20

0Shares

‘இந்து பிரியா சொன்னது சரிதான்..’

வினோத்தின் முகம் பயங்கரமாக மாறியது.. எவரையும் குறை கூறாமல் மைத்துனன் குடும்பம் வேறு, தன் குடும்பம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல்.. தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற வார்த்தைகளையே சொல்லாமல் வினோத்தின் குடும்பத்துடன் ஒன்றி வாழ்ந்தவள் இந்துபிரியா.. இன்று தன்னந்தனிமையில் நிற்கிறாள்.. அவள் என்ன கேட்டாள்..? தன் பிறந்த வீட்டுடன் உறவுப் பாலம் அமைக்கத் தன் மைத்துனரின் பெண்ணைத் தன் அண்ணன் மகனுக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்டாள்.. வேறு என்ன கேட்டாள்..? அதனால் அவள் மனதில் உள்ள தனிமை உணர்வு மறையும் என்றுதானே ஓர் கணவனாக மனைவியின் வேண்டுகோளை ஏற்று வினோத் திருமண ஏற்பாடுகளில் இறங்கினார்.. ஏன்..? மலர்நிலாவின் திருமணத்தை முடிவு செய்ய அவருக்கு உரிமையில்லையா..?

“மலருக்கு அண்ணனாடா நீ..? நேற்று சாயங்காலம் அந்த ரிசப்சனில அவ மேடையேறி பாட்டுப் பாடியிருக்கா.. தனியாவும் பாடலை.. அந்தப் பரணிதரனோடு சேர்ந்து டூயட் பாடியிருக்கா.. அவனைக் கட்டிப் பிடிச்சு மேடையில போஸ் கொடுத்திருக்கா.. அண்ணன்காரனா நீ என்ன செய்திருக்கனும்.. அங்கேயே அவளை நாலு அறை அறைந்து இழுத்துத் தள்ளிவிட்டு.. அவன் கையைக் காலை முறித்து விட்டு வந்திருக்கனுமா இல்லையா..?”

“அதுதான் ஏற்கனெவே அவன் காலை முறித்தாச்சே.. புதிதா முறிக்கனுமா என்ன..? அதுசரி.. மலரை ஏன் நான் அடிக்கனும்..? அவ என்ன தப்பு செய்தா..? பரணிதரனைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு அவ சொல்லிட்டாளே சித்தப்பா..”

“அவ சொன்னா அதை அப்படியே நாம கேட்டுக்கனுமா..?”

“கேட்காம..? வேறு என்ன செய்யனும்..?”

“அவளுக்கு புத்தி சொல்லி நாம் சொல்கிற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட வைக்கனும்..”

“இனிமேல் அதைச் செய்தா நம்ம ரிலேடிவ்ஸ் எல்லாம் நம்மைத் தள்ளி வைத்திருவாங்க.. பரணிக்கும் மலருக்கம் காதல் இருக்கிறது ஊருக்கே தெரிஞ்சிருச்சு..”

“அதில் உனக்கு ரொம்ப சந்தோசம் போல..”

“இல்லைன்னு சொன்னா நம்பவா போறிங்க..?”

“மகி.. நீ அதிகம் பேசற..”

“ஊஹீம்.. மலருக்கு அண்ணனா இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கேன்.. இதுக்கே அசந்தா எப்படி..? இன்னும் நிறைய இருக்கு சித்தப்பா.. அதுக்கெல்லாம் என்ன சொல்லப் போறிங்களோ..”

வினோத் ரௌத்ரமானார்.. அண்ணன் சொல் கேட்கும் தம்பி என்று வெளித்தோற்றம் இருந்தாலும் வினோத் சொல்வதைத் தான் சம்பத் கேட்பார்.. இந்துபிரியா வந்த பின்பு அவரது சொல்லுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.. மாலதி விட்டுக் கொடுத்துக் குடும்பத்தை நடத்திச் செல்பவள்.. வீட்டை அலங்கரிப்பதிலிருந்து.. தோட்டத்தில் எந்தெந்தச் செடிகளை வைப்பது என்பதுவரை சென்னை வீட்டில் இந்துபிரியா வைத்ததுதான் சட்டம்.. அவள் சொல்வதுதான் வேதவாக்கு.. தொழிலைப் பொறுத்தவரை வினோத் எடுக்கும் முடிவை சம்பத் மறுத்ததில்லை.. மூத்தவரை முடிவெடுக்க வினோத்தும் விட்டதில்லை.. ‘சசி ஸ்டோர்..’ அண்ணன், தம்பி இருவருக்கும் பொதுவான தொழிலாக இருந்து வந்தது.. இந்து பிரியா வந்தபின் வினோத்திற்கு என்று தனியாக ஐ.டி கம்பெனியை தொடங்க வைத்தாள்.. அதற்கான பணத்தைப் பொதுப் பணத்திலிருந்துதான் சம்பத் கொடுத்தார்.. அதே சமயம் மகேந்திரனுக்காக.. ‘மகி இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்..’ கம்பெனியை ஆரம்பித்துக் கொடுத்தபோது.. தன் பங்கு பணத்தைத்தான் எடுத்துக் கொடுத்தார்..

இவற்றையெல்லாம் சம்பத் சொல்லிக் கொண்டதுமில்லை.. சொல்லிக் காட்டியதுமில்லை.. மாலதியும் அப்படித்தான்.. பண விவகாரங்களில் சுயநலம் பார்க்க மாட்டாள்.. பெருந்தன்மையாகப் போய் விடுவாள்.. அவள் அப்படி இருந்ததினால்தான் இந்து பிரியாவால் ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழ முடிந்தது..

கணவனும், மனைவியும் ஆதிக்கம் செழுத்திய குடும்பத்தில் மகேந்திரனும் வளர்ந்து நின்று கருத்துச் சொல்ல முற்பட்டபோது அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. நீயெல்லாம் சொல்ல வந்து விட்டாயா என்பதைப் போல் வினோத் பேசி விடுவார்.. குடும்பத்தில் தன்னால் குழப்பம் வந்து விடக்கூடாது என்று மகேந்திரனும் பொறுமையாகப் போய் விடுவான்.. அவனுக்குத் திருமணமாகி ரூபிணி அவனுடன் வாழ வந்து விட்ட பின்பும் அதே ஆதிக்கம் தொடர்ந்ததில் மகேந்திரனுக்குச் சில சங்கடங்கள் ஏற்பட்டன.. மனைவியுடன் அவன் வெளியே செல்லக் கிளம்புவான்.. அப்போதுதான் வினோத் அவனுக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுப்பார்.. புது மனைவியின் முகம் வாடுவதைச் சகித்துக் கொண்டு அவன் அவர் சொன்ன வேலையைச் செய்யக் கிளம்பினால் வினோத், இந்துபிரியாவுடன் வெளியே கிளம்பிச் சென்றுவிடுவார்..

“இங்கே புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி.. நாமா.. இல்லை.. அவங்களா..?” என்று ரூபிணி புலம்பித் தவித்த நாள்கள் ஏராளம்..

ஓர் அடிமையைப் போலத் தன்னை உணர ஆரம்பித்திருந்தான் மகேந்திரன்.. அதனாலேயே தனக்கென்று ஒரு கம்பெனியை ஆரம்பித்துக் கொடுக்கச் சொல்லி சம்பத்திடம் கோரிக்கை வைத்தான்.. அப்படி மூச்சு முட்டும் ஆதிக்கத்தை செழுத்திக் கொண்டிருந்த வினோத்தையும், அவரின் பின்னாலிருந்து அவரை இயக்கிக் கொண்டிருந்த இந்துபிரியாவையும் எதிர்க்க வேண்டும் என்று அவன் எப்போதுமே நினைத்ததில்லை.. சம்பத்தும் மாலதியும் வளர்த்த வளர்ப்பு அவன்.. சித்தப்பா, சித்திதானே என்று பொறுத்துப் போய் விடுவான்.. ஆதிக்கம் செழுத்தும் அதே சமயத்தில் அவர்கள் இருவரும் அன்பையும் செழுத்தினார்களே..

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. அமிழ்தே நஞ்சாகும்போது அடக்குமுறை நஞ்சாகி விடாதா..? அதிலும் மலர்நிலா மென்மையானவள்.. மகேந்திரனுக்கு தங்கையின் மீது அதீதமான பாசம் உண்டு.. அவளுக்கு பரணிதரனின் மேலிருந்த அன்பு மாசில்லாதது என்பதை அவன் அறிவான்.. அது நியாயமும்கூட என்று நினைத்தான்.. அதை வீட்டில் சொல்லவும் செய்தான்.. சம்பத்தும் மாலதியும் அவன் சொல்வதை ஏற்றுக் கொள்வதைப் போல பேசாமல் இருந்தார்கள்.. வினோத் மட்டும் ஆடித் தீர்த்து விட்டார்..

“நீ சின்னப் பையன்ங்கிறதை மறுபடி மறுபடி புரூவ் பண்ற மகி.. குடும்ப விசயங்களில பெரியவங்க முடிவெடுத்துக்குவோம்.. நீ தலையிடாதே..” என்று கண்டித்து சொல்லி விட்டார்..

எப்படியோ போங்கள் என்றுதான் மகேந்திரனும் இருந்தான்.. நடந்தது என்ன..?

மலர்நிலாவுக்கு விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடுகளைச் செய்தால் விளைவு எப்படியிருக்கும் என்பதை அவள் உணர்த்தி விட்டாள்.. தாம்பூலத் தட்டுக்கள் பறந்த பின்னாலும் வினோத் அடங்க மாட்டேன் என்கிறாரே என்றிருந்தது மகேந்திரனுக்கு.. இதற்கு மேலும் என்ன நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்..?

“நம் குடும்பத்துக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு மகி..”

“அதைச் சித்தியிடம் சொல்லியிருக்கீங்களா சித்தப்பா..?”

“மகி..”

“இவ்வளவு சத்தம் போட வேண்டியதில்லை சித்தப்பா.. நீங்க மெல்லப் பேசினாலும் நான் அதை உன்னிப்பாக் கேட்டுக்குவேன். என் அப்பாம்மா என்னை அப்படித்தான் வளர்த்திருக்காங்க..”

“நாங்க உன்னை வளர்க்கலையா..?”

“இல்லைன்னு சொல்லலையே.. என்னை மட்டுமில்லை.. மலரையும் நீங்க வளர்த்திருக்கீங்க.. அதற்கு முன்னாலே உங்களை என் அப்பாவும் அம்மாவும் வளர்த்திருக்காங்களே.. அதை மறந்துட்டிங்களே சித்தப்பா..”

“இப்ப எதுக்காக உன் சித்தியை வம்புக்கு இழுக்கிற..?”

“சித்தி எனக்கு இன்னொரு அம்மா..”

“அது உன் நினைவிலிருந்தா இப்படிப் பேசுவியா..?”

“சித்தி நம்ம வீட்டுக்கு வாழ வந்தவங்க சித்தப்பா, நம்ம வீட்டுக் கட்டுப்பாடுகளுக்குத் தகுந்ததைப் போல அவங்க மாறியிருக்கனும்.. அப்படி இல்லையே.. அவங்க அவங்களாத்தான் இருந்தாங்க.. அவங்களுக்காக நாமதான் மாறினோம்.. அவங்க சொன்னதை மறுத்துப் பேசாம அம்மா கேட்டுக்கிட்டாங்க.. அம்மாதான் நம்ம வீட்டுக்கு மூத்த மருமகள் சித்தப்பா.. அது உங்கள் நினைவில் இருக்கட்டும்..”

“சித்தி நல்லதைத்தானேடா சொன்னா..?”

“அவங்களுக்கும், உங்களுக்கும் நல்லது எதுவோ.. அதை மட்டும் சொன்னாங்க..”

“அப்படி என்னத்தைச் சொல்லிட்டா..?”

“‘சவி ஸ்டோர்..’ நம்ம குடும்பச் சொத்து.. ‘ளு.ளு.கம்யூட்டர் சொலுசன்..’ நம்ம குடும்பத்து பொதுச் சொத்தா சித்தப்பா..? ஏன் கேட்கிறேன்னா அதுக்கான முதலீடு பொதுப் பணத்திலிருந்து எடுக்கப்பட்டது..”

வினோத் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனார்.. அடங்கி நடப்பவன், கைக்குள் இருப்பவன், எதிர்த்துப் பேசாதவன் என்றெல்லாம் அவர் நினைத்திருந்த மகேந்திரன் அனைத்தையும் அறிந்தவனாக, கணக்கு வழக்குகளைத் தெரிந்தவனாக, நேரம் வந்தால் புள்ளி விவரக் கணக்குகளை அள்ளி வீசிக் கொடுத்துக் கட்டுகிறவனாக இருந்ததில் அவருக்கு கங்கு கரையில்லாத ஆவேசம் ஏற்பட்டது..

“ஏண்டா கேட்க மாட்ட.. கல்யாணமாகி பெண்டாட்டி வந்த பின்னாலதான நான் எனக்குன்னு ஒரு கம்பெனியை ஆரம்பிச்சுக்கிட்டேன்.. ஏன் நீ ஆரம்பிக்கல..?”

“ஆரம்பித்தேன்தான்.. உங்க கம்பெனியை உங்களுக்குன்னு வைத்துக்கிட்டு.. சவி ஸ்டோரிலும் உங்க ஆதிக்கத்தை வைத்திருந்த உங்களிடம் அடிமையா தொழில் செய்யப் பிடிக்காம எனக்குன்னு ஒரு தொழிலை உருவாக்கிக்கிட்டேன்.. அதுக்கு முதலீடாப் போட்டது பொதுப் பணத்தை இல்லை சித்தப்பா.. அப்பாவின் பங்குப் பணம்.. அம்மாவின் தோப்பிலிருந்து வந்த குத்தகைப் பணம்.. என் பெண்டாட்டியின் வைர நகைகளை அடகு வைத்து வாங்கிய பணம்.. அப்பா பணத்தையும், அம்மாவின் பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டேன்.. ரூபிணியின் வைர நகைகளை அடகிலிருந்து மீட்டுக் கொடுத்துட்டேன்.. நீங்க பொதுப் பணத்திலிருந்து வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டிங்களா சித்தப்பா..?”

அண்ணன் மகன் வளர்ந்து விட்டதைப் புரிந்து கொண்டார் வினோத்.. அவர் ஒன்றைக் கேட்டால் அவன் நூறைச் சொல்லிக் கொண்டு வருவான் என்பதில் திகைத்துப் போனார்..

“இப்ப என்னதாண்டா சொல்கிற..?”

“மலரை நீங்க மிரட்டக் கூடாதுன்னு சொல்கிறேன்..”

தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டான் மகேந்திரன்..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link