Chapter 21
“நான் மலரோடு தனியாக
ஏனிங்கு நின்றேன்..?
என் மகராணி உனைக் காண
ஓடோடி வந்தேன்..”
அவளது தோளை பின்னாலிருந்து வளைத்து இறுக்கி அவளது உச்சியில் படிந்த சூடான இதழ்களின் ஸ்பரிசத்தில் ஸ்தம்பித்துப் போனவளாக விழி மூடி கிறங்கி நின்றாள் மலர்நிலா.. முதல்நாளின் பின் மாலைப் பொழுதில் பரணிதரனின் மார்பில் சாய்ந்து விழி மூடி நின்ற நிலை பரவச நிலை.. பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அவனது கைவிரல்கள் அவளை ஸ்பரிசித்தன.. அவளும் அவன் மீது சாய்ந்தும் சாயாமலும் தான் நின்றாள்.. அங்கே பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு தளைகளிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தியிருந்தது.. நாகரிகமான இடைவெளி விட்டுத்தான் இருவரும் தங்களின் காதலை ஊர், உறவுக்கு உணர்த்தினார்கள்..
இங்கே அப்படியில்லை.. எவரும் இல்லாத தென்னந்தோப்பு.. வெயிலின் கீற்றை மறைத்து.. பகல் பொழுதை இருளாக்கும் அடர்ந்த தென்னங்கீற்றுகளின் ஆட்சி.. வாய்க்கால் நீரின் குளிர்ச்சியைச் சுமந்து வந்த குளுகுளு தென்றல் காற்று..! அவனது நினைவுகளை மனதில் சுமந்து.. அவளது மனதில் நினைவுச் சின்னமாக இருக்கும் கிணற்றைப் பார்க்கத் தனித்து வந்திருக்கும் அவள்..!
ஓங்கி விழும் அருவியில் உடல் நனையும் சிலிர்ப்பு அவளை ஆட்கொண்டு அமிழ்த்தியது..
‘தேங்க் யு அண்ணா..’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.. அவனது ஆதரவு இருந்ததினால்தானே அவளால் தென்னந்தோப்புக்கு தனியாக வரமுடிந்தது..
வினோத்தின் கோபத்தை மகேந்திரன் எதிர்த்து நின்றதை வீடு கண்டிக்கவில்லை.. அதை இந்துபிரியா சுட்டிக் காட்டினாள்.. வினோத்தை உசுப்பி விட்டாள்.. காரணம் கேட்டுக் கொதித்த வினோத்திடம்..
“இங்ஙன பாரு கண்ணு.. பெத்த புள்ள இளந்தாரியா வளந்து நின்னா தணிஞ்சுதான் பேசனும்ங்கிறது நம்ம ஊரு வழக்கம் கண்ணு.. உன்ற அண்ணனும், நீயும் தலையெடுத்ததும் நான் என்ற பொறுப்புக்களையும், சொத்துக்களையும் புள்ளைக கையில ஒப்படைச்சுட்டு அக்கடான்னு இருக்கிறேனா இல்லையா.. இப்ப பேரன் தலையெழுத்திருக்கான்.. நீயும் உன்ற அண்ணனும் அவன் கையில பொறுப்ப மாத்தற நேரம் வந்தாச்சா இல்லையா..? அவன் தங்கச்சிக்கான மாப்பிள்ளயப் பாக்கிற உரிமை அவனுக்கு இருக்கா இல்லயா..? இதில நாம தல கொடுக்கக் கூடாது கண்ணு..” என்று நியாயம் பேசினார் வேதாச்சலம்..
சங்கீதாவோ.. கணவருக்கும் மேல் நியாயவாதியாக கண்களைக் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு.. நியாயத்தராசைக் கையில் பிடித்திருக்கும் நியாய தேவதையாக நின்றாள்..
“அஜந்தாவைப் பத்தி மகேந்திரன் பேசினா அஜய் ஏன்னு கேட்பானா மாட்டானா..? அதே போலதான் இதுவும் கண்ணு.. பிள்ளைகளைப் பிரிச்சுப் பார்க்கக் கூடாதுங்கிறது சரிதான்.. அது எப்போ சரியாய் இருக்கும் தெரியுமா.. எங்க பக்க சொந்தம், உங்க பக்க சொந்தம்ன்னு இந்துபிரியா பிரிச்சுப் பார்க்காம இருக்கிற வரைக்கும்தான் சரியா இருக்கும்.. உன்ற பொஞ்சாதி பொறந்த வீட்டில பெண்ணக் கொடுக்கனும்னு நினைக்கிறதில தப்பில்ல கண்ணு.. அது அஜந்தாவா இருந்தா நீயும் உன்ற பொஞ்சாதியும் முடிவெடுக்கலாம்.. உன்ற அண்ணன் மகளக் கட்டிக் கொடுக்கணும்னு ஒற்றைக்காலில நிக்கிறது சரியா..? நீ சொல்லு.. மலருக்கு உன்ற மச்சினன் மகனைத்தான் பிடிச்சிருக்குன்னு சொன்னா இங்க ஆரு மறுப்புச் சொல்லுவாக..? சொல்லு பாப்போம்.. அது மனசில பரணி இருக்கானேகண்ணு.. அது தப்புன்னு நீயும் உன்ற பொஞ்சாதியும் ஏச வந்தா.. அவ கூடப்பிறந்தவன் ஏன்னு கேட்க ஊடே வர்றது நாயம்தானேகண்ணு..?”
அம்மாவிடமும் வேலைக்கு ஆகவில்லை என்பதில் அடுத்து..
“அண்ணா..” என்றார் வினோத்..
“என்னா..?” என்ற சம்பத்.. அத்துடன் நிறுத்தாமல் ஆன்மிக சொற்பொழிவுக்கு நிகரான சொற்பொழிவை ஆற்றி விட்டார்..
“கண்ணனும் அர்ஜூனனும் நண்பர்கள் வினோத்.. கண்ணனின் தங்கை சுபத்திரை அர்ஜூனனைக் காதலித்தாள்.. உன்னைப் போலதான்.. பலராமர் சுபத்திரையின் காதலை எதிர்த்தார்.. என்ன செய்கிறதுன்னு கண்ணனிடமே யோசனை கேட்டானாம் அர்ஜூனன்..” என்று அவர் ஆரம்பிக்க..
“அண்ணா.. ப்ளீஸ்..” என்று அலறினார் வினோத்..
“வினோத் ப்ளீஸ்..” என்று அவரை இறுக்கிப் பிடித்து உட்கார வைத்து உபதேசத்தை தொடர்ந்து விட்டார் சம்பத்..
“சுபத்திரை தேரோட்ட நாட்டை விட்டுப் போய் விடும்படி நண்பனுக்கு கண்ணன் சொல்லிக் கொடுத்தாரம்.. அதுப்படி சுபத்திரை தேரை ஓட்ட அர்ஜூனன் தேரில் ஏறிக் கொள்ள.. துரத்திப் போன படைவீரர்கள் திரும்பி வந்து தகவல் சொன்னார்களாம்.. படையெடுக்கலாம்ன்னு பலராமன் கொதித்தாராம்.. அர்ஜூனன் மேல் என்ன தப்பு..? தேரை ஓட்டிக் கொண்டு போனது சுபத்திரைதானேன்னு கண்ணன் எடுத்துச் சொன்னாராம்..”
சம்பத் நீட்டி முழக்க.. அதற்கு மேல் கதை கேட்க முடியாமல் நொந்து நூலாகிப் போன வினோத் கந்தலாகிப் போனவராக..
“இதன் மூலம் நீங்க சொல்ல வருவதுதான் என்ன அண்ணா..?” என்று சரணடைந்தார்..
“பலராமனுக்கு கண்ணன் சொன்னதைத்தான் நானும் உனக்கு சொல்கிறேன் வினோத்.. பரணிதரன் மேல காதலிருக்குன்னு நம்ம சொந்த பந்தம் முன்னாடி சொன்னது நம்ம மலர் நிலா.. நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதும் மலர்நிலா.. கல்யாண ரிசப்சனில மேடையில பாடப் போனதும் மலர்நிலா.. இதில பரணியின் மேல என்ன தப்பிருக்கு..? சுபத்திரையின் ஆசைப்படி அர்ஜூனனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணி வைக்கக் கண்ணன் சொன்னார்.. மலர்நிலாவோட ஆசைப்படி பரணிக்கே அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடலாம்ன்னு..” சம்பத் இழுக்க..
“நீங்க சொல்கிறீங்க..” என்ற உறுமலுடன் அதை முடித்து வைத்தார் வினோத்..
“அண்ணி..” கனல் கண்ணனாக அடுத்து அவர் மாலதியைப் பார்க்க.. அவள் அவசரமாக..
“உங்க அண்ணன் பேச்சை நான் என்னைக்கு மீறியிருக்கிறேன் வினு..?” என்று சம்பத்தின் பக்கம் கைகாட்டி விட்டுத் தப்பித்துப் போய் விட்டாள்..
செய்வதறியாது நம்பியாரைப் போலக் கைகளை பிசைந்தபடி வினோத் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பற்றி மனைவியுடன் கலந்து ஆலோசனை செய்யப் போய்விட.. மலர்நிலா தமையனிடம் வந்தாள்..
“அண்ணா.. எனக்குத் தோப்புக்குப் போகனும் போல இருக்கு..”
மகேந்திரனுக்குப் புரிந்தது.. தலையை அசைத்து விட்டுத் தங்கையை தோப்புக்கு அழைத்துக் கொண்டு போனான்..
“ஆஃப் அன அவர்தான்.. பக்கத்தில வேலையிருக்கு.. நான் திரும்பி வர்றதுக்குள்ள தோப்பைச் சுத்திப் பார்த்துட்டு வந்துரனும்.. பக்கத்து வயலில ஆள்கள் வேலை செய்துகிட்டு இருக்காங்க.. பயப்படாதே..” தங்கையின் தலை தொட்டு இதமாக சொல்லி விட்டுக் காரில் ஏறிச் சென்று விட்டான்..
மலர்நிலாவுக்கு ஆனந்தமாக இருந்தது.. ஏகாந்தமாக பரணிதரனை மனதில் நினைத்துக் கொண்டு தோப்பைச் சுற்றி வந்தாள்.. கிணற்றடியில் நின்று கிணறை எட்டிப் பார்த்தாள்.. நீரில் அவள் மூழ்க பரணிதரன் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.. விழி கலங்க நின்றவளின் விழி மூடி இறங்கிய கரங்கள் அவளது கன்னங்களைத் தடவித் தோள் மீது இறங்கி இறுக்கிக் கொண்டன.. அவளது உச்சந்தலையில் அவனது ஈர இதழ்கள் பதிந்து முத்தமிட்டன.. மலர்நிலா ஸ்தம்பித்து நின்றாள்..
“நான் மலரோடு தனியாக..
ஏன் இங்கு நின்றேன்..?
என் மகராணி உனைக்காண
ஓடோடி வந்தேன்..”
பரணிதரன் பாடியபடி அவளைத் திருப்பி முகம் பார்த்தான்.. அச்சமும், நாணமும் ஒன்று சேர்ந்து கவ்வி நிற்க.. அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தவித்துப் போனாள் மலர்நிலா.. படபடத்த அவளது இமைகள் பட்டாம் பூச்சிகளை நினைவுறுத்தின.. அசைக்க முடியாத அவனது மனதை அசைத்தன..
“நீ இல்லாமல் யாரோடு
உறவாட வந்தேன்..?
உன் இளமைக்குத் துணையாக
தனியாக வந்தேன்..”
அழகாகப் பாடியபடி அவனது மார்பில் முகம் புதைத்தாள் மலர்நிலா.. ‘ஹ..’ என்று கிறங்கிப் போனான் பரணிதரன்.. பெண்ணின்பம் என்றால் என்னவென்பதை அறியும் முதல் படிக்கட்டு.. அவளது முகம் நிமிர்த்தி முகம் பார்த்தான்.. இறுக மூடிய இமைகளுடன் இதழ்கள் துடிதுடிக்க அவள் நின்றாள்.. குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.. சிலிர்க்கும் அவளது உடலின் நடுக்கத்தை அவனது விரல்கள் உணர்ந்தன.. கிளர்ந்தவன் மெதுவாக கன்னத்தில் முத்தமிட்டான்.. அவள் நடுநடுங்கி அவனுள் புதைந்தாள்.. அவள் முகத்தோடு முகம் சைத்து இதழ்களில் இதழ் பதித்தான்.. அவள் தொய்ந்து அவன் மீது சரிந்தாள்.. அப்படியே கிணற்று மேடையில் அமர்ந்தவன் மடிமீது அவளைக் கிடத்தி முடிகோதி அவளது காதருகே வாய் வைத்து மெதுவாகப் பாடினான்..
“நீ வருகின்ற வழி மீது..
யார் உன்னைக் கண்டார்..?
உன் வளை கொஞ்சும் கைமீது
பரிசென்ன தந்தார்..?
உன் மலர் கூந்தல் அலைபாய
அவரென்ன சொன்னார்..?
உன் வடிவான இதழ்மீது
சுவையென்ன தந்தார்..?”
அவனது கேள்வியில் வெட்கம் கொண்டவள் தளிர்விரல் கொண்டு தன் பட்டு ரோஜா மலர் போன்ற முகத்தை மூடிக் கொண்டாள்.. அவளது விரல்களில் முத்தமிட்டு விரல்விலக்கி அவன் பார்க்க..
“பொன் வண்டொன்று மலரென்று..
என் முகத்தோடு மோத..
நான் வளை கொஞ்சும் கையோடு
மெதுவாக மூட..
என் கருங்கூந்தல் அலை பாய்ந்து
மேகங்கள் ஆக..
நான் பறந்தோடி வந்தேன்.. உன்னிடம்
உண்மை கூற..
நீ இல்லாமல் யாரோடு உறவாட
வந்தேன்..?
உன் இளமைக்குத் துணையாக
தனியாக வந்தேன்..”
என்று அவள் பாடினாள்.. இசை கொஞ்சும் குரல் கொண்ட அவளது முகத்தில் அப்படியொரு மென்மை விரவியிருந்தது.. நிலவு முகம்.
‘இவளுக்கு மலர்நிலான்னு பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்காங்க..’
பரணிதரன் குனிந்து பூச்சூடிய அவளது கூந்தல் மலர்காட்டில் முகத்தைப் புதைத்தான்.. அவளது முகத்தோடு முகம் அழுந்தியதில் அவனுக்கே உரித்தான பிரத்யேக நறுமணத்தை அவள் நுகர்ந்தாள்.. அவளது மனதில் காதல் போதை வந்தது..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.