Chapter 07

0Shares

மங்களபவனத்தின் மாடியில் கீர்த்தனாவுக்கென்று தனி அறை உண்டு.. அந்த அறையை அவளுக்கு கொடுக்க விடாமல் தடுக்க ஆனமட்டும் முயற்சி செய்தாள் மாலதி..

“என்னங்க.. நம்மளுக்கும் தனிரூம்.. அந்த அனாதைப் பொண்ணுக்கும் தனி ரூம்ன்னா எனக்கு மனசே கேட்கலைங்க..” கணவனிடம் முறையிட்டாள்..

மற்றவர் படும் துயரத்தைக் கண்டு மனது கேட்காமல் போவதற்கு அவள் என்ன தர்மசீலரின் மனைவியா..? மோகன ரங்கத்தின் மனைவி வேறுஎப்படி இருப்பாள்..? இதுபோன்ற பொடி புத்தியோடுதான் இருப்பாள்..?

“ஆமாண்டி மாலதி.. ஏற்கனெவே அந்தக் கிழவரு.. நம்மளுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இணை கூட்டி பேசி வைச்சாரு.. அப்பவே கேட்டிருப்பேன்.. எதுக்கு வீண் வம்புன்னு கேட்கலை..” பொறுமினார் மோகனரங்கம்..

“போங்க.. போய் உங்க தங்கைக்கு புத்தி சொல்லுங்க..”

“புத்தி சொல்றதா..? எதுக்குடி..? அந்தப் பொண்ணுக்கு தனிரூம் கொடுக்கக் கூடாதுன்னு தான சொல்லனும்.. அத விட்டுட்டு விமலாவுக்கு புத்தி சொல்லுன்னு வில்லங்கமாச் சொல்றியே..”

“அறிவோடதான் பேசறிங்களா..? அந்தப் பொண்ணுக்கு தனிரூம் கொடுக்கக் கூடாதுன்னு நேரடியா நாம சொன்னா விமலா நம்மைப்பத்தி என்ன நினைச்சுக்குவா..?”

“சின்னப்புத்தி படைச்ச மனுசங்கன்னு நினைச்சுக்குவா..”

“தெரியுதில்ல.. அதனால உளறிக் கொட்டி கதையைக் கெடுக்காம அவளுக்கு ஆதரவாப் பேசறதைப் போல பேசி வையுங்க..”

“அவளுக்கு எதுக்குடி ஆதரவு..? அவதான் நம்மள ஆதரிச்சுக்கிட்டு இருக்கா.. அதை வெளிப்படையாச் சொல்லிட்டான்னா என்ன செய்யறது..?”

“கடவுளே..! இந்த மனுசனுக்கு புரிய வைக்கிறதுக் குள்ள எனக்கு ஆயுளே முடிஞ்சு போயிரும் போல இருக்கே..”

மாலதி வெறுத்துப் போய் விட்டாள்.. என்னவென்று விளங்கச் சொன்னால்தானே தெரியும் என்று அழமாட்டாத குறையாய் மோகனரங்கம் சரணடைந்ததில்.. புளிபோட்டுத் தேய்த்து விளக்கம் சொல்லி அவரைத் தெளிவித்தாள்…

“ஏங்க.. வந்திருக்கதோ உங்க தங்கை வீட்டுக்காரருக்கு தங்கைபொண்ணு..”

“கூடப்பிறந்த தங்கையில்லையாம்டி..”

“நீங்க மட்டும் விமலாவுக்கு கூடப் பிறந்த அண்ணனா..?”

“என்ன நீ.. என் பெண்டாட்டி போல பேசறதை விட்டுட்டு அந்தப் பொண்ணு பக்கமாவே பேசற..?”

“ஐய்யே.. தேவையானதை பேசறதை விட்டுட்டு.. தேவையில்லாமப் பேசினா இப்படித்தான்.. விமலா மனசில உருவேத்தனுங்க.. அவங்க வீட்டுக்காரர் வழிச் சொந்தங்களை ஒட்ட விட்டா அட்டையைப் போல உறிஞ்சிருவாங்கன்னு எடுத்துச் சொல்லனுங்க.. கிழவர் ஒத்த ஆளு.. ஓராயிரம் ஆளுகளுக்குச் சமமா விட்டு விளாசராரில்ல.. கிழவரே இப்படின்னா.. வயசுப் பொண்ணு எப்படியெல்லாம் போட்டுத்தாக்கும்..?”

“அப்படிங்கறே…?”

“ஆமாங்க.. ஆமாம்.. நீங்க போங்க.. விமலாகிட்டப் போய் பேசுங்க.. அதுக்கு நீங்கதான் லாயக்கான ஆளு..”

மாலதி நினைத்ததை நடத்தியே முடித்துக் காட்டும் மோகனரங்கம் உடனடியாக விமலாவைத் தேடி ஓடோடினார்.. தோட்டத்தில் போடப் பட்டிருந்த இரும்பு ஊஞ்சலில் உட்கார்ந்து அதிகாலையை ரசித்தபடி காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த விமலா.. விசாலமான தோட்டத்தை 

பரந்த மனப்பான்மையுடன் வேடிக்கை பார்த்துக கொண்டிருந்தாள்.. அந்த பரந்த மனப்பான்மையை சுருட்டி மடித்து வைத்து விடும் திட்டத்துடன் மோகனரங்கம் அங்கே போனார்..

“விமலா…”

“என்னன்னா..?”

“காபி குடிக்கிறயாம்மா..?”

கையில் காபிக்கப்புடன் உட்கார்ந்திருந்தவளிடம் இப்படிக் கேட்ட மோகனரங்கத்தை விசித்திரமாகப் பார்த்த விமலா..

“பார்த்தா எப்படித் தெரியுதண்ணா..?” என்று கேட்டு வைத்தாள்..

ஆரம்பமே ஆட்டம் காண்பிக்குதே என்று தோன்றினாலும் அயராமல் தன் முயற்சியை ஆரம்பித்தார் மோகனரங்கம்..

“காபி குடிக்கிறதப் போலதான் தெரியுதும்மா.. குடி.. குடி…”

இப்படிச் சொன்னவரை நீ அனுமதி வழங்காவிட்டால் நான் காபி குடிக்க மாட்டேனா என்ன என்ற ரீதியில் பார்த்து வைத்து விட்டுக காபிக் குடிக்கும் தன் பணியை செவ்வனே தொடர்ந்தாள் விமலா..

அவள் ஊஞ்சலில் ஆடியபடி காபியைக் குடித்துக் கொண்டிருக்க.. அந்த தாங்கு ஊஞ்சல் கம்பியின் ஓரமாக நின்று பேசுவதற்கு என்னவோ போலதான் இருந்தது மோகனரங்கத்திற்கு..

தோட்டத்தில் அங்கொன்றும்.. இங்கொன்றுமாக கிடக்கும் சேர்களில் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்காரலாம்தான்.. ஆனால் அந்தச் சேரை விமலாவுக்கு எதிராக போட்டு உட்கார முடியாது.. அவள் ஊஞ்சலாடும் வேகத்தில் அவர் சேர்மீது மோதி வைப்பாள்.. பக்கவாட்டில் போடலாமென்றால் அவள் முகம் பார்க்காமல் பேச வேண்டிய நிலை வரலாம்..

நின்று கொண்டு பேசுவதில் இந்தச் சிரமங்களைத் தவிர்க்க முடிந்தது.. அத்தோடு.. விமலா ஊஞ்சலாடும் வேகத்திற்கு ஏற்றார் போல மோகனரங்கமும் ஊஞ்சலுடன் சேர்ந்து ஓடிப் பேச முடிந்தது.. அவரால் ஓட முடியும்.. அதுவே அவர் சேரில் அமர்ந்திருந்தால் அந்தச் சேரால் ஓடியிருக்க முடியுமா..?

தனது புத்திசாலித்தனத்தை தானே மெச்சிக் கொண்டார் மோகனரங்கம்.. அதை மெச்ச வேறு யார் இருக்கிறார்கள்.. அவரே அவரை மெச்சிக் கொண்டால் தானே உண்டு..?

“ஏம்மா விமலா..”

“என்னன்ணா..?”

“அந்தப் பொண்ண எங்கே தங்க வைக்கப் போற..?”

“எந்தப் பெண்ணைன்னா..?”

விமலா இப்படிக் கேட்டதை மோகனரங்கத்திற்குப் பிடித்திருந்தது.. வந்திருக்கும் உறவுக்காரப் பெண்ணை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா..?

“அதான்ம்மா.. உங்க மாமனார் வழிச் சொந்தம்ன்னு ஒரு பொண்ணு வீட்டுக்குள்ள வந்திருக்கே…”

மறந்தும் அவர் கீர்த்தனாவை.. விமலாவின் கணவர் வழிச் சொந்தமென்று சொல்லி விடவில்லை.. என்னதான் தன் மூலமாகத்தான் கணவர் கோடிஸ்வராக ஆகியிருக்கிறார் என்று செங்கோலை கையில் ஏந்தினாலும்.. கணவரை விட்டுக் கொடுக்காத மாதர் குல மாணிக்கம் விமலா..

மோகனரங்கம் கீர்த்தனாவை சுந்தரவடிவேலுக்கு சொந்தமென்று சொல்லப் போக.. என் கணவருக்கு சொந்த பந்தம் எனக்கும் சொந்த பந்தமல்லவா என்று மாங்கல்யத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு மாதரசியாக விமலா கீர்த்தனாவை அரவணைத்து விட்டால் அவர் என்ன ஆவார்..?

எதை.. எப்படி.. எந்த முறையில் சொல்ல வேண்டும் என்ற வித்தையில் கரை கண்டவர் மோகனரங்கம்.. அவருக்கா பேசத் தெரியாது..? 

அவர் சொல்கிற விதத்தில் சொல்லியதில் யோசனைக்கு ஆளானாள் விமலா..

“இதென்னண்ணா கேள்வி.. மங்கள பவனத்தில என்ன ரூம்களுக்கா பஞ்சம்..? ஏதாவது ஒரு ரூமில் தங்கச் சொல்லிட்டாப் போகுது..”

‘கெடுத்தாளே காரியத்தை..’

விமலா இப்படித்தான் செய்து வைப்பாளென்று கனித்து வைத்திருந்த மனைவியின் திறமையை மெச்சிப் பேனார் மோகனரங்கம்..

மாலதிதான் அவரின் திறமையையும்.. சாகசத்தையும் மெச்சுவதில்லை.. மோகனரங்கம் அப்படியல்ல.. சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை மெச்சித்தள்ளி விடுவார்..

“புரியாம பேசறியேம்மா.. நீ யாரு..?”

விமலாவுக்கு அவள் யார் என்ற சந்தேகம் வந்து விட்டது.. இப்படியொரு சந்தேகத்தைக் காலையிலேயே கிளப்பி விடத்தான் வேலை மெனக்கெட்டு அவள் இருக்கும் இடத்திற்கு மோகனரங்கம் வந்து சேர்ந்தாரா என்று எரிச்சல் பட்டாள் அவள்..

“நான் யாருன்னு தெரியாமத்தான் இத்தனை வருசமா என் வீட்டில டேரா போட்டிருக்கீங்களா..?”

“அம்மாடி.. நான் அதைச் சொல்லலைம்மா..” மோகன ரங்கம் அலறி விட்டார்..

“வேற எதைச் சொன்னீங்க..?”

“நீ இந்த மங்களபவனத்துக்கு மகாராணி..”

‘அஃது..’ என்ற பார்வையுடன் அமைதியாகி விட்டாள் விமலா…

“உன்னையே உன் மாமனார் எதுத்துப் பேசினார்..”

“விடுங்கண்ணா.. பெரியவர்.. பேசினாப் பேசிட்டுப் போகட்டும்.. ஆயிரம்தான் இருந்தாலும் அவர் என் மாமனார்..”

‘கோடியாக இருந்தால் மட்டும் ஊரார் வீட்டு மாமனாராகி விடுவாரா..?’ என்று கேட்கத் தோன்றியது மோகனரங்கத்திற்கு..

இதுபோன்ற பண்பாடுகளை விமலா கடை பிடிப்பதினால் அவருக்கும் விமலாவுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்து போகும்..

அப்போதும் அது வந்து சேர..

“ஏம்மா.. கொஞ்சமாவது உன் மாமனார் உன்னை மதிச்சுப் பேசினாரா..? அட..! அதை அந்தப் பொண்ணு முன்னாலே பேசி வைச்சாரும்மா.. அவளே உன் காலடியில ஒண்ட வந்த பொண்ணு..”

விமலா கால்களுக்கு கீழ் கீர்த்தனா ஒண்டியிருக்கிறாளா என்று ஓர் பார்வை பார்த்துக் கொண்டாள்.. மோகன ரங்கத்தின் பேச்சு அப்படிப்பட்ட தன்மையுடையது.. எதைப் பேசினாலும் அது எதிரே நடந்து கொண்டிருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதில் அவர் வல்லவர்..

“அப்படி ஒண்ட வந்த பொண்ணு உன்னை மதிக்கனுமா.. வேணாமா..?”

இந்த வார்த்தைகளை மாலதியின் வாய்மொழியிலிருந்து தான் அவர் தேர்ந்தெடுத்தார்.. அவள்தான்..

“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதைப் போல ஆகிவிடக் கூடாதுங்க..” என்ற பழமொழியைச் சொல்லி அவரை உசுப்பேற்றி அனுப்பி வைத்திருந்தாள்..

அதை அப்படியே மாற்றி ‘ஒண்ட வந்த பொண்ணு..’ என்று கீர்த்தனாவுக்கு நாமகரணம் சூட்டி விட்டார் மோகனரங்கம்..

“என்னண்ணா பேச்சு இது..? அவ யாரு என்னை மதிக்க..? அவளே இந்த வீட்டில ஆதரவைத் தேடி வந்திருக்கா.. அவளை ஒரு பெரிய மனுஷியைப் போல இத்தனை முக்கியத்துவம் கொடுத்துப் பேசி வைக்கறிங்களே..” விமலா முகம் சுளித்தாள்..

“அப்படியில்லம்மா விமலா.. நீதான் இந்த வீட்டுக்கு எஜமானின்னு அவளுக்குத் தெரியனும்.. தாத்தாவோட ஆதரவு இருக்கு.. நமக்கு என்னன்னு அவ தில்லா இருக்கக் கூடாது..”

அப்படியும் ஒன்று இருக்கிறதோ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள் விமலா.. அவளுடைய ஆட்சேபனையையும் மீறித்தானே கீர்த்தனா மங்கள பவனத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறாள்.. அவளுக்கு அந்த வீட்டில் இடமில்லையென்றால் பேத்தியுடன் தன் வீட்டுக்குச் சென்றுவிடுவதாக கைலாசம் மிரட்டியது உண்மைதானே.. அதற்காக யோசித்துத்தானே வெற்றிவேல் கீர்த்தனாவை அந்த வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டான்..

“நான் பார்த்துக்கறேண்ணா..” விமலா உறுதியாகச் சொல்லிவிட்டாள்..

“நீ பார்த்துக்குவேன்னு எனக்கும் தெரியும்.. நம்ம மங்களபவனத்தில வேலை செய்கிறவங்க தங்கறதுக்கு காம்புவுண்டுக்குள்ளேயே குவார்ட்டர்ஸ் கட்டிக் கொடுத்திருக்கிற மகராசி நீ.. இந்தப் பெண்ணையும் ஆளோடு ஆளா.. அங்கேயே தங்கிக்கச் சொல்லு.. கனகா.. இருக்கா.. மங்கை இருக்கா.. இவளுக்கு பேச்சுத் துணைக்கு ஆளா இல்லை..?”

“சரியாகச் சொன்னீங்கண்ணா..” என்ற விமலாவின் வாய் மொழியை சரியில்லை என்று சொல்லி விட்டார் கைலாசம்..

“வெற்றி.. நீ சொன்ன வார்த்தைக்காகத்தான் இந்த வீட்டில இருக்க ஒப்புக்கிட்டேன்.. இப்படி பேச்சு வரும்ன்னு தெரிஞ்சுதான் அப்பவே நான் என் வீட்டுக்குப் போயிறேன்னு சொன்னேன்..”

“அடடா..! என்ன தாத்தா இது..? எதுக்கெடுத்தாலும் சின்னப் புள்ளைபோல அதையே நைநைன்னு சொல்லிக் கிட்டு இருப்பீங்களா..?”

“சொல்ல வைக்கிறாங்களே.. என் பேத்தியை வேலைக்காரங்களோட குவார்ட்டர்ஸில் இருக்க வைக்கிறதுக்கா சிவகாசிக்கு அழைச்சுக்கிட்டு வந்தேன்..?”

கைலாசம் ருத்ர அவதாரம் எடுத்ததில் தான் தேன் கூட்டுக்குள் கை வைத்து விட்டோமோ என்று அரண்டு போனாள் விமலா..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link