Chapter 08

0Shares

வெற்றிவேலுக்கே அதை நம்ப முடியவில்லை.. என்னதான் கீர்த்தனாவின் வரவை அவன் ரசிக்கா விட்டாலும்.. அவள் அவனுடைய உறவுக்காரப் பெண் என்பது அவன் மனதில் பதிந்திருந்தது.. அப்படியிருக்கையில் அவளை வேலைக்காரர்களோடு அவர்களின் குவார்ட்டர்ஸில் தங்கச் சொன்னது யார்..?

“அதை என்வாயாலே சொல்ல முடியாது..” கைலாசம் முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டார்..

“ஏம்மா அப்படிச் சொன்னீங்க..?”

எடுத்த எடுப்பில் விமலாவிடம் கேள்வி கேட்டான் வெற்றிவேல்.. அவனுக்குத் தெரியும்.. அந்த வயதிலும் சுந்தரவடிவேலைத் திட்டுவதற்கு கைலாசம் யோசிக்கவே மாட்டார்.. அதை சுந்தரவடிவேல் சொல்லியிருந்தால்.. ‘உன் அப்பன்தான் சொன்னான்டா..’ என்று போர் கொடி பிடித்திருப்பார்.. அதைச் செய்யாமல் அவர் முகம் திருப்பு கிறார் என்றால் அதை விமலாதான் சொல்லியிருக்க வேண்டும்.. கைலாசம் எப்போதுமே மருமகளுடன் நேரடியாக மோத மாட்டார்.. அதையெல்லாம் மகனுடனும்.. பேரனுடனும்தான் வைத்துக் கொள்வார்..

“இதில் என்ன இருக்கு வெற்றி..”  விமலா எதையோச் சொல்லப் போனாள்..

“ஊஹீம்..” முக இறுக்கத்துடன் தாயின் பேச்சை தடை செய்துவிட்டான் வெற்றிவேல்..

“வந்திருக்கிறது தாத்தாவோட கூடப்பிறந்த தம்பியின் பேத்தி.. அவளை வேலைக்காரங்களோட குவார்ட்டர்ஸில் தங்க வைக்கிறதுன்னா.. சேச்சே.. கேட்கவே நல்லா இல்லைம்மா.. உங்க மேலே நிறைய மதிப்பு வைச்சிருந்தேன்.. கடைசியில் டாடி வழி சொந்தங்களை இப்படி நடத்தத் துணிஞ்சிட்டிங்களே..”

“வெற்றி..” விக்கித்துப் போனாள் விமலா..

மோகனரங்கத்தின் பேச்சைக் காதில் போட்டுக் கொண்டது தவறோ என்று அவள் மனம் அடித்துக் கொண்டது…

கடைசியில் எவ்வளவு பெரிய குற்றச்சாட்டை அவள் மேல் அவள் மகன் சுமத்தி விட்டான்..?

“நான் அப்படி நினைக்கலைடா..”

“போனதை விடுங்கம்மா.. இப்படியெல்லாம் நீங்க நினைக்கக் கூட மாட்டிங்கன்னு எனக்கும் தெரியும்.. தாத்தாவுக்கும் தெரியும்.. அது மட்டுமில்லை.. உங்க காதிலே இப்படியாப்பட்ட தப்புத் தப்பான யோசனைகளை யார் சொல்லியிருப்பாங்கன்னும் எனக்குத் தெரியும்.. எனக்கு என்னன்னா நீங்க சுயமா யோசிக்கிறதை விட்டுட்டு மத்தவங்க சொல்றதை காதில போட்டுப் பீங்களாங்கிறது தான்..”

வெற்றிவேலின் பார்வை மோகனரங்கத்தை சுட்டு எரித்தது.. அவர் அவன் முறைக்க வாகாக எதிரே நின்று விட்ட தவறுக்காக நொந்து போனார்.. ஒளிந்து கொள்ள இடம் தேடி மாலதியின் முதுகுக்குப் பின்னால் மறைய அவர் முனைய.. மாலதி அவரை முந்தி விட்டாள்.. அவர் முதுகுக்குப் பின்னால் அவள் மறைந்து நின்றதில் வேறு யாரின் முதுகுக்குப் பின்னாலும் ஒளிய முடியாதபடி வசமாக மாட்டிக் கொண்டார் அவர்..

“இது உங்க வீடும்மா.. இங்கேயிருக்கிற சொந்தக்காரங்கள்ல உங்க சொந்தம்.. டாடியோட சொந்தம்ன்னு பிரிச்சுப் பார்த்து நடத்தக் கூடாதும்மா.. அது நியாயமில்லை.. எங்க அம்மா நியாயவாதியா இருக்கனும்.. அதுதான் எனக்குப் பெருமை..”

விமலா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.. மங்கள பவனத்தின் எஜமானியாக நிமிர்வுடன் கைலாசத்தைப் பார்த்து..

“சொல்லுங்க மாமா.. உங்க பேத்திக்கு எந்த ரூமை கொடுக்கட்டும்..?” என்று கேட்டாள்..

“பாரும்மா.. இந்த வீட்டோட மகாலட்சுமி நீ.. உன் முடிவு எதோ.. அதைச் சொல்லு.. எனக்கென்ன.. வயசான கிழவன்.. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர உதவியா என் பேத்தி.. என் ரூமுக்கு பக்கத்து ரூமில இருக்கனும்தான் நான் கேட்பேன்..” என்று கைலாசம் சொல்லி விட்டார்..

“கிழவருக்கு இருக்கிற கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்தீங்களா..?” ஆற்றாற்றுப் போய் கணவரின் காதுகளில் கிசுகிசுத்தாள் மாலதி..

அவள் வாய் விட்டுக் கிசுகிசுத்து விட்டாள்.. மோகன ரங்கம் அதைச் செய்யாமல் மனதுக்குள் அடித்துக் கொண்டார்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. மற்றபடி.. கைலாசத்தின் அறைக்கு பக்கத்து அறையை கீர்த்தனாவுக்கு கொடுக்கப் போவதில் அவர்கள் இருவருக்கும் மலையளவு பொறாமை இருந்தது..

அந்த அறையின் அழகு அப்பேற்பட்டது.. கைலாசத்தின் மனைவி கயல்விழி புழங்கிய அறை அது.. அந்த ஒரு காரணத்தினாலேயே அந்த அறையை வேறு யாருக்கும் சுந்தரவடிவேல் கொடுத்ததில்லை.. விசாலமான பெரிய அறையில் கிடந்த கட்டில் வேலைப்பாடு மிகுந்தது.. தேக்கு மரத்தினால் செய்யப்பட்டது.. அங்கே இருந்த பெரிய ஜன்னல்கள் தோட்டத்தைப் பார்த்ததைப் போல அமைந்திருந்தன.. வீட்டை ஒட்டி வைக்கப் பட்டிருந்த தென்னை மரத்தின் கீற்றுக்கள் அந்த ஜன்னல்களின் வழி எட்டிப் பார்த்தன.. சுவரில் பதிந்திருந்த அலமாரிகளில் ஆளுயுர கண்ணாடி பதிக்கப் பட்டிருந்தது.. அறையை ஒட்டிய குளியலறையில் அனைத்து வசதிகளும் இருந்தன.

மொத்தத்தில் மங்களபவனத்தில் வெற்றிவேல் இருந்த அறைக்கு நிகரான அறை அது..

அந்த அறையில் இருக்க வேண்டும் என்ற அவா கழுத்துவரை மோகனரங்கத்துக்கும்.. மாலதிக்கும் இருந்தாலும்.. அவர்கள் அங்கே போகவில்லை..

“வேணாம்ங்க.. சும்மாவே என் தொண்டை வெங்கலத் தொண்டை.. அந்தக் கிழவருக்கு காது வேற கூர்மையா கேட்டு வைக்கும்.. நாம பேசற அத்தனை சங்கதிகளையும் அந்தக் கிழவர் கேட்டு வைச்சாருன்னா இந்த மங்களபவனத்தை விட்டுத் துரத்திட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு.. எதுக்கு வம்பு..? இவர்கிட்ட இருந்து தள்ளித்தான் இருக்கனும்..” என்று மாலதி சொல்லி விட்டாள்..

“அதானே.. யாராச்சும் வினையை விலை கொடுத்து வாங்குவாங்களா..?” மோகனரங்கம் மனைவியை வழி மொழிந்து விட்டார்..

நரித்தனம் மிகுந்த மோகனரங்கத்தின் கண்களை அசூசையுடன் பார்க்கும் கைலாசம் என்றுமே மோகன ரங்கத்தை ஒரு பொருட்டாக மதித்ததில்லை..

‘உன்னை எனக்குத் தெரியாதா..?’ என்ற ஒர் பார்வையோடு நகர்ந்து விடுவார்..

அந்த இனம் கண்டு கொண்ட பார்வையினாலேயே மோகனரங்கத்தால் ‘வினை’ என்று விளிக்கப்பட்டார் கைலாசம்…

இப்பேற்பட்ட காரணங்களால் மோகனரங்கம் விட்டுக் கொடுத்திருந்த அந்த சொகுசான அறையில் கீர்த்தனா நுழைந்து விட்டதை அவராலும் அவருடைய தர்ம பத்தினியாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..

மகனால் நினைவுறுத்தப் பட்ட பெருந்தன்மையால்.. மகனுக்கு முன்னால் தான் பாரபட்சமற்றவள் என்பதை நிரூபிப்பதற்காக..

“அதுக்கென்ன மாமா.. உங்க ரூமுக்கு பக்கத்து ரூமை அத்தைதான யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க..? அவங்க போன பின்னாலே அந்த ரூம் சும்மாதானே இருக்கு..? நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஏன்னு கேட்கத் தோதா உங்க பேத்தி பக்கத்து ரூமிலேயே இருக்கட்டுமே..” என்று சொல்லி விட்டாள் விமலா..

அதைச்சொல்லி விட்டு மகன் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்பதற்காக அவன் முகத்தை அவள் பார்க்க.. அவன் அவளுடைய பெருந்தன்மையையும்.. பாரபட்சமற்ற தாராள குணத்தையும் பாராட்டுகிறவனைப் போல தலையை அசைத்து வைத்தான்..

“யாரை எப்படிக் கண்டரோல் பண்ணனும்கிற வித்தையை கத்து வைச்சிருக்காண்டி இந்த வெற்றிவேல்.. இவனை வைச்சுக்கிட்டு நாம எந்தத் திட்டத்தைப் போட்டாலும்.. அது மண்ணைத்தான் கவ்வும்..”

மோகனரங்கம் சோர்ந்து விட்டார்..

இப்படித்தான் அந்த பிரம்மாண்டமான மங்கள பவனத்தில் பிரம்மாண்டமான அறையொன்று கீர்த்தனாவுக்குக் கிடைத்தது.. அந்த அறைக்குள் நுழைந்த முதல்நாளில் அவளுக்கு மயக்கமே வந்து விட்டது..

நுரை போன்ற மெத்தை தலையணைகளையும்.. சோபாக்களையும் பிரமிப்புடன் பார்த்தவளுக்கு.. அந்த அறையில் அவள் தங்கியிருக்கப் போகிறாள் என்பதை நம்பக் கூடமுடியவில்லை..

சுவர் அலமாரிகளின் மர வேலைப்பாட்டில் கை வைத்துப் பார்த்தவளின் கை வழுக்கிக் கொண்டு போனது.

“இவளுக்கு வந்த வாழ்வைப் பார்த்தீங்களா..?” மாலதி வயிறெரிந்தாள்..

“பார்த்துக்கிட்டுத்தானடி இருக்கேன்.. என்னால அது மட்டும்தான முடியும்..? வேற எதையும் வெட்டி முறிக்க முடியாதே..” எரிச்சல்பட்டார் மோகனரங்கம்..

அந்த அளவுக்கு மங்கள பவனத்தை அவர்கள் இருவரும் தங்களின் பவனமாக நினைத்தார்கள்..

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.. அடுத்தவர் தோள்களில் சவாரி செய்யும் ஒட்டுண்ணிகள் அனைவருமே.. அந்தச் சவாரி தங்களின் பிறப்புரிமை என்றுதானே நினைப்பார்கள்..

கீர்த்தனா அந்த வீட்டின் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.. முதலில் அவளிடம் முறைப்பாக இருந்த விமலாவிற்கு அவள் வரவால் பெரும் சுமை குறைந்ததைப் போல இருந்தது..

மாலதி மங்களபவனத்தில் இருக்கிறாள் என்று தான் பெயர்.. ஒரு துரும்பைக் கிள்ளிப் போட மாட்டாள்.. அதைக் கிள்ளிப் போடுவதற்கான மார்க்கத்தையும் சொல்ல மாட்டாள்..

அவளுக்கு அவள் வசதிகள் குறையக் கூடாது.. அவ்வளவுதான்.. மற்றபடி மங்கள பவனத்தின் அன்றாட அலுவல்கள் எப்படி நடந்தால் அவளுக்கென்ன..?

விமலாவினால் அப்படி இருந்து விட முடியுமா..? அது அவள் வீடாயிற்றே.. அதனால்.. காலை முதல்.. இரவு வரை.. அந்த வீட்டின் சுழற்சியை அவள் கண்ணும் கருத்துமாக கண்காணித்தாக வேண்டுமே..

அந்தக் கண்காணிப்பு வேலையை கீர்த்தனா கையில் எடுத்துக் கொண்டதில் அவள் அப்பாடா என்று ஆசுவாசமாக ஆகிப் போனாள்..

காலையில் வாசலில் கோலம் போடுவதில் ஆரம்பித்து.. பூஜையறை முதல்.. காபிக்கடைவரை கவனித்து அவள் மங்களபவனத்தின் வாசிகளைத் துயிலெழுப்பி விட்டதில் விமலாவுக்கு தேவலையே என்று தோன்றியது..

கீர்த்தனா கல்லூரிக்குப் போனாள் தான்.. இரண்டாம் வருடப் படிப்பை படிக்க ஆரம்பித்தாள்தான்.. ஆனால்.. கல்லூரிக்குப் போவதற்கு முன்னால் மங்கள பவனத்தின் வேலைகளை நிலை நிறுத்தி விட்டுத்தான் போனாள்.. கல்லூரி முடிந்து வந்ததும் விட்டுப்போன வேலைகளை கையிலெடுத்துக் கொண்டு அந்த வீட்டைக் கவனித்துக் கொண்டாள்..

“எப்படித்தான் பர்ஸ்ட் கிளாஸில் டிகிரி பாஸ் பண்ணினயோ.. அந்த பகவானுக்கே வெளிச்சம்..” என்று சிலாகிப்பார் கைலாசம்..

எல்லாவேலைகளையும் முடித்து விட்டு எப்போது கீர்த்தனா படித்தாள் என்று அவருக்கும் விளங்கவில்லை.. வெற்றிவேலுக்கும் புரியவில்லை…

‘இந்தப் பெண்ணிடம் அசாத்தியமான திறமையிருக்கு..’ அவன் மனதுக்குள் வியந்தான்..

என்ன இருந்து என்ன பண்ண..? அவை அனைத்தும் மங்களபவனத்தில் அவள் சேவை செய்வதில் மறைந்து.. அமிழ்ந்து கிடந்தனவே..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link