Chapter 10

0Shares

ரியா..!

அழகு தேவதை..! வெளிநாட்டில் எம்.பி.ஏ படித்தவள்.. கோடிஸ்வரத் தாய்.. தகப்பனுக்கு மகளாகப் பிறந்தவள்.. அவளுக்கு மூத்தவனாகப் பிறந்த நிஷாந்த் மும்பை வர்த்தகத்தில் கொழிக்கிறான்.. இவள் மட்டும்.. கம்பெனிக்குள் நுழையாமல் சுதந்திரப் பறவையாக சுற்றிக் கொண்டிருக்கிறாள்..

ரியா.. மாலதியின் நான்கு விட்ட அக்காவான கல்பனாவின் மகளாக அவதரித்தவள்.. விமலா அளவுக்கு கல்பனா வீட்டோடு உறவினர்களை வைத்துக் கொண்டு ஆதரிக்கும் ரகமில்லை என்றாலும்.. மாலதியின் மீது பாசம் கொண்டவள்.. அந்த பாசத்தை உபயோகப் படுத்தி மும்பைக்குச் சென்று அவள் வீட்டில் இரண்டு மாதங்களுக்குக் குறையாமல் டேரா போட்டு விடுவாள் மாலதி..

“பாவம்.. என் சித்தி பொண்ணு.. குழந்தைகள் இல்லை.. உன்னையும்.. நிஷாந்தையும் தான் தன் குழந்தைகளாக நினைக்கிறா..” என்று ரியாவிடம் கல்பனா சொல்வதுண்டு..

அப்படியெல்லாம் மாலதிக்குள் குழந்தைபாசம் இல்லையென்று ரியாவுக்குத் தோன்றினாலும்.. அவளும் முகம் மாறாமல் மாலதியிடமும் மோகனரங்கத்திடமும் இன் முகத்துடன் பேசிப் பழகுவாள்..

இரண்டு மாதங்களுக்கு மேல் மாலதி மும்பையில் தங்க மாட்டாள்..

“இதுக்கு மேலே இங்கே இருந்தா இவங்க உறவு விட்டுப் போயிரும்ங்க.. கல்பனாக்கா விருந்தாளியைத்தான் விரும்புவா.. வீட்டோட நாம இருக்கிறதை விரும்ப மாட்டா.. அதுக்கெல்லாம் விமலாதான் லாயக்கு.. மும்பை வாசத்துக்கு ஆசைப்பட்டு மங்கள பவன வாசத்தைக் கோட்டை விட்டிறக் கூடாதுங்க.. கிளம்புங்க.. கிளம்புங்க..”

மாலதி புத்திசாலி.. எங்கே நிரந்தமாக வாசம் செய்ய முடியும் என்பதைக் கணித்து வைத்திருப்பவள்.. அப்படி அவள் கல்பனாவுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்காமல் தானாக கிளம்பி விடுவதால்.. மாலதி மீது கல்பனாவுக்கு தனியான பிரியம் ஏற்பட்டு விடும்.. அந்தப் பிரியத்தில் விலை மதிப்பான நகை எதையாவது பரிசாக வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்து விடுவாள்..

மும்பைக்கு போய் வரும் போதெல்லாம் இதுபோன்ற நகைப் பரிசுடன் திரும்பி வரும் மாலதி..

“இது புது டிசைனில் வந்த ஆரமாம்.. அக்கா வாங்கிக் கொடுத்தாங்க..” என்று பெருமையாக விமலாவிடம் காண்பிப்பாள்..

கல்பனாவைப் போல தானும் ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்று ஒருமுறை நகையை வாங்கிக் கொடுத்து விட்டு வெற்றிவேலிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள் விமலா..

“சொத்திருந்தா மட்டும் போதாதும்மா.. அதைக் கட்டிக் காப்பாத்தற திறமை இருக்கனும்.. 

மும்பையில் இருக்கிற அவங்க அக்கா நகை வாங்கிக் கொடுக்கிறாங்கன்னா.. இவங்களுக்காக அவங்க செலவளிக்கிற செலவு அவ்வளவுதான்ம்மா.. நாம அப்படியில்லை.. மாமாவுக்கு வேலைங்கிற பேரில கம்பெனியில ஒரு ரூமைக் கொடுத்து.. வெட்டித் தண்டமா மாசாமாசம் ஆயிரக் கணக்கில ரூபாய்களை படிளக்கிறோம்.. அதை வைச்சுக்கிட்டு மனுசன் தனிக்குடித்தனம் 

போய்த் தொலைவாருன்னு பார்த்தா.. அவர் அசைவேனான்னு சம்பளத்தை பேங்கில போட்டு காபந்து பண்ணிட்டு இந்த வீட்டில அட்டைபோல ஒட்டிக்கிட்டு இருக்காரு.. இவங்க ரெண்டு பேருக்கும் ஆகிற செலவை நினைச்சுப் பாருங்க.. அதில மாசத்துக்கு பத்துநகை நீங்க வாங்கிக் கொடுக்கலாம்.. இப்படி ஏமாளியா நீங்க இருந்தா.. நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருக்க வேண்டி வந்துடும்.. சொல்லிட்டேன்…”

அன்று வெற்றிவேல் தாயை கடிந்து கொண்டதை மறைந்திருந்து கேட்ட மாலதிக்கு எதற்காக கல்பனா வாங்கிக் கொடுத்த நகையை விமலாவிடம் காட்டினோம் என்றாகிவிட்டது.. அதற்குப் பின்னால் கல்பனா வாங்கிக் கொடுக்கும் நகைகளைப் பற்றி அவள் விமலாவிடம் மூச்சுக்கூட விடுவதில்லை..

அந்தக் கல்பனாவின் மகள் ரியாவை எப்படி மோகனரங்கம் மறந்தார்..?

“மாலதி..! உன்னை என்னவோன்னு நினைச்சேன்.. கடைசியில நீ இத்தனை பெரிய கெட்டிக்காரியா..?”

“என்னன்னு நினைச்சீங்க..? அசடுன்னு நினைச்சீங்களா..?”

“உன்னைப் போய் அப்படி நினைப்பேணாடி பட்டுத் தங்கம்..?”

“இதைப் பத்தி இன்னொரு நாள் பேசலாம்.. இருக்கு உங்களுக்கு..”

மாலதி அவளுக்கான தாக்குதலை தள்ளி வைத்தாள்.. அவர்கள் ஆலோசித்தார்கள்..

கல்பனாவின் கணவரான சுந்தர் மும்பையில் வெற்றிகரமாக வர்த்தகம் செய்பவர்.. கோடிஸ்வரர்.. அவருக்கு நிஷாந்தும்.. ரியாவும் மட்டும்தான்.. நிஷாந்துக்குத் திருமணமாகி ஒரு வயதில் மகன் உண்டு.. ரியா திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

“நார்த் இண்டியன் கல்ச்சர்ல ஊறிப் போயிட்ட மாப்பிள்ளை எனக்கு வேணாம் சித்தி.. பார்ட்டி.. அது.. இதுன்னு எப்பப் பார்த்தாலும் புட்டியும்.. குட்டியுமா இருப்பாங்க.. எனக்கு சௌத் இந்தியன் கல்ச்சர்ல ஹஸ்பெண்ட் கிடைச்சா பெட்டர்..” என்று அடிக்கடி ரியா சொல்லுவாள்..

“பாரின்ல படிச்சவ.. சௌத் இன்டியன் கல்ச்சர்ல மாப்பிள்ளை தேடறயா..?”

மாலதி சிரித்திருக்கிறாள்.. அப்போதெல்லாம் வெற்றிவேலின் நினைவு அவள் மனதில் வந்ததில்லை..

மும்பையில் பிறந்து.. வளர்ந்து.. வெளிநாட்டில் படித்து விட்டு திரும்பியிருக்கும் ரியா.. சிவகாசியில் வாழ்க்கைப்பட்டு மங்கள பவனத்தின் பொறுப்புள்ள மருமகளாக மாறுவாள் என்று எந்த நம்பிக்கையில் அவள் நினைத்துப் பார்ப்பாள்..?

வெற்றிவேல் சிவகாசியின் கலாச்சாரத்தில் ஊறினவன்.. மண்வாசனையைப் போற்றுபவன்.. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சிவகாசியை விட்டு அவன் அகல மாட்டான் என்று அவன் வாயாலேயே பலமுறை சொல்லியிருக்கிறான்..

மொட்டைத்தலைக்கும்.. முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுவதும்.. மும்பையின் கலாச்சாரத்திற்குப் 

பழகிய ரியாவை.. சிவகாசி மண்ணின் மைந்தனான வெற்றிவேலுடன் சேர்த்து வைப்பதும் ஒன்று என்று தெரிந்து வைத்திருந்ததினால் மாலதி இதைப் போன்ற நினைவுகளை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை..

என்னதான் புனேயில் எம்.பி.ஏ படித்துத் திரும்பியிருந்தாலும் வெற்றிவேல் சிவகாசியின் திருமகனாகவே இருந்தான்.. அவனுடன் ஜீன்ஸீம்.. குர்த்தாவுமாக அலையும் ரியாவை இணை கூட்டுவதா..?

“ஏன்..? இணை கூட்டினால் என்ன..?” என்று கேட்டாள் மாலதி..

“நான் என்னவோ வேணாம்ன்னு சொன்னதைப் போலயில்ல நீ அதட்டற.. தாராளமா இணை கூட்டலாம்.. நாம வேற எதுக்கு இருக்கோம்… அதுக்காகத்தானே இருக்கோம்..?”

“ரியா படிச்சவ.. அல்ட்ரா மாடர்ன் ரகம்.. கோடிஸ்வரி.. அழகா வேற இருக்கா.. வெற்றியென்ன வேண்டாம்ன்னா சொல்லிருவான்..?”

“சொல்லவே மாட்டான்..”

“அப்ப.. உங்க தங்கைகிட்ட ரியாவைப்பத்தி நான் சொல்றேன்..”

சொன்னதைப் போலவே மறுநாள் காலையில் விமலாவிடம் விதையை ஊன்றி விட்டாள் மாலதி..

“ஏன் அண்ணி.. நம்ம வெற்றிக்கு வயசாசிக்கிட்டே இருக்கே.. கல்யாணத்துக்கு பெண் பார்க்கலையா..?”

“எனக்கும் அதே கவலைதான் மாலதி.. நந்தினிக்கு கல்யாணமாகி ஒன்றுக்கு இரண்டு பிள்ளைகளா கிருச்சு..  அதுக ஸ்கூலுக்கும் போக ஆரம்பிச்சிருச்சுக.. இவன் மட்டும் பிடி கொடுக்காம கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்கான்..”

“நம்ம நந்தினியோட நாத்தனாரை வெற்றிக்கு பண்ணிக்கப் போறதா பேச்சிருந்ததே..”

“எங்கே..? பெண் கொடுத்து பெண் எடுத்தா.. பெண் கொடுத்த வீட்டிலே தட்டிக் கேள்வி கேட்க முடியாதுன்னு இவன் மாட்டேன்னு சொல்லிட்டானே.. அந்தப் பெண்ணுக்கு கல்யாணமாகி அது கையிலயும் குழந்தை இருக்கு..”

விமலா விட்ட பெருமூச்சில்.. அவளது வருத்தம் வெளிப்பட்டது.. மாலதியும் வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்துக் கொண்டாள்..

“இங்கே உள்ளூரிலயே சம்பந்தம் தேடி வந்துச்சே..”

“வெற்றிக்கு பிடிக்கலைன்னுட்டானே..”

“விருதுநகரில இருந்து ஆள் விட்டிருந்தாங்களே..”

“அவங்களும்தான் நடையா.. நடந்தாங்க.. இவன் முடியவே முடியாதுன்னு ஒத்தைக் காலில நின்னுட்டானே.”

“ஏனாம்..?”

“பொண்ணு கொஞ்சம் நிறம் கம்மி.. இவனுக்கு பிடிக்கலை…”

“ஸ்ரீவில்லிப்புத்தூர் பொண்ணு..?”

“படிப்பில்லைங்கிறான்..”

“ராஜபாளையத்தில பொண்ணிருக்குன்னு சொன்னீங்களே..”

“நமக்குத் தோதான இடமில்லன்னு சொல்லிட்டான்.. என்னத்தைச் சொல்ல.. ஒன்னிருந்தா.. ஒன்னு இருக்க மாட்டேங்குது..”

விமலாவின் மனதில் மகனின் திருமணத்தைக் குறித்து இத்தனைவிசனம் இருந்ததா என்று மாலதிக்கே ஆச்சரியமாகி விட்டது..

‘கள்ளி.. மனசுக்குள்ள இருக்கிறதை என்னைக்கு வெளியில சொல்லி இருக்கா..?’

வேலை கொடுத்து.. தங்க வீட்டையும் கொடுத்திருக்கும் மூன்று விட்ட நாத்தனாருக்கு மனதுக்குள் மனமார வாழ்த்துச் சொன்னாள் மாலதி..

அவளைப் போன்றவர்களிடம் இதுபோன்ற குண நலன்கள்தானே குடி கொண்டிருக்கும்..?

“நீங்க சொன்ன அத்தனை அம்சமும் பொருந்தி ஒரு பெண்ணிருக்கு.. நம்ம வெற்றிக்கு அந்தப் பெண்ணை பார்க்கலாமா..?” புதிர் போட்டாள் மாலதி..

“நம்ம சுத்த வட்டாரத்தில அப்படி ஏதும் பொண்ணு இல்லையே அண்ணி..?” விமலா குழம்பினாள்..

“இது இந்தச் சுத்து வட்டாரப் பொண்ணு இல்லை.. மும்பைக்காரப் பொண்ணு.. பேரு ரியா.. பாரின்ல எம்.பி.ஏ படிச்சு முடிச்சிருக்கா.. பாக்க அழகா இருப்பா.. கோடிஸ்வரக் குடும்பத்தில பிறந்து வளர்ந்தவ..”

மாலதி அடுக்கிக் கொண்டே போக.. பரபரப்படைந்தாள் விமலா..

“யாரைச் சொல்ற மாலதி..?”

“வேற யாருண்ணி.. எல்லாம்.. என் அக்கா கல்பனா வோட பொண்ணு ரியாதான்.” என்றாள் மாலதி..

“இங்கே பாரு.. கையில வெண்ணையை வைச்சுக் கிட்டு நெய்யைத் தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கோம்..”

விமலாவின் முகமலர்ச்சியில் தான் நினைத்தது நடந்துவிடும் என்பதைக் கண்டு கொண்டாள் மாலதி..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link