Chapter 12
“தாத்தா மங்களபவனத்துக்கு புதுவிருந்தாளி ஒருத்தங்க வரப் போகிறாங்களாம்..”
கைலாசத்துக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்து அவரை விழுங்க வைத்தபடி சொன்னாள் கீர்த்தன.. அவர் கேள்வியாக புருவங்களைச் சுருக்கினார்..
“யாரும்மா..?”
“யாரோ ரியாவாம்.. நம்ம மாலதி பெரியம்மாவுக்கு அக்கா மகளாம்..”
“மாலதிக்கு ஏதும்மா அக்கா..?”
“மும்பையிலே இருக்க அக்காவாம் தாத்தா… இவங்க அடிக்கடி போயிட்டு வருவாங்களே.. அவங்க மகள்தானாம்..”
கைலாசத்துக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைப் பெட்டிகளை வரிசையாக சரிபார்த்து அவருடைய அலமாரியில் அடுக்கி வைத்தபடி பேசினாள் கீர்த்தனா..
கள்ளமில்லாமல் அவள் பேசின பேச்சின் சாராம்சத்தில் அவர் உள்ளம் தவித்தது.. அவருக்கு பேத்தியின் மனதைப் பற்றி நன்கு தெரியும்.. அதையும் ஒருநாள் இடி மின்னலுடன் வந்த மழைதான் அவருக்கு உணர்த்தியது..
நள்ளிரவைத் தொடும் நேரத்தில் அவர் அறைக்கதவைத் தட்டினாள் கீர்த்தனா.. மின்சாரம் இல்லாமல் இன்வெண்டரின் உபயத்தால் ஒளிர்ந்த விளக்கின் ஸ்விட்சைப் போட்டு விட்டு கதவைத் திறந்தார் கைலாசம்.. கதவுக்கு வெளியே கண்ணீர் தாரை தாரையாக வழிய நின்று கொண்டிருந்த கீர்த்தனாவைக் கண்டதும் அவர் உள்ளம் பதைத்தது.. அவசரமாக கதவை விரியத் திறந்து பேத்தியை உள்ளே அழைத்து உட்கார வைத்தார்..
“என்னம்மா கீர்த்தனா.. என்ன நடந்துச்சு..? ஏம்மா இப்படி அழுகற..? இடி மின்னலைப் பார்த்து பயமாய் இருக்கா..?” கனிவுடன் விசாரித்தார்..
“அதில்லை தாத்தா.. அத்தான் இன்னும் வீட்டுக்கு வரலை..” கீர்த்தனா தேம்பினாள்..
“இன்னுமா வெற்றி வரலை..?”
கைலாசத்துக்கும் கவலையாகத்தான் இருந்தது.. ஆனால் அதற்காக கீர்த்தனா எதற்காக கண்ணீர் விட்டு அழுகிறாள் என்றுதான் அவருக்குப் புரியவில்லை..
“அதுக்கு ஏம்மா நீ அழுகிற..?”
“இல்லை தாத்தா.. இந்த இருட்டில.. இடி மின்னல் மழையில அவர் எங்காச்சும் மாட்டியிருந்தா..?” கீர்த்தனா திகிலுடன் கேவினாள்..
“அவன் என்ன சின்னக்குழந்தையா..? இதுக்குப் போயா இப்படி அழுகிற..? நல்ல பெண் போ..”
அவர் பேத்தியை சமாதானப் படுத்த முயன்றார்.. அவளோ சமாதானமாகமல் துடித்தாள்..
“இல்லை தாத்தா.. என் மனசு ஒரு நிலையா இல்ல.. பதறுது.. அத்தான் முகத்தப் பார்க்காம என்னால நிம்மதியா இருக்க முடியாது தாத்தா.. நான் போன் போட்டுப் பேச முடியாது.. நீங்க பேசுங்க தாத்தா.. அவர் எங்கேயிருக்கார்ன்னு கேளுங்க.. பத்திரமா இருக்காரான்னு கேளுங்க.. ஏன் இன்னும் வீட்டுக்கு வரலைன்னு கேளுங்க.. கேளுங்க தாத்தா..”
கீர்த்தனா கெஞ்சினாள்.. அவளின் கெஞ்சுதலைக் கண்டவரின் மனம் துணுக்குற்றது.. அந்த வீட்டில் வெற்றி வேலைப் பெற்ற தகப்பன் இருந்தார்.. தாய் இருந்தாள்.. தாத்தா இருந்தார்..
அவர்களுக்கெல்லாம் இல்லாத தவிப்பும்.. துடிப்பும்.. கவலையும்.. கீர்த்தனாவிடம் மட்டும் எப்படி வந்தன..?
பேத்தியின் துடிப்பைக் காணச் சகிக்காமல் அவர் செல்போனை கையில் எடுத்தார்.. வெற்றிவேலை அழைத்தார்..
“தாத்தா..” மறுமுனையில் வியப்பாக கேட்டான் வெற்றிவேல்..
“இன்னுமா நீங்க தூங்கலை..?”
“நீ ஏம்ப்பா இன்னும் வரலை..?”
“மழை வந்திருச்சு.. பார்த்தீங்கள்ல.. பேக்டரி கொடவுனை செக் பண்ணிட்டு வரலாம்ன்னு வந்தேன்.. நேரமாகிருச்சு..”
“இன்னும் நீ சாப்பிடலையேப்பா..?”
“எந்தக்காலத்தில இருக்கீங்க நீங்க..? நேரமானா யாராவது சாப்பிடாம இருப்பாங்களாம்..? ஹோட்டலில் வாங்கிட்டு வரச்சொல்லி ஆபிஸ் ரூமில் வைச்சுச் சாப்பிட்டு முடிச்சாச்சு..”
“எப்பப்ப வருவ…?”
“வந்துக்கிட்டே இருக்கேன் தாத்தா..”
கைலாசம் செல்போனை அணைத்து விட்டு விவரம் சொன்ன பின்பும் கீர்த்தனா அமைதியாகவில்லை..
“வழியில இருட்டியிருக்குமே தாத்தா..” என்றாள்..
“காரில லைட் எரியுமே..” அவரும் விளையாட்டைப் போலச் சொன்னார்..
கீர்த்தனா கேட்டுக் கொள்ளவில்லை.. சேலையின் முந்தானை நுனியை விரலில் சுற்றுவதும்.. அவிழ்ப்பதுமாக பதட்டத்துடன் இருந்தாள்.. புருவங்கள் சுருங்க அதையே பார்த்துக் கொண்டிருந்த கைலாசத்தின் மனம் வலித்தது..
கீர்த்தனாவின் மனதில் இப்படியொரு நினைவு இருக்கிறதா..?
அவர் மனம் கசிந்தது.. வெற்றிவேலைத் தவிர வேறு எதை அவள் கேட்டாலும்.. அவரின் சக்திக்கு உட்பட்டதாக இருந்தால் அவரால் அதை வாங்கிக் கொடுக்க இயலும்.. கீர்த்தனா வாய் விட்டுக் கேட்கா விட்டாலும்.. அவளது மனதை அறிந்தவராக அவரும் வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்..
இது அப்படியல்லவே.. வெற்றி வேல் காற்றைப் போன்றவன்.. கட்டுக்குள் அடங்காதவன்.. அவருடைய பேரன்தான்.. என்றாலும் அவனை அவள் கேட்டால் அவரால் கொடுக்க முடியாதே..
“ஏன் தாத்தா இன்னும் அவர் வரலை..?”
நொடிக்கொரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டு அவரை அவள் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தாள்..
நல்ல வேளையாக அவரை அதிலிருந்து காப்பற்றும் ஆபத்பாந்தவனாக அவன் வந்து சேர்ந்து விட்டான்.. மங்கள பவனத்தில் நுழைந்ததும் முதல் வேலையாக கைலாசத்தைப் பார்க்க வந்தான்.. அவனைக் கண்டதும் கீர்த்தனாவின் கண்களில் தெரிந்த ஒளியை இதுநாள்வரை கைலாசம் மறக்கவில்லை.. அவள் துள்ளலுடன் எழுந்து நின்றாள்..
“அத்தான்.. வந்துட்டிங்களா..?”
பரவசப்பட்டவளை விசித்திரமாக ஓர் பார்வை பார்த்த வெற்றிவேல்..
“நீ இங்கே என்ன செய்ற..? தூங்கலையா..?” என்று கேட்டு வைத்து விட்டு கைலாசத்தின் பக்கம் திரும்பினான்.
“உங்களுக்கே உடம்பு சரியில்லையே.. இந்த மழை நேரத்திலே மாத்திரையைப் போட்டுக்கிட்டுத் தூங்க வேண்டியதுதானே..?”
‘நானாடா தூங்க மாட்டேன்னேன்..? என் பேத்தி தூங்க விட்டாத்தானே…’
“நீங்க விழிச்சிருக்கிறது பத்தாதுன்னு.. கீர்த்தனா தூக்கத்தையும் கெடுத்து இங்க உட்கார வைச்சிருக்கிறிங்க..”
‘அதுசரி.. யாரு.. யாரோட தூக்கத்தைக் கெடுத்ததுன்னு உனக்குத் தெரியுமாடா பேராண்டி..?’
“என்னைப் பத்திக் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்க தாத்தா..”
‘அதை என் பேத்திகிட்டச் சொல்லு..’
“நான் ஒன்னும் கைப்பிள்ளயில்ல.. தொலைஞ்சு போக..”
‘அதத்தானடா வெற்றி நானும் இத்தனை நேரமாச் சொன்னேன்.. இந்தப் பொண்ணு காதில ஏறினாத்தானே..’
“பாசம் வைக்க வேண்டியதுதான்.. அதுக்காக இந்த அளவுக்கு உங்களைக் கஷ்டப் படுத்திக்கிட்டு பாசம் வைக்கனுமா தாத்தா..? ஏன் கீர்த்தனா.. நீயாவது தாத்தாவுக்கு புரிய வைக்கக் கூடாதா..?”
கேள்விக்கு பதில் வராததில் திரும்பிப் பார்த்தவன் அங்கே கீர்த்தனா இல்லாததில் திகைத்துப் போனான்..
“இந்தப் பொண்ணு எங்கே போச்சு..?”
‘எங்கே போச்சு..?’
கைலாசம் அறைவாசலில் போய் எட்டிப் பார்த்தார்.. அங்கே.. கையில் ஒரு டிரேயோடு வந்து கொண்டிருந்தாள் கீர்த்தனா…
‘எங்கே போனா..? என்ன கொண்டு வர்றா..?’
கீர்த்தனாவின் கையில் இருந்த டிரேயில் இரண்டு பீங்கான் கோப்பைகள் இருந்தன.. கோப்பைகளில் சூடான பால் இருந்தது.. அவள் முகத்தில் அமைதியும் சாந்தமும் இருந்தன..
“எங்கேம்மா போன..?”
“கிச்சனுக்குத்தாத்தா.. பாலை சுட வைத்துக் கொண்டு வரப் போயிருந்தேன்.. மழைநேரம் தாத்தா.. சூடா பாலைக் குடிங்க..”
வெற்றிவேலைப் பார்த்தபடி சொன்னவள் இருவரிடமும் கோப்பைகளை நீட்டினாள்.. எடுத்துப் பருகிய தாத்தாவுக்கும் பேரனுக்கும் அந்த குளிர் நேரத்துக்கு தோதானதாக அந்த சூடானபால் இருந்தது.. கதகதப்பாக தொண்டையில் இறங்கிய பாலின் சுவையால் லயித்த வெற்றிவேல்..
“பரவாயில்லையே.. எனக்கு கூட இது தோணலை..” என்று பாராட்டுதலாகச் சொன்னான்..
கீர்த்தனாவின் முகம் சிவந்தது.. அதற்கு மேலும் பேச்சை வளர்த்துவது ஆபத்து என்று வெற்றிவேலுக்கு மிக நன்றாகவே தெரியும் என்பதினால் அவன்..
“குட் நைட் தாத்தா.. நான்தான் வந்துட்டேனில்ல.. இனிமேலாவது நிம்மதியாத் தூங்குங்க..” என்று கைலாசத்திடம் சொல்லிவிட்டு நடையைக் கட்டி விட்டான்..
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவின் முகத்தில் தெரிந்த நிம்மதியில் கைலாசத்தின் நிம்மதி பறிபோனது..
“போய் தூங்கும்மா..”
“ஆகட்டும் தாத்தா.. இனித் தூங்கறதுக்கென்ன..? அதுதான் அத்தான் வீட்டுக்கு வந்துட்டாரே..”
அப்படிப்பட்ட கீர்த்தனா அறிவாளா..? வரப் போகும் விருந்தாளி சும்மா வரப் போவதில்லை.. அவளுக்கு மன உளைச்சலைக் கொண்டு வரப் போகிறாள் என்று..
“உனக்கெப்படிம்மா தெரியும்..?”
“அத்தைதான் சொன்னாங்க தாத்தா.. அவங்களுக்காக ரூமை ரெடி பண்ணிவைக்கச் சொன்னாங்க.. அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களாம்.. வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சுட்டு வந்தவங்களாம்.. பணக்காரங்களாம்.. அதனால ஸ்டோர் ரூமில இருந்த பெயிண்டிங்கில கொஞ்சத்தை அவங்க ரூமில மாட்டிவைக்கச் சொன்னாங்க..”
கீர்த்தனா ஓடி விட்டாள்.. கைலாசம் யோசனையுடன் படுக்கையில் சாய்ந்தார்..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.