Chapter 13

0Shares

“சுந்தரா..”

“என்னங்கப்பா..?”

“அந்தப் பொண்ணு எதுக்காக சிவகாசிக்கு வந்திருக்காம்..?”

கைலாசம் யாரைக் கேட்கிறார் என்று சுந்தர வடிவேலுக்குப் புரிந்துதான் இருந்தது.. அவரால் 

என்ன சொல்ல முடியும்..? அவருக்கு மட்டும் அது தெரிந்திருந்ததா என்ன..?

ரியா வரப் போவதைப் பற்றி ஒரு விவரமும் அவருக்குத் தெரியாதே.. விமலா அதைப் பற்றி அவரிடம் பேசவே இல்லையே…

திடிரென்று ஒருநாள் அதிகாலையிலேயே குளித்து முடித்து வாசலுக்கு வந்தாள்.. காரைத் துடைத்துக் கொண்டிருந்த டிரைவரை கைதட்டி அழைத்தாள்…

“மணி.. காரை எடு.. மதுரை ஏர்போர்ட்டுக்குப் போகனும்..”

பூஜை செய்ய வந்த சுந்தரவடிவேல் மனைவி எங்கே போகிறாள் என்று தெரியாமல் திகைத்தார்.. அதை மற்றவர்களிடம் அவரால் கேட்க முடியுமா..? கேட்டால் தான் நன்றாக இருக்குமா..? இதுவரை விமலா அவரைக் கேட்காமல் எதையெதை செய்திருக்கிறாள் என்று மனதுக்குள் பட்டியல் இட்டபடி பூஜையை ஆரம்பித்தார்.. அவர் பூஜையை முடித்து சாப்பிட வந்த போது.. ரியாவுடன் விமலா திரும்பியிருந்தாள்.. மாலதி அவளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றதை மங்கள பவனமே வியப்புடன் பார்த்தது..

“யாருடி இது..?”

“எனக்கென்ன தெரியும் மங்கை.. நானும் உன்னப் போல இந்த வீட்டில வேலை செய்ய வந்தவதான்..”

வேலையாள்கள் கிசுகிசுக்க.. அதைக் கூட செய்ய முடியாத இயலாமையுடன் மனைவியை உறுத்துப் பார்த்தார் சுந்தரவடிவேல்..

“என்னங்க.. இதுதான் ரியா..”

பெருமையுடன் அறிமுகப் படுத்தி வைத்தாள் விமலா.. வேறு வழியின்றி வரவேற்கும் தொனியில் தலையை அசைத்து வைத்தார் சுந்தரவடிவேல்..

“நம்ம மாலதியோட அக்கா பொண்ணுங்க.. மும்பையில இருக்கிறாங்கன்னு அடிக்கடி அண்ணனும் மாலதியும் போயிட்டு வருவாங்கள்ல.. அந்த அக்காவோட பொண்ணுதான்..”

சுந்தரவடிவேல் வந்திருக்கும் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார்.. மாலதியின் உறவுக்காரர்கள் மும்பையில் இருக்கும் விவரம் அவருக்குத் தெரியும்தான்.. அவர்கள் வீட்டில் பெண் இருக்கும் விசயம் தெரியாது.. விருந்துக்குப் போகும் மோகனரங்கமும்.. மாலதியும் திரும்பி வராமல் அங்கேயே தேங்கி நின்று விடக் கூடாதா என்ற அவரின் அடிமனதின் ஆசையினால் விமலா சொன்ன மாலதியின் மும்பை உறவுக்காரர்களைப் பற்றி அவருக்கு மிக நன்றாக ஞாபகம் இருந்தது..

‘இதுகளே இந்த வீட்டில ஒட்டிக்கிட்டு இருக்குதுக.. இதில இது வேறயா..?’ என்று அவருக்கு தோன்றித் தொலைத்தது..

ரியா உதட்டு சாயமும்.. குட்டை முடியும்.. ஜீன்ஸீம்.. குர்த்தாவுமாக இருந்தாள்.. சிவகாசிக்கு ஒட்டாத அந்த நாகரிகம் மும்பைக்கு வெகு இயல்பானது என்று மங்கள பவனத்தில் இருப்பவர்களுக்குத் தெரியுமா என்ன..? அவர்கள் தங்களுக்குள் அவளின் அதீத ஒப்பனையைக் குறித்த பேச்சுக்களை பரிமாறிக் கொண்டார்கள்..

“ரியா பாரினில் படிச்சவ.. மும்பையில இவங்க குடும்பம் ரொம்ப வசதியானதுன்னு தெரியும்தான..? நம்ம ஊர் திருவிழாவைப் பத்தி மாலதி சொல்லக் கேட்டிருக்காளாம்.. அதைப் பாக்கனும்கிற ஆசையில கிளம்பி வந்திருக்கா..”

“பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவைத்தான சொல்ற..?”

“வேற எதைச் சொல்லுவேன்..?”

“அதுக்கு இன்னும் ஒரு மாதமிருக்கே விமலா..”

இப்படிச் சொன்ன கணவரை சுட்டெரிப்பதைப் போல பார்த்தாள் விமலா.. நேரம் கெட்ட நேரத்தில் தனது நினைவாற்றலை அவர் வெளிப்படுத்தி வைக்கவில்லை யென்று அவள் கேட்டாளா என்ன..?

“ஏங்க.. நம்ம ஊரில வேற கோவில்களும் இருக்கேங்க.. மாரியம்மன் கோவில் தங்க கோபுரம் இருக்கு.. நிண்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கு..  மலைமேல இருக்க அந்தக் கோவிலப் பார்க்கறதுக்கு ஒருநாள் போதுமா..? கைலாச நாதர் கோவில் இருக்கு.. நம்ம ஊருக்கு சிவகாசின்னு பெயரைத் தந்த கோவில்.. அங்கே போகாம இருக்க முடியுமா..? பிளவக்கல் அணையிருக்கு.. நென்மேனி இருக்கு.. இத்தனை இடத்தையும் இவளுக்குச் சுத்திக் காண்பிக்க ஒரு மாதம் போதாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. நீங்க வேற.. நீ வாம்மா.. உன் ரூமைக் காட்டறேன்..”

‘இவ ரூமா..?’

இங்கே என்னதான் நடக்கிறது என்ற கோபத்துக்கு ஆளானார் சுந்தர வடிவேல்.. அந்தக் கோபத்துடன் சாப்பிடுவதற்கு முன்னால் கைலாசத்தைப் பார்த்து விடலாம் என்று மாடிக்குப் போனவரிடம் கைலாசம் கேள்வி கேட்டால் அவர் என்ன பதிலைச் சொல்லுவார்..?

“திருவிழாவுக்கு வந்திருக்கிறதா விமலா சொன்னாப்பா..”

“நீ அதை நம்பறியா..?”

நம்ப வில்லைதான்.. அதை தகப்பனாரிடம் சொல்ல முடியுமா என்ன..? சுந்தரவடிவேல் மௌனித்தார்..

“அந்தப் பொண்ணுக்காக இந்த மங்களபவனத்தில ஒரு வாரத்துக்கு முன்னாலேயே ரூம் ரெடியாகிருச்சு.. அது உனக்குத் தெரியுமா சுந்தரா..?”

தெரியாது என்பதைச் சொல்ல முடியாமல் தகப்பனாரை நிமிர்ந்து பார்த்த சுந்தரவடிவேலின் கண்களில் வேதனை இருந்தது.. அதை கண்டு கொண்ட கைலாசம் பெருமூச்சு விட்டார்..

“குடிசையா இருந்தாலும் அப்பன் வீட்டுச் சொத்தில வாழ்ந்திருக்கனும்டா சுந்தரா.. நீ அதை விட்டுட்ட.. அரண்மனையா இருந்தாலும் மாமனார் வீட்டுச் சொத்துக்கு நீ மாப்பிள்ளைதான்டா.. வாரிசா ஆக முடியாது.. அது என்னைக்குமே உன் பெண்டாட்டிதான்..”

“போன கதையை பேசி என்ன பிரயோசனம்ப்பா.. தும்பை விட்டாச்சு.. இனி வாலை பிடிக்க முடியுமா..?”

“எனக்கென்னவோ அந்தப் பொண்ணு திருவிழா பார்க்க வரலைன்னு தோணுது..”

“அப்படித்தான் விமலா சொன்னா..”

“இது மாலதியின் வேலையா இருக்கனும்..”

“யார் வேலையா இருந்தாலும் வெற்றி மனசை வைக்கனுமேப்பா..”

“ஒரு வேளை மனசை வைச்சுட்டா..? ஏன் கேட்கிறேன்னா.. அந்த பெண்ணை நானும் பார்த்தேன்.. மாடி பால்கனியில உலாத்திக்கிட்டு இருந்தேனா.. கார் வந்துச்சு.. இந்நேரத்துக்கு நம்மவீட்டு கார் எங்கே போயிட்டு வருதுன்னு பார்க்க எட்டிப் பார்த்தேன்.. இந்தப் பொண்ணும் விமலாவும் இறங்கினாங்க.. பொண்ணு மும்பைப் பக்கத்து ஸ்டைலா இருந்தாலும் அழகா இருக்குது.. வெற்றிக்கு பிடிச்சாலும் பிடிக்கலாம்..”

“பிடிச்சுட்டா என்னப்பா செய்ய முடியும்..?”

சுந்தரவடிவேலின் கேள்வியில் இருந்த நியாயத்தில் தலையை ஆட்டியபடி மௌனமானார் கைலாசம்..

வெற்றிவேல் விரும்பி விட்டால் யாரால்தான் என்ன செய்ய முடியும்..? அவர் விட்ட பெருமூச்சில் சுந்தர வடிவேலின் மனம் கனத்தது.. அவருக்கு தகப்பனின் மனதைப் பற்றித் தெரியும்… அவருக்கு மட்டும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமில்லையா என்ன..? மனதிருந்தால் மட்டும் போதுமா..? மார்க்கம் வேண்டாமா..?

சுந்தரவடிவேல் மத்தியவர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்.. சில ஈர நினைவுகள் அவரிடம் உண்டு.. வெற்றிவேல் அப்படியல்லவே.. அவன் பிறக்கும் போதே தங்க ஸ்பூனோடு பிறந்தவனாயிற்றே.. ஈர நினைவுகளுக்கு அவன் எங்கே போவான்..?

வெற்றிவேல் அந்தஸ்திற்கு முக்கியத்துவம் அளிப்பான்.. அவனுக்கு சமதையில்லாத யாருடனும் நின்று கூடப் பேச மாட்டான்.. அப்படிப் பட்டவனிடம் கீர்த்தனாவை மணந்து கொள் என்று சொல்லிவிட அவரால் முடியுமா..?

“உங்களுக்குத் தெரியாததில்லப்பா.. தோளுக்கு மேல வளந்தா தோழன்னு மகனைச் சொல்லுவாங்க.. அவன் என் தோளுக்கு மேல மட்டுமில்ல.. நான் அண்ணாந்து பாக்கிற உயரத்துக்குப் போயிட்டான்.. அவனைக் கட்டுப் படுத்த என்னால முடியாதுப்பா.. அவனுக்கு எது இஷ்டமோ அதைத் தான் அவன் இது நாள்வரைக்கும் செய்திருக்கான்.. இப்ப மட்டும் மாறிச் செய்திரப் போறானா.. என்ன..?”

“சுந்தரா..”

“மனசைத் தளர விடாதீங்க.. நம்ம கையில எதுவுமில்ல.. கீர்த்தனாவுக்கு நல்ல இடமா பார்த்து நிறைய சீர் செய்து கல்யாணம் பன்னி வைப்போம்.. இதை வேனும்னா நான் சொல்ல முடியும்.. வெற்றியும் கேட்டுக்குவான்..”

கைலாசம் பேசவில்லை.. ஓர் கனத்த மௌனம் பெரும்பாரமாக அவர்கள் மீது கவிந்தது.. தகப்பனின் ஆசையை நிறைவேற்ற முடியாத இயலாமையுடன் சுந்தர வடிவேல் எழுந்து கொண்டார்.. அனுமதியை வேண்டிப் பார்த்தவரின் கண்களில் தெரிந்த மனதின் வலியை கைலாசத்தினால் புரிந்து கொள்ள முடியாது.. அவர் மகனின் ஆதங்கத்தில் மனம் நெகிழ்ந்தார்.. மௌனத்தைக் கலைக்காமல் அவர் தலையை அசைக்க.. துக்கத்துடன் வெளியேறினார் சுந்தரவடிவேல்..

டைனிங் ஹாலில் யாருமில்லை.. எல்லோரும் ரியாவை உபசரிக்க போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.. தானே தட்டை எடுத்துப் போட்டுக் கொள்ள அவர் முனைந்தபோது ஒரு வளைக்கரம் முந்திக் கொண்டு அவர் முன்னால் தட்டைப் போட்டது..

“கீர்த்தனா.. நீ இங்கேயாம்மா இருந்த..?”

“இல்ல மாமா.. புதுசா வந்திருக்காங்களே.. ரியாக்கா.. அவங்க ரூமில இருந்தேன்.. நீங்க சாப்பிட வருகிற நேரம்ன்னு எனக்குத் தெரியுமே மாமா.. அதான் ஓடிவந்தேன்..”

கீர்த்தனாவின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.. அவள் கையில் ரியாவின் அழுக்குத் துணிகள் இருந்தன.. ஒன்றும்.. ஒன்றும் இரண்டு என்று வெகு எளிதாக யூகித்து விட்டார் சுந்தரவடிவேல்.. அவர் கண்கள் சிவந்து விட்டன.

அவருடைய ஒன்று விட்ட தங்கையின் மகள் என்ன விமலாவின் உறவுக்காரர்களின் துணிகளைத் துவைத்துப் போடும் வேலைக்காரியா..?

அவரால் வெற்றிவேலின் திருமணம் சம்பந்தமாக விமலா எடுக்கும் முடிவுகளைத் தட்டிக் கேட்க முடியாது.. ஆனால் இதைத் தட்டி கேட்க முடியும்..

“கையில என்னம்மா..?” அதட்டினார்..

“மாமா.. அது வந்து..” கீர்த்தனா தடுமாறினாள்..

அவள் வெற்றிவேலின் அறையை ஒழுங்கு பண்ணி விட்டு வந்து கொண்டிருந்தாள்.. ரியாவின் அறையிலிருந்த விமலா அவளை அழைத்தாள்.. கீர்த்தனா உள்ளே போனாள்..

“என்னங்க அத்தை..?”

“என்ன செய்ற..?”

“அத்தானின் ரூமை கிளின் பண்ணி வைச்சுட்டு வர்றேன் அத்தை..”

“ஓ.. இதுதான் ரியா.. இவ இங்கேயிருக்கிற வரைக்கும் நீதான் இவளைப் பார்த்துக்கனும்.. புரியுதா..?”

சில வார்த்தைகள் கனமானவை.. கொத்தான முள்சரம் போன்றவை.. அதையறியாமல் இயல்பாக வார்த்தைகளை உதிர்த்து விட்டாள் விமலா..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link