Chapter 17

0Shares

“வாவ்..!” விருந்தாளியாய் வந்து நின்ற அந்தக் கிரணின் கண்களில் தெரிந்த ஒளியையும் வாய் விட்டுச் சொல்லிய அவன் ரசனையையும் பார்த்தும்.. கேட்டும்.. பல்லைக் கடித்தான் வெற்றிவேல்.. விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் இப்படியொரு சோதனையா.?

“வாட்.. எ பெண்டாஸ்டிக் பிகர்..! வெற்றி.. யு ஆர் ஸோ லக்கி.. வீட்டிலேயே கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பச்சைக்கிளியை பக்கத்தில் வைச்சுக்கிட்டு இருக்கியே.. செம மூளை உனக்கு..” கிரணின் பார்வை போன திசையில் கீர்த்தனா இருந்தாள்..

“வாயைக் கழுவு.. என்ன பேச்சுன்னு இதைப் பேசற..?”

“உனக்கேண்டா இத்தனை கோபம்..? நீ அந்தப் பெண்ணை சைட் அடிக்கிறயா..?”

“கிரண்..” கண்டிப்பான தொனியில் அதட்டினான் வெற்றிவேல்..

“ஈஸிடா வெற்றி.. எதுக்கு இத்தனை காண்டு..? நீ ஒன்னும் அந்தப் பெண்ணை லவ் பண்ணலயில்ல..? ரியாவைத்தான உனக்கு பிக்ஸ் பண்ணியிருக்காங்க..”

“அதுக்கு..?”

“கண்டுக்காதேங்கிறேன்.. வலை போட்டுத் தேடினால்  கூட இப்படியொரு பிகர் மாட்ட மாட்டா.. எனக்கு லட்டு போல சான்ஸ் கிடைச்சிருக்கு.. விட்டிருவேனா..? ஊருக்குப் போகிறதுக்குள்ள கணக்குப் பண்ணிற மாட்டேன்..?”

“டேய்ய்ய்.. அவ எனக்கு உறவுக்காரப் பெண்ணுடா..?”

“என்ன உறவு..?” முகம் சுளித்தான் கிரண்..

“அத்தை மகளாகனும்..”

“ப்பா.. தப்பிச்சேண்டா சாமி.. எங்கே உனக்கு தங்கை முறையாகனும்னு சொல்லிருவியோன்னு பயந்தே போயிட்டேன்.. அறிவிருக்காடா உனக்கு..? உனக்கு அத்தை மகளாகனும்னா.. எனக்கு மட்டும் சித்தப்பா மகளாவா ஆகனும்..? எனக்கும் அதே முறைதானேடா.. அவளுக்கு நான் கொக்கி போடறதும் முறைதான்..?”

“இதுக்குத்தான் நீ சிவகாசி பக்கம் தலையைக் காட்டினியா..?”

“இல்லைதான்.. உங்க ஊரு திருவிழாவை வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்ணத்தான் வந்தேன்.. வந்து பார்த்தா.. பாக்தாத் பேரழகி போல இப்படியொரு பொண்ணு.. ஏண்டா வெற்றி.. இந்தப் பெண்ணு இங்கேதான் இருக்காளா..?”

“ம்ம்ம்.. அவளுக்கு பேரண்ட்ஸ் இல்லை.. எங்க தாத்தாவோட சொந்த தம்பி பேத்தி.. நாங்கதான் அவளுக்கு உறவு..”

“எத்தனை நாளா இங்கேயிருக்கா..?”

“வருசங்களான்னு கேளு.. இரண்டரை வருசமா இங்கேதான் இருக்கா..”

“மிஸ் பண்ணிட்டேனே வெற்றி.. தெரிஞ்சிருந்தா.. பாரினுக்குக் கூடப் படிக்கப் போகாம சிவகாசியில டெண்ட் அடிச்சுத் தங்கியிருப்பேனே..”

“முதல்ல நீ போய் குளி.. அப்புறமா ரெஸ்ட் எடு.. அதுக்கப்புறமா பேசிக்கலாம்..”

“துரத்தற பார்த்தியா..”

கிரண் தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த கீர்த்தனாவைப் பார்த்து விசிலடித்தபடி வீட்டுக்குள் போனான்.. வெற்றிவேல் கடுப்புடன் கீர்த்தனாவிடம் போனான்..

அந்த அதிகாலையிலும் தலைக்குக் குளித்து காலைத் தொட்ட கருங்கூந்தலின் நுனியில் சிறு முடிச்சிட்டு.. பாந்தமான பேரழகோடு இருந்தாள் கீர்த்தனா.. அந்த அழகில் வெற்றிவேலுக்கு கோபம் வந்தது.. அது எதனால் என்று அவனுக்கே தெரியவில்லை..

அவன் அருகில் வந்து நிற்பதை உணராமல் தன் போக்கில் பூக்களைப் பறித்து பூக்குடலைக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள் கிர்த்தனா.. முழு ஈடுபாட்டுடன் அந்த வேலையை அவள் செய்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. இந்த வேலை என்று இல்லை.. எந்த வேலையை அவள் செய்தாலும்.. அதே ஈடுபாட்டுடன் தான் செய்கிறாள் என்பதை அவன் நினைவு கூர்ந்தான்..

கீர்த்தனா பச்சை வண்ணத்தில் சேலை அணிந்திருந்தாள்.. ஷிபானில் ஜரிகை வேலைப்பாடுகளைக் கொண்ட அந்தச் சேலையை கைலாசம் அவளுடைய பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தார் என்ற நினைவில் அவன் உதடுகளைக் கடித்துக் கொண்டான்.. அந்த வீட்டுக்காக.. புலர்காலைப் பொழுது முதல்.. நள்ளிரவு யாமம் வரை உழைப்பவளுக்கு ஒரு பரிசையும் அவன் வாங்கிக் கொடுத்ததில்லை என்ற குற்றஉணர்வு அவனுக்குள் வியாபித்தது..

அவள் செய்யும் வேலைகளுக்கு சம்பளம் என்று கணக்கிட்டால்.. பத்து ஆள்களுக்கான மொத்த சம்பளத்தையும் கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தவனுக்கு.. அவள் சம்பளத்திற்காக அந்த வேலைகளைச் செய்யவில்லை என்ற உண்மை உறைத்தது..

அவற்றை அவள் கடமையாக ஏற்றுச் செய்தாள்.. மூன்று வேளை உணவும்.. இருக்க இடமும்.. 

பண்டிகை தினங்களில் உடையும் கொடுக்கிற அந்தக் குடும்பத்தைத் தன் குடும்பமாக நினைத்து அவள் ஓடியோடி கடமையாற்றுகிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது..

அவளுடைய நிறத்தை அந்த பச்சை வண்ணம் அதிக அழகுபடுத்திக் காட்டுவதை உணர்ந்தவனுக்கு.. அதனால்தான் அவளை கிரண் ‘பச்சைக்கிளி..’ என்று சொல்லியிருக்கிறான் என்ற கோபம் வந்தது..

பூக்களை பறித்து முடித்த கீர்த்தனா.. திரும்பினாள்.. பக்கத்தில் நின்றிருந்த வெற்றிவேலைக் கவனிக்காமல் வழக்கம் போல அவள் மோத.. அதே வழக்கம் போல வெற்றிவேல் அவள் இடுப்பில் கை கொடுத்துத் தாங்கிப் பிடித்தான்..

இந்த முறை அவன் அவளை சீக்கிரத்தில் விடுவிக்கவில்லை…

அவள் இடுப்பில் படிந்திருந்த அவனது கைகள் உணர்ந்த வளவளப்பில் அவன் மனதில் சலனம் உண்டானது.. அவன் மீது படிந்திருந்த அவளது ஈரக் கூந்தலின் மீதிருந்து வந்த சீயக்காய் கலந்த நறுமணத்தை முகர்ந்தவனின் மனதில் மயக்கம் வந்தது.. மிரண்டு விழித்த அவள் கண்களில் அவனைக் கண்டதும் உண்டாகும் பிரத்யேக மயக்க உணர்வில் அவன் மயக்கம் மேலும் அதிகரித்தது.. அதுநாள் வரை அவன் உணராத பேரழகை அந்த நொடியில் அவளிடம் அவன் உணர்ந்தான்..

அவன் திட்டப் போகிறானோ என்ற பதட்டத்துடன் விலகி நின்றாள் கீர்த்தனா..

“என்னைப் பார்த்தாலே மோதி விழனும்னு நேர்த்திக் கடன் வைச்சிருக்கியா..?” சிடுசிடுப்பில்லாமல் சொன்னான் வெற்றிவேல்..

அதில் ஆச்சரியப்பட்டுப் போனாள் கீர்த்தனா.. அவளுடைய அத்தானா அவளிடம் கோபமில்லாமல் பேசுகிறான்..?

அவளுக்கு மனம் சிறகடித்தது.. ஜிவ்வென்ற இனம் புரியாத ஒர் உணர்வுப் பேரலை எழுந்து அவளை மூழ்கடித்ததில் அவள் மூச்சுத் திணறிப் போனாள்…

“அத்தான்..?” பேச வாய் வராமல் தவித்தாள்..

அவளின் மனம் படபடவென்று அடித்துக் கொள்வதை உணர்த்து வதைப் போல அவளின் இமைகள் அடித்துக் கொண்டன.. அவளிடம் குடி கொண்டிருந்த பெண்மையின் அழகில் லயித்துப் போனான் வெற்றிவேல்..

“உன்னை யாரு இன்னைக்குப் பார்த்து பச்சைக் கலரில் சேலை கட்டச் சொன்னது..?”

“என்னது..?”

கீர்த்தனா திகைத்துப் போனாள்.. அவளுடைய வெற்றிவேல் அப்படியெல்லாம் பேசுகிறவன் அல்ல.. அவளை எந்த உணர்வுமின்றி இரும்புப் பார்வை பார்த்துவிட்டுப் போய் விடுவான்..

அவனா இப்படிக் கேட்கிறான்..?

இன்றைக்கு விடிந்திருக்கும் விடியல் அற்புதமான அழகுடையது என்று மனம் நிறைந்தாள் கீர்த்தனா.. எவனது உடைகளையும்.. அவற்றின் வண்ணங்களையும்.. அவற்றை அவன் அணியும் நேர்த்தியையும்.. கள்ளப் பார்வை பார்த்து ரசித்து வந்தாளோ.. அந்த வெற்றிவேல் முதல்முதலாக அவள் அணிந்திருக்கும் சேலையின் வண்ணத்தைப் பற்றிச் சொல்கிறான்..

‘இறைவா..! உனக்கு என் மனமார்ந்த நன்றி..’ அவள் மனம் துள்ளியது..

அவளையும் அவளுடைய அத்தான் கண் கொண்டு பார்த்து விட்டான் என்று மகிழ்ந்து போயிருந்த கீர்த்தனாவுக்கு அடுத்து அவன் பேசிய வார்த்தைகளில் குழப்பம் ஏற்பட்டது..

“வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறான்..”

‘இதை எதுக்கு இப்பச் சொல்றான்..?’ அவள் மனம் சிணுங்கியது..

மங்கள பவனத்திற்கு விருந்தினர் வந்து போவது ஒன்றும் புதிதான ஒன்றல்லவே.. அது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே.. அதிலும் அப்போது சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம்.. விருந்தினர்கள் வர ஆரம்பிப் பார்கள்தானே.. இதை ஒரு செய்தியா கீர்த்தனாவிடம் வந்து எதற்காக அவன் சொல்கிறான்..?

‘ஒருவேளை.. அத்தானுக்கு வேண்டப்பட்ட விருந்தாளியா இருக்குமோ..’

அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தாள் கீர்த்தனா.. அப்படியில்லையெனில் அந்த விருந்தாளிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கீர்த்தனாவிடம் பேச மாட்டானே..

“நீங்க கவலையே படாதீங்க அத்தான்.. அவரை நான் பக்கத்திலே இருந்து கவனிச்சுக்கறேன்..” என்று மனப் பூர்வமாக வாக்களித்தாள்..

வெற்றிவேலுக்கு செமத்தியான கோபம் வந்து விட்டது..

“பக்கத்தில இருந்து பார்த்துக்குவியா.. பிய்ச்சுப் புடுவேன் பிய்ச்சு..” என்று உறுமினான்..

“அத்தான்..”

பூக்குடலையைப் பிடித்திருந்த கீர்த்தனாவின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தன.. எதற்காக அவனுக்கு கோபம் வந்திருக்கிறது என்று புரியாமல் அவள் நடுங்கினாள்..

“அவனே உன்னைப் பார்த்துட்டு பச்சைக்கிளியை பக்கத்தில வைச்சிருக்கிறயேன்னு என்னைப் பார்த்துக் கேட்டுட்டுப் போறான்.. நீ அவன் பக்கத்திலேயே இருந்து கவனிச்சுக்கப் போறயா..? கொன்னுருவேன்..”

“என்னது..? பக்கத்திலேயே வைச்சிருக்கிறயேன்னு கேட்டாங்களா..?”

அவளின் அதிர்ச்சியில் எதற்காக இந்த அளவுக்கு அதிர்ச்சியைக் காண்பிக்கிறாள் என்று அவன் யோசித்தான்.. விவரம் பிடிபட்டதில்..

“அடச்சீ..!” என்றான்..

“அத்தான்..”

“இது அந்த வைச்சுக்கிறது இல்லை.. சும்மா வெறும் வாய் வார்த்தைக்கு செல்கிற வைச்சுக்கிறது..”

“சும்மாதானா..?”

இதைச் சொல்லிய கீர்த்தனாவின் குரலில் தெரிந்த ஏமாற்றத்தில் இதில் என்ன இவளுக்கு இத்தனை வருத்தம் என்று தோன்றியது அவனுக்கு..

“பச்சைக் கலரில் சேலையைக் கட்டிட்டு.. தோட்டத்தில அவன் கண் முன்னாலே உலாத்து.. அப்புறம் அவன் உன்னைப் பார்த்து பச்சைக்கிளி.. முத்துச்சரம்ன்னு பாட்டுப் பாடாம என்ன செய்வான்..?”

“என்னத்தான் இது.. நான் யதார்த்தமா இந்தச் சேலையைக் கட்டினேன்.. வேற கலர்ல கட்டியிருந்தா மட்டும் பாட்டுப் பாட மாட்டாங்களா..?”

“ம்ம்ம்.. அப்படியொன்னும் இருக்குதில்ல.. அவன் அந்த மாதிரி ஆளுதான்.. நீ எந்தக் கலரில் சேலயக் கட்டினாலும் பாட்டைக் கண்டுபிடிச்சு பாட்டுப் பாடத்தான் செய்வான்..”

“அதைத்தான் சொல்றேன்… பாடனும்னு நினைக்கிறவர்கள உங்களாலே கண்ட்ரோல் பண்ண முடியாது அத்தான்..”

“எனக்கே புத்தி சொல்ற..? ம்ம்ம்.. தேறிட்ட.. அவனைத்தான் என்னாலே கண்ட்ரோல் பண்ண முடியாது.. உன்னைக் கன்ட்ரோல் பண்ணலாமில்ல..?”

‘அதுக்குத்தானே காத்திருக்கேன்..’ என்று சொல்லத் தோன்றியது கீர்த்தனாவுக்கு..

அவள் சொல்ல நினைத்ததை அவள் முகம் சொல்லிவிட.. அவன் அசையாமல் அவள் முகம் பார்த்தபடி நின்றான்..

‘கட்டுக்குள் அடங்குவதற்கு இத்தனை ஆர்வமா..?’

அவன் மனதில் அவள் மீது இரக்கம் ஏற்பட்டது.. அவளை அவனுக்குப் பிடிக்கும்தான்.. ஆனால்.. அந்தப் பிடித்தம் திருமணத்தில் கொண்டு போய் விட்டு விடாது என்பதில் அவன் மனதில் குற்றஉணர்வு எழுந்தது..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link