Chapter 18
“கீர்த்தனா..”
வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்மையாக அவள் பெயரை உச்சரித்தான் வெற்றிவேல்.. அது போல அவளிடம் அவன் பேசியதில்லை என்பதில் பரவசப்பட்டுப் போன கீர்த்தனா..
“அத்தான்..” என்று அவன் முகம் பார்த்தாள்..
‘சொல்லி விடலாமா..? உன் மனதில் என்னை நினைக்காதே.. நான் உனக்குக் கிடைக்க மாட்டேன்னு சொல்லி விடலாமா..?’
வெற்றிவேலால் அதைச் சொல்ல முடியவில்லை.. அதைச் சொன்னால் அவள் முகத்தில் தெரியப் போகும் பிரளயத்தின் பேரலையை அவனால் பார்க்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை..
அதனால் அவன் வேறு ஒன்றைச் சொன்னான்..
“வந்திருக்கவன் வில்லங்கமான ஆளு..”
“யாரு அத்தான்..?”
“அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போற..?”
“ஸாரி அத்தான்..”
“இதை ஒன்னைச் சொல்லிரு.. இப்பத்தான் அவன் உன்னைப் பார்த்து பச்சைக்கிளின்னு சொன்னான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்… நீ என்னடான்னா… அவன் ஊரையும்.. பெயரையும் விலாவாரியா விசாரிக்க ஆரம்பிக்கிற..”
“தெரியாம கேட்டுட்டேன் அத்தான்..”
“அவனிடமிருந்து தள்ளியே நில்லு.. புரியுதா..?”
வெற்றிவேலின் கண்டிப்பில் கீர்த்தனா அவசரமாக பூம்பூம் மாட்டைப் போலத் தலையாட்டி தன் ஒப்புதலைத் தெரிவித்தாள்.. அப்போது..
“எத்தனை அடி தள்ளி நிற்கனும் வெற்றி..? அதையும் அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்திரு..” என்ற குரல் கேட்டது..
‘வந்துட்டான்..’ வெற்றிவேல் பற்களை நறநறத்தான்.. கீர்த்தனா.. வந்திருப்பவன் யாராக இருக்கும் என்று அறியும் ஆவலுடன் திரும்பிப் பார்த்தாள்..
“ஹாய்.. ஐ ஆம் கிரண்..” என்றபடி அவளைப் பார்த்து கையாட்டியபடி பக்கத்தில் வந்தான் கிரண்..
பதிலுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் தயக்கத்துடன் வெற்றிவேலின் முகம் பார்த்தாள் கீர்த்தன.. அவன் விழிகள்..
‘ஓடு..’ என்று அதட்டி சமிக்ஞைசெய்தன..
அவசரமாக அவள் நகர முற்பட்டபோது கிரணின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது..
“என்னங்க இது.. என்னை இண்ட்ரொடுயூஸ் பண்ணிக்கிட்டதுக்கு மரியாதைக்குக் கூட பதிலுக்கு ஒரு ஹாய் சொல்ல மாட்டிங்களா..?”
வெற்றிவேலின் கட்டளையை மீற முடியாமல் கீர்த்தனா தவித்தபோது அவள் சார்பாக வெற்றிவேலே பதில் கொடுத்தான்..
“இது சிவகாசி.. லண்டனில்ல.. இவளுக்கு ஹாய் சொல்லத் தெரியாது..”
“போகுது விடு.. இவங்க வாயாலே சொல்கிற வரம் ‘ஹாய்’க்கு கிடைக்கல போல இருக்கு.. அதுக்குப் பதிலா.. இந்த ‘வணக்கம்..’ ‘வந்தனம்..’ ‘நமஸ்தே..’ ‘நமோஸ்கார்..’ன்னெல்லாம் நிறைய வெர்டுஸ் இருக்கே வெற்றி.. அதை யூஸ் பண்ண வேண்டியதுதானே.. இவங்க வாயாலே சொன்னா அந்த வெர்டுஸ்களும் வரம் கிடைச்சிருச்சுன்னு ஹேப்பியாகிருமில்ல..?”
வெற்றிவேலின் கடுகடுப்பைக் கண்டு கொள்ளாத கிரணின் கலகலப்பில் கீர்த்தனாவின் முகத்தில் வியப்பு வந்தது..
‘யார் இவன்..?’
அவளின் பார்வையை இனம் கண்டு கொண்ட வெற்றிவேலின் முகம் மாறியது.. அவன் அவளை எரித்து விடுவதைப் போலப் பார்த்தான்..
“நீ இன்னும் போகலையா..? பூஜைக்கு பூப்பறிக்கத்தான வந்த..? பூஜை இங்கே நடக்குதா.. இல்லை பூஜையறையில் நடக்குதா..?”
“எதுக்குடா அவங்களை விரட்டற..?”
“திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிஸினெஸ்கிரண்..”
“விடு.. நான் வேற பிஸினெஸ்ஸைக் கவனிக்கிறேன்.. மிஸ் கீர்த்தனா.. உங்க தாத்தா என்னவோ உங்களுக்கு மரியாதைன்னா சிவகாசி பால்சோறு போல கொள்ளை இஷ்டம் அப்படி இப்படின்னு பிளந்து கட்டினார்.. நீங்க என்னடான்னு ஹாய் சொன்னவன்கிட்ட நின்று பேசாம ஓடறதிலேயே குறியாய் இருக்கீங்க…”
‘தாத்தாவை இவனுக்குத் தெரியுமா..?’ நகரமுடியாமல் தேங்கி நின்றாள் கீர்த்தனா..
“போங்கறேனில்ல..” வெற்றிவேல் கர்ஜித்தான்..
“எதுக்குடா இப்படிச் சத்தம் போடற..? பாரு.. உன்னால தோட்டத்துப் பூக்கள சைட் அடிச்சு கணக்குப் பண்ணிக்கிட்டு இருந்த பட்டாம் பூச்சிகள்ளாம் பயந்து போய் சிறகடிக்குது..”
“கிரண்.. நீ இதில் தலையிடாதே.. கீர்த்தனா.. நீ போ..”
“இருங்க.. எனக்கு ஒரு ஹலோ சொல்லிட்டுப் போங்க.. உங்களுக்குத் தெரியுமா..? நான் உங்க அப்பா வழியில் சொந்தம்..”
கீர்த்தனாவின் கால்களில் இரும்புக் குண்டு மாட்டப்பட்டன.. அவள் தன்னைப் பெற்றவரைப் பற்றிய பேச்சைப் பேச ஏங்கிப் போனாள்.. அதற்கு அனுமதி அளிக்காமல் அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தான் வெற்றிவேல்..
“இப்பப் போகிறயா.. இல்லையா..?”
“எனக்குப் பதில் சொல்லிட்டுப் போங்க கீர்த்தனா..”
“நான் மூணு எண்ணுகிறதுக்குள்ள நீ இடத்தை காலிபண்ணியிருக்கனும்..”
“உங்க அப்பாவுக்கு நான் எப்படிச் சொந்தம்ன்னு கேட்க மாட்டிங்களா..?”
“ஒன்று..”
“உங்க அப்பாவுக்கு தூரத்துச் சொந்தத்தில நான் அக்கா மகனா வருகிறேனாம்.. உங்க தாத்தாதான் சொன்னார்.. உங்களுக்கு இது தெரியுமா..?”
“இரண்டு..”
வெற்றிவேலின் கண்கள் தீப்பந்தங்களைப் போல ஜ்வலித்தன.. அதில் தெரிந்த கனலில் கதிகலங்கிப் போனாள் கீர்த்தனா.. அவன் கோபப் படுவான்தான்.. அவளிடம் சிரித்துப் பேச மாட்டான்தான்.. ஆனால் இந்த அளவுக்கு என்றுமே கோபப்பட்டதில்லையே..
“மூன்று..”
வெற்றிவேல் சொல்லிக் கொண்டிருந்தபோது அந்த இடத்தில் கீர்த்தனா இல்லை.. அவன் ‘இரண்டு’ என்று சொல்லி வாய் மூடுவதற்குள் சிட்டாகப் பறந்திருந்தாள்..
“எப்படிடா..?” ஆச்சரியப்பட்டுப் போனான் கிரண்..
வெற்றிவேலின் முகத்தில் நிலவிய திருப்தியில் அவன் புருவங்கள் உயர்ந்தன..
“எங்கேயோ இடிக்குதே..” என்று தாடையைத் தடவினான்..
வெற்றிவேல் உஷாரானான்.. அவனுக்கு கிரணைத் தெரியும்.. அவன் மனதுக்குள் இருப்பதை தோண்டி எடுத்துப் படிப்பதில் வல்லவன்..
‘படிச்சாப் படிச்சுட்டுப் போகட்டுமே.. என் மனசில் என்ன இருக்கு..?’
அது வெற்றிவேலுக்கே தெரிந்து தொலைக்க வில்லை.. அவனுக்குத் தெரியாதது கிரணுக்குத் தெரிந்து விடுமோ என்று கவலையாகிப் போனான்..
“என்ன வெற்றி.. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு…?” கிரணின் பார்வை வெற்றிவேலைத் துளைத்தது..
“போடா.. டோய் வேலையைப் பாரு..” வெற்றிவேல் சுள்ளென்று எரிந்து விழுந்தான்..
“எதுக்கு இத்தனை எரிச்சல்..? கண்ணுக்கு பாந்தமா ஒரு பெண்ணைப் பார்த்தா பிராக்கெட் போடனும்னு தான் எவனுக்கும் தோணும்..”
“எனக்குத் தோணாது..”
“எப்படிடா தோணும்.. நீதான் ஏற்கனெவே ரியாவுக்கு பிராக்கெட் போட்டுட்டியே..”
“ச்சை.. என்ன பேச்சுன்னு பேசற..”
“இதை இரண்டாவது தடவையாச் சொல்லிட்ட..”
“சொல்லியும் நீ திருந்தலை பாரு..”
வெற்றிவேல் கடுப்புடன் வீட்டுப் பக்கம் போக யத்தனித்தான்..
‘இவனையெல்லாம் திருவிழாவுக்கு வான்னு வருந்தி அழைச்சது யாரு..?’
அதை விமலாதான் செய்திருந்தாள்.. அது வெற்றி வேலுக்கும் தெரியும்.. அதனால்தானே அவன் பல்லைக் கடித்தபடி பொறுமை காக்கிறான்..? வேறு யார் அழைத்திருந்தாலும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிப்போ என்று பார்சல் பண்ணி அனுப்பி வைத்திருப்பானே..
‘எல்லாம் இந்த மாமாவாலும்.. அத்தையாலும் வந்து சேருகிறது.. இதுகளே தண்டம்.. இதில இதுகளுக்கு உறவுக்காரங்களை வேற கூப்பிட்டு கும்மியடிக்கிறாங்க..’
எப்படி ரியா மாலதியின் மூன்று விட்ட அக்கா கல்பனவுக்கு மகளாகப் பிறந்திருக்கிறாளோ.. அதைப் போல கிரணும் மோகனரங்கத்திற்கு இரண்டு விட்ட அக்கா சவிதாவுக்கு மகனாகப் பிறந்து தொலைத்திருந்தான்..
மோகனரங்கத்துக்குத்தான் அவள் இரண்டு விட்ட அக்கா.. விமலாவுக்கு நான்கு விட்ட அக்கா..
‘பின்னே.. இந்த மாமாவே மூன்று விட்ட அண்ணன் முறைதானே.. ஆகனும்..’
அந்தச் சொந்தத்தில் கிரண் அடிக்கடி சிவகாசிக்கு வந்து போவான்..
அதிலும் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா வென்றால் திருவிழா நடைபெறும் அந்தப் பத்து நாள்களிலும் சிவகாசியில்தான் மையம் கொண்டிருப்பான்.. அவன் வந்தாலே வெற்றிவேலுக்குப் பிடிக்காது..
“என்னவோ ஹைதராபாத்திலே கம்யூட்டர் பிஸினெஸில கொடி கட்டி பறக்கிற குமரன்னு பீத்திக்கற.. இப்ப என்னடான்னா பத்து நாளா இங்கே டேரா போடற.. உன்னோட கொடிகட்டிப் பறக்கிற பிஸினெஸ்ஸைப் பத்தி உனக்கு கவலையே இல்லையா..?” என்பான்..
கிரண் அலட்டிக் கொள்ளவே மாட்டான்.. அவனுடைய சுபாவமே அப்படித்தான்.. எதையும் இலகுவாக எதிர் கொள்வது அவன் இயல்பு.. அவனைக் கோபப்படுத்துவது வெகு சிரமம்..
அலட்டிக் கொள்ளாதவனை வெற்றிவேலின் ஆத்திரத்தால் என்ன செய்ய முடியும்..?
“அது பட்டொளி வீசிப் பறக்கிற பிஸினெஸ்டா வெற்றி.. பத்துநாள் நான் இல்லாமப் போறதினால ஆட்டம் கண்டுராது.. இந்தத் திருவிழாவை மிஸ் பண்ணிட்டு நான் என்னத்தைச் சம்பாதிச்சு என்ன பண்ண..?”
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா அப்படிப்பட்டது.. தமிழ் நாட்டிலேயே உயர்ந்த கோபுரத்தை உடைய காளி கோவில் இது மட்டும்தான்.. இந்தக் கோவிலில் உள்ள பஞ்சமுக (ஐந்துமுக) விநாயகர் சன்னதி கோவிலைப் போலவே விசேசம் கொண்டது.. விசேச தினங்களில்
பெரிய குடும்பங்களின் சார்பாக லட்சார்ச்சணை நடக்கும்.. இதனை அந்தக் குடும்பத்தின் கௌரவம் சம்பந்தப்பட்ட உயரிய அடையாளமாக அக்குடும்பத்தினர் கருதுகிறார்கள்..
வெற்றிவேலின் குடும்பம் லட்சார்ச்சனை நடத்தும் குடும்பங்களில் முதன்மையானது.. அந்தக் குடும்பத்தில் ஒருவனாக ஒட்டிக் கொண்டு கோவிலுக்குப் போய்வர கிரண் மிகவும் விரும்புவான்..
“ஆயிரம்தான் சொல்லுடா.. தமிழகப் பெண்களோட களையே தனிக்களைதாண்டா.. அதிலயும் வீட்டுக்-குள்ளேயே பொத்திப் பொத்திப் பாதுகாக்கிற பெண்களோட அழகு காணக் கிடைக்காததுடா.. எங்கேயும் வராத பெண்கள் திருவிழா சமயத்தில ஒட்டு மொத்தமா கோவிலுக்கு வந்து போவாங்க.. அவங்களப் பாக்கிற சான்ஸை மிஸ் பண்ணிட்டு ஹைதராபாத்தில என்னத்தை வெட்டி முறிச்சு என்னடா பிரயோசனம் கிடைக்கப் போகுது..?” என்று வெற்றி வேலிடம் சொல்வான்..
“ஆகமொத்தம்.. இங்கே அடைகாத்துக்கிட்டு இருக்கிற உன் மாமாவை உன் கொடி பறக்கிற கம்பெனிக்கும் கூப்பிட்டுக்கிட்டுப் போக மாட்ட.. நீயும் விருந்தாட இங்கே வராம இருக்கவும் மாட்ட.. கெட்டிக்காரண்டா நீ..”
“அது இப்பத்தான் உனக்குத் தெரிஞ்சதா..? அவரு எனக்கு மட்டும் மாமாவா..? உனக்கும்தான் மாமா.. ரெண்டு பேருக்குமே அவர் மூணுவிட்ட சொந்தம்தான்.. இப்படிப் பட்ட மாமாவுக்கு தண்டச் சம்பளம் கொடுக்க நீதான் லாயக்கு.. என்கிட்டேயெல்லாம் அவரோட எந்த ரைஸீம் குக் ஆகாது..”
அதற்கும் அலட்டிக் கொள்ளாத கிரணை வெற்றிவேல் என்னதான் செய்வான்..?
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.