Chapter 19

0Shares

என்னதான் கண்காணிப்பாய் வெற்றிவேல் தன் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு கண்காணித்தாலும்.. அந்த கண்காணிப்பு வளையங்களில் மாட்டிக் கொள்ளாமல் மிக எளிதாக தப்பி கீர்த்தனாவை அணுகி விடும் வித்தையை கற்று வைத்திருந்தான் கிரண்.. பொரும்பாலும் அந்தத் தருணங்கள் அவன் ரியாவுடன் வெளியே சுற்றி விட்டு வரும் தருணங்களாகவே அமைந்திருந்தான…

வெற்றிவேலுக்கு வெளியே கிளம்ப மனமிருக்காது தான்.. ருசிபார்க்கத் துடிக்கும் திருட்டுப் பூணையாக.. தெளிந்த பாலைப் போன்ற கீர்த்தனாவைச் சுற்றி வரும் கிரணின் நினைவில் அவன் வெளியே போவதை தவிர்க்க முணைவான்..

“கொஞ்சம் தலையை வலிக்கிறதைப் போல இருக்கு ரியா.. இன்னொரு நாள் போகலாமே..”

இப்படி ஒருநாள் தட்டிக் கழிக்கலாம்.. இரண்டு நாள்  தட்டிக் கழிக்கலாம்.. மூன்றாம் நாளும் தட்டிக் கழித்தால்..? ரியாவுக்கு சந்தேகம் வராதா..?

அவள் விழிகளில் யோசனையோடு வெற்றவேலை பார்த்து வைத்தாள்..

“வாட் ஹேப்பன் வெற்றி..? நம்ம மேரேஜில் உங்களுக்கு விருப்பம் தானே..?”

அவளின் நேரடியான கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று வெற்றிவேலுக்கு தலை வேதனையாக இருந்தது.. அவனே திருமணத்திற்கு சம்மதம் சொன்னது சரியா.. தவறா.. என்ற சஞ்சலத்தில் இருக்கிறான்.. இதில் இப்படியொரு கேள்வியை ரியா கேட்டு வைத்தால் அவன் என்ன பதிலைச் சொல்லுவான்..?

“உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது..?” கோபப் பட்டான்..

கோபம் சிலசமயங்களில் மனதை மறைக்கும் ஆயுதம்.. எதிராளியை பயமுறுத்தி பின்னடையச் செய்து தற்காத்துக் கொள்ளும் முயற்சி..

ரியா புத்திசாலி.. மனிதர்களை எடைபோடும் ஆற்றல் மிக்கவள்.. அவள் மனதுக்குள் மணியடித்தது.. வெற்றிவேலின் மனம் ஒரு நிலையாக இல்லாமல் கடிகாரத்தின் பெண்டுலம் போல இங்கும் அங்குமாக ஆடுவதை அவள் உணர்ந்தாள்..

‘இது கூடாதே..’ அவள் விழித்துக் கொண்டாள்..

வெற்றிவேலை அவளிடம் தக்க வைத்துக் கொள்ள.. அவனுடன் தனிமையில் இருக்கும் தருணங்களை அவள் அதிகப்படுத்தியாக வேண்டும்..

“சந்தேகம் வராம என்ன செய்யும் வெற்றி.. நம்ம மேரேஜை டிசைட் பண்ணி நம்ம இரண்டு பேமிலியிலயும் சொன்ன நாளில இருந்து நீங்க.. நீங்களாவே இல்லை..”

“அது உன் கற்பனை…”

“ஓகே.. அதை புரூவ் பண்ணுங்க..”

“எப்படி..?”

“என்கூட அவுட்டிங் வாங்க..”

“உனக்குத்தான் கோவிலும் பிடிக்காது.. அணைக் கட்டும் பிடிக்காது.. வேற எங்கே போகிறது..?”

“சினிமாவுக்குப் போகலாம் வாங்க.. ஏஸி தியேட்டரில உங்க ஊரின் சூட்டை மறந்து.. குளிர்ச்சியா படம் பார்த்துட்டு வரலாம்..”

“எங்க ஊர் சூடான ஊரா..?”

“நான் சொல்லலை.. இதை நீங்கதான் சொன்னீங்க..”

“குளிர்ச்சியா படம் பார்க்கனும்னா ரூமில இருக்கிற ஏஸியைப் போட்டுட்டு படம் பாரேன்..”

“ஓகே.. நீங்களும் நானும் மட்டும் தனியா ஏஸி ரூமில் படம் பார்க்கலாம் வாங்க..”

“இங்கேயா..?”

“ம்ம்ம்..”

“இது வீடு ரியா.. நமக்கு இன்னும் மேரேஜாகலை.. பார்க்கிறவங்க என்ன சொல்வாங்க..? இது சிவகாசிம்மா.. மும்பையில்லை..”

“தெரியுதில்ல.. அப்ப வெளியே கிளம்புங்க..”

மனதில்லாமல்தான் கிளம்பிப் போனான் வெற்றிவேல்.. அவன் மனமெல்லாம் கீர்த்தனாவிடமும்.. அவளைத் துரத்தும் கிரணிடமுமே இருந்தது.. ரியா சொன்ன எதுவும் அவன் காதுகளில் ஏறவில்லை..

“வெற்றி..” ரியா அவனை உலுக்கினாள்..

“எந்த உலகத்தில் இருக்கீங்க..?”

“ப்ச்.. ஏதோ யோசனையில் இருந்திட்டேன்.. அதுக்காக இப்படியா..?”

அதற்காகவே காத்திருந்த வெற்றிவேல் அவளுடன் சண்டைக்குப் போக.. அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள.. என்று இருவருமே படம் பார்க்காமல் பாதியிலேயே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..

வந்தவுடன் வெற்றிவேலின் கண்கள் கீர்த்தனாவைத் தேட.. ரியாவின் புருவங்கள் சுருங்கின.. அவள் முகத்தில் கோபம் படர்ந்தது.. வீட்டில் ஒருவரும் தட்டுப் படாமல் போக..

“கனகா.. அம்மா.. கீர்த்தனாவெல்லாம் எங்கே..?” என்று விசாரித்தான்..

‘கீர்த்தனா.?’ ரியா உதட்டைக் கடித்தாள்..

‘ஆனால்.. வீட்டு வேலையாளைப் போல இருப்பவளையா வெற்றிவேல் நினைப்பான்..?’

அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை..

“அம்மா.. மாலதியம்மா.. கீர்த்தனாம்மால்லாம் கோவிலுக்குப் போயிருக்காங்கய்யா..” என்றாள் கனகா..

“எந்தக் கோவிலுக்குப் போனாங்க..?”

“மாரியம்மன் கோவிலுக்குப் போயிட்டு… அப்படியே திருத்தங்கல்ல இருக்க நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரப் போறதா சொன்னாங்கய்யா..?”

“கோவிலுக்குத்தான் போயிருக்காங்களா..?”

அவன் கேட்ட விதத்தில் கடுப்பாகிப் போன ரியா..

“கூடப் போக முடியலைன்னு ரொம்ப வருத்தம் போல..” என்று முறைத்தாள்..

“வருத்தம்தான்.. என்ன செய்ய..? உனக்குத்தான் கோவிலைப் பிடிக்க மாட்டேங்குது.. உன்னைவிட்டுட்டு நான் மட்டும் எப்படிப் போறது..?”

“என்னவோ நீங்க தான் மும்பையில இருந்து வந்ததைப் போல இப்படி ஏக்கப் படறிங்க.. இந்த ஊர்க்காரர்தானே நீங்க.. எப்ப வேணும்னாலும் இந்தக் கோவில்களைப் பாத்துக்கலாம்தானே..?”

“எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத கோவில்கள்.. எங்க ஊர் கோவில்கள்.. உனக்கு இதைப் பற்றி என்ன தெரியும்..?”

“சொல்லுங்க.. தெரிஞ்சுக்க முடியுதான்னு பார்க்கிறேன்..”

“எங்க ஊர் மாரியம்மன் கோவில் பணக்காரக்களை கொண்ட கோவில்.. பத்ரகாளியம்மன் கோவிலில் கோபுரம் முழுதும் தங்கமா இருக்கிறதைப் போல.. மாரியம்மன் கோவிலிலயும் தங்கக் கோபுரம் இருக்கு.. அழகான சிலைகள்.. நவினமான பளபளப்பான கோவில்.. திருவிழாவில அக்னிச்சட்டி எடுப்பாங்க..”

“அக்னிச்சட்டியா..?”

“ம்ம்ம்.. பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில வர்ற அக்கினிச் சட்டிகளக் கொண்டு ஊரின் நலத்தை கணக்கிடுவோம்.. உனக்கு இதெல்லாம் புரியாது..”

“புரிய வைக்கத்தான் நீங்க இருக்கீங்களே..”

“புதுசா அறிமுகம் செய்கிற வெடிகள சின்னக் கண்மாய்.. பெரிய கண்மாய்களில வெடிச்சு அறிமுகம் செய்வோம்.. இது வெடிசெய்கிற ஊர்.. இந்த ஊரின் பத்ரகாளியம்மன் கோவில் பத்துநாள் திருவிழாவில.. ஒரு நாள் முழுக்க.. வெடி வெடிக்க ஒதுக்கி வைச்சுடுவோம்.. கோவில் காம்பவுண்டுக்குள்ள இத தனித்திருவிழாவா கொண்டாடுவோம்..”

பேச்சு வெடியைப் பற்றித் திரும்பியதில் ரியாவின் கோபம் கொஞ்சம் குறைந்தது.. அவள் வெடி செய்யும் முறைகளைப் பற்றி ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.. கீர்த்தனா கோவிலுக்குத்தான் போயிருக்கிறாள் என்ற நிம்மதியுடன் வெற்றிவேலும் உற்சாகமாக அதை விவரிக்க ஆரம்பித்தான்..

“பயர் ஒர்க்ஸ் எத்தனை பெரிய தொழில்ங்கிறதை அவங்ககிட்ட இருக்கிற ரூம்களை வைச்சுக் கண்டு பிடிக்சுரலாம்.. அதிக ரூம்கள் இருக்கிறவன் பெரிய பிஸினெஸ் மேன்.. ஒன்னு ரெண்டு ரூமில கம்பெனிய நடத்தறவன் சின்னதா தொழில்பண்றவன்.. “

“இண்ட்ரெஸ்டிங்..”

“மேசின்ல இருக்கிற பட்டாசுகளை டிப்போவில கொண்டு சேர்க்கிற வரைக்கும் ஒரே டென்சன்தான்..”

“மேசினா..? அப்படின்னா..?”

“மேசின் அப்படின்னா கொடவுன்.. டிப்போன்னா பட்டாசுக்கடை..”

“ஹௌ ஸ்வீட்..”

ரியா உதடுகளைக் குவித்த போது.. கீர்த்தனாவை மறந்து விட்டான் வெற்றிவேல்.. அவனுக்கு பிடித்த விதத்தில் பேசி.. அவனைத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தாள் ரியா..

அவளுக்கு இயல்பாகவே தொழில் சம்பந்தமான விவரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுண்டு.. புதிதான எந்தத் தொழிலையும் செய்முறை விளக்கத்துடன் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவாள்..

அந்த இயல்பு இப்போது அவளுக்கு கை கொடத்ததில் வெற்றிவேல் மற்றதை மறந்து அவளுடன் பேச ஆரம்பித்து விட்டான்..

அவர்கள் வீட்டின் முன்புறமாக.. தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்த வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள்.. வெற்றிவேலின் சேரை ஒட்டித் தனது ரேரைப் போட்டிருந்தாள் ரியா.. அவன் மேல் சரிந்த வண்ணம் அவள் விவரம் கேட்ட விதத்தில் வெற்றிவேலுக்கு உலகம் மறந்து கொண்டிருந்தது..

“பொதுவாக இந்த ஊரில பட்டாசுத் தொழில் செய்கிறவங்க.. அந்தத் தொழில் விரிவாகறப்ப வேற தொழில்களையும் சேர்த்து செய்ய ஆரம்பிச்சுருவாங்க..”

“ஏன்..?”

“அது அப்படித்தான்.. மற்ற தொழில்கள் தான வந்து ஒட்டிக்கும்.. பிரிண்டிங்.. குழாய் கம்பெனி.. கம்பி கம்பெனி.. இதெல்லாம் பட்டாசோட தொடர்புடைய தொழில்கள்.. இதைத் தள்ளி வைக்க முடியாது.. மொத்ததில கவனமா தொழில் செய்கிற யாரும் இந்த ஊரில் ஈஸியா கோடிஸ்வரங்களா ஆகிற முடியும்..”

“என்ன இருந்து என்ன பண்ண..? உங்க ஊர் ரிச்மேன்ஸ் யாரும் ஸ்டேட்டஸ் மெயிண்டெயின் பண்ண மாட்டேங்கிறாங்களே..” ரியா உதட்டைச் சுழித்தாள்..

“இது எளிமையான மக்கள் புழங்குகிற பூமி.. கோடிஸ்வரங்ககூட வேட்டியை மடிச்சுக்கட்டிக்கிட்டு டீக்கடையில டீ குடிப்பாங்க..”

“நல்ல வேளையா.. நீங்க அப்படியில்லை..”

வெற்றிவேலின் முகத்தின் அருகே முகம் வைத்து அவன் கன்னத்தோடு உராய்ந்து கொண்டிருந்த ரியாவின் இதழ்கள் அவனை முத்தமிடத் தூண்டி அழைத்தன.. அவனுக்குள் உணர்ச்சி பொங்கியது.. அவளது எதிர் பார்ப்பை அவள் விழிகள் உணர்த்த.. அவள் இதழோடு இதழ் பொருந்த விரும்பி அவன் நெருங்கிய போது கார் வரும் சத்தம் கேட்டது..

“கீர்த்தனா..” அவன் விலகினான்..

ரியாவின் முகத்தில் அதிர்ச்சி வந்தது.. வெற்றி வேலுக்கோ.. வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய பெண்களுடன் கூட இறங்கிய கிரணைக் கண்டதும் அதிர்ச்சி வந்தது..

‘இவனும் கூடப் போயிருந்தானா..?’

வெற்றிவேல் ரியாவை சுத்தமாக மறந்து விட்டு எழுந்து விட்டான்.. மறுநாள் காலையில் அவன் தோட்டத்துக்குப் போன போது அங்கே கிரணுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டு.. துள்ளலுடன் வந்து கொண்டிருந்தாள் கீர்த்தனா..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link