Chapter 21

0Shares

“ஏன்..? கீர்த்தனாகிட்ட வேலை சொன்னா என்ன தப்பு..? நான் இங்கே வந்த நாளில இருந்து என் ரூமை இவதான் கிளின் பண்றா.. என் துணிகளை இவதான் துவைச்சு அயர்ண் பண்ணிக் கொடுக்கிறா.. நான் புதுசா எதையும் சொல்லிரலையே..”

ரியாவின் வார்த்தைகளில் கீர்த்தனாவைக் காயப் படுத்தும் வேகம் இருந்தது.. இவள் வேலைக்காரிதானே.. புதிதாகவா இவளிடம் நான் வேலையைச் சொல்லி விட்டேன் என்ற கேலி இருந்தது..

அதிலிருந்த உண்மையில் கீர்த்தனா குன்றிப் போனாள்.. வெற்றிவேலோ பல்லைக் கடித்தான்..

“எவ்வளவு தைரியம் உனக்கு..? கொஞ்சமாவது ஒரு வீட்டுக்கு கெஸ்டா வந்திருக்கோமேங்கிற சென்ஸ் இருக்கா..? கீர்த்தனா எங்க வீட்டைச் சேர்ந்தவ.. என் அத்தை மகள்.. இவகிட்ட நீ வேலை வாங்கிட்டு அதை என்னிடமே தைரியமா சொல்கிறியா..?”

“வெற்றி..”

“ஷட் அப்.. உன்னைச் சொல்லனும் கீர்த்தனா.. உன்னை யார் இந்த வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யச் சொன்னது.. யூசுவலா இதையெல்லாம் கனகாதானே செய்யும்..?”

“இல்லை அத்தான்..” கீர்த்தனா மென்று விழுங்கினாள்..

அத்தான் என்ற அவளின் அழைப்பை ரியா கொஞ்சம்கூட விரும்பவில்லை.. அதன் மூலம் கீர்த்தனா வெற்றியை நெருங்குவதைப் போல அவளுக்குத் தோன்றியது.. அவள் ‘வெற்றி’ என்று பெயர் சொல்லி அழைக்க.. கீர்த்தனா மட்டும் ‘அத்தான்..’ உறவு கொண்டாடியதில் அவளுக்குள் கடுப்புக் கிளம்பியது..

“அத்தானா..? என்ன அத்தான்..? இந்த அடைமொழி இல்லாம சொல்ல வந்ததைச் சொல்ல உன்னால் முடியாதா..?” கீர்த்தனாவிடம் சண்டைக்கப் போனாள்..

“ஸ்டாப் இட் ரியா.. இது எங்க லாங்வேஜ்.. இதில உனக்கென்ன வந்தது.. கீர்த்தனா இன்னைக்கு நேற்று என்னை அத்தான்னு கூப்பிடலை.. அவ பிறந்ததில இருந்து அவளுக்கு நான் அத்தான்தான்..”

“வெற்றி.. என்னவோ இவள் மட்டும் உங்க உறவுங்கிறதைப் போலப் பேசறது சரியில்லை.. நானும் தான் உங்க அத்தை மகள்..”

“நீயும் கீர்த்தனாவும் ஒரே உறவு முறையில இருக்கிறவங்கங்கிறதை நீயே ஒப்புக்கிறயில்ல..? அப்ப ஈக்குவலாத்தானே பேசிப் பழகனும்.. அதை விட்டுட்டு என்னவோ நீ கீர்த்தனாவுக்கு ‘பாஸ்’ங்கிறதைப் போல கமாண்ட் பண்ற..? இப்ப கீர்த்தனாகிட்ட நீ சொன்ன வேலைகளை உன்னைச் செய்யச் சொல்லி அவ சொன்னால் உன் மனசு என்ன பாடுபடும்..? யோசி..”

“வாட்..?”

கடைசியில் அவளும் கீர்த்தனாவும் ஒன்றா..? இப்படி வருமென்று தெரிந்திருந்தால் அவள் கீர்த்தனாவுக்கு போட்டியாக ‘அத்தை மகள்’ என்ற உரிமைக்குரலை எழுப்பியிருக்கவே மாட்டாளே..

“வாட் மீன்ஸ் வாட்.. கீர்த்தனா.. இனிமேல் இதைப் போல யாருக்காவது நீ வேலை செய்தேன்னு எனக்குத் தெரிஞ்சதுன்னு வைய்யி.. உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்..”

“நானாப் போய் வேலை செய்யலை அத்தான்..”

“பின்னே..?”

“உங்க ரூமையும்.. தாத்தா ரூமையும் கிளின் பண்ணி ஒழுங்கு செய்துக்கிட்டு இருந்தேனா..? இவங்க ரூமையும் கிளின் பண்ணச் சொன்னாங்க.. கூடவே டிரெஸ்ஸையும் துவைச்சு அயர்ண் பண்ணித்தரச் சொல்லிட்டாங்க..”

மெல்லிய குரலில் கீர்த்தனா சொல்லச் சொல்ல வெற்றிவேலின் முகத்தில் கோபம் படற ஆரம்பித்தது.. அவன் ரியாவை முறைத்த முறைப்பில் அவளை பஸ்பமாக்கி விடும் உத்தேசம் இருந்தது..

“என் ரூமையும்.. தாத்தா ரூமையும் கிளின் பண்ணி ஒழுங்கு பண்ணினா.. அதை உன் ரூமிலயும் செய்யச் சொல்வியா..? இவளை யாருன்னு நினைச்ச..? தாத்தாவுக்கு மட்டும் இந்த விசயம் தெரிய வந்தா இந்த வீட்டை விட்டே வெளியே கிளம்பிருவார்.. நானும் தாத்தாவும்.. நீயும் ஒன்றா..?”

“வெற்றி..”

“பேசாதே.. எங்க ரூமை இவ கிளின் பண்றது.. அன்புக்காக.. பாசத்துக்காக.. எங்க மேல இருக்கிற அக்கறைக்காக.. அதைப் பத்தியெல்லாம் உனக்கு என்ன தெரியும்..? எங்க அம்மாகூட கீர்த்தனாகிட்ட இதையெல்லாம் செய்யச் சொன்னதில்ல.. நீ செய்யச் சொல்லியிருக்க…”

“எனக்குத் தெரியாது வெற்றி.. இந்த வீட்டிலே எதுக்கெடுத்தாலும் கீர்த்தனா.. கீர்த்தான்னு சொன்னாங்களா.. அதனால.. நானும் என் வேலைகளைச் செய்யச் சொல்லிச் சொல்லிட்டேன்..”

“எல்லா வேலைகளையும் பொறுப்பா செய்கிறவங்க பெயரைத்தான்.. எல்லா இடத்திலேnயும் சொல்வாங்க.. அதுக்காக.. அவங்களை வேலைக்காரங்க ரேன்ஜீக்கு நினைச்சிருவியா..? உன்னைப் போல பொறுப்பில்லாதவங்க பெயரை யாரும் சொல்ல மாட்டாங்க.. அதுக்கு நீ உயர்வுன்னு உன் மனசுக்குள்ள நினைப்பிருக்கா..”

அடிமேல் அடியாக விழுந்து வைத்ததில் ரியாவின் மனக்கோட்டை மண் கோட்டையாகிவிடும் போல இருந்தது.. 

“ஸே.. ஸாரி டு ஹெர்..”

வெற்றிவேல் கீர்த்தனாவின் பக்கமாக கைகாட்டிய போது ரியா அதிர்ந்து விட்டாள்.. அவளுடைய உயரத்துக்கு கீர்த்தனாவிடம் போய் அவள் மன்னிப்புக் கேட்க வேண்டுமா..?

“லுக் ரியா.. நீ பேசியது தப்பு.. என் அத்தை மகளிடம் வேலை வாங்கியது அதைவிடத் தப்பு.. இது இரண்டுக்காகவும் நீ கீர்த்தனாகிட்ட மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகனும்..”

“நான் வேண்டும்ன்னா இனிமே இந்த வேலைகளை கீர்த்தனாகிட்டச் சொல்லலை.. கனகாகிட்டச் சொல்லிக்கறேன்..”

“நீ சொன்னாலும் இவ செய்ய மாட்டா.. என்ன கீர்த்தனா..? செய்வ..?”

வெற்றிவேலின் அதட்டலில் மிரண்டு போன கீர்த்தனா..

“செய்ய மாட்டேன் அத்தான்..” என்று அவசரமாகச் சொன்னாள்..

“அஃது.. அந்த பயம் இருக்கட்டும்.. மீறி ரியா சொன்னான்னு ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டேன்னு வை.. கன்னம் பழுத்திரும்..”

“இல்லை அத்தான்..”

கீர்த்தனாவின் கை அனிச்சையாக அவளின் கன்னம் தடவியதில் ரியா துணுக்குற்றாள்.. ஏற்கனெவே கீர்த்தனாவின் கன்னத்தை வெற்றிவேல் பழுக்க வைத்து விட்டானா..?

அடிக்கிற கைதானே அணைக்கும்..?

அவள் சஞ்சலத்துடன் வெற்றி வேலையும்.. கீர்த்தனாவையும் பார்த்துக் கொண்டிருக்க.. கையில் ஒரு ரோஜாப் பூவோடும்.. வாயில் துள்ளலான பாட்டோடும் தோட்டத்திலிருந்து வெளிப் பட்டான் கரண்..

“ஆடி போனா ஆவணி..

அவ ஆளை மயக்கும் தாவணி..

கண்ணாலே பாத்தாப் போதும்

நான்தான் கலைமாமணி..”

விட்டால் தோட்டத்திலே மேடையமைத்து கானாப் பாட்டுக் கச்சேரி நடத்தி விடுபவனைப் போல உரத்த குரலுடன் பாடியபடி வந்தவன் கீர்த்தனாவைக் கண்டதும் சொக்கிப் போன பார்வையை பார்த்தான்..

அந்தச் சொக்கலில் வெற்றிவேலுக்குள் வெறி கிளம்பியது.. பாந்தமாக பாவாடை தாவணியிலிருந்த கீர்த்தனாவை முறைத்தான்..

“உன்கிட்ட சுடிதார் இல்லையா..?”

“இருக்கே அத்தான்..”

“அப்புறம் எதுக்காக பாவாடை தாவணியில பிலிம் காட்டற..?”

“பிலிமா..?”

கீர்த்தனா புரியாமல் விழிக்க..

“அவன் என் பாட்டைச் சொல்கிறான் கீர்த்தி..” என்று அவளைத் தடுத்தாட் கொண்டான் கிரண்..

“கீர்த்தி..?” வெற்றிவேல் ரௌத்ர மூர்த்தியானான்..

“யெஸ்.. கீர்த்தி.. கீர்த்தனாங்கிற பெயரைச் சுருக்கி கீர்த்தின்னு கூப்பிடறேன்.. அதில உனக்கென்ன பிரச்னை..?”

“என் பிரச்னை இருக்கட்டும்.. இதுக்கு கீர்த்தனா எந்தப் பிரச்னையையும் கிளப்பலையா..?”

வெற்றிவேல் பார்த்த பார்வையில்..

“நான் அப்ஜெக்ட் பண்ணினேன் அத்தான்..” என்று அலறினாள் கீர்த்தனா..

“என்னன்னு அப்ஜெக்ட் பண்ணின..?”

“கீர்த்தனான்னு என் அப்பாவும்.. அம்மாவும் ஆசையா பெயர் வைச்சிருக்காங்க.. எங்க அம்மா பேரு ரத்னா.. என் பேருகீர்த்தனா.. அதனால என் அப்பாவுக்கு இந்தப் பெயரை ரொம்பப் பிடிக்கும்..”

“ம்ம்ம்..? அப்புறம்..?”

“தாத்தா.. பூஜை புனங்காரம்ன்னு இருக்கிறவரு.. கீர்த்தனைன்னா பிரியமா பாடச் சொல்லிக் கேட்பாரு.. கீர்த்தனாங்கிற மீனிங் வர்றதினால தாத்தாவுக்கும் கீர்த்தனாங்கிற பெயரைப் பிடிக்கும்..”

“தூள்.. வெளுத்து வாங்கற.. அப்புறம்..?”

“அதனால என்னை கீர்த்தனான்னே கூப்பிடுங்கன்னு சொன்னேன் அத்தான்..”

“இதான் நீ அப்ஜெக்ட் பண்ணின லட்சணமா..?”

“ஆமாம் அத்தான்..”

“ஓடியே போயிரு.. இங்கே நின்ன.. உன்னை ஒருவழி பண்ணிருவேன்..”

அதற்குப் பின்னாலும் அங்கே நிற்க கீர்த்தனாவுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..? அவள் ஓடியே போய் விட்டாள்..

“ஸ்ஸ்ஸ்.. ஏண்டா கீர்த்தியை துரத்தி விட்டுட்ட..?” கையில் பூவோடு நின்றிருந்த கிரண்.. அவள் போன திசையை ஏக்கமாகப் பார்த்தபடி கேட்டான்..

“கீர்த்தி.. இல்ல.. கீர்த்தனா..”

“என்னவோ ஒன்னு.. பெயரில என்னடா இருக்கு..?”

கிரண் பார்த்த பார்வையில் வேறு விவரங்கள் இருக்க.. வெற்றிவேல் உஷ்ணமானான்..

“என்னடா வெற்றி.. இவ்வளவு சூடா இருக்க..? ஏன் ரியா.. பயபுள்ளையைக் கூப்பிட்டுக்கிட்டு ஐஸ்கிரிம் பார்லர் பக்கம் போயிட்டு வரவேண்டியது தானே..?” கிரண் ரியாவுக்கு யோசனை சொன்னான்..

“இப்ப அவர் வரமாட்டார் கிரண்..” என்றாள் ரியா..

“ஏன்..?”

“என்மேல் கோபமாம்..”

“அதுதான் ஏன்..?”

“இவரோட அத்தை பெண்கிட்ட வேலை வாங்கிட்டேனாம்.. நீங்களே சொல்லுங்க கிரண்.. எல்லோரும் வேலை வாங்கினாங்க.. நானும் வேலை வாங்கினேன்.. அது ஒரு குற்றமா கிரண்..?”

“குற்றம்தான்.. அது எப்படி கீர்த்தனா மாதிரி அழகானபெண்கிட்ட நீ வேலை வாங்கலாம்.. அவ யார்ன்னு தெரியுமா..?”

“அதை ஏற்கனெவே வெற்றி சொல்லிட்டாரு.. நீங்களும் சொல்லனும்கிற அவசியமில்லை..” ரியா கோபத்துடன் போய் விட்டாள்..

தனித்து நின்ற வெற்றிவேலும்.. கிரணும்.. ஒருவரையொருவர்.. ஆடுகளத்தில் நின்று கொண்டிருக்கும் சண்டைச் சேவல்களைப் போல முறைத்துக் கொண்டார்கள்..

“அது என்ன கீர்த்தியை சுடிதார் போடச் சொல்ற.. அப்ப மட்டும் பாட்டுப் பாட மாட்டேனா..? சுடிதார் 

போட்ட சுந்தரின்னு ஒருபாட்டு இருக்கு தெரியுமா..? உனக்கென்னடா பிரச்னை..? ரியாவை நான் சைட் அடிச்சா ஏன்னு கேளு.. கீர்த்தனாவை சைட் அடிச்சா நீ ஏன் குறுக்கே வர்ற..?” கிரணின் கேள்விக்கு வெற்றியால் பதில் சொல்ல முடியவில்லை..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link