Chapter 22
அது பதில் சொல்ல முடியாத கேள்வியாக மலை போல வளர்ந்து வெற்றிவேலை நசுக்க வந்தது.. ஆக்டோபஸ் போல ஆயிரம் கைகளுடன் அவனை பிய்த்துத் தின்றது.. வெற்றிவேல் உறக்கமின்றித் தவித்தான்.. ரியாவைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுக்கும் வரை நிம்மதியாக அவன் உறங்கி எழுந்தான் என்பது அவன் நினைவுக்கு வந்து துன்புறுத்தியது.. கண்ணெதிரே இருந்த கீர்த்தனாவை உதறி விலகுவதில் அவனுக்கு இத்தனை மன அழுத்தம் ஏற்படக் கூடுமானால்.. அதற்குக் காரணமானது எது..?
வீட்டில் திருவிழாவுக்கான கோலாகலங்கள் ஆரம்பமாகி விட்டன.. மங்கள பவனத்தில் நெருங்கிய உறவினார்கள் வந்து இறங்க ஆரம்பித்திருந்தார்கள்.. மும்பையிலிருந்து ரியாவின் அண்ணன் நிஷாந்த்.. அவன் மனைவி ஷோபா.. ரியாவின் அப்பா சுந்தர்.. அம்மா கல்பனா என்று மொத்தக் குடும்பமும் வந்து இறங்கியிருந்தது.. அவர்களின் பகட்டான ஆடம்பரத் தோற்றத்தில் மங்கள பவனம் அயர்ந்து நின்றது..
கிரணின் அப்பா கருணாகரனும்.. அம்மா சபிதாவும் வந்திருந்ததில் விமலாவுக்கு ஆச்சரியம் உண்டானது.. அதுவரை அவர்கள் சிவகாசிக்கு வந்ததில்லை.. கிரண் மட்டும்தான் வருடாவருடம் நடக்கும் பத்ரகாளியம்மன் திருவிழாவுக்கு வந்து விட்டுப் போவான்.. அவனும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போய் விட்டதால் மூன்று வருடங்களாக சிவகாசியின் பக்கம் தலை வைத்துப் படுக்கவில்லை.. அந்த இடைவெளியில் கீர்த்தனா மங்கள பவனத்தில் அடைக்கலம் புகுந்து விட்டாள் என்பதைச் சொல்லிச் சொல்லி ஆற்றுப் போனான் கிரண்..
“எனக்குத் தெரியாமப் போச்சேடா.. இப்படியொரு பிகரை மிஸ் பண்ணியா நான் பாரினில் படிக்கனும்..?”
தினந்தோறும் இந்தக் கேள்வியை முன் வைத்து வெற்றிவேலுக்கு கொலைவெறியை வர வைத்துக் கொண்டிருந்தான் கிரண்..
‘எதுக்காக இவனோட அப்பாம்மாவை வர வைச்சிருக்கான்..?’ வெற்றிவேலின் மனதில் சந்தேகம் முளைத்தது..
அதற்கு ஏற்றாற்போல.. அவர்கள் வந்தவுடன் கீர்த்தனாவை அழைத்து அவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான் கிரண்.. சவிதா பாசத்துடன் கீர்த்தனாவின் கன்னம் தட்டினாள்.. கருணாகரனோ அவள் தலைமீது கை வைத்து ஆசிர்வாதமே செய்தார்..
‘தாங்க முடியலைடா சாமி..’
வெற்றிவேலுக்கு தலைமுடியை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. இப்போது கிரணைப் பெற்றவர்கள் மங்கள பவனத்திற்கு வர வேண்டிய அவசியமென்ன என்று அவன் விமலாவிடம் கோபப் பட்டபோது..
“என்ன வெற்றி இது..? சவிதா என்னோட ஒன்று விட்ட அக்கா..” என்று முகம் சுளித்தாள்..
“இப்படிச் சொல்லிச் சொல்லியே வீடு பூரா கும்பலை நிரப்பி வைச்சிருக்கீங்க.. உங்க ஆறுவிட்ட அக்கா.. ஏழுவிட்ட அண்ணன்.. போதாக்குறைக்கு.. உங்க ஏழு விட்ட அண்ணியோட எட்டு விட்ட அக்கான்னு வீடு பூரா கும்பல்தான்.. ஏம்மா இப்படியிருக்கீங்க..?”
வெற்றிவேல் கோபப் பட்டதை அந்தப் பக்கமாக வந்த கல்பனா கேட்டு விட்டாள்.. சற்றுப் பொறுத்து வந்த ரியா வெற்றிவேலை உலுக்கு.. உலுக்கென்று உலுக்கி ஒரு வழி பண்ணி விட்டாள்..
“மம்மிக்கு டவுட்.. நீங்க என்மேல அன்பா இல்லைன்னு அவங்க நினைக்கிறாங்க.. எனக்கும் அதே டவுட்தான்..” என்று விமலாவின் முன்னால் அவள் சொல்லி வைக்க விமலா அலறி விட்டாள்..
“வெற்றி.. நீ கொஞ்ச நாளைக்கு வாயை மூடிக்கிட்டு இருந்தா தேவலாம்..”
“என்னையா சொல்கிறிங்க..?”
“உன்னைத்தான் சொல்கிறேன்.. கிரணோட அப்பாம்மா வந்தா உனக்கென்னடா பிரச்னை..? கிரண் மனசில என்னவோ இருக்கு.. அவன் அவங்களை வரச் சொல்லியிருக்கான்..”
‘நினைச்சேன்..’ வெற்றிவேலுக்குள் பரபரப்ப வந்தது.
“அவன் மனசில என்ன கர்மம்மா இருக்கப் போகுது..?”
“கீர்த்தனாமேல அவனுக்கு நோக்கம் இருக்கிறதைப் போல என் மனசுக்குப் படுது.. கீர்த்தனாவோட தகுதிக்கு இதையெல்லாம் அவ கனவில கூட நினைச்சுப் பார்க்க முடியாது.. நம்ம நிழலில அண்டியிருந்ததினால இப்படியொரு யோகம் அவளுக்கு அடிச்சிருக்கு.. இதைத்தாண்டா வெற்றி.. பூவோட சேர்ந்த நாரும் மணம் பெறும்ன்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க.. பாரேன்.. நம்ம வீட்டிலே வேலைக்காரி போல இருந்த பெண்ணுக்கு கோடிஸ்வர வீட்டில மாப்பிள்ளை அமையும் போல இருக்கு..”
ரியாவின் உதடுகளில் ஏளனமும்.. இகழ்ச்சியும் கலந்த புன்னகை நெளிந்தது… அவள் விழிகள்.. ‘நான் கீர்த்தனாவை வேலைக்காரின்னு சொன்னதுக்கு ஸாரி கேட்கச் சொன்னியே.. இப்ப உன் அம்மாவே அந்தப் பெண்ணை வேலைக்காரி போலன்னு சொல்கிறாங்களே. இதுக்கு என்ன சொல்கிற..?’ என்று கேட்டன..
வெற்றிவேலுக்கு அவையெல்லாம் உறைக்க வில்லை.. அவன் மனதில் நின்றதெல்லாம் கிரண் கீர்த்தனாவைப் பெண் கேட்க அவன் பெற்றோரையே வரவழைத்து விட்டான் என்பதுதான்..
எந்த ஒரு பொருளுமே கைக்குள் இருக்கும் வரை அதன் மதிப்பு நமக்குத் தெரியாது.. அதுவே நம் கையை விட்டுப் போகப் போகிறது என்றால் நம் உயிரே துடித்து விடும்.. அதற்கான மதிப்பை அப்போதுதான் நாம் உணர்வோம்..
“திருவிழா முடிஞ்சதும்.. உனக்கும் ரியாவுக்கும் இங்கேயே நிச்சயதார்த்தத்தை முடிச்சுடலாம்ன்னு பார்க்கிறோம்.. இதுக்குன்னு மும்பைக்கு நம்ம சொந்த பந்தம் அத்தனையையும் அழைச்சுக்கிட்டுப் போக முடியுமா..? அதுக்காக அவங்களை விட்டுட்டுப் போனாலும் சும்மாயிருப்பாங்களா..? அதனால ரியாவோட அம்மாவும்.. அப்பாவும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கிட்டாங்க.. எங்க மாப்பிள்ளை மும்பைக்கு வர்றப்ப தனியா ஒரு பார்ட்டிய அரேன்ஜ் பண்ணி அங்க இருக்கிறவங்களுக்குச் சொல்லிக்கிறோம்ன்னு சொல்லிட்டாங்க..”
விமலா பெருமையுடன் பேசியபடி ரியாவை பார்த்தாள்.. அவள் விழிகளில் வருங்கால மருமகள் என்ற வாத்சல்யம் தொனித்தது.. ரியா மரியாதைக்காக ஒரு சிரிப்பை உதிர்த்தபடியே அடிக்கண்ணால் வெற்றிவேலை பார்த்தாள்.. அவன் மனதில் இந்த விவரங்கள் ஏறியதைப் போல அவளுக்குத் தெரியவில்லை..
“கல்யாணத்திலும் அப்படித்தான்.. மாப்பிள்ளை வீட்டில்தான் கல்யாணம்ன்னு நாம சொன்னதும் சரின்னு சொல்லிட்டாங்க.. முக்கியமான நெருங்கிய சொந்தக் காரங்களை மட்டும் கல்யாணத்துக்கு அழைச்சாப் போதும்.. மத்தவங்களுக்கு மும்பையில் பெரிசா ரிசப்சன் கொடுத்திரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்காங்க..”
எல்லா முடிவுகளையும் எடுத்தாகி விட்டதா..? அவனுக்கு சிறை பட்டதைப் போல இருந்தது.. அவன் சொன்ன பின்புதானே இந்த ஏற்பாடுகள் எல்லாம் ஆரம்பித்தன என்ற கேள்விக்கு அவனிடம் விடை இல்லை.. நெருங்கி வரும் திருமணத்தில் அவனுக்கு மூச்சு முட்டியது.. விலகிப் போகும் கீர்த்தனாவின் பின்னால் அவன் மனம் சொல்லத் துடித்தது..
ஏதோ வேலையாக விமலா எழுந்து போய் விட்டாள்.. ரியாவும் அவனும் தனித்து விடப் பட்டனர்.. அதற்காகவே விமலா எழுந்து போயிருப்பாளோ என்று வெற்றிவேலின் மனதில் சந்தேகம் தோன்றியது.. ரியா அதை எதையும் யோசிக்கமல்.. அவனை கூர்ந்து பார்த்து..
“வாட்ஸ் யுவர் பிராப்ளம் வெற்றி..?” என்று கேட்டாள்..
“ப்ம்ச்ச்..” அவன் எழுந்து போய் விட்டான்..
ரியாவுக்கு கன்னத்தில் அறை வாங்கியதைப் போல இருந்தது.. அவளுடனான தனிமையை அவன் தவிர்த்ததில் அவளின் தன்மானம் பாதிக்கப் பட்டது.. கடந்த சிலநாள்களாக வெற்றிவேல் அதைத்தான் செய்து வருகிறான் என்பதில் அவள் உதட்டைக் கடித்தபடி வெகுநேரம் யோசனையாக அமர்ந்திருந்தாள்..
“ஏன் தனியா உட்கார்ந்திருக்க ரியா..?” நிஷாந்த் அங்கே வந்தான்..
“நத்திங்..” ரியா நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டாள்..
“இப்பவே நெற்றியை ஓட்டை போட்டா எப்படி..? இன்னும் நிறைய இருக்கு..” என்றான் நிஷாந்த்..
ரியா புரியாமல் தமையனைப் பார்த்தாள்.. அவன் பார்வை அவன் தங்கையைத் துளைத்தது..
“வாட்’ஸ் ராங் வித் யு ரியா.. இந்த மேரேஜில் நீ சந்தோசப் படுவேன்னு எனக்குத் தோணலை.. வெற்றியையும் சேர்த்துத்தான் சொல்றேன்..”
“அண்ணா..”
“உன் முகத்தில இழுத்துப் பிடிக்கிற முனைப்புத் தெரியுது.. வெற்றியின் முகத்தில் தப்பிக்க நினைக்கிற நினைப்புத் தெரியுது.. என்ன இதெல்லாம்..?”
நிஷாந்த் மிகச் சரியாக அவர்கள் இருவரையும் எடை போட்டிருக்கிறான் என்பதில் திகைத்துப் போனாள் ரியா..
“நீ யார் ரியா..? உன் லெவல் என்ன..? மும்பையில உன்னிடம் எத்தனை பேர் புரபோஸ் பண்ணினாங்க..? அவங்களை திரும்பிக்கூடப் பார்க்காம சிவகாசிக்கு வந்து இந்த வெற்றி திரும்பிப் பார்ப்பானான்னு காத்துக்கிட்டு இருக்க.. அப்படியென்ன இவன் ஸ்பெசல்…?”
ரியாவுக்கே தெரியவில்லை.. ஆனால் நிஷாந்துக்கு அது தெரிந்திருந்தது..
“எதனாலன்னு நான் சொல்லட்டுமா..? மத்தவங்க உன்னைத் திரும்பிப் பார்த்தாங்க.. உன் பின்னாலே வந்தாங்க.. உன் முன்னால மண்டி போட்டாங்க.. அதனாலேயே உனக்கு அவங்க மேல இண்ட்ரெஸ்ட் இல்லாம போயிருச்சு.. வெற்றி அப்படியில்ல.. உன்னைத் திரும்பிப் பார்க்கலை.. இவன் இருக்கிற இடத்துக்கு உன்னை வரவைச்சிருக்கான்.. மேரேஜ் பிக்ஸ் ஆகிற அளவுக்கு பேச்சு வந்த பின்னாலும் இன்னும் உன்னை மைண்ட் பண்ணி உட்கார்ந்து பேச மாட்டேங்கிறான்.. இதுதானே உன்னை இம்ப்ரெஸ் பண்ணுது..?”
ரியா பதில் சொல்லவில்லை.. மனதின் புழுக்கம் தாளாமல்.. கையில் கிடைத்தை தூக்கி எறிந்தாள்.. அதை கேட்ச் பிடித்து தடுத்தாட் கொண்டான் நிஷாந்த்.. பிடித்ததை அவள் முன்னால் வைத்தவன்..
“இது நம்ம வீடில்லை ரியா.. கண்ட்ரோல் யுவர் ஷெல்ப்..” என்றான்..
“கொஞ்ச நேரம் என்னைத் தனியா விடு அண்ணா..” ரியா தலையைப் பிடித்துக் கொண்டாள்..
“யோசி ரியா.. இப்பவும் காலம் கடந்துறலை.. நல்லா யோசி.. உனக்கும் வெற்றிக்கும் சரிப்படுமான்னு யோசி.. உன்னைவிட அவன் ஆயிரம் மடங்கு ஹெட் வெயிட் பிடிச்சவன்.. நீ மும்பை கல்ச்சருக்குப் பழகிப் போனவ.. சிவகாசியில இருந்துருவியா.. உன் ஸ்டைலை சிவகாசி ஏத்துக்குமான்னு யோசி.. இத்தனைக்கும் மேலா.. நம்ம கம்பெனிகளில நீயும் ஷேர் ஹோல்டர்.. உன் அடையாளம் அங்கேயிருக்கு.. அதை அந்தரத்தில விட்டுவிட்டு.. வெற்றியின் வொய்ப்ங்கிற அடையாளம் மட்டும் போதும்ன்னு உன்னால வாழ்ந்து விட முடியுமா..? அதையும் யோசி.. வெற்றி அவனோட ஐடெண்டியை விட்டுவிட்டு உன் பின்னாலே மும்பைக்கு வரப் போறதில்லை..
உன் ஐடெண்டி என்னவாகும் ரியா..?”
தங்கையை தனிமையில் விட்டு விட்டு நிஷாந்த் வெளியேறினான்.. யோசனையுடன் மாடியேறப் போனவன் நின்றான்.. அங்கே.. சமையலறையில் கீர்த்தனாவிடம் பேசிக் கொண்டிருந்தான் வெற்றிவேல்.. அவளிடம் பேசும் போது அவன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் நிஷாந்தின் மனம் துணுக்குற்றது..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.