Chapter 05
“நினைத்து… நினைத்துப் பேச உங்களால் முடியும்.. எனக்கு அது தெரியாது…” அவள் கடலைப் பார்த்து கொண்டே பேசினாள்.
“இப்ப நினைத்து.. நினைத்து.. நான் என்னத்தை பேசினேன்…?”
“நேரமாச்சு.. போகலாமுன்னு நீங்கதானே சொன்னீங்க…?”
“நேரமாகலை.. இரு.. போகலாமுன்னும் நான்தானே சொல்கிறேன்..”
“ஸோ.. நீங்க இருன்னு சொன்னால் இருக்கணும்.. போன்னு சொன்னால் போயிடணும்.. ஏன்னா.. நான் உங்களைக் காதலிச்சுத் தொலைத்திருக்கேனில்ல.. அதனால்.. உங்களுக்கு நான் கிள்ளுக்கீரையாகி விட்டேன்..”
“நீயாய் எதையாவது பேசிவைக்காதே.. மனுசன் ‘மூடு’ தெரியாமல் பேசி வைக்கிறடி..”
“ம்ம்.. எனக்கும் அது தெரியுது.. நான் உங்களைக் கேள்வி கேட்டால் உங்களுக்கு நேரமாகி விடும்.. வேலை இருக்கிறது நினைவுக்கு வந்து விடும்.. வாட்சைப் பார்ப்பீங்க.. அதுவே நான் கொஞ்சலாய் பேசினால்.. உங்களுக்கு வேலையே இருக்காது.. நேரமும் ஆகாது.. வாட்சை மறந்து விடுவீங்க… அப்படித்தானே…”
அவள் சொன்னது ஓரளவுக்கு உண்மை என்பதால் முகிலன் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினான்.
“ஏண்டி இப்படி படுத்தறே…?”
அழாத குறையாய் கேட்டவனை ஆழமாய் பார்த்தாள் அவள்.. பின்பு நிச்சலனமான முகத்துடன் கூறினாள்..
“இல்லை.. இனிமேல் படுத்தவில்லை…”
‘அப்பாடி…’ நிம்மதியாய் உணர்ந்த முகிலன்.. அடுத்து அவள் பேசிய வார்த்தைகளால் திகிலடைந்து விட்டான்.
“உங்களுடன் பேசினால்தானே வம்பு.. இனிமேல் பேசவில்லை…”
“அடிப்பாவி.. எதைச்சொன்னால்.. எதைச் சொல்கிற..? ஆ.. ஊன்னா.. ‘டூ’ விடுவதிலேயே குறியாய் இருக்கறியே.. இது சரியில்லை மிருணா…”
“எனக்கு இதுதான் சரி…”
அவள் மலையேறி விட்டாள்.. அவன் கூப்பிடக் கூப்பிடக் காது கேட்காதவளைப் போல விரைந்து.. ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்..
‘ராத்திரி நேரத்தில் தனியாய் ஆட்டோவில் போகிறாளே..’
அவன் மனம் பதைக்க.. ஆட்டோவை பின் தொடர்ந்தான்.. அவள் வீட்டு வாசலில் இறங்கி.. பத்திரமாக போய் விட்டதை உறுதி செய்து கொண்ட பின் தான் காரை வீட்டுக்கு விட்டான்.
அடுத்து வந்த நாள்களில் மிருணாளினி அவனைத் தவிர்த்தாள். இரண்டு நாள்களுக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை.. அவளிடம் போனில் பேச முயன்றாள்.. அவள் பேசவேயில்லை…
‘வழக்கமான இடத்திற்கு வா…’ என்று செய்தி அனுப்பினான்.. பலனில்லை..
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு.. அலுவலகத்தில் அவளை அழைத்து பேச முயன்றான்…
“நீ பிடிவாதத்துக்கு பிறந்து தொலைச்சிருக்கடி.. உன்னோடு மல்லுக்கட்டி.. மல்லுக்கட்டி என் ஆவிதான் குறையுது…”
அந்த வார்த்தைகளைக் கேட்ட மிருணாளினி துணுக்குற்றவளாய் நிமிர்ந்தாள்.
“அப்படியெல்லாம் பேசக்கூடாது.. நீங்க தீர்க்காயுசா இருக்கணும்…”
“எதுக்கு.. உன்கூட இப்படிப் போராடுகிறதக்கா…?”
“நீங்க மட்டும் அப்படிப் பேசலாமா…?”
“ஓ.. கே.. ஸாரி.. அப்புறம்..?”
இப்படிக் கேட்கிறவனிடம் என்ன சொல்வது…?
அவள் விழியுர்த்தி அவன் முகம் பார்த்தாள். அவளது பார்வைக்காக காத்திருந்தவனின் கண்கள் மின்னியதைப் கண்டதும் அவள் மனம் நெகிழ்ந்து விட்டது.
‘நான் ரொம்பத்தான் முறைத்து விட்டேன் போல…’
“ஸாரி…” என்று தழுதழுத்தாள்…
“நான் உன்கிட்ட ‘ஸாரி சொல்லு’ன்னு கேட்டேனா..?” அவன் மென்மையாக வினவினான்…
“கேட்கலைதான்.. ஆனாலும் ஸாரி..”
“எதுக்கு…?”
“நான் உங்களைக் கஷ்டப்படுத்தி விட்டதுக்கு…”
“இன்னைக்குத்தான் புதிதாய் என் மனதை கஷ்டப்படுத்துகிறாயா..?”
அவள் குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்து கொள்ள..
“வேண்டாம்… மிருணா…” என்றான் முகிலன்..
அவள் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இது ஆபீஸ்.. இதோடு போதும்.. ஈவினிங் பேசிக்கலாம்.. வருவேயில்ல…?”
அவள் யோசனையாய் அவனைப் பார்க்க.. அவன் நெற்றி சுருங்கினான்…
“இன்னும் என்ன யோசனை…? இன்னைக்கு எவ வருவான்னு யோசிக்கிறயா…?”
“அதை நீங்க இல்ல யோசிக்கணும்.. என் யோசனையே வேற…”
“என்னது…?”
“இன்னைக்கு ஈவினிங் கருப்பையா சார்.. ரிட்டயர் ஆகிறார்.. பார்ட்டி இருக்கே.. நாம் மீட் பண்ண முடியுமா..?”
“ஆமாமில்லை.. அதை மறந்தே போயிட்டேனே…”
“அதானே.. நமக்குத்தான் வேறு நினைப்பிருக்கே…”
மிருணாளினி அவனைச் சீண்ட.. அவன் அவள் கைபிடித்து நிறுத்தினான்…
“என் மனது ஒன்றுதான்…
உன் மீது ஞாபகம்…
வான் நிலவு ஒன்றுதான்..
வான் மீது சத்தியம்…”
அவன் பாட.. அவளுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த கோபமும் காற்றாகப் பறந்து விட்டது.
“ஸ்ஸ்… இது ஆபீஸ்…”
கையை உறுவிக் கொண்டு.. வெளியேறப் போனவள்.. கதவைத் திறக்குமுன்.. அவனைக் காதலாய் ஒரு பார்வை பார்த்து வைக்க.. அவனுக்கு ‘ஜிவ்’வென்று ஆகிப்போனது…
“ஏய்ய்… மிருணா…” அவன் எழுந்தே விட்டான்…
“ஹலோ.. பெர்ஸனல் மேனேஜர் சார்.. சீட்டிலேயே அடங்கி உட்காருங்க…”
“இப்படிப் பார்வையிலேயே மயக்கினா.. சீட்டில் எப்படி உட்கார்ந்து வேலை செய்யறது…?”
“நீங்க பாட்டிலேயே மயக்கினா.. நானும் என்ன செய்கிறது..?”
“ஏய்ய்.. நில்லு…”
அவன் அருகில் வருமுன் அவள் சிட்டாகப் பறந்து விட்டாள்.. அவளைப் பற்றிய இனிமையான நினைவுகளுடன் சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒருமுறை சுற்றினான் முகிலன்…
‘இவள் நிலவின் குளுமையும்…
சூரியனின் வெம்மையும்…
தன்னகத்தே கொண்டவள்…’
அவன் மனம் கவிதை சொன்னது.. அவளைவிட அழகான பெண்கள் பலரை அவன் பார்த்திருக்கிறான்.. பேசிப் பழகியிருக்கிறான்…
“எதுவரை பழகியிருக்கீங்க…?”
மிருணாளினி அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பாள்.. வேறு பெண்களைப் பற்றி முகிலன் பேசினால் அவளுக்கு பொறுக்காது..
ஆனால்.. அவளது கேள்வியில் உண்மையிருந்தது.. சில பெண்களிடம் முகிலனின் பழக்கம் வரையறை தாண்டிப் போன நிகழ்வுகளும் அவன் வாழ்க்கையிலுண்டு.. அதைச் சொன்னால் மிருணாளினி தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் பேச்சை மாற்றி விடுவான்..
அவன் பெண்களை அறியாதவன் அல்ல… ஆனால்.. மிருணாளினியைப் போன்ற ஒரு பொண்ணை அறிந்தவனும் அல்ல…
அவளிடம் உண்மை இருந்தது.. முழுமை இருந்தது.. தீவிரம் இருந்தது.. ஏதோ ஒரு விதத்தில் அவள் முகிலனை ஆட்கொண்டாள்.. முகிலனால் அவளை விட முடியாமல் போனது…
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.