Chapter 06
விட்டால் ஆபீஸ் வாசலில் மத்தாப்பு கொளுத்தி கொண்டாடி விடுவார்கள் போல…
அவ்வளவு உற்சாகம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது – அந்த ரிட்டயர்மெண்ட் பார்ட்டியில்..
“ஏய்ய்.. ஜஸ்கிரிம் சாப்பிடுங்கடி…”
“புதுசா வேற சில்லுன்னு உள்ளே இறக்கணுமா…?”
“என்னடி இது.. இவ இதுக்கு முன்னால எதை உள்ளே இறக்கினா…?”
ஜென்ஸி சந்தேகத்துடன் லீலாவை மேலும் கீழும் பார்க்க..
“அவள்.. அடச்சீ.. இப்படியா பார்த்து வைப்ப..?” என்று அடிக்க வந்தாள்..
“எப்படிப் பார்க்கிறேன்..? ஏன் கயல்..என் பார்வைக் கென்ன குறை…?” என்று வழக்கை கயல்விழியிடம் கொண்டு போனாள் ஜென்ஸி.
திடீர் நாட்டாமை பொறுப்பை எடுத்துக் கொண்ட கயல்விழி.. ஜென்ஸியைத் திரும்பிப் பார்த்து…
“அதுதானே.. உன்னிடம் எல்லாமே குறைதான்.. அதில் பார்வையை மட்டும் குறை சொன்னா எப்படி லீலா..!” என்று தீர்ப்பு வழங்கினாள்..
ஜென்ஸி அவளைப் பார்த்த உக்கிரப் பார்வையில்,
‘நாட்டாமை.. தீர்ப்பை மாற்றிச் சொல்லு…’ என்ற அச்சுறுத்தல் இருந்தது.
‘ஹ…’ என்ற அலட்சியப் பார்வையுடன் கயல்விழி திரும்பிக் கொள்ள…
“என்ன ஆணவம்..?” என்று பல்லைக் கடித்தாள் ஜென்ஸி..
“யாரைச் சொல்கிற…?” கயல்விழி விசாரித்தாள்.
“உன்னைச் சொல்லிய இந்த வாய் வேறு யாரையும் சொல்லாதுடி..”
“நீ சொன்னா அது உண்மையாகிடுமா…? இது செல்லாது.. செல்லாது..” என்று நாட்டாமை பாணியிலேயே பதில் சொன்னாள் கயல்விழி..
“அடங்குங்கடி.. அங்கே பார்ட்டி ஆரம்பிச்சுடுச்சு.. இங்கே என்னத்தை வெட்டி முறிக்கறீங்க…?”
ஜெயந்தி அவர்களை கடிந்து கொண்டாள்.. கிடைத்தது வாய்ப்பென்று அதை இறுகப் பற்றிக் கொண்ட ஜென்ஸி..
“நானாடி வெட்டி முறிக்கறேன்..? இதோ.. இந்த கயல்விழிதான் வெட்டி முறிப்பேன்னு வீரசபதம் போட்டுவிட்டு.. கம்ப்யூட்டருக்குள் தலையைக் கொடுத்திருக்கா..! நான் எப்பவோ ரெடி…” என்று போட்டுக் கொடுத்தாள்..
“ஏண்டி கயல்.. எப்படிப்பட்ட பார்ட்டி இது…! இதுக்குப் போய் லேட்டாப் போகலாமா..? முன்னாடியே போய் உட்கார்ந்து.. அந்த கருப்பையாவின் மூஞ்சியை ரசிக்க வேணாமா..?”
“அந்த மூஞ்சியை ரசிக்க வேறு செய்யணுமா..? அதுக்கு இந்த கம்ப்யூட்டரின் மூஞ்சியே பெட்டர்…”
“யாருடி இவ.. நேத்து வரை நம்மை ஓடஓட விரட்டுச்சே.. இன்னைக்கு அது ஓடப்போகுது.. அதை ‘டாட்டா… பை.. பை…’ சொல்லி வழியனுப்பப் போகிறோம்.. நாளைக்கு பின்னே இந்தப் பக்கம் அது தலைவைத்துப் படுக்காது..”
“அதுக்கு…?”
“அந்த மனுசன் படுத்தின பாட்டை மறக்க முடியுமாடி..?”
“அதெப்படி முடியும்…?”
“அதனால.. அது விடைபெறப் போகும் இந்த பொன்மாலைப் பொழுதில்.. அது கண் முன்னாடி உட்கார்ந்து.. அது எதையெதை செய்யக் கூடாதுன்னு அழிச்சாட்டியம் பண்ணுச்சோ.. அதையெல்லாம் செய்து கடுப்பேற்றினாத்தான் என் மனசு ஆறும்டி…”
“அவ்வளவு சூடாவா உன் மனசு இருக்கு…?”
“என் மனசு மட்டும் கொதிக்கலை.. இங்கேயிருக்கிற அத்தனை பெண்குலத் திலகங்களுக்கும் மனசு கொதிச்சுக் கிட்டு இருக்கு.. ஏன்.. உனக்கு கொதிக்கலையா…?”
“அந்தக் கொதிப்பை தாங்காமல்தானே.. அந்த மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காம இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்…?”
கயல்விழி எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருந்த போது…
“எனக்குப் பிடிக்குமே..” என்றாள் ஜென்ஸி.. எரிக்கும் பார்வையுடன் கயல்விழி அவளைப் பார்த்தாள்.
“எதுடி பிடிக்கும்…?”
“அவரைப் பிடிக்கும்…”
“எவரை…”
“கருப்பையா சாரை..”
“ஊருக்கே பிடிக்காத ஒரு பிறவியை உனக்குப் பிடித்திருக்கே.. உன்னையெல்லாம் எதில் சேர்க்கிறது…?”
“எதிலயும் சேர்க்காதே.. இப்ப நான் கூட்டுச் சேர அலைந்தேனா..? இதோ பார் கயல்.. அது என்னவோ.. நான் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி.. இந்த ஆபீஸில் காலடி எடுத்து வைத்த அந்தநாள் முதல்.. இந்த நாள் வரை என்னைக் கோபமாய் ஒரு சொல்.. அவர் சொன்னதில்லை தெரியுமா…?”
“ஏன் தெரியாது.. அது இந்த ஆபிஸுக்கே தெரியுமே…?”
வயிற்றெரிச்சலுடன் ஜெயந்தி சொல்ல.. அதை தன் முகபாவனையில் ஆமோதித்தாள் கயல்விழி..
“அப்படிப்பட்ட மனுசனின் மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்காமல் போகுமா.. தள்ளுங்கடி.. நான் முன் வரிசையில் முதல் சேரில் போய் உட்கார்ந்துக்கப் போறேன்…”
ஜென்ஸி ஆர்ப்பாட்டமாகப் போய்விட.. ஜெயந்தியும்.. கயல்விழியும்.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
“என்னடி.. இவ இப்படிப் பேசுறா…?”
“பேசாம என்னடி செய்வா.. இவள் சொல்கிறதும் உண்மைதாண்டி.. இந்த ஆபிஸையே காய்ச்சு.. காய்ச்சுன்னு காய்ச்சி எடுத்த அந்த மனுசர் இவளை ஒரு சொல் கூடச் சொன்னதில்லைடி…”
“ம்ஹூம்.. இத்தனைக்கும் இவதான் கலகலன்னு பேசி.. வாய் விட்டுச் சிரிப்பா.. நாமெல்லாம் அவர் முன்னால் வாயைத் திறக்கவே மாட்டோம்…”
“அதனால்தான் அவருக்கு இவள்மேல் மரியாதையாம்…”
“தோடா.. இப்படி ஒரு லாஜிக்.. எங்கேயாவது இருக்குமா…?”
“அவர்கிட்ட இருக்கே.. அவ, மனசில் இருக்கிறதை வெளிப்படையாய் பேசுகிறவளாம்.. மனசுவிட்டு சிரிக்கிறவளாம்..”
“நாம மட்டும் ஒளிச்சு மறைச்சு பேசுகிறோமா..? இது என்னடி வம்பாய் போச்சு.. அந்த மனுசரின் முன்னால் நாம பேசக்கூட வாயைத் திறந்ததில்லையே.. இதில சிரிப்புக்கு எங்கே போகிறது…?”
“இதைத்தான் அவரும் சொன்னாராம்…”
“எதைச் சொன்னார்…? நாம பேசாததைச் சொன்னாராமா…?”
“ம்ம்ம்…”
“இது என்னடி பெரிய அநியாயமா இருக்கு.. அவர்தானே பேச வாயைத் திறக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருந்தார்…?”
“எல்லாம் சரிதான் ஜெயந்தி.. ஆனால் நாம் பேசாமலா இருந்தோம்…?”
“அவர் முன்னால் பேசமாடோமே…”
“அவர் பீரோவைத் திறந்து ஃபைலை எடுத்துக்கிட்டு இருந்தபோது அவர் இல்லைன்னு நினைத்துக்கிட்டு நாம பேசிச் சிரிச்சு.. ஊரைக் கூட்டினோமா.. இல்லையா…?”
“ஆமாம்…”
“அவர் மேஜைக்கு கீழே.. எதையோ தேடிக்கிட்டு இருந்தப்போ.. அவரைப் போலவே பேசிச்சிரிச்சு.. இந்த ஆபிஸையே கிடுகிடுக்க வைத்தோமா.. இல்லையா..?”
“ஆமாண்டி.. ஆமாம்..”
“இன்னொரு நாள் அவர் பாத்ரூமுக்கு போயிருந்த போது அவர் லீவு போட்டிருக்காருன்னு நினைத்துக்கிட்டு அரட்டையடிச்சோமா.. இல்லையா…?”
“இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே…?”
“பொறுமையாய் கேளுடி பிசாசே…”
“உன்கூடப் பேசினா.. நானும் பிசாசாய் ஆகித் தொலைக்கணுமா…? சரி.. சரி.. சொல்லித் தொலை…”
“அதையெல்லாம் கேட்டுக்கிட்டும்.. பார்த்துக்கிட்டும் இருந்த மகராசன்.. நாம அவர் முன்னால நடிக்கிறோமுன்னு நினைத்துக்கிட்டாராம்..”
“புரிஞ்சுக்கிட்டாருன்னு சொல்லு…”
“அதனால்… அவர் முன்னால் நடிக்காமல்.. எப்பவும் போல.. இயல்பா இருந்த ஜென்சியை அவருக்கு பிடித்துப் போய் விட்டதாம்…”
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.