Chapter 08

0Shares

தன் வார்த்தைகள் மிருணாளினியின் செவிகளில் ஏறவேயில்லை என்பதைக் கவனித்த ஜென்ஸி..

“ம்ஹூம்.. உன் வேலை உனக்கு.. நடத்து.. நடத்து…” என்றாள்…

“த்சு.. டிஸ்டர்ப் பண்ணாதே…”

“இது வேறயா..? நான் என்னடி டிஸ்டர்ப் பண்ணினேன்…?”

“இப்படி ஓட்டைப் பானைக்குள் நண்டை விட்டதைப் போல காதோரமாய் நொய்.. நொய்ன்னு பேசிக்கிட்டிருந்தால் அது டிஸ்டர்ப் இல்லையா…?”

“அடிவாங்கப் போகிறேடி… நீதானே என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த…?”

“உன் கிட்ட பேச வரலை…”

“அதான் எனக்கு தெரியுமே.. உன் ஆளை சைட் அடிக்க இந்த இடம் தோதுன்னு நினைச்சு உட்கார்ந்தே..”

“தெரியுதில்ல.. அப்ப வாயை மூடிக்க…”

மிருணாளினி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெனரல் மேனேஜர்.

“இன்று ரிட்டயர் ஆகப் போகிற கருப்பையா சாரை பாராட்டி பேச விரும்புகிற ஸ்டாப்ஸ் யாராவது இருந்தால் மேடைக்கு வந்து பேசலாம்…” என்று மைக்கில் அறிவித்தார்.

கூட்டம் அசைவில்லாமல் அமர்ந்திருக்க.. ஜென்ஸி நொந்து போனாள். 

“இப்பேர்பட்ட மாமனிதரை பாராட்டிப் பேச ஒரு ஜீவனுக்கு கூட மனம் வரவில்லையே…”

“ஏன் உனக்கு மனம் வந்தால் போய் பேசு…”

மிருணாளினி சொல்லி வாய் மூடவில்லை.. ஜென்ஸி எழுந்து விட்டாள்…

“ஏய்ய்.. எங்கேடி போற…?” மிருணாளினி திகைத்தாள்..

“மேடைக்கு..”

“எதுக்கு…?”

“கருப்பையா சாரை பாராட்டிப் பேச…”

“நீ கல்லடிதான் வாங்கப் போகிற…”

“அதைப் பற்றி எனக்கு கவலையில்லை…”

“சொன்னால் கேளு ஜென்ஸி..”

“நீ சொல்லி.. நான் கேட்பதா… ஹ..”

ஜென்ஸி மேடையேறி மைக்கைப் பிடித்தாள். மிக மரியாதையாய் கருப்பையாவைப் பார்த்துவிட்டு.. அதை விட மரியாதையான குரலில் பேச ஆரம்பித்தாள்…

“மனித நேயமிக்க ஒரு தலைவரை நாம் இன்று பிரியப் போகிறோம்…” என்று அவள் ஆரம்பிக்க…

“பார்த்தியாடி இவ பேசுவதை…” என்று சொர்ணா பல்லைக் கடித்தாள்…

“அதுதானே.. தினமும் ஒரு பெண்ணை கண்ணீர் விட வைக்கலைன்னா இவருக்கு தூக்கமே வராதே..” லீலா ஆதங்கப்பட்டாள்..

“மாவீரன் நெப்போலியனை பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம்..” ஜென்ஸி பேச்சைத் தொடர..

“இப்ப எதுக்கு இவ நெப்போலியனை வம்புக்கு இழுக்கிறா..” கயல்விழி சந்தேகத்துடன் கூறினாள்..

“அந்த நெப்போலியனுக்கு இணையானவர் நம் கருப்பையா சார்…” என்று விளக்கம் கொடுத்தாள் ஜென்ஸி..

“தாங்கலைடி..” ஜெயந்தி குனிந்து கையிலிருந்த வார இதழின் பேப்பரைக் கிழித்தாள்…

“என்னடி செய்யப் போகிற..?” ஆவலுடன் தேவி வினவ…

“பொறுத்திருந்து பார்..” என்றபடி அதை மடக்க ஆரம்பித்தாள்.

“எதனால் என்று கேட்கிறீர்களா..? அந்த நெப்போலியன் குதிரையின் மீது அமர்ந்து தூங்குவாராம்.. தூக்கத்தைக் கூட மறந்து கடமையே கண்ணாக செயலாற்றியவர் அவர்.. அதனால் நம் கருப்பையா சார் அவருக்கு இணையானவர் என்று கூறினேன்..” என்று ஜென்ஸி அளந்து கொண்டிருக்கையில்..

“இவளிடம் விளக்கம் கேட்டோமா…?” என்று கயல்விழி தலையைப் பிடித்துக் கொண்டாள்…

“கருப்பையா சார்.. மனிதருள் மாணிக்கம்…”

ஜென்ஸி முழக்கமிட்ட போது.. முதல் காகித அம்பு பறந்து வந்து அவளைத் தாக்கியது.

அதைக் கண்ட எம்.டி.யின் முகம் கடுமையானது..

“என்ன.. என்ன.. அது…?” என்று அவர் விசாரிக்க ஆரம்பிக்கையில் ஜென்ஸியின் கையிலிருந்த செல் போனில்-

‘வெளியே வாடி பேசிக்கறேன்…’

‘மகளே.. இன்னைக்கு இருக்குடி உனக்கு…’

‘வீட்டுக்கு பத்திரமாய் போய் சேரும் உத்தேசமிருக்கா.. இல்லையா…’

என்று வரிசையாக குறுஞ்செய்திகள் அணிவகுத்து வர ஆரம்பித்து விட்டன..

ஆனானப் பட்ட ஜென்ஸியே அரண்டு போய் வாய் மூடிக் கொண்டாள்..

குனிந்து காகித அம்பை எடுத்துக் கொண்டவள்..

“ரோஜாப் பூ சார்.. பிரண்ட்ஸ் யாரோ வேடிக்கைக்கு என்மேல் வீசியிருக்கிறாங்க…” என்று எம்.டி.யிடம் விளக்கம் வேறு கொடுத்தாள்.

மேடையை விட்டு இறங்கியவளை எரிக்கும் பார்வைகள் வரவேற்க..

“நான் என்னடி பண்ணினேன்…” என்று மிருணாளினியிடம் பஞ்சாயத்து வைத்தாள்..

அவள் பதில் சொல்லவில்லை…

“ஏண்டி இவளே.. உன்னிடம்தானே பேசறேன்..? வாயைத் திறந்து பதில் சொல்லேன்…” ஜென்ஸி விடாமல் பேச்சுக் கொடுக்க…

“என்னிடம் பேசாதேடி…” என்று முகம் திருப்பிக் கொண்டாள் மிருணாளினி..

“ஏண்டி…?” ஜென்ஸி குழம்பிப் போனாள்…

“உன்னை ‘ஹிட்’ லிஸ்டில் வைத்திருக்கிறாங்க.. உன்னிடம் பேசினால் என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்து விடுவாங்க.. எனக்கு எதுக்கு அநாவசியமா அந்தப் பகை வரணும்…?” என்றாள் மிருணாளினி..

“ஹிட் லிஸ்டிலா…? என்னடி இது அணுகுண்டைத் தூக்கிப் போடற…?”

தீவிரவாதிகள்.. பெரிய பெரிய அரசியல்வாதிகளின் பெயர்களை ஹிட் லிஸ்டில் வைத்திருப்பதைப் பற்றித்தான் ஜென்ஸி கேள்விப் பட்டிருக்கிறாள்..

ஒரு ஆபிஸில் வேலை செய்யும் ஊழியர்கள்.. சக ஊழியரை ஹிட் லிஸ்டில் வைப்பதைப் பற்றி அப்போதுதான் அவள் கேள்விப் படுகிறாள்..

“ஹிட் லிஸ்ட்தான்.. உன்னோடு யாரும் பேச மாட்டாங்க..”

“அடிப்பாவி..”

“இதை நீ என்னைப் பார்த்துச் சொல்கிறயா…? உன்னைப் பார்த்துத்தான் இந்த ஆபிஸே இந்த வார்த்தையைச் சொல்லுது…”

“ஆபிஸூக்கு வாய் இருக்கா…?”

“அதில் வேலை செய்கிறவங்களுக்கு வாய் இருக்கு..”

ஜென்ஸி தோளைக் குலுக்கிக் கொண்டாள்.. அப்படி அலட்சியமாக அவளால் இருந்து விட முடியவில்லை. பார்ட்டி முடிந்தவுடனேயே ஆளாளுக்கு அவளை பேசித் தீர்த்து விட்டனர்.. அடுத்த ஒரு வாரத்திற்கு அவளிடம் முகம் கொடுத்துப் பேசாமல் விரோதம் காட்டினர்…

“இங்கே பாருங்கடி.. ஒருத்திக்கு மல்லிகையை பிடிச்சா.. ஒருத்திக்கு ரோஜாவைப் பிடிக்கும்…” என்று ஜென்ஸி விளக்கம் சொல்ல ஆரம்பிக்க…

“ஆனா.. எவளுக்கும் கத்தாழையைப் பிடிக்காது…” என்று உடனடியாகப் பதில் சொல்லி அவள் வாயை அடைத்தார்கள்..

“நாணயத்துக்கு மட்டும்தான் இரண்டு பக்கம் இருக்குமா..? மனுசருக்கும் மறுபக்கம்ன்னு ஒண்ணு உண்டுடி..” அடுத்த விளக்கத்திற்கு ஜென்ஸி ஆயத்தமாகும் போதே..

“அது மனுசருக்கு.. ராட்சஸ பிறவிகளுக்கு ஒரே பக்கம் தான். அது கருப்பு பக்கம்..” என்று பதில் வந்தது..

ஒரு வழியாய் அந்த கொந்தளிப்பு அடங்குவதற்காக.. ஜென்ஸி இனிமேல் பார்ட்டிகளில் யாரையும் பாராட்டிப் பேசுவதில்லை என்று தோழிகளுக்கு வாக்குறுதி கொடுத்தாள்..

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link