Chapter 14

0Shares

“இதனால் சகலமானவர்களுக்கும்.. நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்…”

ஜென்ஸி தன் சேரை விட்டு எழுந்து நின்று சொன்னாள்.. மற்றவர்கள் புரியாமல் அவளைப் பார்த்தார்கள்.

“இவ என்னடி சொல்றா…?” தேவி.. கயல்விழியிடம் கேட்டாள்…

“யாருக்குத் தெரியும்..? அதையும் அவளே சொல்வா கேளு…” கயல்விழி உதட்டைப் பிதுக்கினாள்..

“நீ சொல்ல வருவது என்னவோ…?”

சொர்ணா.. ஜென்ஸியின் பாணியிலேயே கேள்வி கேட்டதும் மற்றவர்களின் கண்களில் பாராட்டுத் தெரிந்தது.

“நாளைக்கு நான் லீவ்.. போட்டிருக்கிறேன்..”

“போட்டுக்க.. உன் லீவ்.. நீ எடுக்கிற.. இதை ஏன்னு நாங்க யாரும் கேள்வி கேட்டோமா..?”

“நான் அதைச் சொல்லலைடி..”

“வேற எதைன்னு சொல்லித் தொலை…”

“நாளைக்கு ஒருநாள் என்னைப் பத்தி என்னென்ன பேசணும்னு நீங்க நினைக்கறீங்களோ.. அத்தனையும் பேசிக்கலாம்…”

இதைக் கேட்ட மிருணாளினிக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்து விட்டது..

“ஏண்டி அரட்டை.. நீ லீவு போட்டால்.. உன்னைப் பத்தித்தான் நாங்க புறம் பேசணுமா…?”

“அதுதானே ஹியூமன் நேச்சர்…?”

“நீ ரொம்பக் கண்ட…”

“காணமலா சொல்றேன்..? நேத்து நம்ம ஜெயந்தி லீவு போட்டாள்.. நாம என்ன செஞ்சோம்..? அவ.. ஆபிஸில் சேர்ந்த நாளிலிருந்து.. நேத்து வரைக்கும் என்னென்ன செய்தான்னு பிட்டுப்பிட்டு வைத்துப் பேசினோமா… இல்லையா…?”

ஜென்ஸியின் கேள்வியைக் கேட்ட ஜெயந்தி கொதிப்பாக.. மற்றவர்கள் கலவரமானார்கள்..

“என்னடி நடந்துச்சு…?” ஜெயந்தி காட்டமாக வினவ..

“ஒன்றுமில்லையே..” என்று ஒருசேர அனைவரும் பதில் சொல்லிவிட்டு.. ஜென்ஸியை.. எம்.ஜி.ஆரை.. நம்பியார் பார்ப்பதைப் போல.. ‘மகா அன்பாக’ பார்த்து வைத்தார்கள்..

“நீ சொல்லு.. ஜென்ஸி…” அவள் ஜென்ஸியிடமே கேட்டு வைக்க.. அலுவலகம் அரண்டு போனது…

“என்னத்தைச் சொல்லச் சொல்கிற..?” ஜென்ஸி தன் முன்னாலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே கூறினாள்..

“இவங்கள்ளாம் என்னைப் பத்தி.. என்ன பேசினாங்க..?”

ஜென்ஸியின் பதிலைக் கேட்க.. அலுவலகமே.. நகத்தைக் கடித்துக் கொண்டு பதட்டமாக காத்திருக்க.. அவளோ.. ஜெயந்தியின் கேள்விக்கு துளிக்கூட அலட்டிக் கொள்ளாமல் பதிலைச் சொன்னாள்..

“அதுவா ஜெயந்தி.. முந்தாநாள்.. கயல்விழி லீவு போட்டிருந்தப்போ.. நீயும் மத்தவங்களும்.. அவளைப் பற்றி என்ன பேசீனிங்களோ.. அiத்தான் உன்னைப் பத்தியும்.. நீ லீவு போட்டிருந்தப் போ.. இவங்க பேசினாங்க..”

ஜெயந்தி தன் வாயை இறுக மூடிக் கொள்ள.. மிருணாளினி சிரிப்பை அடக்க படாத பாடு பட்டாள்..

கயல்விழி தன் பார்வையை உயர்த்தி ஜெயந்தியைப் பார்க்க.. அவள் தடுமாறினாள்.

“அது.. வந்து.. கயல்.. வந்து…”

ஜெயந்தியின் தடுமாற்றத்தை விசித்திரமாகப் பார்த்தாள் கயல்விழி..

“இப்ப எதுக்கு இப்படி உளறிக் கொட்டி கிளறி மூடுகிற..?”

“நான் உன்னைப் பத்தி தப்பா எதுவும் சொல்லலைடி..”

“நான் உன்னிடம் கேட்டேனா…?”

கயல்விழி நிதானமாகக் கேட்கவும் இமைகொட்டி.. நம்ப முடியாத அதிசயத்துடன் அவளைப் பார்த்தாள் ஜெயந்தி..

“கயல்…?”

“போடி.. போய் வேலையைப் பாரு…”

கயல்விழி அலட்சியமாகச் சொல்லிவிட்டு தன் வேலையில் கவனமாக.. ஜெயந்தி நிம்மதியான முகத்துடன் தன் சீட்டுக்குப் போனாள்..

‘இரண்டும்.. இரண்டு துருவங்கள்…’ மிருணாளினி நினைத்துக் கொண்டாள்..

அந்த அலுவலகத்தில் எதிர்மறைத் துருவங்களாய் நின்ற ஜென்ஸியிடமும்.. கயல்விழியிடமும்.. அடிப் படையாய் ஒரு குணம் ஒன்றுபோல அமைந்திருந்தது.

அது.. அலட்டிக் கொள்ளாத தன்மை..

ஜென்ஸியைப் போல எல்லோரையும் சிநேசிக்கும் சுபாவம் கயல்விழிக்கு கிடையாது…

அதைப் போல.. கயல்விழியின் தீவிரமான குணம் ஜென்ஸியிடம் கிடையாது. அவள் இலகுவாக பிரச்னைகளை எதிர் கொள்பவள்..

ஜென்ஸி எப்போதும் சிரித்துக் கொண்டேயிருப்பாள்.. எதிரே இருப்பவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பாள்..

கயல்விழி தேவையில்லாமல் சிரிக்க மாட்டாள்.

ஆனாலும்.. இருவருமே பிரச்னைகளை சந்திக்க நேரும் போது அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

“எம்.டி யைப் பார்க்கணும்.. நான் திருச்சி பிராஞ்சிலிருந்து வருகிறேன்..” லீலாவிடம் கூறிக் கொண்டிருந்த பெண்ணை உற்றுப் பார்த்தாள் ஜென்ஸி..

“ஏண்டி.. அவங்களை அப்படிப் பார்க்கிற..?” மிருணாளினி விசாரித்தாள்.

“எனக்கு தெரிஞ்ச பெண்.. அதான் பார்த்தேன்..”

“திருச்சி பிராஞ்சிலிருந்தவங்களை உனக்கெப்படித் தெரியும்..?” மிருணாளினி புருவம் உயர்த்தினாள்..

“ஹலோ.. நான் திருச்சி பிராஞ்சிலிருந்துதான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்.. உனக்குத்தான் அது மறந்துபோச்சு…”

“ஆமாமில்ல..?”

மிருணாளினி தலையில் தட்டிக் கொள்ள..

“இப்ப.. ஆமாம்கிறயா.. இல்லைங்கறியா.. ரெண்டில் ஒண்ணைச் சொல்லு…” என்றாள் ஜென்ஸி..

“சொல் குற்றம் கண்டு பிடிச்சுட்டியாக்கும்.. பெரிய நக்கீரிதான் போ..” மிருணாளினி சிரித்தாள்..

“நக்கீரியா…?” ஜென்ஸி விழிக்க..

“நக்கீரனுக்கு..? பெண்பால்.. நக்கீரிதானே..” என்று விளக்கம் கொடுத்தாள் மிருணாளினி..

“பரவாயில்லையே.. இப்படிப் போட்டுத் தாக்கறயே.. என்ன விசயம்..? உன் ஆளோட கொஞ்சநாளாய் ‘டூ’ விடலையா..? அதுதான் மேடம் இத்தனை பிரஷ்ஷா இருக்கிறாப் புலயா..?” ஜென்ஸி கேலி செய்தாள்..

“கீப் கொயட் ஜென்ஸி…” மிருணாளினி முகம் சிவந்தாள்..

அகத்தைக் காட்டும் முகம் தனக்கு அமைந்திருக்கக் கூடாது என்று இருந்தது அவளுக்கு..

ஜென்ஸி சொல்லியதில் இருந்த உண்மையை அவளால் மறுக்க முடியவில்லை.

அது என்னவோ.. முகிலனுடன் அவளுக்கு மனத் தாங்கல் இருந்தால்.. அவள் முகம் வாடி விடும்.. யாருடனும் பேச மாட்டாள். துறவியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு – பற்றில்லாத விரக்திப் பார்வையைப் பார்த்துக் கொண்டு.. யாருக்கு வந்த விருந்தோ என்ற பாணியில் தன்னைச் சுற்றி நிற்கும் நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் ‘கடனே’ என்று அலுவலகத்திற்கு வந்து போவாள்..

அதை ஜென்ஸி கவனித்துக் கூறியதில் மிருணாளினிக்கு வெட்கம் வந்து விட்டது..

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link