Chapter 17
“அப்பா.. நான் சென்னைக்குப் போகிறேன்…” நிஷா முடிவு பண்ணி விட்டாள்..
விசாலி திகைத்தாள்.. அவர்களின் அபார்ட்மெண்ட்டிற்கு பக்கத்து அபார்ட்மெண்ட்டில்தான் முகிலனின் அக்கா அகிலா குடியிருக்கிறாள்..
பேச்சுவாக்கில் ஒருநாள் கௌதமின் குடும்பம்.. தங்களின் இனத்தைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொண்ட அகிலா.. அதற்குப் பின்னால் அவர்களின் குடும்பத்தோடு அதிக நெருக்கம் காட்டினாள்.
அந்த நெருக்கம் இறுகி.. நிஷாவை முகிலனுக்கு பெண் கேட்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது.
“சென்னைப் பையனா… நோ டாட்…”
முதலில் மறுத்த நிஷா.. முகிலனைப் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்தவுடன் யோசிக்க ஆரம்பித்தான்.
அவனுடைய போட்டோவைக் கண்டவுடன் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாகி விட்டாள்.
“அந்தப் பையனுக்குத்தான் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லையாமே நிஷா.. அப்புறமும் எதுக்கு அவன் பின்னாடி நாம போகணும்..?” விசாலி எடுத்துச் சொல்லிப் பார்த்தாள்.
நிஷா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
“அவன் சொல்லிட்டா.. நாம அதைக் கட்டாயம் கேட்டுத்தான் ஆகணுமா மம்மி..?” என்று பதில் கேள்வி கேட்டு விசாலியைத் திகைக்க வைத்தாள் அவள்..
இனி நிஷாவை தடுக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட கௌதம்… யோசனையில் ஆழ்ந்தார்..
“சென்னைக்குப் போகிறாய்.. சரி.. என்ன விசயமாகப் போகிறாய்ன்னு மத்தவங்க கேட்டா.. என்ன பதிலைச் சொல்றது…?”
“என் எம்.பி.ஏ படிப்பை மறந்து விட்டிங்களா டாடி..?”
“அதுக்கும்.. இதுக்கும் என்னம்மா சம்பந்தம்…?”
“நான் புரொஜெக்ட் வொர்க் ஒண்ணை சப்மிட் பண்ணனும்… அதுதான் சம்பந்தம்..”
“புரியலை…”
“டாடி.. என் புரொஜெக்ட் வொர்க் முடிய இரண்டு மாதமாகும்.. இந்த இரண்டு மாதமும் நான் புரொஜெக்ட் பண்ண டிரெயினிங் எடுக்கப் போகிற கம்பெனி.. முகிலனின் கம்பெனி..”
“வாவ்….”
கௌதம் ஆச்சரியப்பட்டுப் போனார். நிஷாவின் புத்திசாலித்தனத்தில்.. எப்போதும் அவருக்கிருக்கும் பெருமிதம் இப்போதும் அவருக்கு வந்தது..
“அகிலாக்காவிடம் பேசுங்க டாடி.. என் புரொஜெக்ட் வொர்க்குக்கு ஹெல்ப் பண்ண அவங்க தம்பிகிட்ட ரெகமெண்ட் பண்ணச் சொல்லுங்க.. அவங்க வீட்டில் தங்கிக்க அவங்க பேரண்ட்ஸ்கிட்ட பேசி சம்மதம் வாங்கச் சொல்லுங்க..”
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதான்’ என்று நினைத்துக் கொண்டார் கௌதம்.
நிஷா முகிலனின் வீட்டில் தங்கி.. முகிலனின் பெற்றோர்களை கவர்ந்து விடுவாள்.. முகிலனின் கம்பெனியில் டிரெயினிங் எடுக்கும் சாக்கில்.. முகிலனுடன் இணை பிரியாமல் சுற்றி.. அவனையும் வசியப் படுத்தி விடுவாள்..
இதில்.. வீடு.. அலுவலகம் என்று.. தூங்கும் நேரம் போக.. மற்ற நேரமெல்லாம் முகிலனுடன் அவள் சேர்ந்து இருக்குமாறு திட்டமிட்டுக் கொண்டதுதான் அவளுடைய கெட்டிக்காரத்தனம்..
கௌதம் அகிலாவிடம் பேசினார். தன் கணவன் வீட்டிற்கு தெரிந்தவர்களின் வீட்டுப் பெண்ணை.. தம்பிக்கு மணமுடித்து வைப்பதில் இருக்கும் பல அனுகூலங்களை சிந்தித்து பார்த்திருந்த அகிலாவும் முழு மனதுடன் இதற்கு உடன்பட்டாள்.
விளைவு.. நிஷா சென்னைக்கு பயணமானாள்.
“அம்மா.. பொண்ணு அழகாயிருக்கா.. படிச்சிருக்கா.. வீட்டுக்கு ஒரே பொண்ணு.. அவ அப்பாவுக்கு டெல்லியில் ஒண்ணுக்கு மூணு அபார்ட்மெண்ட் இருக்கு.. அதுல இரண்டு இவ பேரில இருக்கு. நினைச்சுப் பாருங்க.. ஒரு அபார்ட்மெண்ட் வாங்குறதுக்குள்ள.. எனக்கும் இவருக்கும்.. உன் பாடு.. என் பாடுன்னு ஆகிருச்சு.. இது டெல்லிம்மா.. பொண்ணு சென்னைக்கு வர நினைக்கிறா.. நம்ம வீட்டில தங்கவைச்சு.. தக்கவைச்சுக்கங்க…”
கோகிலா கோடு போட்டுக் கொடுத்தால்.. ரோடு போட்டுக் கொள்ளும் ரகம்.
மகள் இவ்வளவு சொன்னால் அவளுக்கு போதாதா..?
“முகிலா..! அகிலாவோட வீட்டுக்காரரின் ஒன்று விட்ட தங்கையாம். புரொஜெக்ட் பண்ண.. இரண்டு மாதம் ஒரு பெரிய கம்பெனியில் டிரெயினிங் எடுக்கணுமாம். மாப்பிள்ளை என்னிடம் கேட்டார். நான்.. ‘அதுக்கென்ன மாப்பிள்ளை.. உங்க தங்கைக்கு எங்க வீட்டில் இடமில்லாம போகுமா..? இல்லை.. உங்க தங்கைக்கு என் மகனின் கம்பெனியில் அவன் டிரெயினிங் கொடுக்க ஏற்பாடு செய்ய மாட்டானா..? தாராளமாய் எங்களை நம்பி.. அனுப்பி வையுங்க..’ ன்னு சொல்லிட்டேன்.. நான் சொன்னது சரிதானேடா…” என்று மகனிடம் சொல்லி விட்டாள்.
சரியில்லை என்று சொல்ல, இதில் தவறேதும் இருப்பதாக முகிலன் நினைக்கவில்லை.
அவனுக்கு அகிலா. நிஷாவை பெண் கேட்ட விவரம் தெரியாது…
அவன்தான் திருமணப் பேச்சை காதில் கேட்டுக் கொள்ளவே இல்லையே…
அதனால்.. அக்காளின் கணவருக்கு உறவுக்காரப் பெண் என்ற நினைவில்.. பொறுப்பான தம்பியாக தலையை ஆட்டி விட்டான்.
“அதுக்கென்னம்மா.. அத்தான் வீட்டுப் பெண்ணுக்கு நாமதானே உதவி செய்யணும்.. வரச் சொல்லுங்க..”
நிஷாவும் வந்து விட்டாள்.
வந்தவுடன் அவள் செய்த முதல் வேலையே.. பக்திப் பழமாக பூஜையறையில் விளக்கேற்றி.. பூஜை செய்தது..
“ஆஹா.. பொண்ணுன்னா இவதான் பொண்ணு..” கோகிலா மகிழ்ந்து விட்டாள்..
அடுத்த வேலையாக.. சமையலறைக்குள் புகுந்து கைவரிசையைக் காட்டினாள்..
ஒரு வாரத்திற்குள் சமையலைக் கற்றுக் கொண்ட திறமைசாலியான அவள்.. கற்றுக் கொண்ட வித்தையைக் காண்பிக்க பிரகாசம் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிட்டார்..
“பேஷ்… பேஷ்.. காபின்னா இது காபி..”
மனைவியைக் கவனிக்காமல்.. காபியை வாசம் பிடித்தவர்.. மனைவி அருகில் நிற்பதை உணர்ந்ததும்.. அரண்டு போனவராக அவளைப் பார்த்தார்.
‘போச்சு.. இவ காளி அவதாரம் தான் எடுக்கப் போகிறா..’
அவரது கணிப்பு பொய்யானது.. அவள் சாந்த சொரூபியாக புன்னகைத்தாள்..
‘என்னடா இது.. இவ கண் முன்னாலேயே.. ஊரான் வீட்டுப் பெண்ணின் கை மணத்தை பாராட்டறேன்.. இவ கண்டுக்காம நிற்கிறதோட இல்லாம.. சிரிச்சு வேற வைக்கிறாளே…’
அவர் அதிசயத்துடன் இமை கொட்டினார்.
“குடும்பத்துக்கேத்த பொண்ணு…”
கோகிலாவின் வாய் மொழியைக் கேட்ட பின்புதான்.. அவளது சாந்தத்தின் பின்புலம் பிரகாசத்திற்கு புரிந்தது..
‘ஓ.. இவள் இப்படி வருகிறாளா…?’
பிரகாசம்.. அழகான நிஷாவை ஒரு முறை பார்த்தார்.. ‘ஏன் இப்படியொரு எண்ணம் தன் மனைவிக்கு வரக் கூடாது..?’ என்ற எண்ணம் அவருக்குள் வந்தது.
நிஷா.. தன் முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துவிட்டாள்..
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.