Chapter 18
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மிருணாளினிக்கு அந்தக் கனவு வந்தது…
வெண்மேகங்களுக்கு இடையில் முகிலனின் தோற்றம் எழுந்தது.. மிருணாளினிக்குள் பரவசம் கலந்த பரபரப்பு உற்பத்தியானது.
தூங்கிக் கொண்டிருந்த மிருணாளினி.. கனவின் அந்த உணர்வை நிஜமாக தன் உடலில் உணர்ந்தாள்…
அவளைப் பார்த்து அவன் கை நீட்டினான்.. அவன் கை தொட ஆவலுடன் அருகே சென்ற மிருணாளினியால்.. அவனைத் தொட முடியவில்லை…
கண்ணாடித் தடுப்பு ஒன்று.. அவனையும்.. அவளையும் பிரிக்க.. அவள்.. அந்த கண்ணாடிச் சுவரை உடைத்துவிட்டு உள்ளே செல்லத் துடித்தாள்.. கலங்கினாள்.. கதறினாள்..
அப்படியே கண் விழித்துக் கொண்ட மிருணாளினி தன் கன்னத்தின் ஈரத்தை உணர்ந்தாள்.
‘அழுதிருக்கிறேன்…’
அதற்குப் பின்னால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை.. விடியும் வரை கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள்..
‘இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்….?’
அவளது அடி வயிறு கலங்கியது.. மனதை கவலை பிசைந்தது..
அலுவலகத்தில் நுழையும் போது.. அந்த அர்த்தத்தை கண்கூடாக.. கண்ணெதிரே கண்டு விட்டாள்.
முகிலன் காரை விட்டு இறங்கி.. அவசரமாக காரின் மறுபக்கம் சென்று கதவைத் திறந்தான்.
அவனுடைய காரைக் கண்டதும் மலர்ந்து நின்றவள் அவனுடைய செய்கையைக் கண்டதும் திகைத்து விட்டாள்.
‘யாரைக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கிறார்…’
அவள் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. காரின் முன் பக்கத்திலிருந்து நிஷா இறங்கினாள்.
டெல்லியில் வளர்ந்த நாகரிகத் தோற்றம்.. தலைமுதல் பாதம்வரை தென்பட்ட நளினம்.. இயல்பாக தலையைக் கோதிக் கொள்வதில் கூடத் தெரிந்த நாசூக்கு..
மிருணாளினி பொறாமையின் கனலை உணர்ந்தாள்.
‘யார் இவ…?’
அவள் மனதில் முதல் நாளின் கனவின் நிழல் தோன்றியது.. அந்தக் கண்ணாடிச் சுவர் அச்சுறுத்தியது..
மிருணாளினி.. நிஷாவின் கண்ணாடி போன்ற மேனியழகைப் பார்த்தாள்.
‘இவளுக்கு கார் கதவைத் திறந்து விடுகிறாரே.. இவரென்ன இவளுக்கு கார் டிரைவரா…?’
கோபத்துடன் எண்ணமிடும் போதே.. அவள் முகிலனின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வந்திருக்கிறாள் என்ற உண்மை உறைக்க.. மிருணாளினியின் மனதில் புயல் மையம் கொண்டது…
அந்தப் புயலின் வேகம் அதிகப் படும்படி.. முகிலன் அவளைக் கவனிக்காமல் நிஷாவுடன் பேசியபடி அவளைத் தாண்டி சென்றான்.
மிருணாளினி ஸ்தம்பித்து விட்டாள்.. அவளின் காலடியில் பூமி நழுவியது..
அவளிடம் காதல் சொன்ன நாளிலிருந்து இன்றுவரை அவளிருக்கும் இடத்திலிருந்தால்.. அவளைத் தவிர வேறு யாரையும் முகிலன் பார்த்ததில்லை..
அந்த பார்வையில் மிருணாளினி கர்வப் பட்டுப் போவாள்.. அந்தக் காதலின் கர்வம் அன்று குலைந்தது..
“யாருடி அது…?” ஜென்ஸி அவளருகில் நின்று கேட்டாள்..
‘தெரியவில்லை..’ என்று சொல்ல மனமில்லாமல்
“எது…?” என்று எதிர்கேள்வி கேட்டாள் மிருணாளினி.
“உன்கூடப் பேசாம.. வேறறொருத்தி கூடப் பேசிக்கிட்டுப் போகிறாரே நம்ம முகிலன் சார்.. அந்தப் பொண்ணு யாருன்னு கேட்டேன்…”
ஜென்ஸியின் குரலில்.. இந்த விளக்கம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேண்டுமா.. என்ற தொனி இருந்தது..
“இதை அவருகிட்டயே போய் கேளு…” எரிச்சலுடன் மிருணாளினி நகர முயன்றாள்.
“அப்போ.. உனக்கு அவ யாருன்னு தெரியாதுன்னு சொல்லு…” மடக்கினாள் ஜென்ஸி..
மிருணாளினி முறைத்த முறைப்பில் ஜென்ஸிக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.
“விளையாட்டாய்தானே பேசினேன்.. எதுக்கு இவ்வளவு கோபம் மிருணா…?”
“என்னிடம் விளையாடாதே..”
முகிலனின் மீது இருந்த கோபத்தை ஜென்ஸியிடம் தான் காட்டுவதை புரிந்தும்.. கோபம் காட்டினாள் மிருணாளினி.
ஜென்ஸியிடம் மட்டும்தான் என்றில்லாமல்.. கூட வேலை பார்த்த அத்தனை பேரிடமும் அன்று கடுமையாகவே பேசினாள் அவள்..
காரணத்தை புரிந்து கொண்டவர்களின் மத்தியில் அதைப் பற்றிய கசமுசா எழுந்தது..
“அவ முகிலன் சாரின் அத்தை மகளாம்..”
“இங்கேதான் வேலை பார்க்கப் போகிறாளாம்…”
“அவளுக்கும்.. முகிலனுக்கும் எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டதாம். இரண்டு மாதத்தில் மேரேஜாம்…”
“இப்பவே முகிலனின் வீட்டில்தான் இருக்கிறாளாம்..”
“இரண்டு வருசமா இரண்டு பேரும் காதலிக்கிறாங்களாம்…”
“அவளுக்கு முகிலன் வைர மோதிரம் வாங்கி பிரஸெண்ட் பண்ணினாராம்..”
இந்த செவிவழிச் செய்திகள் எங்கிருந்து முளைத்து எப்படி மருவி.. உருமாறுகிறது என்பதை.. காலம்.. காலமாக அறிந்தவர்கள் யாரும் இல்லை..
நதிமூலம்.. ரிஷிமூலத்தைக் கூடக் கண்டு பிடித்து விடலாம்… ஆனால் இந்த செவிவழிச் செய்திகளின் மூலத்தை கண்டறிந்த சித்தரும்.. புத்தரும்.. இந்த உலகில் இல்லை…
இறக்கையில்லாமல்.. இறக்கை கட்டிப் பறக்கிற இந்தச் செய்திகளால் மலையை மடுவாக்க முடியும். மடுவை மலையாக்க முடியும்..
மிருணாளினியின் செவிகளிலும் இந்தச் செய்திகள் புகுந்து.. புறப்பட அவள் மரண அவஸ்தைக்கு அளானாள்..
அதற்கேற்றாற் போல.. முகிலன் அவளை சந்திக்க வேண்டும் என்ற நியதியை மறந்தான்.
இரண்டு நாள்கள் பேசாமல் மிருணாளினி மௌனித்தால், மூன்றாம் நாளே தன் அறைக்கு வரவழைத்து பேச வைப்பவன்.. அந்த வழக்கத்தை மறந்து மௌனித்தான்..
இணை பிரியாமல் நிஷாவை தன் அருகிலேயே வைத்துக் கொண்டு கம்பெனிக்குள் அவன் சுற்ற.. தன்னைச் சுற்றியிருந்தவர்கள் தன்னைப் பார்த்து நகைப்பதை உணர்ந்தாள் மிருணாளினி..
அவளுக்கு ரத்தக் கொதிப்பு அகிதமானது..
அவனுடன் பேசாமல் அவளால் இருக்க முடியவில்லை.. அவனாகப் பேசாமல் அவனுடன் பேசவும் அவளால் முடியவில்லை…
எடுத்ததெற்கெல்லாம் மிருணாளினி எரிந்து விழ ஆரம்பித்தாள்..
“விடுங்கடி.. அவ மனசில் என்ன வேதனையோ..?” கயல்விழி மற்றவர்களை சமாதானப் படுத்தினாள்…
அந்த மாத இறுதியில் மிருணாளினியை ஒரு நாள் வழி மறித்தாள் நிஷா.. கூடவே..
“நீதான் அந்த மிருணாளினியா…?” என்று எகத்தாளமான கேள்வியொன்றையும் கேட்டு வைத்தாள்.
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.