Chapter 20
மிருணாளினி நகம் கடித்து யோசித்தாள். முகிலனுடன் பேச வழியில்லை.. போன் பண்ணினாள்..
“சொல்லு…” அவன் குரலில் அவசரம் தெரிந்தது..
‘எந்த டிரெயினைப் பிடிக்கப் போகிறான்..?’ அவள் எரிச்சல்பட்டாள்..
“ஈவினிங் மீட் பண்ணணுமே…”
“நோ.. நோ.. எனக்கு இம்பார்ட்ன்ட் வொர்க் இருக்கு..”
‘எது…? அவளுடன் மஹாபலிபுரம் சுற்றுவதா..?’ பல்லைக் கடித்தாள்.
“பட்.. எனக்கு அர்ஜண்டா உங்களிடம் பேசணுமே..”
“போனில் சொல்லு…”
மிருணாளினி பொறுமையிழந்தாள்..
“இப்போ.. வர முடியுமா.. முடியாதா…?”
இது பெண்மையின் கோபம்.. அவளுடையவன் என்று உரிமை கொண்டாடும் ஆணின் மீது அவள் பாராட்டும் உரிமையினால் பிறக்கும் கோபம்…
உன்னைவிட எனக்கு எதுவுமே முக்கியமில்லை எனும்போது.. என்னைவிட உனக்கு வேறொருத்தி முக்கியமாகப் போய்விட்டாளா.. என்ற ஆற்றாமையில் விளைந்த கோபம்..
மறுமுனையில் நிசப்தம் நிலவியது..
அவள் துடிக்கும் மனத்தோடு அவனது பதிலுக்காக காத்திருந்தாள்.. அந்த பதிலில்தான் அவளது காதலின் ஜீவனே அடங்கியிருக்கிறது என்ற உயிர்துடிப்புடன் காத்திருந்தாள். நகரும் மனித துளிகள் நரகமாய் தோன்ற.. அவளை வாழ்விக்கப் போகும் வார்த்தைகளை அவன் வாய் உதிர்க்காதா என்று காத்திருந்தாள்…
அவன் பேசினான்.. பக்கத்தில் நிஷா இருப்பதால் அவனது குரலில் தொனி.. குறைந்திருக்க.. அழுத்தம் திருத்தமாக கடிந்து கொள்ளும் விதத்தில் பேசினான்.
“நான் உன் அடிமையில்லை மிருணா… நீ சொடக்கு போட்டவுடனேயே ஓடி வந்து விடணும்னு நினைக்கிறயா..? என் லெவலை மறந்து விட்டுப் பேசுகிறாய்.. ஒரு செகண்ட் நான் யார்.. என் உயரம் என்ன என்பதை யோசித்து விட்டுப் பேசு…”
அவன் போனை அணைத்து விட்டான்.. விக்கித்துப் போனவளாக போனை வெறித்துப் பார்த்தபடி சிலைபோல் அமர்ந்திருந்தாள் மிருணாளினி…
“மாமல்லபுரத்து சிலைகளெல்லாம் பிரமாதம்…”
மறுநாள் அவளைத் தேடிவந்து செய்தி சொன்ன நிஷாவின் விழிகளில் எள்ளல் இருந்தது…
“இன்றைக்கு பிக்சர் போகிறோம்.. மங்காத்தா.. நீயும் வருகிறயா..? பட்.. எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் டிக்கட் ரிசர்வ் பண்ணியிருக்கிறார்.. நீ வந்தால் ஒப்பன் டிக்கெட்டில் ஒரு ஓரமாய் தள்ளி உட்கார்ந்து எங்களை வேடிக்கை பார்க்கலாம்.. எப்படி வசதி..?”
மிருணாளினியின் மனம் எரிந்தது.. மாலையில் முகிலனுடன் சிரித்துப் பேசியபடி அவளைக் கடந்து சென்ற நிஷா மிருணாளினிக்கு மட்டும், தெரியும்படி கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தாள்..
தாங்க முடியாமல் மிருணாளினி.. முகிலனின் செல்போனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாள்…
‘மலர் விட்டு மலர் தாவும்
வண்டினமே.. உன் இனமென்று…
சொல்லாலே காண்பித்து விட்டாய்…
செயலினிலே காண்பித்து விட்டாய்…’
தலையைப் பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தபோது பதில் செய்தி வந்தது…
‘ஷட் யுவர் மவுத்…’
‘வாயை மூடிக் கொண்டுதானே இருக்கிறேன்..?’ செய்வதறியாத கோபத்துடன் போனை வீசி எறிந்தாள்..
“ஏய்… உடையப் போகுதுடி…” லீலா போனைக் குனிந்து எடுத்துக் கொடுத்தாள்.
“யார் மேலேயோ இருக்கும் கோபத்தை போனின் மேல் ஏன் காட்டுகிற மிருணா.. இது உடைந்தால் நஷ்டம் உனக்குத்தான்…”
அக்கறையாய் சொன்ன தேவியின் முகத்தில்.. அவளது அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் ஆவல் தெரிநத்து..
மிருணாளினி பதில் பேசாமல் எழுந்து கொண்டாள்.. இயந்திரம் போல வீட்டுக்குள் நுழைந்தவளை.. ஹாலில் குழுமியிருந்தவர்கள் ஆவர்த்துடன் பார்த்தனர்..
“இதோ மிருணாவே வந்திட்டாளே…” தாரிணியின் குரலில் குதூகலம் இருந்தது..
“எப்போ வந்தேக்கா..?”
“இப்போதுதான்.. நீ உள்ளே வா…”
கூடியிருந்தவர்களை கேள்வியுடன் பார்த்தபடி உள்ளே சென்ற மிருணாளினியை பாத்ரூமிற்குள் தள்ளி விட்டாள் தாரிணி..
“சீக்கிரம் முகம் கழுவிட்டு வா…”
“எதுக்கு..?”
“சொன்னதைச் செய்யேண்டி…”
எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லாமல் களைத்துப் போன மனதுடன் இருந்த மிருணாளினி தமக்கை சொன்னதைச் செய்தாள்..
“இந்தா.. இந்தச் சேலையைக் கட்டிக்க..”
ஏன் என்று மிருணாளினி கேட்கவில்லை.. சுடிதாரில் இருந்ததால்.. வீட்டில் வந்திருக்கும் உறவினர் கூட்டத்தின் முன்பு சேலையில் இருக்கச் சொல்கிறார் அக்கா என்ற நினைவுடன் சேலையைக் கட்டிக் கொண்டாள்..
மெலிதான அலங்காரத்தில் மிருணாளினியை ஹாலுக்கு அழைத்துச் சென்றாள் தாரிணி..
“உட்காரும்மா…”
பண்டரிபாயைப் போல மங்களகரமான முகத்துடன் இருந்த பெண்மணி அவளை அருகே அமர வைத்துக் கொண்டாள்…
அப்போது தான் மிருணாளினி அவனைக் கவனித்தாள்..
சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தான் அவன்.. அவளை ஆர்வமாக பார்த்தான்.. அந்தப் பார்வையில் இருந்த எதுவோ அவளை மிகவும் பாதித்தது..
‘இவனென்ன இப்படிப் பார்த்து வைக்கிறான்..’ அவள் அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்…
‘என்னவோ.. பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையைப் போல போஸ் கொடுக்கிறானே…’ அடுத்து வந்த நினைவில் அவள் அவசரமாக நிமிர்ந்து தன்னைச் சுற்றிப் பார்த்தாள்..
ஹாலில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் தட்டுக்கள் பரப்பபட்டிருந்தன.. பூவும்.. நகையுமாக பட்டுச் சேலை அணிந்திருந்த பெண்கள் அமர்ந்திருந்தனர்..
‘பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறானோ…’
தோரணையுடன் அமர்ந்திருந்தவனின் விழிகள் அவள் பார்வையைச் சந்தித்ததும் மின்னின..
‘கடவுளே…’ மிருணாளினிக்கு கண்களை இருட்டியது..
அங்கே முகிலன்.. நிஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்க.. இங்கே வேறொருவன் அவளைப் பெண் பார்க்க வந்து உட்கார்ந்து விட்டானே…
மிருணாளினி சட்டென்று எழுந்து உள்ளே போய்விட்டாள்..
“எனக்கு பெண்ணைப் பிடிச்சிருக்கு…”
அவனின் வார்த்தைகள் தெளிவாக காதில் விழ.. மனம் நடுங்க.. கண்களை மூடிக் கொண்டாள் மிருணாளினி.
“அடுத்த மாதம் நிச்சயம் பண்ணிரலாம்…”
அவர்கள் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள்.. ரங்கமணி ஆனந்தத்துடன் அவர்களைப் பற்றி மிருணாளினியிடம் எடுத்துச் சொன்னாள்…
வந்தவனின் பெயர் ஹரிஷாம்.. தாரணியின் சின்னமாமனாரின் மகனாம்.. அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராம்.. தாரணியின் திருமணத்திற்கு வர முடியாதவன்.. திருமண வீடியோ கேசட்டில் மிருணாளினியைப் பார்த்து மயங்கி விட்டானாம்.. உடனே பெண் கேட்டு வந்து விட்டார்களாம்..
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.