Chapter 21

0Shares

“நீ கொடுத்து வைத்தவள்…” என்றாள் ரங்கமணி..

‘கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன்.. என் முகிலனை.. அந்த நிஷாவிடம்.. கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன்..’ மனதிற்குள் கூறிக் கொண்டாள் மிருணாளினி…

இரவின் அமைதியில்.. தலையணையை அவளது கண்ணீர் நனைத்தது… மறுநாள்.. அவன் கேபினின் கதவைத் திறந்து உள்ளே சென்றவளை.. அதிருப்தியுடன் முறைத்தான் முகிலன்..

அருகே அதே உதாசீனப் பார்வையுடன் நிஷா இருந்தாள்..

ஒரு விநாடி திரும்பி விடலாமா என்று யோசித்தாள் மிருணாளினி..

ஆனால்.. கண் முன் நின்ற நிச்சயதார்த்தம் அவளைத் தடுத்தது.. அவள் முகிலனின் முகம் பார்த்தாள்..

“த்சு.. கதவைத் தட்டி விட்டு வருவதற்கென்ன..?”

“நினைவில்லை…”

“என்ன விசயம்…?”

“பேசனும்..”

“பேசு…”

மிருணாளினி நிஷாவைப் பார்த்தாள்..

‘இவள் முன்னால் பேசும் விசயமா இது…?’

“தனியாப் பேசணும்…”

நிஷா முகம் மாறி எழுந்து கொள்ள முயல்வதைப் போல நடித்தாள்..

“நான் வேண்டும்ன்னா.. வெளியே வெயிட் பண்ணவா முகில்..? உங்க ஆபிஸ் ஸ்டாப்ஸோட எனக்குப் பழக்கம் கிடையாது.. ம்ம் ஆபிஸுக்கு வெளியே போய் வேடிக்கை பார்க்கவா…?”

அவள் நடித்த நடிப்பில்.. கரிசனப் பார்வையை அவள் மேல் செலுத்தினான் முகிலன்..

“நோ.. நோ.. இங்கேயே இரு.. மிருணா.. எது சொல்லனும்னாலும்.. நிஷாவின் முன்னாலேயே சொல்லு.. அவள் தேர்ட் பெர்ஸனில்லை..”

வெற்றிப் பார்வை பார்த்த நிஷாவின் பார்வையை எதிர்கொள்ள முடியாத மிருணாளினி தன் வசமிழந்தாள்..

அன்றுதான் புதிதாகப் பார்ப்பவளைப் போல.. வெறுப்பை உமிழும் கண்களால் முகிலனைப் பார்த்தாள்..

‘இவனா என் காதலன்…?’

அறுபது நாள்களாக அடங்கிக் கிடந்த ஆக்ரோசம் அன்று கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்தது..

இன்னொரு பெண்ணின் மீது அளவுக்கதிகமாக அபிமானம் காட்டும் காதலனின் மீது.. கட்டவிழ்ந்த அவளுடைய கோபம் கூரிய அம்பென பாய்ந்தது…

“ஓ.. இவங்க உங்களுக்கு மூன்றாம் மனுஷியில்லைங்கிறதை நான் மறந்தே போனேன் பி.எம். சார்.. நான்தான் மூன்றாம் மனுஷி…”

முகிலனின் விழிகள் நெருப்பை உமிழ்ந்தன.. நிஷாவிற்கு முன்னால் மிருணாளினி அவனிடம் பேசிய முறை அவனுக்கு பிடிக்காமல் போனது.. 

“வாய் டு யு வான்ட்…?”

“நத்திங்.. நானென்ன உங்களுடன் மாமல்லபுரம் பார்க்கணும்னு ஆசைப்படப் போகிறேனா..? இல்லை.. ‘மங்காத்தா’ பார்க்கணும்னுதான் ஆசைப்படப் போகிறேனா..? நெவர்..”

எழுந்து மிருணாளினியின் கன்னத்தில் இரண்டு அடி கொடுத்தால்தான் மனம் ஆறும்போல முகிலனுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.

‘எவ்வளவு தைரியமிருந்தால்.. என் வீட்டுக்கு வந்திருக்கும் உறவுக்காரப் பெண்ணின் முன்னால் இப்படி இவள் பேசி வைப்பாள்…?’

“கெட் லாஸ்ட்…” அவன் அடிக்குரலில் சீறினான்..

‘சொன்னது நீதானா..?’ அவள் விழிகள் கேட்டன..

கடைசியில் இந்த வார்த்தையைக் கேட்கத்தான் உயிருக்குயிராய் அவனைக் காதலித்தாளா..?

மிருணாளினி மனம் கசந்தாள்..

“ஷ்யூர்.. நீங்க சொல்லாமலே நான் இடத்தைக் காலி பண்ணியிருப்பேன்.. வந்த விசயத்தை சொல்லத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…”

“சொல்லித் தொலை…”

“தொலையப் போகிறேன்.. அதைச் சொல்லத்தான் வந்தேன்…”

“என்ன உளறுகிறாய்…?”

“என் வீட்டில் என் கல்யாணத்தை முடிவு பண்ணிட்டாங்க.. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்… இதைச் சொல்லத்தான் வந்தேன்.. ஸாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்.. பை..”

மிருணாளினி புயலைப் போல் வெளியேறி விட்டாள்.. ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள் என்ற புதிர் விடுபட.. முகிலன் அவசரமாக போனை எடுத்தான்.. நிஷா அருகிலிருப்பதை மறந்தவனாய் மிருணாளினியின் செல் நம்பரை அழுத்தினான்.

“மிருணா… உன்னிடம் பேசணும்…”

“எனக்கு உங்களிடம் பேச எதுவுமில்லை…”

“ப்ளீஸ்.. நம் வழக்கமான மீட்டிங் ஸ்பாட்டுக்கு வா..”

“உங்க வழக்கம் மாறி விட்டதே…”

“அடிவாங்கப் போறேடி.. பிடிவாதம் பிடிக்காம வந்து தொலை…”

“முடியாது…”

“சொன்னால் கேளுடி…”

“நான் சொன்னதை நீங்க கேட்டிங்களா..? நான் சந்திக்கணும்னு சொன்னபோது நீங்க வந்தீங்களா..?”

“போனதை விடுடி…”

“விடுகிறதுதான் உங்க பழக்கம்ன்னு எனக்கு இப்பத்தானே புரியுது..”

“த்சு.. இது நம்ம வாழ்க்கைடி…”

“இல்ல சார்.. இனி உங்க வாழ்க்கை வேற.. என் வாழ்க்கை வேற.. குட்பை..”

முகிலன் ஓய்ந்து போய் விட்டான். நிஷா கூட வருகிறாளா இல்லையா என்று கூடப் பார்க்காமல் மிருணாளினியைத் தேடி ஓடினான். அவள் சீட்டில் இல்லை..

“இப்பத்தான் லீவு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு போனா.. ஒரு வாரம் லீவாம்..” விவரம் சொன்னாள் ஜெயந்தி.. எல்லாக் கதவுகளை அடைத்து விட்டு..  அவள் ஓடி விட்டதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவனால் அணுக முடியாத இடம் அவளுடைய வீடு…

அதற்குள் போய் பதுங்கிக் கொள்ளும் அவளது புத்திசாலித்தனமும் அவனுக்குப் புரிந்தது..

வெறிப் பிடித்தவனைப் போல வீட்டுக்குள் வந்து நின்ற மகனைப் பார்த்த கோகிலா திகைத்துப் போனாள்..

“என்னடா இப்படி வந்து நிற்கிற..? ஜுரமா…”

“ம்த்சு.. ஒண்ணுமில்ல.. அம்மா.. அக்காவோட உறவுக்காரப் பெண்ணுக்கு என்னால் செய்ய முடிந்த ஹெல்பை நான் பண்ணி விட்டேன்.. இனி என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. இந்தப் பெண்ணை பத்திரமாய் ஊருக்கு அனுப்பி வையுங்க..”

கோகிலாவின் பதிலை எதிர்பார்க்காமல் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி.. மாடிக்குப் போய்விட்டான் முகிலன்..

‘இந்தப் பெண்!’ நிஷா மனதில் அடி வாங்கினாள்..

அவள் பெயர் கூட அவனுக்கு நினைவில் இல்லையா..? இந்த அளவுக்கு மிருணாளியின் விலகல் அவனைப் பாதிக்கிறது என்றால் அதற்கு அர்த்தம் என்ன..?

நிஷா சிந்தனையுடன் கட்டிலில் அமர்ந்த போது அவளது செல்போனின் மணி ஒலித்தது..

“நான் மிருணாளினி…”

“ம்ம்ம்…”

“என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் நிஷா.. நான் உன்னிடம் தோற்று விட்டேன்..”

‘நான் சொல்ல வேண்டியதை நீ சொல்கிறாய்…’

“ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட்டை நான் மீறவில்லை…”

‘அதனால் எனக்கு ஒரு பயனுமில்லை…’

“எங்கிருந்தோ வந்த உன்னால்.. வெறும் இரண்டு மாத கால அளவில் அவர் மனதைக் கவர்ந்து.. என் நினைவை மறக்கடிக்க முடிகிறதென்றால்.. என் மீதான அவரின் காதல் எத்தனை பலவீனமானதாக இருக்க வேண்டும்..?”

‘போடி முட்டாள்.. அது காலத்தால் அழியாத பலம் வாய்ந்தது..’

மிருணாளினி செல்லை அணைத்து விட்டால் சொல்ல நினைத்ததை அவளிடம் சொல்லாமல் நிஷா டெல்லிக்கு திரும்பிவிட்டாள்.

“என்ன நிஷா…” கௌதம் விசாரித்தார்..

“இது வேலைக்கு ஆகாது டாட்.. வேறு இடம் பாருங்க..”

“ஏன்ம்மா…?”

“அவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள்..”

“மறக்கடிக்க உன்னால் முடியாதா…?”

“அது என்ன தேவைக்கு..? எனக்கும்.. என் ஆண் என்னை மட்டும் நினைக்கணும்ன்னு இருக்காதா..?”

“அதற்கில்லைம்மா.. இவனிடம்தான் நீ சொன்ன அத்தனை தகுதிகளும் இருக்கு..”

“ஸோ வாட்…? எந்தத் தகுதி இருந்தாலும்.. இல்லைன்னாலும்.. இனி எனக்கு ஒன்றுமில்லை டாடி.. அவன் என்னை மட்டும் காதலிக்கிறவனாக இருக்கணும்.. அது ஒன்று மட்டும் இருந்தால் போதும்.. மத்ததைப் பற்றி எனக்குக் கவலையில்லை…”

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததைப் போல.. அவரது மகளுக்கு சென்னையில் ஞானம் பிறந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் கௌதம்..

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link