Chapter 02

0Shares

அவனா ஆசைப்படுகிறான்..? அவளை அவன் வம்புக்கு இழுக்க வேண்டுமென்று அவள்தானே ஆசைப்படுகிறாள்.. எதிர் வீட்டுக் கன்னிகையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணைக்கடல் பொங்கி விட்டது விவேகானந்தனுக்கு..

“அம்மா.. பால்..”

சைக்கிளில் பால் கேனுடன் கோபால் வந்து இறங்கினான்.. மீனாட்சி வருவதற்குள் செய்ய வேண்டிய வேலையைச் செவ்வனே ஆரம்பித்து விடவேண்டும் என்ற முனைப்புடன் கோபாலைப் பார்த்த விவேகானந்தன்.. பலமாக சிரித்து வைத்தான்..

“எதுக்கு சார்.. சிரிக்கறிங்க..?” அப்பாவி கோபால் கேட்டான்.

“நமக்கு இருக்கிற கஷ்டத்த வெளியே காட்டிக்கவே கூடாது கோப்பால்.. பாக்கறவங்க நம்ம சிரிப்பில கடுப்பாகி வெந்து சாவாங்கள்ல..” வந்தனாவைப் பார்த்தபடி சொன்னான் விவேகானந்தன்..

அவன் அவளைத்தான் சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்து விட்டது.. பல்லைக் கடித்தபடி புள்ளி கோலம் போடுவதில் கவனமாக இருப்பதைப் போல காண்பித்துக் கொண்டாள்..

“முடியல கோப்பால்..” என்றான் விவேகானந்தன்.

“என்ன சார்..?”

“விட்ட விடிகாலையில பாக்கிற காட்சி நல்ல காட்சியா இருக்கனும்.. சூரிய உதயம்.. செடியில பூத்திருக்கும் பூ.. வானத்தில் பறக்கும் பறவை.. பால் கொண்டு வரும் கோபால்ன்னு பாக்கிற விசயங்கள் அற்புதமாக இருக்கனும்.. அப்பத்தான் அன்றைக்கு நாள் நல்லா இருக்கும்..”

“அருமையாச் சொன்னிங்க..”

“என்னத்த அருமையாச் சொல்லி.. என்னத்தப்ப பண்ண..?”

“ஏன் சார்..?”

“எல்லாத்தையும் கெடுக்கிறதைப் போல ஆக்கம் கெட்ட ஆந்தைக மூஞ்சியில முழிக்க வேண்டியிருக்கே..”

‘நான் ஆக்கம் கெட்ட ஆந்தையா..?’ வந்தனா மனதுக்குள் குமுறினாள்.. எப்படி என்னைச் சொல்லப் போயிற்று என்று கோலத்தை மறந்து விவேகானந்தனுடன் சண்டைக்குக் கிளம்பியிருப்பாள்.. அப்படி அவள் செய்ய முடியாமல் சில தடைகள் தடுத்தன.. முதலில் அவன் உன்னையா சொன்னேன்.. நான் பொதுவாகச் சொன்னேன் என்பான்.. சாட்சிக்கு என்ன கோபால் என்று பால்கார கோபாலை இழுப்பான்.. அவன் ஆமாம் சார் போடுவான்.. அத்துடன் நிறுத்தாமல் அந்தச் செய்தியை உலகம் முழுவதும் பரப்புவான்..

‘தேவையா..?’

இரண்டாவதாக இதுவரை வந்தனா விவேகானந்தனுடன் நேரடியாகச் சண்டையிட்டதில்லை.. சகட்டு மேனிக்கு ஜாடை பேசித் தப்பித்து விடுவாள்.. அதிலும் ஆரம்பம் இவளுடையதாகத்தான் இருக்கும்..

இதுபோன்ற பானிபட் போர்கள் முடிவில்லாத யுத்தமாக விவேகானந்தனுக்கும் வந்தனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருப்பதற்கு மூல காரணம் இருந்தது.. அந்தக் காரணம் யாதெனில்.. விவேகானந்தனின் நண்பன் செந்தில்நாதன் வந்தனாவுக்குக் காதல் கடிதம் கொடுக்க விரும்பினான்.. அதை செவி மடுத்த விவேகானந்தன் வேம்பைக் கடித்து விட்டதைப் போல முகம் சுளித்து..

“அட்டுப் பிகர்டா அவ.. உனக்கு லவ் பண்ண வேற மூஞ்சியே கிடைக்கலியா..? நசுங்கிப் போன தகர டப்பா போல இருக்கா.. அவளை லவ் பண்றேன்னு கிளம்பி வந்துட்டான்.. போடா போ.. போய் உருப்படியா ஒரு பிகரைத் தேடற வழியைப் பாரு..” என்று உபதேசித்து திருப்பி அனுப்பி விட்டான்.. அந்த ஞானோபதேசத்தை வந்தனா கேட்டு விட்டாள்..

‘இந்த நாள்.. எழுதி வைச்சுக்கடா மகனே..’ என்று சூளுரைக்காத குறைதான்.. வந்தனாவின் கண்களில் விவேகானந்தன் தென்பட்டு விட்டால் போதும்.. வந்தனாவின் ஜாடைப் பேச்சுக் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விடும்.. சில தினங்களில் நாள் முழுவதும் அவள் நான்-ஸ்டாப்பாக பேசித் தள்ளியதும் உண்டு.. அந்த நாள்கள் விடுமுறை நாள்களாக இருக்கும்..

அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமையாக இல்லை..

அப்படி இருந்திருந்தால் ‘இன்னைக்குப் பூரா இருக்குடா உனக்கு..’ என்று பல்லைக் கடித்துத் தாளித்துக் கொட்டியிருக்கலாம்.. அப்படியில்லாமல் அன்று புதன்கிழமையாக இருந்து வைத்தது.

உக்கிரமாகாளியாக உஷ்ணத்துடன் விவேகானந்தனை உற்றுப் பார்த்தாள் வந்தனா.. பதிலுக்கு அவன் புருவங்களை உயர்த்த.. கோபால் யாரைப் பார்த்து அவன் புருவங்களை உயர்த்துகின்றான் என்று திரும்பிப் பார்த்தான்..

அவசரமாகக் குனிந்து கோலத்தில் கவனமான வந்தனாவின் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.. அவனை என்னவென்று கேட்காமல் போகக் கூடாது என்ற ஆத்திரத்துடன் அலை பாய்ந்து கொண்டிருந்தாள்..

‘இந்தப் பால்க்கார கோபால் ஏன் பசை போட்டதைப் போல இவன்கூட ஒட்டிக்கிட்டு நின்னு கெக்கே பிக்கேன்னு பேசிச் சிரித்துக்கிட்டு இருக்கான்..? இந்த ஒரு வீட்டுக்கு மட்டும்தான் பால் ஊத்தறானா..? வேற வீடுகளுக்குப் போகனும்ங்கிற நினைப்பே இல்லையா..? இந்த விவேகானந்தன் என்ன ‘மை’ வைச்சிருக்கானா..? என் தம்பியில இருந்து இந்தப் பால்க்கார கோபால் வரைக்கும் அத்தனை பேரும் ரங்கராட்டினம் போல இவனையே சுத்திச் சுத்தி வாரானுக.. ஆள் மயக்கி..!’

ஜாடையாக அவள் ஜாடைப் பேச்சில் தாக்கும் விவேகானந்தனைப் பார்த்தாள்.. அதிகாலைக் காற்றில் முன்னுச்சி முடி பறந்து நெற்றி மீது படிய அமர்க்களமாக இருந்தான்.. கிரேக்க சிற்பம் ஒன்றின் கோட்டுச் சித்திரம் போலத் தெரிந்தவனின் முக வசீகரத்தில் அவளது மனம் மயங்க முனைந்தது.. அட்டுப் பிகர்டா அவ.. உனக்கு லவ் பண்ண வேற மூஞ்சியே கிடைக்கலியா என்ற அவளைப் பற்றிய விவேகானந்தனின் வர்ணிப்பு நினைவுக்கு வந்து அவளது மயக்கத்தை விரட்டி விட்டது..

‘இவன் மூஞ்சியெல்லாம் பெரிய இந்த மூஞ்சி.. மனசுக்குள்ள மன்மதன்ங்கிற நினைப்பு.. பேர்ந்து போன பித்தளை அண்டாவைப் போல மூஞ்சியை வைச்சுக்கிட்டு இவன் என் மூஞ்சியை வழுப்பம் செப்பறான்.. ஆளைப் பாரு.. தேவாங்கப் போல..’

அநியாயத்திலும் அநியாயமாக அவன் முகத்தைப் பழித்தபடி தப்புத் தப்பாக புள்ளியை வைத்துச் சரியாக கோலம் போட்டு விட்டாள்..

“அது எப்படி கோபாலு.. தப்புத்தாளங்கள் ஸ்ருதி பிசகாத ராகங்களா மாறிக்கிட்டு இருக்கு..?” விவேகானந்தன் அதையும் கவனித்து விட்டு சலம்பல் பண்ணினான்..

‘இவன் கண்ணுக்கு எதுவும் தப்பாது..’

வந்தனா எரிச்சலுடன் கோலத்தை சரி பண்ணிக் கொண்டிருந்த போது.. “கீரை வாங்கலையாம்மா..?” என்றபடி சைக்கிளை நிறுத்தினாள் பூங்கோதை..

பாவாடை தாவணியில் வளப்பமாக இருந்தாள்.. சைக்கிளின் பின் கேரியரில் கட்டப்பட்டிருந்த கூடையில் கீரைக் கட்டுக்கள் அவளைப் போலவே தளதளவென இருந்தன.. கூடவே வாழைத்தண்டு, வாழைப்பூ, முருங்கைக்காய்.. வந்தனாவிடம் பேசியபடி கோபாலை முறைத்தாள்..

“ஏன் கோபால்.. அந்தப் பொண்ணு போனவாரம் வரைக்கும் உன்னை சைட் அடிச்சுக்கிட்டு இருந்ததைப் போல தோணுச்சே..”

“தோணறது என்ன சார்.. சைட்டடிச்சுக்கிட்டு இருந்தவதான்..”

கோபால் ஏக்கம் கலந்த சோகப் பெருமூச்சடன் எதிர்வீட்டு வாசலில் நின்றிருந்த பூங்கோதையைப் பார்த்தான்.. அவளது சைக்கிளின் முன்பக்கமாக எப்.எம் ரேடியோ கட்டி வைக்கப் பட்டிருந்தது.. அதிலிருந்து..

“நான் உன்னை அழைக்கவில்லை –

என் உயிரை அழைக்கிறேன்..”

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

“அப்புடியே நீ பாடறதைப் போலவே இருக்கு கோபால்..” சிலாகித்தான் விவேகானந்தன்..

“என் மனசு பாடுது சார்..”

“இருப்பா.. விட்டா தேவதாஸ் போல தாடியை வளர்த்துக்கிட்டு கம்பளியைப் போர்த்திக்கிட்டு நாய் பக்கத்தில போய் உட்கார்ந்திருவ போல இருக்கே.. எதுக்காக இப்படி சோக வயலின் வாசிக்கிற..? அந்தப் பெண் என்னவோ எதிரிக்காரனைப் பார்க்கிறதைப் போல இப்படி முறைச்சுக்கிட்டு நிற்குது.. என்னதான் ஆச்சு..?”

“அதையேன் சார் கேக்கறிங்க..?”

“சரிப்பா.. கேட்கலை..”

“நீங்க கேட்கலைன்னா வேற யாரு சார் கேப்பாங்க..”

“உனக்கே இது நல்லா இருக்கா கோபால்..? என்னன்னு கேட்டா அதையேன் கேக்கறிங்கங்கற.. கேட்கலைன்னு சொன்னாக் கேளுங்கன்னு கெஞ்சற.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. விடிஞ்சதும் நான் முழிச்ச முழி அப்படி.. அருமையான முகராசி.. ம்ஹீம்..”

விவேகானந்தன் வந்தனாவை பார்வையிட்டபடி அலுத்துக் கொண்டான்.. வந்தனாவுக்கு டென்சன் ஏறியது.. சரியாகி வந்த கோலம் மறுபடியும் தப்புத் தாளங்கள் போட.. அழித்து விட்டுப் புதிதாக புள்ளி வைத்தாள்..

“இன்னைக்குள்ள முடிஞ்சிருமா..?”

விவேகானந்தன் கோலத்தைத்தான் சொல்கிறான் என்று எவரும் விளக்கவுரை, பொழிப்புரை உரைக்காமலே வந்தனாவுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது.. அவள் இமைகளை மூடித் தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள்..

‘இந்தக் கோலமும்தான் முடிந்தா என்ன..? இன்னைக்குன்னு பார்த்து இவன் முன்னால இப்புடிப் பழி வாங்குதே..’

கோலமும் அவனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டதே என்ற ஆற்றாமை அவளுக்கு.. அவளுடன் பிறந்த தம்பிதான் அவள் சொல் போச்சுக் கேட்க மாட்டேன் என்கிறான் என்றால் கோலமும் கூட்டணி போடுமா..?

“நீ சொல்லு கோபாலு.. என்னதான் உன் பிரச்னை..?”

அவன் கோபாலிடம் பேசத் தாவிவிட வந்தனாவுக்கு அப்பாடி என்று இருந்தது.. இப்போதைக்கு அவன் கோலத்தைக் கவனிக்க மாட்டான்.. அதற்குள் கோலத்தை சரி செய்து விட வேண்டும்..

“நேத்து அவ வீட்டுப் பக்கம் போனேன் சார்..”

“நேத்து மட்டுமா போன..? தினமும்தான அந்தப் பக்கம் ரோந்து வர்ற..?”

“தினமும் வந்ததைப் போல ரோந்தோடு நிப்பாட்டியிருந்தா என் பொழைப்பு இப்புடி ஆகியிருக்காதே சார்..”

“ரொம்பத்தான் நொந்து போயிருக்க போல.. விசயத்தக் கக்கு..”

“இவ தண்ணி அடிச்சுக்கிட்டு இருந்தா சார்..”

“என்னது..?”

“அடி பம்பில தண்ணி அடிச்சுக்கிட்டு இருந்தா சார்..”

“சொல்கிறதைச் சரியாச் சொல்லுப்பா.. ஒரு செகண்ட் திகில்பிடிச்சு போச்சு..”

வந்தனாவுக்கு சிரிப்பு வந்தது.. கீரை விற்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த பூங்கோதை எதிர்வீட்டில் நடந்து கொண்டிருந்த உரையாடலை செவி மடுக்கவில்லை.. நெற்றியில் திருநீரும் குங்குமமும் தீற்றி… பின்னலில் பூச்சரத்துடன் மங்களகரமாக நின்றிருந்தவளின் தோற்றத்துக்கும் விவேகானந்தனின் விவரிப்புக்கும் ராக்கெட் விட்டால் கூட எட்டாது..

‘அயோக்கிய ராஸ்கல்.. வாயிருக்கிறது என்பதற்காக எதை வேணும்னாலும் பேசிருவான்..’

அந்த அயோக்கிய ராஸ்கல் பால்கார கோபாலின் காதலில் சோகம் ஏன் வந்தது என்ற கதையை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.. வந்தனா உதட்டைச் சுழித்தாள்..

‘இவன் ஊர் நாட்டாமை.. தஞ்சாவூருக்கே தராசு.. தீர்ப்புச் சொல்கிறதில சிங்கம்.. இந்தக் கோபால் வேலை மெனக்கெட்டு இவனிடம் கதை சொல்லிக்கிட்டு இருக்கான்..’

இவள் புள்ளியை வைத்துக் கொண்டே விவேகானந்தனைப் பார்க்க.. அவன் கோபாலிடம் பேசியபடி இவளை நோட்டம் விட.. அங்கே கோலம் உருவானதோ இல்லையோ.. பார்வை மோதல் உருவானது..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link