Chapter 03
“ஏன் கோபால்.. அந்தப் பொண்ணு அடி பம்பில தண்ணியடிச்சுக்கிட்டு இருந்ததை டாஸ்மார்க்கில் தண்ணியடிச்சுக்கிட்டு இருந்ததைப் போல சொல்லி வைச்சா கேட்கிறவன் கதி என்னவாகும்ன்னு யோசிச்சுப் பார்த்தியா..? சரி அந்தக் கதையை விடு.. இப்ப உன் சொந்தக் கதைக்கு வா.. அடிபம்பில தண்ணியடிச்சுக்கிட்டு இருந்த பொண்ணு உன்மேல ஏன் கோபப் பட்டுச்சு..? நீ பம்பில தண்ணி அடிச்சு விடலைங்கிற கோபமா இருக்குமோ..?”
“அப்படியிருந்தாத்தான் தேவலையே.. எனக்கு பம்ப்பில தண்ணியடிச்சு விடறதுன்னா தண்ணி பட்ட பாடாச்சே..”
“உனக்கும் தண்ணிக்கும் அன்யோன்ய உறவு போல..”
“ஆமாம் சார்.. இவ அதைக் கேட்காம என்னைக் கண்டதும் ஜாடையாப் பாட்டுப் பாட ஆரம்பிச்சா..”
“அடிறா சக்கை.. அப்புறம்..? அந்தப் பாட்டை நீ ரசிச்சுக் கேட்டியா..?”
“கேட்டிருக்கனுமோ..?”
“என்னப்பா நீ.. சுத்த விவரம்கெட்ட ஆளா இருக்கியே.. பாட்ட கேக்கச் சகிக்காம இருந்தாலும் தேனிசையைக் கேட்டுவிட்ட மாதிரி தலையைத் தலையை ஆட்டியிருக்க வேணாமா..?”
“எனக்கெங்கே சார் இந்தக் கழுதையெல்லாம் தெரியுது..? நான் அதை விட்டுட்டு வாயை வைத்துக்கிட்டு சும்மா இருக்காம அவ பாட்டுக்கு எசைப்பாட்டு பாடிட்டேன்..”
“என்னது..?”
விவேகானந்தன் அதிர்ச்சியாக கோபாலை மேலும் கீழும் பார்க்க.. கோபால் பரிதாபமாக விழித்தான்.. வந்தனாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. விவேகானந்தன் பண்ணும் அட்டூழியத்திற்கு அவள் சிரித்து வைத்தால் அவள் ரோசக்காரியே அல்ல என்பதினால் பகீரதப் பிரயத்தனப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தில் எள்ளையும் கொள்ளையும் பொரியவிட்டு அவனை முறைத்தாள்.. அவனோ படு கெத்தாக அவளது முறைப்பை அலட்சியப் படுத்தி ஓட விட்டு கோபாலின் பக்கம் திரும்பிக் கொண்டான்..
கோபாலின் குரல் வளம் பற்றி அறிந்தவர்கள் அவனுடன் சாதாரணமாக உரையாடக் கூட யோசிப்பார்கள்.. தகரடப்பாவில் கரும்கற்களைப் போட்டு உருட்டி விட்டதைப் போன்ற கர்ணகடூரமான குரல் அவனுக்கு.. அந்தக் குரலை வைத்துக் கொண்டு அவன் காதல் மொழி பேசினாளே பூங்கோதை பிடறியில் கால் பட ஓடியிருப்பாள்.. இந்த லட்சணத்தில் எசைப் பாட்டை பாடி வைத்தால் அவள் இவனை ஏறெடுத்துப் பார்ப்பாளா..?
“அவசரப் பட்டுட்டியே கோபால்..”
“ஆமாம் சார்.. என் பாட்டக் கேட்டதும் அவ கால் வழுக்கிக் குடத்து மேலேயே விழுந்துட்டா சார்..”
“அடப்பாவமே…”
“அடிபம்பில அவ அடிச்சு வைச்சிருந்த தண்ணி முச்சூடும் கவிழ்ந்துருச்சா.. என் பாட்டக் கேட்ட கடுப்போட அந்தக் கடுப்பும் சேர்ந்துக்கிச்சு.. எதிரிக்காரனப் பார்க்கிறதைப் போல என்னைப் பார்த்து முறைச்சா சார்.. அப்ப இருந்து இப்ப வரைக்கும் அதே முறைப்புதான்.. இந்த பால்கார கோபால் கதி இப்படியா ஆகனும்..?”
“அதுக்கு நீ வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கனும்.. உன்னை யாரு அந்தப் பொண்ணு பாட்டுக்கு எசைப்பாட்டு பாடச் சொன்னது..? இப்பப் பாரு.. உன் பாட்டாலே இந்தப் பாடுபடற..”
கோபால் மூக்கைச் சிந்தியபடி பூங்கோதையைப் பார்த்தான்.. அவள் கனல் வீசும் பார்வையுடன் சைக்கிளில் ஏறிப் பெடல் மிதித்தாள்.. அவளது எப்.எம். ரேடியோ..
“அவள் பறந்து போனாளே..
என்னை மறந்து போனாளே..”
என்று பாட.. பறந்து போக முனைந்தாள்.. இன்னும் சில பெண்கள் கீரை வாங்க வந்ததில் தேங்கி நின்றாள்..
“விடு கோபாலு.. வீட்டுப்பக்கம் போய் பேசிப்பாரு..” விவேகானந்தன் கோபாலை சமாதானப் படுத்தி வழி சொல்லிக் கொடுத்தான்..
“அங்கே போயி.. என்னத்தப் பேசி..”
“புலம்பாம வேற என்ன செய்கிறதுன்னு யோசி.. மறுபடியும் பாட்டை மட்டும் பாடிராதே.. இன்னொரு விசப் பரிட்சையை அந்தப் பொண்ணு தாங்காது..”
“வேற என்ன செய்ய சார்.. கவித எழுதித் தந்திரவா..?”
ஒருவழியாக புள்ளி கோலத்தை பூர்த்தி செய்து முடித்து விட்ட வந்தனாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது..
‘இவனெல்லாம் கவிதை எழுதி..’
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அநியாயத்துக்கு கவிதையைச் சீண்டிப் பார்க்கிறார்களே என்ற அறச்சீற்றம் எழுந்தது.. அதையே விவேகானந்தனும் கேட்டு வைத்ததில் அவன் மீதான கோபம் குறையவா என்றது..
“நீயெல்லாம் கவிதை எழுதினா உலகம் தாங்குமா கோபால்..?”
“போங்க சார்.. இந்த உலகம் எத்தனையெத்தனை சேதாரங்களைத் தாங்கிக்கிட்டு இருக்கு.. என் கவிதையைத் தாங்காதா..?”
“உலகம் தாங்கும்.. உன் காதலி தாங்கிக்குமா..?”
“என் பாட்டக் கேக்கிற கொடுமைக்குப் பதிலா எந்தக் கொடுமையையும் அவ தாங்கிக்குவா சார்..”
“என்ன ஒரு நிச்சயம்..! புல்லரிக்குது கோபால்..”
“கவித சொல்றேன்.. கேக்கறிங்களா..”
கோபால் ஆர்வமாக சைக்கிளை விட்டு இறங்கி விட்டான்..
“உன்னை நம்பி எத்தனை குடும்பம் காபி போட பாலுக்காக காத்திருக்குது.. அதை நினைச்சுப் பார்க்காம அணுகுண்டைத் தூக்கிப் போடக் கிளம்பிட்டயே கோபால்..” விவேகானந்தன் வந்தனாவின் கோலத்தை ஒர்முறை பார்த்துக் கொண்டான்..
‘அங்கதான் பேசிக்கிட்டு இருக்கானில்ல.. இங்கே எதுக்கு பார்வை..?’
வந்தனா முறைப்புடன் எழுந்து நின்றாள்.. பூர்த்தியடைந்து விட்ட கோலத்தை ஓர்முறை பார்த்து விட்டு நிமிர்ந்தாள்..
“அது எப்படி கோபால்.. எகனைக்கு மொகனையா ஆனாலும் என்னென்னத்தையோ பண்ணிச் சரியாக் கொண்டு வந்திடற..? உன்னப் பாராட்ட வார்த்தைகளே இல்ல கோபால்..”
விவேகானந்தனின் பாராட்டு கோபாலுக்கானதல்ல என்பதை வந்தனாவின் மனம் மட்டுமே அறியும்.. கோபால் எப்படி அறிவான்..? அவன் என்னவோ விவேகானந்தன் அவனைத்தான் பாராட்டுகிறான் என்று புளகாங்கிதப் பட்டுப் போனவனாக..
“நான் கவித சொல்லப் போறேன்னு சொன்னதுக்கே இப்புடிப் பாராட்டறிங்களே சார்.. நான் சொல்ற கவிதயக் கேட்ட பின்னாடி எப்புடிப் பாராட்டுவீங்க..?” என்று நாணிக் கோணினான்..
அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் விவேகானந்தன்..
“முடியல கோபால்..” என்று இமைமூட.. வந்தனா முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிப்பை மறைத்தாள்..
“கவிதயக் கேக்கனும்ன்னு சாருக்கு அம்புட்டு ஆசை.. முடியல கோபால்ங்கிறாரு.. இந்தா சொல்றேன் பாருங்க கவிதய..” கோபால் சிங்கம் போல சிலிர்த்துக் கிளம்ப..
“பொறுமை கோபால்.. கவிதையை எழுதனும்.. சொல்லக் கூடாது..” என்று அவனது வேகத்துக்கு தடை போட முயன்றான் கோபால்..
‘சிக்கினான்டா சேகரு..’
வந்தனாவுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.. வாயைத் துடைப்பதைப் போலச் சிரிப்பை மறைத்தபடி கோலப்பொடி கிண்ணத்தை வாசல் படியில் வைத்து விட்டு கீரைக் கட்டுகளைக் கிளற ஆரம்பித்தாள்..
‘இவ நிஜமாவே கீரை வாங்கப் போகிறாளாக்கும்..!’
விவேகானந்தனா அதை நம்புவான்..? அவன் நம்புவான் என்று வந்தனாவும் நம்பவில்லை.. இனம் இனமறியும்.. இவள் அவனை அறிவாள்.. அவனும் இவளை அறிவான்..
“என்ன சார் ஞாயம் இது..? எழுதின கவிதய சொல்ல மாட்டாங்களா..?” கோபால் நியாயம் கேட்டான்..
“தாராளமாச் சொல்லலாமே..”
“அதத்தானே சொல்ல வர்றேன்.. நீங்க வேணாம்ங்கறிங்களே..”
“நீ இப்பக் கிளம்பிப் போ கோபாலு..”
“போயி..?”
“வீட்டு வீட்டுக்கு பாலூத்து.. ஊத்தி முடிஞ்சதும் வீட்டுக்குப் போ..”
“போயி மாட்டுக்கிட்டப் பாலைக் கறந்து மறுபடியும் வீட்டு வீட்டுக்குப் பாலூத்தனும்.. அதானே சார்.. இது ஒரு தொடர்கதை சார்.. முடிவே இருக்காது..”
‘பாருடா.. பால்காரன் பிலாசபி பேசறான்..’
விவேகானந்தனின் விழிகள் வந்தனாவின் மீது தாவின.. அவளும் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. இவன் பார்ப்பதைக் கண்டதும் கீரையை ஆராய்வதைப் போல பாவனை செய்தாள்..
‘கைகாரி..’
அவளது கைகளைப் பார்த்தான்.. பொன்னிறத்தில் பொன் வளையல்களுடன் பளபளத்தன.. ‘வளையோசை கலகலவென’ என்று மனதில் பாடல் ஒலித்தது.. மெல்லிசையில் மூழ்கியவனை மனதின் பாடலோடு லயிக்க விடாமல்.. ‘நச, நச..’ வென கோபால் இம்சை செய்தான்..
“என்ன சார்.. பால்கார கோபாலுக்குள்ள இம்புட்டு அறிவான்னுதான பிரமிச்சுப் போயிட்டிங்க..?”
இல்லையென்றா சொல்ல முடியும்..? அதற்காக ஆமாம் என்றும் சொல்லிவிட முடியாதே.. அவன் விவேகானந்தன் ஆயிற்றே.. அதலினால் இமைக்காத ஓர் பார்வையை மட்டும் பார்த்து வைத்தான்.. வந்தனாவுக்கு இனிப்பாக இருந்தது.. விவேகானந்தனுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை அவள் மனதுக்குள் கொண்டாடினாள்.. எப்போதும் எதிராளியின் மீது குறி தவறாமல் பந்தை எறிபவன் அவன்.. அவனுக்கே கிடுக்கிப்பிடியா..?
“உனக்குத் தெரியாதா கோபால்..? ஊரையெல்லாம் சுற்றினாலும் உறங்க வீட்டுக்குத்தானே போயாகனும்..?”
“ஆஹா.. என்ன தத்துவம்.. என்ன தத்துவம்.. அசத்திட்டிங்க சார்..”
கோபால் கைதட்டி பாராட்டினான்.. வந்தனாவின் இதழ்களில் கேலிப் புன்னகை நெளிந்தது.. விவேகானந்தனின் இமைக்காத உக்கிர பார்வைக்கு.. ‘போடா..’ என்பதைப் போல உதட்டை வளைத்தாள்..
“தத்துவத்தை விடு கோபால்.. உறங்கப் போகிறப்ப கவிதை எழுது..”
“அது எப்புடி சார்..? உறங்கப் போனா உறக்கம்தான வரும்..? கவித எப்புடி வரும்..?”
இப்போது வந்தனாவின் சிரிப்புச் சப்தம் வர.. விவேகானந்தனின் நாக்கு நுனியில்.. நல்ல நல்ல வார்த்தைகள் வரவா என்று அணி வகுத்தன.. இமை கொட்டித் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.. இந்த வந்தனாக் குரங்கைக் கலாய்க்க நினைத்து பால்கார கோபாலை நிறுத்திப் பேச்சுக் கொடுத்தால் அவன் கவிதை சொல்லப் போகிறேன் என்று பாடாய் படுத்துகிறானே.
“இப்ப உனக்கு என்னதான் வேணும்..?”
“நான் சொல்ற கவிதய நீங்க கேக்கனும் சார்..”
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.