Chapter 04

0Shares

நினைத்து நினைத்து சிரித்தாள் வந்தனா.. நாள் முழுவதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.. சமையலறையில் இருந்த அவளது அம்மா ருக்மிணி..

“எதுக்குடி இம்புட்டுச் சிரிப்பு..?” என்ற அதட்டலுக்கும் அவளது சிரிப்பு நிற்கவில்லை..

“நீயெல்லாம் சிரிக்கிறதைப் போல என்ன நடந்திருச்சு..?” என்ற தம்பி வருணின் மட்டம் தட்டலுக்கும் அவளது சிரிப்பு அடங்கவில்லை..

“பெண்பிள்ளை இப்படி நிறுத்தாம சிரிச்சுக்கிட்டு இருக்கக் கூடாதும்மா..?” என்ற தந்தை நாராயணனின் அறிவுரைக்கும் அவளது சிரிப்பு அடி பணியவில்லை..

“அடியாத்தி.. நம்ம பாப்பா என்னதுக்கு இம்புட்டுச் சிரிப்புச் சிரிக்குது..?” வேலைக்காரி பூவாயி மோவாயில் விரலை வைத்து அதிசயித்தாள்..

“அவளுக்கு என்ன..? காலையில புருசனையும், பிள்ளைகளையும் கிளம்பி அனுப்பி வைக்கனும்ங்கிற பொறுப்பு இருக்கா..? காலையில ஒன்னு.. மதியத்துக்கு ஒன்னு.. சாயந்திரத்துக்கு ஒன்னு.. ராத்திரிக்கு ஒன்னுன்னு வக்கணையா, நாக்குக்கு ருசியாச் சமைச்சுப் போடனும்ங்கிற கடமையிருக்கா..? எந்தப் பொறுப்பும் இல்லாம இருக்கவளுக்குச் சிப்பாணி வரத்தான் செய்யும்..? ம்ஹீம்.. நானும் ஒரு காலத்தில இப்புடீ இருந்தவதான்.. கல்யாணக் கனவில விழுந்தேன்.. செக்கு மாடு போல மாட்டிக்கிட்டேன்..”

மகளின் சிட்டுக்குருவித்தனத்தில் கடந்தகாலச் சுதந்திரச் சிறகடிப்பின் நினைவு அனைத்துத் தாய்மார்களுக்கும் இறக்கை விரித்து விடுகின்றது.. குடும்பத்தின் அச்சாணியாகச் சுழல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு நினைவுகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன..

சிரிப்புடனே குளித்துக் கல்லூரிக்குக் கிளம்பி கல்லூரி பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னாலும் அவளது சிரிப்பு குறையவில்லை..

“என்னடி..?”

தோழிகளுக்கு மர்மம் தாங்கவில்லை.. வந்தனா வாய் பொத்திச் சிரித்தாளே தவிர.. எதையும் சொல்லவில்லை.. வகுப்பறையிலும் அதுவே தொடர்ந்ததில் லெக்சரர் அவளை எழுப்பி நிற்க வைத்தாள்.

“என்ஜினியரிங் ஃபைனல் இயர் படிக்கிற.. இந்த வருசம் முடிந்ததும் பொறுப்பான வேலையில் உட்காரப் போகிற.. இந்த நினைவு மனதில் இருந்தா இப்படி எல்.கே.ஜி பிள்ளையைப் போல சிரித்துக்கிட்டு இருப்பியா..?”

“ஸாரி மேம்..”

“ஐ டோன்ட் லைக் யுவர் ஸாரி..”

லெக்சரர் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு எரிந்து விழுந்தாள்.. வந்தனாவின் பக்கத்திலிருந்த ஆஷா எரிதணலில் எண்ணையை ஊற்றுவதைப் போல..

“மேம்.. இவ சுரிதார்தான் போட்டிருக்கா.. ஸாரி கட்டலை..” என்று வந்தனாவின் சிரிப்பை அதிகரித்து வைத்தாள்..

“கெட் அவுட்..”

லெக்சரர் கத்தி வாய் மூடுவதற்குள் பெல் ஒலிக்க.. அனைத்து மாணவ, மாணவிகளும் வெளியேறத் தயாரானார்கள்..

“எக்கேடோ கெட்டுத் தொலைங்க..”

லெக்சர் மூட்-அவுட்டாகி முதல் ஆளாக வெளியேறினாள்..

“எல்லாம் உன்னாலதாண்டி.. நாளைக்கு இருக்கு நமக்கு.. எதுக்குடி இப்படிச் சிரிக்கிற..?”

ஆஷாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அதற்கும் சிரித்து அவளை அரள வைத்தாள் வந்தனா..

“இந்த ஆட்டத்துக்கு நான் வரலைடி.. நீயே தனியாச் சிரி..” ஆஷா ஓடி விட்டாள்..

புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டுத் தனியாக கல்லூரிச் சாலையில் நடந்த வந்தனாவின் உதடுகளில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.. அவள் மனதில் கோபால் சொன்ன கவிதையும் அதைக் கேட்ட விவேகானந்தனின் அஷ்ட கோண முகபாவனைகளுமே வலம் வந்து கொண்டிருந்தன..

‘பாகற்காய் ஜூஸைக் குடித்து விட்டவனைப் போல முகத்தைக் கோணிக்கிட்டான்.. ஹா.. ஹா.. எதை நினைத்து பாஸ்கார கோபாலை நிறுத்தி வைத்தானோ.. அவன் இவனை வைச்சுச் செஞ்சிட்டான்.. அவன் சொன்ன கவிதை (?) இருக்கே.. ஹா.. ஹா..’

பால்கார கோபால் கவிதை சொன்னால் எப்படி இருக்கும்..?

“அன்பே கோதை..!

நீ என் சீதை..!”

அவன் சொல்ல ஆரம்பித்த போது நன்றாகத்தான் இருந்தது  விவேகானந்தன் கூட..

“அட..!” என்றான்..

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் கவிழ்ந்து விட்டான் கோபால்..

“உன் நிறமோ பசும்பால்..!

உன் பேச்சு சீம்பால்..!”

“கோபால்..?”

விவேகானந்தனின் முகம் போன போக்கை இப்போது நினைத்தாலும் அவளுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.. சுற்றிலும் நடந்து கொண்டிருந்த மாணவ மாணவிகள் பொங்கிச் சிரித்தவளை விசித்திரமாகப் பார்த்து வைத்ததில் வாய் பொத்திச் சிரிப்பைத் தடுத்தாள்.. தாங்க முடியாமல் மீண்டும் சிரித்தாள்.. இது வேலைக்கு ஆகாது என்று அங்கிருந்த மரத்தடியில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் உடகார்ந்து விட்டாள்.. இப்படியா சிரிப்பு வரும்..? சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் என்று பாடல்தான் இருக்கிறது.. இங்கே என்னடாவென்றால் சிரிப்பு வந்து அவளைச் சிறையில் வைக்கிறதே..

“அசந்து போயிட்டிங்களா சார்..?”

“ஆமாம் கோபால்.. முடியல.. மீதிக் கவிதையை நாளைக்கு வைத்துக்குவோமா..?”

“என்ன சார் பேசறிங்க.. கவித வந்து தொண்டையில முட்டிக்கிட்டு நிக்குது.. வர்ற கவிதய வராதே, வராதேன்னு சொன்னா எப்புடித் திரும்பிப் போகும்..?”

“இதுவேறயா..? படுத்தறயே கோபால்..”

விவேகானந்தன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு கோபாலை கெஞ்சுதலாகப் பார்த்ததை நினைத்துச் சிரித்துக் கொண்டாள் வந்தனா.. இன்றைய பொழுதுதான் எவ்வளவு கலகலப்பாக விடிந்திருக்கிறது..! விவேகானந்தனுடன் கை கலப்பாக முடிந்திருக்க வேண்டிய பொழுது கலகலப்பாக விடிந்திருந்ததில் அவளுக்குள் ஆச்சரியம் அலை பாய்ந்தது..

“அழகுல நீ அமலாபால்..!

ஆக்காத என்னை பாக்கெட் பால்..!”

அடுத்த வரிகளைச் சொல்லி விட்டு ‘எப்புடி’ என்று ஓர் பார்வை கோபால் பார்க்க.. விரக்தியாக ஓர் பார்வை விவேகானந்தன் பார்த்து வைத்தான்.. பால்கார கோபாலின் கவின் மிகு கவி வரிகளை செவி மடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டதில் ‘ஜென்’ நிலை அவனுக்கு வந்து விட்டது.. அதில் வந்தனாவுக்குச் சிரிப்போ சிரிப்பு..

“ஏம்மா சிரிக்கறிங்க..?”

விவேகானந்தனின் விடியல் பொழுதை ரணகளம் ஆக்கிக் கொண்டிருப்பதை அறியாத அப்பாவியாக பூங்கோதை கேட்டு வைத்தாள்..

‘உன்னால்தாண்டி எதிர்வீட்டு ரௌடி எக்குத்தப்பா மாட்டியிருக்கான்..’ பதில் சொல்லாமல் ஒன்றுமில்லை என்பதைப் போல தலையை அசைத்துத் தப்பித்தாள் வந்தனா..

“வீட்டுக்கு வீடு ஆவின்பால்..!

      விக்கறேன் நானும் வண்டிப்பால்..!

நாட்டுக்கு நல்லது நாட்டு மாட்டுப்பால்..!

      நமக்கெல்லாம் விதிச்சது.. ஜெர்ஸிமாட்டுப்பால்..!”

கோபாலின் கவிதை தொடர்ந்தது.. விவேகானந்தன் பெயருக்கேற்றாற் போல் முன் கைகளை மடித்துக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்ததில் செல்போனை எடுத்து வந்து ‘கிளுக்’ கி அந்த போஸை பத்திரப் படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்தாள் வந்தனா.. அரிதாகத்தான் அவன் இதுபோன்ற தீவிரமான முகபாவமும் தீட்சண்யமான பார்வையுமாக இருப்பான்.. மற்ற நேரங்களில் நக்கலும் நையாண்டியும்தான்..

“தயிருக்கு அரும எருமப்பால்..!

தங்கமே உன் மனசு கறந்தபால்..!

என் பாட்டு உனக்கு வேப்பம்பால்..!

இது தெரியாம பாடின நானொரு முட்டாள்..”

“இப்பவாவது இதை ஒப்புக்கிட்டியே..”

கவிதை முடிந்து விட்டது என்ற நினைவுடன் கைகளை மடக்கிய போஸை விட்டுத் தளர்வாக நிமிர்ந்து நின்ற விவேகானந்தனை மறுபடியும் கவிதை சொல்லி கைகளை மடக்கிக் கட்ட வைத்தான் கோபால்..

“இந்தப் பாலுக்காரன் பாடமாட்டான் எசப்பாட்டு..!

உன் கோபத்த கண்ணே நீ நிப்பாட்டு..

என் பாட்டுக்கு போட்டுட்டேன் பெரும்பூட்டு..!

என் வாழ்க்கைக்கு வேண்டியது ஒன் பாட்டு..”

“அவ்வளவுதானே கோபால்.. இன்னும் இருக்கா..?”

விவேகானந்தன் உறுதிப் படுத்திக் கொண்டான்.. அவனும் தான் எத்தனை முறை கோபாலின் கவின் மிகு கவி.. (?) வரிகள் முடிந்து விட்டன என்று போஸை மாற்றி இளைப்பாறுவான்..? இவன் நிறுத்த.. அவன் தொடர என்று பெரும் பாடாக இருக்கிறதே..

“இம்புட்டுத்தான் சார்.. இது போதுமில்ல..?”

போதாது என்று விவேகானந்தன் சொல்வானா..?

“இதுவே அதிகம் கோபால்..” என்றுதான் சொல்வான்..

அதைத்தான் அவனும் சொன்னான்..

“அப்போச்சரி சார்.. நீங்க இங்கேயே நில்லுங்க.. நான் போயி கோதைகிட்ட கவித சொல்லிட்டு வர்றேன்..”

“அவ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டா.. தெருக்காரங்க உன்னக் கும்மு கும்முன்னு கும்மி முதுகில டின்னு கட்டிருவாங்க.. அப்புறம் என்னால கூட உன்னக் காப்பாத்த முடியாது.. பரவாயில்லையா..?”

“வேணாம் சார் வேணாம்.. நான் பொழுதுசாய அவ வீட்டுப் பக்கம் போயி கவிதய சொல்லிக்கறேன்..”

“அஃது.. இப்ப சைக்கிள எடு..”

பால்கார கோபால் கிளம்பியதும் விவேகானந்தனின் முகத்தில் துளிர்த்த விடுதலையுணர்வு இருக்கிறதே.. அப்பப்பா..!

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link