Chapter 05

0Shares

வந்தனாவும் விவேகானந்தனுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்று எவராலும் வரையறுக்க முடியாது.. இந்தியா – பாகிஸ்தானைப் போல அனல் பறக்க எதிர்கொண்டாலும் அவன் என்ன செய்கிறான் என்று கண்காணிப்பதிலேயே அவளது பொழுது கழிந்தது… ஏன் என்பதை அவளால் இனம் காண முடியவில்லை..

‘ஒருவேளை.. இதுதான் காதலோ..?’

மனதின் சந்தேகத்திற்கு உடனடியாக..

‘சேச்சே..’ என்ற மறுதலிப்புதான் வந்தது..

அவள் மீது ஆசைப்பட்டுக் காதல் கடிதம் கொடுக்க வந்த செந்தில்நாதனிடம் விவேகானந்தன்..

“அட்டுப் பிகர்டா அவ.. அவளுக்கா லவ் லெட்டர் கொடுக்க வந்த..?” என்று சொல்லிக் கொண்டிருந்ததை என்று காதில் கேட்டாளோ.. அன்றிலிருந்து விவேகானந்தனைக் கண்டாலே கல்லெடுத்து அடிக்கும் அளவிற்கு கொலைவெறிக்கு ஆளாகி விட்டாள்.. அவன் அது மட்டுமா சொன்னான்..? அதற்கு மேலும் என்னென்னவோ சொல்லி செந்தில்நாதனின் மனதைக் கலைத்து ஓட்டி விட்டானே.. வந்தனாவின் அழகு முகத்தை நெளிந்து போன தகரடப்பா என்றானே.. அதை மறக்க முடியுமா..?

செந்தில்நாதனை காதல் கடிதம் கொடுக்க விடாமல் தடுத்து விட்டதற்காகத்தான் இந்த கோபம் என்றால் அவளுக்கு செந்தில்நாதனின் மீது ஏதாவது ஈர்ப்புணர்வு இருக்கிறதோ என்று பார்த்தால் அதற்கும் அவளது பதில்..

‘சேச்சே…’ என்பதாகத்தான் இருந்தது..

‘அவனும்.. அவன் மூஞ்சியும்.. கரண்ட் கம்பத்திற்குச் சேலையைச் சுற்றி விட்டிருந்தாலே ‘ஈ’ன்னு இளிச்சு வைப்பான்.. அவன் மேல சாப்ட் கார்னரா.. நோ.. நோ..’

செந்தில்நாதனை விவேகானந்தன் துரத்தி விட்டதில் வந்தனாவுக்கு பெருத்த நிம்மதிதான்.. மகிழ்ச்சிதான்.. துரத்தி விட்ட விதமும் சொன்ன வார்த்தைகளும்தான் அவள் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விட்டன.. விவேகானந்தனை நினைத்தாலே..

‘இருக்கு அவனுக்கு..’ என்ற வன்மம்தான் தோன்றும்..

அவனைக் கண்டு விட்டால் மறக்காமல் ஜாடை பேசி வம்புக்கு இழுப்பாள்.. துச்சமாகப் பார்ப்பாள்.. அனல் பறக்கும்..

‘என்னத்தைச் செய்து என்ன பண்ண..? எதுவும் வொர்க்-அவுட் ஆக மாட்டேங்குதே..’ அவள் நம்பியாரைப் போலக் கைகளைப் பிசைந்தாள்..

விவேகானந்தன் அப்படித்தான்.. அவள் பேசும் ஜாடைப் பேச்சுகளில் துளியும் பாதிக்கப்படமாட்டான்.. தெருவில் போகும் எவரையாவது நிறுத்தி வைத்து அவளைவிட அதிகமாக ஜாடை பேசிப் போட்டுத் தாக்குவான்.. அவனைப் போல கண்டு கொள்ளாமல் கடந்து போக அவளால் முடியாது.. பாதிக்கப் பட்டதை முகத்தில் காட்டி விடுவாள்.. அவன் முகத்தின் வெற்றிக் களிப்பில் இன்னமும் அதிகமாக டென்சன் ஆவாள்.. அவனது துச்சப் பார்வையோ இவளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்..

‘எப்படிப் பார்க்கிறான் பார்..’

புழுங்கிப் புழுங்கி அன்று முழுவதும் சரியாகச் சாப்பிடாமல் எதிலும் மனது லயிக்காமல் அவஸ்தைப் பட்டுப் போவாள்.. மொத்ததில் விவேகானந்தன் அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தான்.. அவனால்.. அவன் மீதான பகையுணர்வால்.. அல்லும் பகலும் நிம்மதியின்றித் தவித்துக் கொண்டிருந்தாள் வந்தனா.. அவனை வெற்றி கொள்ள முடியாமல் நகர்ந்து கொண்டிருந்த நாள்களில் இதுபோல் ஏதாவது ஒர்நாள் வந்து சேரும்.. விவேகானந்தன் மாட்டிக் கொண்டு விழிப்பதில் இவளுக்கு அத்தனை சந்தோசம்..

‘எதுக்காக பாஸ்கார கோபாலை நிறுத்தி வைச்சான்..? என்னை ஜாடை பேசத்தானே.. அவன் போவேனான்னு இவன்கிட்டக் கவித சொல்லி அலற வைச்சிட்டானில்ல..’

திருப்தியாக இருந்தது.. கல்லூரியில் நடமாட்டம் குறைவதை உணர்ந்தவள்.. புத்தகப் பையைத் தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டு நடந்தாள்.. கல்லூரிப் பேருந்து கிளம்பிச் சென்றிருந்தது.. விவேகானந்தன் மாட்டிக் கொண்டு விழித்ததை நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தால் பஸ் அவளுக்காக காத்திருக்குமா..?

‘லேட்டாகிருச்சே..’

நடையில் விரைவைக் காட்டினாள்.. கல்லூரியின் முன்னால் இருந்த பஸ்-ஸ்டாப்பில் காத்திருக்க ஆரம்பித்தாள்.. மழை தூற ஆரம்பித்தது.. அவள் குடை கொண்டு வரவில்லை..

‘சுள்ளுன்னு வெயில் மண்டையைப் பிளந்தா மழை வரும்ன்னு யாராவது நினைத்துப் பார்ப்பாங்களா..?’

தெருமுனையில் காலேஜ் பஸ் வந்து நிற்கும்.. ஏறினால் கல்லூரியில் இறங்கிக் கொள்ளலாம்.. குடையைச் சுமக்காததிற்கு இதுவும் ஒரு காரணம்..

‘இப்படியா காலேஜ் பஸ்ஸைக் கோட்டை விடுவேன்..’

மழையிருட்டு சூழ்ந்து கொண்டது.. கனமழை பொழிய ஆரம்பித்தது.. வந்தனாவுக்குள் மெலிதான பயம் வந்தது.. பெண்களுக்கே உரிய பயம் அது.. வந்து நின்ற பேருந்துகளில் செம கூட்டம்.. ஃபுட் போர்டில் கால் வைக்க முடியாமல் கூட்டம் பிதுங்கி வழிந்த நிலையில் ஏற முடியாமல் தயங்கி நின்றாள்.. பஸ் ஸ்டாப்பில் இருந்த கூட்டம் கரைந்து கொண்டே வந்ததில் கலவரமாக உணர்ந்தாள்.. திரும்பிக் கல்லூரிக்குள் சென்று விடலாமா என்று கூட யோசித்தாள்..

‘கேர்ள்ஸ் ஹாஸ்டலில் இருந்துக்கிட்டு வீட்டுக்குப் போன் பண்ணலாம்.. அப்பா காரெடுத்துக்கிட்டு வருவார்.. இல்லைன்னா வருண் டூ வீலரில் வந்து கூப்பிட்டுக்கிட்டுப் போவான்..’

சற்று நேரம் நின்று பார்க்கலாம்.. கூட்டமில்லாமல் பஸ் வந்தால் ஏறிப் போய்விடலாம்.. இல்லையென்றால் கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குப் போய் அங்கிருந்து வீட்டுக்குப் போன் பண்ணி விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவள் வந்த போது அவளை உரசிக் கொண்டு டூவீலர் ஒன்று வந்து நின்றது..

‘யார்..?’

வண்டியில் இருந்தவன் ரெயின் கோட் அணிந்திருந்தான்.. ஹெல்மெட் முகத்தை மறைத்திருந்தது.. வந்தனாவுக்கு உதறலெடுத்தது.. நகர்ந்து நின்றாள்..

“ஹாய்..” ஹெல்மெட்டைக் கழட்டிய செந்தில்நாதன் புன்னகைத்தான்..

‘இவனா..?’ வந்தனாவுக்கு மழைக்காற்றிலும் மிளகாயை அரைத்துப் பூசினதைப் போல எரிந்தது.. முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. செந்தில்நாதனுக்கு அது உறைக்கவில்லை போல..

“என்னங்க.. காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டிங்களா..?” ஹெல்மெட்டை மாட்டியபடி கேட்டான்..

ஆமாம் என்று சொல்லாமல் ‘யார் நீ..?’ என்ற பார்வை பார்த்தாள் வந்தனா.. அவனோ பாஸ்கார கோபால் வளர்க்கும் எருமை மாட்டின்மீது மழை பெய்வதைப் போல சுரணையின்றி..

“வாங்களேன்.. விவேக்கைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன்.. உங்க வீட்டில் டிராப் பண்ணிடறேன்..” என்று வெகு சுவாதீனமாக அழைத்தான்..

‘எவ்வளவு தைரியம்..!’

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள்.. அவன் அவளுக்குத் தெரிந்தவன் போல என்ற நினைவோடு வேறு பக்கம் பார்த்துக் கொண்டடிருந்தார்கள்.. வந்தனாவுக்கு கோபம் கோபமாக வந்தது.. அவன் பின்னால் டூவீலரில் ஏறி வீட்டு வாசலில் இறங்கினால் ருக்மிணி அவளை சாத்து சாத்தென்று சாத்தி விடுவாள்..

“காலேஜ் பஸ்ஸ மிஸ் பண்ணினா வேற பஸ்ஸை பிடிச்சு வீடு வந்து சேரனும்.. இல்லேன்னா பாதுகாப்பா காலேஜீக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு வீட்டுக்குப் போன் பண்ணனும்.. அப்பாவோ தம்பியோ வந்து கூப்பிட்டுக்கிட்டு வருவாங்க.. ரெண்டையும் விட்டுட்டு எவனோ தடிமாட்டுத் தாண்டவராயன் கூப்பிட்டான்னு  அவன் பின்னால டூவீலர்ல உக்காந்துக்கிட்டு வந்திருக்கியே.. பாக்கிறவங்க என்ன சொல்வாங்க.. ருக்மிணி பொண்ண வளர்த்து வைச்சிருக்கிற லட்சணத்தைப் பார்ன்னு பேசிச் சிரிக்கட்டும்ன்னா இப்புடி ஒரு காரியத்தை பண்ணியிருக்க..?” என்று குடையாய் குடைந்து ஒரு வழியாக்கி விடுவாள்..

அப்படிப்பட்ட காண்டு எதுவும் தன் தாயின் மீது இல்லையென்று வந்தனா கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்..

‘தேவையா எனக்கு..? இவன்கிட்ட லிப்ட் வேணும்னு நான் கேட்டேனா..?’

“என்னங்க யோசிக்கறிங்க..? வண்டியில ஏறுங்க..”

“நோ.. தேங்க்ஸ்.. அப்பா காரெடுத்துக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கார்.. நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க..”

அவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போகாமல் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு அவள் பக்கத்தில் வந்து நின்று கொண்டான்..

‘இது என்னடா ரோதனை..!’

வந்தனா செல்போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தபடி மழையைப் பார்த்தாள்.. ‘சோ’ என பெய்து கொண்டிருந்தது.. அதில் நனைந்தபடி கல்லூரிக்குள் ஓடுவது என்பது அசாத்தியமானது.. இரண்டு எட்டு வைப்பதற்குள் சொதசொதவென நனைந்து விடுவாள்.

‘அப்பாவுக்கு போன் பண்ணி விடலாம்..’

முடிவு பண்ணியதை செயலாற்றுவதற்குள்..

“இங்கே என்னடா பண்ற..?” என்ற குரல் ஒலித்தது..

‘இது விவேகானந்தனோட வாய்ஸ் ஆச்சே..’ சட்டெனத் திரும்பினாள்..

அவன்தான் வந்திருந்தான்.. செந்தில்நாதனைப் போலவே ரெயின்கோட்டும் ஹெல்மெட்டுமாக இருந்தவன்.. என்னவோ வந்தனா செந்தில்நாதனை லவட்டிக் கொண்டு வந்து விட்டதைப் போல அவனை விட்டு விட்டு இவளை முறைத்தான்..

“ஹி.. ஹி.. உன்னைப் பார்க்க வந்தேன்டா..” செந்தில்நாதன் இளித்தான்..

“என்னைப் பார்க்க வீட்டுக்குள்ல வரனும்..? இங்கேயென்ன வேலை..?”

இப்போதும் விவேகானந்தன் வந்தனாவைத்தான் சீற்றத்துடன் பார்த்தான்..

‘உன் குரங்கு மூஞ்சி பிரண்ட ஒன்னும் நான் கணக்குப் பண்ண நினைக்கலைடா.. நீயே இவனைக் காவல் காத்துப் பத்திரப் படுத்திக்க..’

வந்து நின்ற பஸ் வந்தனாவுக்கு கருணை காட்டுவதைப் போல கூட்டமில்லாமல் வந்து நிற்க.. இவள் தாவியேறி காலியாக இருந்த சீட்டில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.. அவளது வீடு இருக்கும் தெருமுனைதான் பஸ் ஸ்டாப்.. இறங்கும் இடத்தில் மழை நின்றிருந்தது.. நனையாமல் வீடு போய் சேர்ந்தவளின் மனதில் புயல் சுழன்றடித்தது..

‘இந்த விவேகானந்தன் என்னை என்னன்னு நினைச்சுக்கிட்டு இருக்கான்..’

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link