Chapter 06

0Shares

“இப்ப காபி கிடைக்குமா.. கிடைக்காதா..?”

விசுவநாதன் கத்திய கத்தல் தஞ்சாவூரின் எல்லைகள் வரை கேட்டிருக்கும்.. சமையலறையில் இருந்த மீனாட்சியின் காதுகளைமட்டும் எட்டவேயில்லை.. கண்களைக் கசக்கியபடி வந்த விவேகானந்தனின் கையில் காபி கப் இருந்தது.. காபியை உறிஞ்சியபடி சோபாவில் உட்கார்ந்தவன் விசுவநாதனின் கையிலிருந்த பேப்பரை பிடுங்காத குறையாக உருவிப் படிக்க ஆரம்பித்தான்..

“கையில என்னடா..?”

விசுவநாதனின் கேள்வியில் அவரை விசித்திரமாகப் பார்த்தவன் காபிக் கப்பை அவர் பக்கம் நீட்டி..

“பாத்தாத் தெரியலை..? காபி..” என்றான்..

“ஏதுடா..?”

“என்னப்பா கேள்வி இது..? நம்ம வீட்டில காபிக்குப் பஞ்சமா..? காணாததைக் கண்டு விட்டதைப் போலக் கேக்கறிங்க..”

“காணாததுதான்டா மகனே.. காலையில இருந்து காபியைக் கண்ணில பார்க்கலை.. உனக்கு யார் கொடுத்தா..?”

“அம்மாதான் கொடுத்தாங்க..”

“எப்ப..?”

“அப்பவே என்னை எழுப்பிக் கையில காபிக் கப்பைத் திணிச்சுட்டாங்களே.. எப்பவும் அப்படித்தானே செய்வாங்க..”

“உனக்குச் செய்கிறா.. என்னைத்தான் அலற விடுறா..”

“நீங்க ஏன் அலறனும்..? கிச்சனில போய் நின்றா அம்மா காபி கலந்து கொடுக்கப் போகிறாங்க..”

“நீயேண்டா கடுப்பைக் கிளப்பற.. வேலையிருக்கு.. நீங்க கலந்து குடித்துக்கங்கன்னு சொல்லுவா..”

“ஓஹோ..”

அவ்வளவுதான்.. அதற்கு மேல் தனக்கும் தகப்பனின் காலைக் காபிக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதைப் போல விவேகானந்தன் பேப்பரில் ஆழ்ந்து விட்டான்.. மகன் நியாயம் கேட்டுக் காபி வாங்கிக் கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கையில் மண் விழுந்ததில் மனம் தளர்ந்து விட்டார் விசுவநாதன்..

‘ஒரு வாய் காபிக்கு இந்த பாடா..?’

தொண்டை வறண்டிருந்தது.. வறண்ட தொண்டையை ஈரப்படுத்த உடனடியாக காபி தேவை.. வேறு வழியில்லை.. எழுந்து போய் காபியைக் கேட்டு விடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்த போது..

“குட்மார்னிங் குரு..” என்றபடி எதிர்வீட்டு வருண் வந்தான்.. அவனது குரல் கேட்ட மறுநொடியில் பிரசன்னமான மீனாட்சி முகமெல்லாம் சிரிப்பாக..

“வாடா வருண்..” என்று வரவேற்றாள்..

‘எதிர் வீட்டில இருந்துதானே வந்திருக்கான்.. எண்ணூறு மைலுக்கு அங்கிட்டு இருந்தா வந்திருக்கான்..? ஓடோடி வந்து வாடா வருண்ங்கிறா.. இவ்வளவு நேரமும் நான் காட்டுக் கத்தலாக் கத்தினது காதில விழுகலை.. இவன் குட்மார்னிங் குருன்னு சொன்னது மட்டும் காதில விழுந்துருச்சு.. எம்புட்டு ஓரவஞ்சகம்..’

விசுவநாதனின் நெஞ்சம் கொதித்தது.. அடுத்து மீனாட்சி பேசிய வார்த்தைகளில் அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.. சன்யாசம் வாங்கிவிட உத்தேசம் கொண்டார்..

“காபி சாப்பிடு வருண்..” தேனினும் இனிய குரலில் சொன்னாள் மீனாட்சி..

‘இங்க ஒருத்தன் காலையில இருந்து ஒரு சொட்டுக் காபித் தண்ணி கிடைக்காம தொண்டை வறண்டு போயிக் கிடக்கிறேன்.. என்னை ஏன்னு கேக்க மனசில்ல.. எதுத்த வீட்டு சின்னப் பையனுக்கு காபி கொண்டு வரக் குதிக்கிறா..’ மனைவியை வெட்டும் பார்வையைப் பார்த்தார் விசுவநாதன்..

கணவரின் முறைப்பைத் துளியும் லட்சியம் பண்ணாமல் வருணுக்குக் காபி கொண்டு வர சமையலறைக்கு விரைந்து விட்டாள் மீனாட்சி.. வருணை எதிரிக்காரனைப் பார்ப்பதைப் போல விரோதமாக பார்த்து வைத்தார் விசுவநாதன்.. அவரது பார்வையில் குழம்பிப் போன வருண்..

“அங்கிளுக்கு என்மேல என்ன கோபம்..?” என்று விவேகானந்தனிடம் தாழ்ந்த குரலில் வினவினான்..

“தனியா உன்மேல மட்டும் அவர் கோபப்படலைடா வருண்.. உலகத்து மேலேயே கோபப்படறாரு.. அதுதான் வினை..” பேப்பரை மடித்து வைத்தபடி சொன்னான் விவேகானந்தன்..

“புரியலை குரு..”

“நீதான் டியுப்லைட் சிஷ்யனா இருக்கியே.. அப்பாவுக்கு உலகத்தில எதுவும் சரியா நடக்கலைங்கிற கோபம்.. எல்லாத்திலயும் கலப்படமாம்.. எந்த அரசு இயந்திரமும் ஒழுங்காச் சுழலையாம்..”

“போரடிக்குது குரு..”

“இதுதான் அம்மாவோட கோபம்.. உலகத்தோட இசைந்து போக முடியலைன்னா வாயை மூடிக்கிட்டு இருக்கனும்.. வீட்டுக்காரிகிட்ட அது நொட்டை, இது நொள்ளைன்னு பேசி உயிரை எடுக்கக் கூடாதுன்னு சப்தம் போட்டதோட நிக்காம சத்யாக்கிரகம் பண்ணிக்கிட்டு இருக்காங்க..”

“அது நொட்டை.. இது நொள்ளைன்னா என்ன மீனிங் குரு..?”

“அது சொட்டை.. இது சொள்ளைன்னு அர்த்தம்டா..”

“ஓ..! சத்யாக்கிரகம்ன்னா..?”

“அடப்பாவி..! நீயெல்லாம் இன்டியன் சிட்டிசன்னு வெளியே சொல்லிராதே.. ‘நொட்டை.. நொள்ளை..’க்கு அர்த்தம் தெரியாதுன்னா ஓகே.. சத்யாக்கிரகத்துக்கு அர்த்தம் கேட்டின்னா விளங்கிரும்.. சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு தெரியாதா..?”

“நான் மேத்ஸ் சப்ஜெக்டை படிச்சிட்டு இன்ஜினியரிங் படிப்பில குப்பை கொட்டறவன்.. ஹிஸ்டரி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது குரு..”

“பிளஸ் ஒன், பிளஸ் டூ வில உனக்கு ஹிஸ்டரி கிடையாது.. ஓகே.. டென்த் வரைக்கும் ஹிஸ்டரியையும் ஒரு சப்ஜெக்டாப் படித்திருப்பதான..?”

விவேகானந்தன் மடக்கியதில் வருண்..

“ஹி.. ஹி..” என்று சிரித்துச் சமாளித்து வைத்தான்..

காபியின் நறுமணம் காற்றிலே தவழ்ந்து வந்து விசுவநாதனின் நாசியில் நுழைந்தது.. காபியின் ரசிகரான அவரது மனம் மீனாட்சியின் கை வண்ணத்தைப் பாராட்டியது.. அவளது காபியின் சுவை நாவினில் படிந்து தொண்டையில் இறங்குமா என்று ஏங்கியது.. காபி டிரேயுடன் வந்த மீனாட்சியைப் பார்ப்பதைப் போல டிரேஸைப் பார்த்தார்.. இரண்டு காபி கப்புகள் இருந்தன.. ஒன்று வருனுக்கு.. இன்னொன்று யாருக்கு..?

‘எனக்கே எனக்கா..?’

மீனாட்சி வருணிடம் டிரேயை நீட்டினாள்.. அவன் ஒன்றுக்கு இரண்டாக காபிக் கப்புகளை கைப்பற்றி விடுவானோ என்று அவரது மனம் ‘திக், திக்’ என அடித்துக் கொண்டது.. அப்படி எதுவும் ஆகவில்லை.. வருண் நல்ல பிள்ளையாக ஒரு கப்பை மட்டும் எடுத்துக் கொண்டு..

“தேங்க்ஸ் ஆண்ட்டி..” என்று நன்றி நவின்றான்..

‘அப்பாடி.. இன்னொரு கப் எனக்குத்தான்..’ விசுவநாதனுக்கு நம்பிக்கை வந்தது..

“குரு.. உங்களுக்கு காபி..” அவரது நம்பிக்கையைத் தகர்த்த வருண் இன்னொரு கப்பையும் எடுக்கப் போனான்..

“நான் குடிச்சாச்சுடா.. அப்பாதான் குடிக்கலை.. அவருக்குக் கொடு..” விவேகானந்தன் தந்தைக்காற்றும் உதவியாக காலைக் காபியை ஈய்ந்தான்.. விசுவநாதனின் வயிறும் மனமும் குளிர்ந்தது..

‘இவனல்லவோ தனயன்…’ வாராது வந்து காபியைக் கைப்பற்றியவர் ரசித்து ருசித்துக் குடிக்க ஆரம்பித்தார்..

“அங்கிள் ஆண்ட்டியின் ரசிகர் போல..” என்றான் வருண்..

மீனாட்சி தலையில் அடித்துக் கொள்ள.. அவசரமாக..

“ஆண்டியின் காபிக்கு ரசிகர் போல..” என்று பிழை திருத்தம் செய்தான்..

“சரியாத்தானடா சொன்ன.. அதையேன் மாத்தி யோசிக்கிற.. எங்கப்பா அம்மாவுக்கு ரசிகர்தான்..” மீனாட்சியைப் பார்த்து இமை சிமிட்டிய விவேகானந்தன்..

“மாம்.. உண்மையைச் சொல்லுங்க.. அப்பாவுக்குக் காபி கொடுக்கனும்னுதான வருணை காபி சாப்பிடறியாடான்னு கேட்டிங்க..? அப்பத்தானே அவனுக்குக் காபி கொடுக்கிற சாக்கில அப்பாவுக்குக் காபி கொடுக்க முடியும்..?” என்று கேட்டான்.

“போடா..” பதினாறு வயதுப் பருவப் பெண்ணைப் போல அநியாயத்துக்கு வெட்கப் பட்டாள் மீனாட்சி..

வருண் காபி குடிக்க மறந்து அவளது வெட்கத்தில் சிவந்த முகத்தை.. ‘ஆ’ வென பார்த்தான்..

“வாயை மூடுடா.. குருவி வந்து கூடு கட்டிறப் போகுது..” விவேகானந்தன் ஒரு குட்டு வைத்ததும் அவசரமாக வாயை மூடிக் கொண்டான்..

விசுவநாதன் மனைவியுடன் மற்றமொரு தேனிலவிற்குக் கிளம்பி விடும் உத்தேசத்தில் இருந்தார்.. நல்லவேளை.. அதை வாய் விட்டுச் சொல்லவில்லை.. சொல்லியிருந்தால்.. மீனாட்சி..

“தேநிலவா..? அப்படின்னா..?” என்று விளக்கம் கேட்டு அவர் அவளை வீட்டை விட்டு எங்கும் வெளியில் அழைத்துச் சென்றதில்லை என்ற உண்மையைப் போட்டு உடைத்திருப்பாள்..

“அங்கிள் ஏன் இந்த முழி முழிக்கிறார் குரு..?” விசவநாதனின் முக ஜொலிப்பை பார்த்து விட்டு சந்தேகம் கேட்டான் வருண்..

“உனக்கு விளக்கம் சொல்லிச் சொல்லியே ஓய்ந்து விடுவேன் போல இருக்குடா.. மனசுக்குள்ள எங்கப்பா எங்கம்மாவுடன் மரத்தைச் சுத்தி வந்து டூயட் பாடிக்கிட்டு இருக்கிறார்.. போதுமா..” புளிபோட்டுத் தேய்க்காத குறையாக விளக்கம் சொன்னான் விவேகானந்தன்..

“டேய்ய்..” வெட்கத்துடன் சமையலறைக்கு ஓடி விட்டாள் மீனாட்சி..

“இன்னும் மரத்தைச் சுற்றி ஓடி டூயட் பாடறதிலேயே இருக்காதீங்க அங்கிள்.. சுவிட்சர்லாந்தைச் சுற்றி ஒடி டூயட் பாடறதைப் போல கனவு காணுங்க.. காசா, பணமா..? கனவுதானே..”

விசுவநாதனுக்கு ஆலோசனை நல்கிக் கொண்டிருந்த வருணை முதுகில் நாலு போடு போட்டு..

“இதையெல்லாம் உணக்கையாச் சொல்வியே..” என்று எழுப்பி விட்ட விவேகானந்தன் அவன் தோளில் கைபோட்டு தோட்டத்துப் பக்கம் இழுத்துக் சென்றான்..

அந்தக் கதை இந்தக் கதை என்று கதை பேசிக் கொண்டிருந்த வருண் விவேகானந்தன் பதில் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததைக் கண்டு..

“என்ன குரு..?” என்று விசாரித்தான்..

“வருண்.. நீ காலேஜ் பஸ்ஸில்தான் காலேஜீக்குப் போறியா..?”

“இது என்ன குரு.. தெரியாததைப் போலக் கேக்கறிங்க.. எனக்குத்தான் அப்பா ராயல் என்ஃபீல்டு வாங்கித் தந்திருக்காரே..”

“உனக்கு ராயல் என்ஃபீல்டு வாங்கித் தந்த உன் அப்பாவுக்கு உன் அக்காவுக்கு ஸ்கூட்டி ஒன்றை வாங்கித்தரனும்னு தோணலியா..?”

“அக்கா காலேஜ் பஸ்ஸில் போய் வருகிறதுதான் ஸேப்ட்டின்னு அப்பா நினைத்தார்.. அக்காவும் எதுவும் சொல்லலை..”

“எல்லா நேரமும் ஒரே நேரமாய் இருக்காதுடா.. நேற்றைக்கு மழை வந்திருச்சு.. இருட்டு வேற.. உன் அக்காவோட காலேஜ் வழியா வந்துக்கிட்டு இருந்தேன்.. காலேஜ் பஸ்ஸ்டாப்பில உன் அக்கா பஸ்ஸிக்காக காத்திருக்கு.. பக்கத்தில என் பிரண்ட் செந்தில் நாதன்..”

வருணின் முகம் மாறிவிட்டது.. புருவங்கள் முடிச்சிட விவேகானந்தனைப் பார்த்தவன்..

“அக்கா இதைச் சொல்லலையே..” என்றான்..

“காலேஜ் பஸ் என்ன ஆனதாம்..?”

“மிஸ் பண்ணிட்டதா சொல்லிச்சு..”

“இது ஃபைனல் இயர் வருண்.. ஈவினிங் லேட்டாகலாம்.. உன் அப்பாவிடம் சொல்லி உன் அக்காவுக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுக்கச் சொல்லு..”

தலையை ஆட்டிய வருண் சிந்தனையுடன் போய் விட்டான்.. மறுநாள் விவேகானந்தன் பேங்கிலிருந்து வரும் வழியில் வந்தனா அவனது வண்டியை மடக்கி நிறுத்தினாள்..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link