Chapter 08
கண் முன் இருந்த வவுச்சர்களையும்.. கம்யூட்டரின் திரையில் தெரிந்த கணக்குகளையும் சரிபார்த்துக் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான் விவேகானந்தன்.. மணி மாலை ஆறு என்றது.. வங்கியின் கதவு பாதி மூடப்பட்டிருக்க.. இருக்கைகள் காலியாக இருந்தன.. தனித்து வேலை செய்து கொண்டிருந்தவனை பரிதாபமாக பார்த்தான் அட்டெண்டர் ஆறுமுகம்.. அவனது பையில் அல்வாவும் மல்லிகைப் பொட்டலமும் இருந்தன.. புதிதாகத் திருமணமானவன்.. காத்திருக்கும் புதுமனைவியின் நினைவு அவனை இம்சை செய்தது..
‘இதுக்குத்தான் காலாகாலத்தில கல்யாணம் கட்டிக்கனும்ங்கிறது… கட்டை பிரம்மச்சாரியா இருந்தா இப்படித்தான்.. கல்யாணம் கட்டிக்கிட்டவனோட வேதனை என்னன்னு இந்த ஆளுக்கு எப்படித் தெரியும்..?’
அவன் மனதில் அர்ச்சனை செய்து கொண்டிருந்த அந்த ஆளான விவேகானந்தன் நிமிர்ந்து பார்த்தபோது அவனது முப்பத்தியிரண்டு பற்களையும் காட்டி, முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொண்டான்.
“ஆறுமுகம்..” விவேகானந்தன் அழைத்த மறுகணம்..
“லைட்டை ஆப் பண்ணிரவா சார்..” என்றான் படு உற்சாகமாக..
விவேகானந்தன் ஒரு தினுசாக அவனை ஏற இறங்க பார்த்து விட்டு..
“இது பேங்க் ஆறுமுகம்.. பர்ஸ்ட் நைட் ரூமில்லை..” என்றான்.
ஆறுமுகத்திற்கு வண்டை வண்டையாக வாயில் வந்தது..
‘ஆமாய்யா.. உன் கூட பர்ஸ்ட் நைட் கொண்டாடத்தான் நான் காத்திருக்கேன்.. வீட்டில எனக்காக காத்துக்கிட்டு இருக்காய்யா என் அழகுப் பெண்டாட்டி..’
கண்களில் நீர் திரளாத குறைதான்.. வாயை அடக்கிக் கொண்டான்.. பேங்கில் வேலையென்று முப்பதுபவுன் நகையும், மூன்று லட்சம் ரொக்கமும் தந்து அழகு தேவதையொன்றை மனைவி யென்று கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தார்கள்.. கிராமத்து மக்கள்.. தஞ்சாவூர் டவுனும், பேங்க் வேலையும் அவர்களுக்குப் பெரிது.. அது அட்டெண்டர் வேலையா.. அலுவலகத்தை நிர்வகிக்கும் மேனேஜர் வேலையா என்ற பாகுபாடெல்லாம் அவர்களுக்குக் கிடையாது.. பத்தாவதைத் தாண்டாத பெண்ணிற்கு படித்த மாப்பிள்ளை..! அதுவும் டவுனில் இருக்கும் பேங்கில் வேலை செய்யும் மாப்பிள்ளை..! போதாதா..? அந்த வருட அறுவடைப் பணத்தில் நிரக்கச் சீர் செய்து ஆறுமுகத்தின் கையில் அழகுக் கிளியைப் பிடித்துக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டார்கள்..
‘அவ கூட பொழுதுசாய சினிமாவுக்குப் போனோமா.. கடைத் தெருவுக்குப் போனோமான்னு சுத்த முடியுதா..?’
கொலைவெறியை மனதில் தேக்கிக் கொண்டு.. விசுவாசத்தை முகத்தில் தேக்கிக் கொண்டு..
“சார்..?” என்று பணிந்தான் ஆறுமுகம்..
“கணக்கு டேலி ஆக மாட்டேங்குதுய்யா..”
‘அதுக்கு நான் என்னய்யா பண்ணனும்..? கேஷியரையும் கிளர்க்குகளையும் வீட்டுக்குப் போக விட்டுட்டு.. பாவப்பட்ட அட்டெண்டரப் படுத்தி எடுக்கறியே.. இது நியாயமாய்யா..? உன் மனசில ஈரமே இல்லையா..?’
“சூடா ஒரு டீ வாங்கிட்டு வா பார்ப்போம்..”
‘டீயைப் பார்க்கத்தான் வாங்கி வரச் சொல்றியா..? குடிக்க மாட்டியா.. ஏன்ய்யா இம்சை பண்ற..? வீட்டுக்குக் கிளம்பற உத்தேசமில்லையா..?’
வெறுத்துப் போன ஆறுமுகம் பிளாஸ்க்கைத் தூக்கிக் கொண்டு பேங்க் வாசல் படிகளில் இறங்கினான்.. எதிரில் வந்த சத்தியசீலன் ஆறுமுகத்தைக் கண்டதும்..
“அன்னக்கிளி.. உன்னைத் தேடுதே..” என்று பாடினான்..
‘அன்னக்கிளி..’ என்பது ஆறுமுகத்தின் மனைவியின் பெயர்.. சத்தியசீலன் விவேகானந்தனின் நெருங்கிய நண்பன்.. ரெவின்யூ டிவிசனல் ஆபிசராக பணி புரிகின்றான்.. அடிக்கடி விவேகானந்தனை பார்க்க வருவான்.. சமீபத்தில் திருமணமானவன்.. ஆறுமுகத்தின் திருமணப் பத்திரிக்கையில் மணமகளின் பெயர் அன்னக்கிளி என்று இருப்பதைப் பார்த்ததிலிருந்து ஆறுமுகத்தைக் கண்டால் போதும்.. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று பாட ஆரம்பித்து விடுவான்..
“அன்னக்கிளி என்னைத் தேடி என்ன பிரயோசனம் சார்..? அவளத் தேடி நான் பறக்கனுமே..” ஆற்றாமையுடன் சொன்னான் ஆறுமுகம்..
“மணி ஆறாச்சு.. அன்னக்கிளியைத் தேடி பறக்காம இங்கே என்ன செய்யற..?”
“உங்க நண்பருக்குச் சேவகம் செய்துக்கிட்டு இருக்கேன்.. பேங்கில வேலை செய்யற அத்தனை பேரும் டான்னு ஐஞ்சடிச்சவுடனே இடத்தக் காலி பண்ணிட்டு ஓடிட்டாங்க.. என்ன மட்டும் நிறுத்தி வைச்சு இம்சை பண்றாரே சார்..”
“ஸோ ஸேடு.. ஸோ ஸேடு.. கல்யாணமானவனோட அவஸ்தை கட்டை பிரம்மச்சாரிக்குப் புரியுமா..?”
“புதுசாக் கல்யாணமானவன் அவஸ்தைன்னு சொல்லுங்க சார்..”
“ஓகே.. புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடின்னே சொல்லிடறேன்.. வாய் வார்த்தைதான.. காசா.. பணமா..?”
“இந்தக் கட்டைப் பிரம்மச்சாரிக்கு காலாகாலத்திலே கால் கட்டைப் போட்டு விடுங்க சார்.. உங்களுக்குப் புண்ணியமாப் போகும்..”
“செய்துட்டாப் போச்சு.. நீ போய் நாக்குக்கு ருசியா வாழைக்காய் பஜ்ஜியும் சூடா இஞ்சி டீயும் வாங்கிட்டு வா பார்க்கலாம்..”
“விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு விடிந்த பின்னால் சீதைக்கு ராமன் என்ன முறைன்னு கேட்ட கதையாயில்ல இருக்கு.. நீங்களுமா சார்..?”
“விடுப்பா.. உன் மேனேஜருக்குக் கால்கட்டுப் போடனுமா வேணாமா..?”
“போடனும்தான்.. அதுக்கும் பஜ்ஜிக்கும் என்ன சார் சம்பந்தம்..?”
“பேசிச் சம்மதிக்க வைக்க வேணாமா..? பேசறப்பக் கொறிக்க பஜ்ஜி.. குடிக்க டீ..”
சத்தியசீலன் விளக்கம் சொல்லி விட்டு பேங்குக்குள் போய் விட்டான்.. ஆறுமுகம் அன்னக்கிளியை நினைத்து அனல்பெருமூச்சு விட்டபடி பஜ்ஜி வாங்கப் போனான்..
கம்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்த விவேகானந்தன் காலடி சப்தத்தில் ஆறுமுகம்தான் வருகிறானோ என்று நிமிர்ந்து பார்த்தான்.. சத்தியசீலனைக் கண்டதும்..
“வாடா.. ஆர்.டி.ஓ..” என்று சிரித்தான்..
“நான் வர்றது இருக்கட்டும்.. நீ என்னத்துக்கு கம்யூட்டரைக் காதலியைப் பார்ப்பதைப் போலப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்க..? கிளம்பு.. கிளம்பு..” சத்தியசீலன் அதட்டியபடி எதிரே இருந்த சேரில் உட்கார்ந்தான்..
“எங்கே..?” ஒன்றுமறியாதவனைப் போலக் கேட்டான் விவேகானந்தன்..
“எங்கேன்னு உனக்குத் தெரியாதா…?” ஊடுறுவும் பார்வையோடு கேட்டான் சத்தியசீலன்..
விவேகானந்தன் சிந்தனையோடு பேப்பர் வெயிட்டை உருட்டியபடி..
“அம்மா போன் பண்ணினாங்களா..?” என்று கேட்டான்..
“நீ போன் பண்ணலை..” குற்றம் சாட்டினான் சத்தியசீலன்..
“இதில் போன் பண்ண என்ன இருக்கு..?”
“அடிச்சேன்னா பாரு.. ஏண்டா.. பொண்ணுப் பார்க்கப் போக வேண்டியவன் கம்யூட்டரைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கியே.. உனக்கே இது ஓவராத் தெரியல..?”
“ம்ப்ச்.. இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னாக் காதில போட்டுக்க மாட்டேங்கறாங்கடா..”
“இப்பக் கல்யாணம் பண்ணாம எப்பக் கல்யாணம் பண்ணப் போற..?”
சத்தியசீலன் அதட்டிக் கொண்டிருந்தபோது.. பஜ்ஜி, டீ சகிதம் அங்கே வந்த ஆறுமுகம்..
“நல்லாக் கேளுங்க சார்..” என்றான்..
“எதைக் கேட்கச் சொல்கிற ஆறுமுகம்..?” புருவங்களை உயர்த்தினான் விவேகானந்தன்..
சத்தியசீலனுக்குச் சிரிப்பு வந்தது.. புதிதாய் திருமணமானவனை வீட்டைப் பார்த்துப் போக விடாமல், கால்களைக் கட்டிப் போட்டு வைத்திருப்பதைக் கேட்கச் சொல்கிறான் என்று சொல்ல முடியுமா..?
“டேய்.. பஜ்ஜியை முழுங்கிட்டு டீயைக் குடி.. பசி குறையும்.. யோசிக்கத் தெம்பு வரும்..” என்று சொல்லி வைத்தான்..
“இதைச் சொல்லச் சொல்லித்தான் ஆறுமுகம் தூண்டினானா..?”
“அவன் எதைச் சொல்லச் சொன்னான்னு நீ நினைக்கிற..?”
விவேகானந்தன் பதில் சொல்லாமல் பஜ்ஜியை விண்டு வாயில் போட்டான்.. சத்தியசீலன் ஆறுமுகத்திற்கு பஜ்ஜியை பகிர்ந்து கொடுத்துவிட்டு சொச்சத்தைக் காலி பண்ண ஆரம்பித்தான்.
“விவேக்.. அம்மா மனசை ஏண்டா கஷ்டப்படுத்தற..?”
“அவங்கதான் என்னைக் கஷ்டப் படுத்தறாங்க..”
“பெத்த மகனுக்கு காலாகாலத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணி பார்க்கனும்னு அவங்க நினைக்கிறதில என்னடா தப்பு..?”
“கொஞ்சநாள் பொறுக்கச் சொல்லுடா..”
“அதை அப்புறமாச் சொல்லிக்கலாம்.. இப்பக் கிளம்பு..”
“எங்கே..?”
“பெண் பார்க்க..”
“சத்யா.. விருப்பமில்லாம ஒரு பெண்ணைப் போய் பார்க்கிறதில எனக்கு உடன்பாடில்லைடா..”
“விருப்பம் எப்படிடா வரும்.. நீ போட்டோவைக் கூடப் பார்க்கலையாமே.. இந்த படத்தைப் பாரு.. பெண் எத்தனை அழகாயிருக்கு பார்த்தியா.. உன் இடத்தில செந்தில்நாதன் இருந்திருக்கனும்.. ஜொள்ளு விட்டுக்கிட்டு பொண்ணுப் பார்க்கக் கிளம்பிருவான்.. ரசிகண்டா அவன்.. “
“மனுசனாடா அவன்..? போனவாரம் ஒரு பெண்ணைப் பார்க்கப் போனவன் பொண்ணை விட அவங்கம்மா அழகுன்னு ஜொள்ளிக்கிட்டு வர்றான்.. அவனைப் போய் பேசறியே..”
“விடுடா.. அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. காலேஜில படிக்கிறப்பவே லெக்சரர்கிட்ட லவ் லெட்டர் கொடுத்து அடி வாங்கினவன்தான அவன்.. அப்படித்தான் பேசித் தொலைப்பான்.. நீ போட்டோவைப் பாரு..”
சத்தியசீலன் திணித்த போட்டோவில் இருந்த பெண் வெகு அழகாக இருந்தாள்.. விவேகானந்தன் போட்டோவைக் கையிலெடுத்து ஊன்றிப் பார்த்தான்.. சத்தியசீலன் ஆறுமுகத்திடம் ரகசியமாக கண்சிமிட்டி..
‘எப்புடி..?’ என்று புருவங்களை உயர்த்தினான்..
‘சூப்பர் சார்..’ கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துப் பாராட்டுத் தெரிவித்தான் ஆறுமுகம்..
விவேகானந்தன் கம்யூட்டரை அணைத்து விட்டு எழுந்து கொண்டதில் அவனது சம்மதம் தெரிந்தது.. ஆறுமுகம் ஆனந்தமாக விளக்குகளையும்.. பேன்களையும் அணைத்து விட்டுக் கதவுகளை இழுத்து மூடினான்.. விவேகானந்தனுக்குப் பெண் பிடித்துப் போய் விட வேண்டும் என்று அவனது மனம் கடவுளிடம் வேண்டிக் கொண்டது..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.