Chapter 12

0Shares

“என்னது..??!!!”

வந்தனாவிற்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை.. அள்ள அள்ளக் குறையாத சொத்துடன் வரும் சுகுணாவைப் போன்ற பேரழகியை ஒருவன் வேண்டாமென்று சொல்கிறானா..?

‘இவன் என்ன முட்டாளா..?’

சுகுணாவின் முகம் விழுந்து விட்டது.. பிறந்தது முதல் தோல்வி என்பதை அறியாமல் வளர்ந்தவள் அவள்.. கோடிஸ்வரக் குடும்பத்தின் செல்வமகள்.. அவள் கேட்டது கிடைக்கும்.. விவேகானந்தனை அவள் கேட்கவில்லை.. வேண்டாம் என்று சொல்லத்தான் வந்தாள்.. அதற்குள் அவன் அவளை வேண்டாம் என்று மறுத்து விட்டானே..

‘அம்மா..’ தவிப்புடன் தாயின் முகம் பார்த்தாள் சுகுணா..

அவர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலர் வந்திருந்தார்கள்.. மாப்பிள்ளை சுகுணாவை வேண்டாமென்று சொல்லிவிட்ட செய்தியை அவர்களது சொந்த பந்தங்களின் மத்தியில் பரப்பி விடுவார்கள்.. சுகுணாவின் தந்தைக்கு அது மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விடும்.. வி.வி. டெக்ஸ்டைல்ஸின் ஓனர், இதனால்தான் அவர் மகனுக்குப் பெண் கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடும்..

‘இப்படிச் சொல்லிட்டானே..’

சுகுணாவின் மனது துடித்தது.. கையில் இருந்த காபி டிரேயினால் விவேகானந்தனின் தலையில் மொத்த வேண்டும் என்ற வெறி கிளர்ந்தது.. தந்தையை எதிர்த்துப் பேசக் கூடாது என்பதற்காக இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கு ஒப்புக் கொண்டது எத்தனை பெரிய தவறாகப் போய்விட்டது..

“விசுவநாதன்..” சுகுணாவின் தந்தை குரலை உயர்த்தினார்..

“எங்க தகுதிக்குக் குறைவான இடத்தில சம்பந்தம் பேசியது மாப்பிள்ளை நல்ல குணங்களோடு இருப்பார்ன்னு நினைச்சதினால தான்.. பெண் பார்க்க வந்த இடத்தில இப்படிப் பேசறது என்ன குணம்..? இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைன்னா எதற்காக பெண் பார்க்க வரனும்..?”

விசுவநாதன் பதறிப் போனவராக மன்னிப்புக் கேட்கப் போவதற்குள்..

“அப்பா..” என்று விவேகானந்தன் அதட்டல் போட்டு அவரைப் பேச விடாமல் கட்டுப் படுத்திவிட்டான்..

“இதோ பாருங்க சார்.. இதற்கும் என் அப்பாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.. நீங்க எதைப் பேசினாலும் என்னிடம் பேசுங்க.. என் பேரண்ட்ஸிடம் பேச வேண்டாம்..” சுகுணாவின் அப்பாவிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டான்..

“உங்களைப் பெத்தவங்களிடம்தான் நான் சம்பந்தம் பேசினேன் விவேகானந்தன்.. அதுதான் முறை.. நீங்க முறை தெரியாம வளர்ந்திருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதே..” சுகுணாவின் தந்தை குத்தலாகச் சொன்னார்.

‘சபாஷ்..’ சுகுணாவின் விழிகளில் வெளிச்சம் வந்தது..

“எது முறை, எது முறையில்லைன்னு எனக்கும் தெரியும் சார்.. அவரவர் ஸ்டேட்டஸில் மேரேஜ் பண்ணிக்கிட்டாத்தான் சுயமரியாதையோடு வாழ முடியும்.. இந்தக் கல்யாண ஏற்பாட்டில் எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னதற்கே உங்க தகுதிக்கு நான் குறைவானவன்னு சொல் வந்திருச்சு.. கல்யாணமாகியிருந்தா என்னென்ன பேசுவீங்களோ.. வேண்டாம் சார்.. ஈக்குவல் ஸ்டேட்டஸில மேரேஜ் பண்ணிக்கிறதுதான் பெட்டர் சார்.. இதை நான் போனில் சொல்கிறது முறையில்லன்னுதான் நேரில் வந்தேன்.. மத்தபடி உங்களையோ.. உங்க மகளையோ இன்சல்ட் பண்ணனும்ங்கிற எண்ணம் எனக்கும் கொஞ்சம் கூட இல்லை.. உங்க பெண் அழகா இருக்காங்க.. எனக்கு ஈக்குவலான ஸ்டேட்டஸில் இவங்க இருந்திருந்தாங்கன்னா இவங்களை விட பெட்டர் சாய்ஸா யாரும் இருக்க முடியாது.. நான் கொடுத்து வைத்தவன்னு நினைத்துக்குவேன்.. அப்படியில்லாம என்னை விட உயரத்தில.. கோடிஸ்வரக் குடும்பத்திலே பிறந்தவங்களா இருக்கிற இவங்களை நான் மேரேஜ் பண்ணிக்கிட்டா இவங்களுக்காக மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொல்ல மாட்டாங்க.. இவங்களோட பணத்துக்காகவும், சொத்துக்காகவும் மேரேஜ் பண்ணக்கிட்டேன்னு சொல்லிருவாங்க.. மத்தவங்களை விடுங்க.. நமக்காக வாழ்கிறது தான் வாழ்க்கை.. மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு யோசித்து யோசித்து வாழ்ந்துக்கிட்டு இருந்தா அது வாழ்க்கையா இருக்காது.”

பேசிக் கொண்டிருந்தவன் ஒர் நொடி பேச்சை நிறுத்தி வந்தனாவை ஓர் பார்வை பார்த்து விட்டு..

“நான் மத்தவங்களை கேர் பண்ணுவதில்லை..” என்று சொல்லி விட்டுப் பேச்சைத் தொடர்ந்தான்..

வந்தனாவை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்க வில்லையாம்.. அதை சிம்பாலிக்காக உணர்த்துகிறானாம்..

‘நான் மட்டும் உன்னை ‘கேர்’ பண்ணுகிறேனா.. போடா.. டேய்..’ பல்லைக் கடித்தாள் வந்தனா..

“உங்க மகளை நான் மேரேஜ் பண்ணிக்கிட்டா நான் நானா வாழ முடியாது சார்.. அவங்களுக்கும் அப்படித்தான்.. எனக்கு சரிப்பட்டு வராத கோடிஸ்வர வாழ்க்கையை வாழ முடியாம நானும்.. உங்க மகளுக்கு சரிப்பட்டு வராத மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ முடியாமல் அவங்களும் திண்டாடி ஒருத்தரை யொருத்தர் வெறுக்க ஆரம்பிச்சுருவோம்.. தேவையா..?”

நிறுத்தி நிதானமாக அவன் பேசிய பேச்சில் வசீகரிக்கப்பட்ட சுகுணாவின் தந்தை மகளைப் பார்த்தார்.. அவளது விழிகளில் விவேகானந்தனின் மீதான மதிப்பும், மரியாதையும் தெரிந்ததில் வந்தனா வெறுத்துப் போனாள்.. இந்த அளவுக்கு அவள் குச்சியை முறித்துப் போட்டிருக்கிறாள்.. அதற்கு எந்தவிதப் பலனும் இல்லையென்றால் என்ன அர்த்தம்..? எப்போதுமே வெல்வது அவன்தானா..? வந்தனாவால் அவனை வெல்லவே முடியாதா..?

“அதுதானே பார்த்தேன்.. நான் ஒரு கணக்குப் போட்டால் அது தப்பாக இருக்காதே.. உங்க விசயத்தில அது பொய்யாப் போச்சேன்னு நினைத்தேன்.. இல்லைன்னு நீங்க புரூவ் பண்ணிட்டிங்க.. கோடிஸ்வரன் பொண்ணுன்னு சொத்துக்கு ஆசைப்பட்டுத் தாலியைக் கட்டாம.. இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு வீடு தேடி வந்து சொல்லிட்டுப் போகனும்னு நினைத்தீங்க பாருங்க.. உங்களைப் போல ஒருத்தரைப் பார்க்கவே முடியாது..”

சுகுணாவின் குடும்பமே விவேகானந்தனுக்குப் புகழாரம் சூட்டி வழியனுப்பி வைத்தது.. மீனாட்சி தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.. வழி நெடுக மகனைத் திட்டிக் கொண்டே வந்தாள்..

“ஏம்ப்பா சத்தியசீலா.. இப்படியொரு கேணையை எங்காச்சும் பார்த்திருக்கியாப்பா..?”

“இல்லேம்மா.. கோடிக் கணக்கான சொத்தோட பேரழகான பெண் கிடைச்சிருக்கு.. மாதச் சம்பள வேலையை ரிசைன் பண்ணிட்டு.. முதலாளியா நாற்காலியில உட்காராம லெக்சர் அடிச்சுப் பெண்ணைப் பெத்தவர்கிட்ட ‘நல்மனிதன்’ங்கிற சர்டிபிகேட்ட வாங்கிட்டு வந்திருக்கான்..”

“விவேகானந்தன்னு பேர் வைக்கிறப்பவே தலப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. மணிமாறன், குலசேகரன்னு வீரதீரமா இருக்கிறவங்க பேரை வைச்சுத் தொலைங்கன்னு.. இந்த மனுசன் கேட்டாரா..? சாமியாரு பேரை வைச்சு இவனை சாமியாராவே ஆக்கிட்டாரு..”

“இதானே வேண்டாம்ங்கிறது.. இவனைப் பாத்தா சாமியார் மாதிரியா தெரியுது..? ஊரில இருக்கிற அத்தன பொண்ணுகளையும் சைட் அடிக்கிறான்.. கலாட்டா பண்றான்.. இவனைப் போய் சாமியார்ங்கறிங்களே..”

“தானாத் தேடி வந்த சம்பந்தம்.. கோடிஸ்வரப் பரம்பரை.. எங்க பாடுதான் இப்படியிருக்கு.. இவன் தலைமுறையாவது கோடிஸ்வர தலைமுறையாய் இருக்கட்டுமேன்னு நினைச்சேன்.. பேசிப் பேசியே அந்த நினைப்பில மண்ணை அள்ளிப் போட்டுட்டு வந்துட்டான்.. இதுபோல இடம் இனி அமையுமா..?”

“அமையவே வேண்டாம்..” அதுவரை அமைதி காத்தபடி காரை ஒட்டிக் கொண்டிருந்த விவேகானந்தன் அறிவித்தான்..

“அவங்ககிட்டச் சொன்னதைத்தான் உங்ககிட்டயும் சொல்கிறேன்.. நமக்குச் சமமான இடத்தில பெண் பாருங்க.. அத விட்டுட்டு மாமனார் சொத்தில பிழைக்கிறவனா என்னை ஆக்கப் பார்க்காதீங்க.. ஒரு நாளும் அது நடக்காது..”

“ஏண்டா இப்படிப் படுத்தற..?”

“உங்களுக்குப் புரியலைம்மா.. முதலாளியா மாறனும்னா நான் உழைத்துச் சம்பாதித்து.. உருவாக்கின கம்பெனியில முதலாளியா உட்காரனும்.. அடுத்தவங்க உழைத்துக் சேர்த்து வைத்த பணத்தில ‘அம்மா, கும்மா’ கொளுத்தக் கூடாது.. நமக்கு என்னம்மா குறை..? பங்களாப் போல தோட்டமும் போர்டிகோவுமா மாடிவீடு இருக்கு.. கிராமத்தில ஐம்பது ஏக்கர் நிலம் இருக்கு.. அப்பாவுக்கு தாசில்தார் உத்தியோகம் இருக்கு.. எனக்கு பேங்க் மேனேஜர் வேலையிருக்கு.. நாமளும் பணக்காரங்கதான்ம்மா.. என் சந்ததிக்கு இது போதும்..”

“இவன்கிட்டப் பேசி ஜெயிக்க முடியுமா சத்யா..?”

“பொண்ணைப் பெத்தவராலேயே முடியலை.. உங்களாலே முடியுமா..? விட்டிருங்கம்மா..”

“இவன் எங்கேப்பா என் பிடியில அடங்கினான்..? நான் விடுகிறதுக்கு..?”

சலித்துக் கொண்டாள் மீனாட்சி.. வீடு வந்து விட்டது.. காரை போர்டிகோவில் நிறுத்தினான் விவேகானந்தன்.. இறங்கிக் கொண்ட சத்தியசீலன் அவனுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி ஓங்கி ஓர் உதை விட்டுக் கிளப்பி, விவேகானந்தனிடம் சொல்லிக் கொள்ளாமலே பறந்து விட்டான்.. மகனை முறைத்தபடி மீனாட்சி வீட்டைத் திறந்தாள்.. விசுவநாதன் கனிவுப் பார்வையுடன் ஏதோ சொல்ல வாய் திறந்தார்..

“உங்களாலேதான் அவன் இப்படி புத்தி பேதலிச்சு வியாக்கினம் பேசிட்டு வந்திருக்கான்… இனியும் என்ன ஞானோபதேசம் பண்றீங்க..?” மீனாட்சி போட்ட சத்தத்தில் விசுவநாதன் வீட்டுக்குள் ஓடிவிட்டார்..

விவேகானந்தன் கேட்டை மூடப் போனான்.. எதிர்வீட்டு வாசலில் கார் வந்த நின்றது.. வந்தனாவை இறக்கி விட்டுச் சென்றது..  வீட்டு வாசல் கேட்டைத் திறந்த வந்தனா திரும்பிப் பார்த்தாள்.. விவேகானந்தனின் பார்வையும், அவளது பார்வையும் சந்தித்துக் கொண்டன..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link