Chapter 13
மெலிதான தூறல் போடத் துவங்கியிருந்தது.. சிலுசிலுவென மழைக்காற்று மேனியைத் தழுவ.. காற்றுடன் கலந்து வந்த மண்வாசனை நாசியில் நுழைந்தது.. மழை தரும் மண்வாசனைக் கென்றே தனி மணம் உண்டு.. சாலையோர மரங்களின் அடர்த்தி தெரு விளக்குகளின் ஒளியை மறைத்திருக்க.. இருளுடன் கூடிய வெளிச்சம் சாலையெங்கும் கவிந்திருந்தது..
கேட்டை மூடப்போன விவேகானந்தன் அதை மூடாமல் விரியத் திறந்து சாலைக்கு வந்தான்.. கேட்டை திறந்து கொண்டிருந்த வந்தனா பதட்டம் கொண்டாள்.. அவன் ஏன் வீட்டுக்குள் போகாமல் வெளியே வருகிறான்.. ஒருவேளை அவளுடன் சண்டை போட வருகிறானோ..
அப்படித்தான் என்று தோன்றியது.. விவேகானந்தன் நிதானமான நடையுடன் அவளை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்.. வந்தனா சுற்றுமுற்றும் பார்த்தாள்.. இரவு உணவு நேரம் அது.. எவர் வீட்டு வாசலிலும் நடமாட்டம் தெரியவில்லை.. வசதியானவர்கள் வசிக்கும் பகுதி என்பதினால் வீடுகள் காம்பவுண்டு சுற்றுச் சுவருடன் தனித்திருந்தன.. இரை தேடச் செல்லும் பறவைகள் மாலையானால் கூடுகளுக்குத் திரும்பி விடுவதைப் போல அனைத்து வீடுகளிலும் கார்கள் தெரிந்தன.. உழைத்த களைப்புத் தீர அவர்கள் ஓய்வாக உணவருந்திக் கொண்டிருக்கலாம்.. தெருவில் ஒரு சைக்கிள் மணியின் சப்தம் கூடக் கேட்கவில்லை.. தூறல் போடும் மழை நேரத்தில்.. இரவின் இருளில் எவரும் வாசல் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை..
‘இவன் ஏன் இந்த நேரத்தில் என்கூடப் பேச வருகிறான்..?’
வீட்டுக்குள் ஓடி விடு என்று மனது அறிவுறுத்தியது.. ஒரு சிறு எட்டுக்கூட வைக்க முடியாமல் கால்கள் பின்னின.. வந்தனாவின் மனதில் அச்சம் மையம் கொண்டது.. குற்றம் செய்த மனது குறுகுறுத்தது.. இது போன்ற போட்டுக் கொடுக்கும் வேலைகளை அவள் செய்ததில்லை.. அவளையே அதைச் செய்ய வைத்து விட்ட புண்ணியவான் இவன்தானே..
“குச்சி முறிச்சுப் போடற வேலையை செவ்வனே செஞ்சு முடிச்சுட்ட போல..” நேரடியாக விசயத்துக்கு வந்து விட்டான் விவேகானந்தன்..
உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் வந்தனாவின் தொண்டை உலர்ந்தது.. கைகள் நடுங்கின.. அவன் மட்டும் அவளைப் பற்றி மட்டக் கேவலமாக செந்தில்நாதனிடம் பேசலாமா என்று மனதுக்குள் கேட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்..
“யார் குச்சியை முறிச்சுப் போட்டது..?” கூடிய மட்டிலும் கெத்தாக முகத்தை வைத்துக் கொண்டு.. நிமிர்வாக இருப்பதாக நினைத்துக் கொண்டு நடுங்கும் குரலில் கேட்டாள்..
“நீதான்..” அழுத்தமாக சொன்னான் விவேகானந்தன்..
“நானா..?”
“நீயேதான்.. உன் பிரண்டோட அக்காவிடம் என்னைப் பத்தி என்ன சொல்லி வைச்சிருந்த..? பொறுக்கின்னா..?”
‘கண்டு பிடிச்சுட்டானே..’
அவள் அப்படித்தான் சொல்லியிருந்தான் என்பதில் அவனுக்கு இருந்த நிச்சயத்தில் அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.. அவனை துவம்சம் செய்து விடும் ஆங்காரம் கொண்டாள்.. எங்கே..? அவனைப் பற்றி அவள் அவ்வளவு விவரம் சொல்லி ‘பொறுக்கி’ பட்டம் கட்டியிருக்க.. ஒரே நிமிடத்தில் அத்தனையையும் உடைத்துத் தூள் தூளாக்கி.. நேர்மையாளன் பட்டத்தை வென்று விட்டானே..
“வாவ்.. வாட் எ பெர்சன் ஹி இஸ்.. அக்கா.. ஹைலி ஜென்டில் மேனை நீ மிஸ் பண்ணிட்டன்னுதான் சொல்வேன்..” என்று சொன்னாளே வீணா.. சுகுணாவின் முகத்திலும் நேர்மை குணமுள்ள மனிதனை இழந்துவிட்ட ஏமாற்றம் சிறிதளவு தெரிந்ததே.. அது மட்டுமா..
“எதிர்வீடுன்னு சொல்ற.. இப்படிப்பட்ட ஜெண்டில்மேனைத் தப்பாப் புரிந்து வைத்திருக்கிற.. மனிதர்களைப் புரிந்து கொள்கிற பக்குவம் உனக்கு இன்னும் வரலை வந்தனா..” என்று அவளையே பக்குவப்படாத அரைகுறை என்று பட்டம் கட்டி விட்டாள் வீணா..
‘இவனுக்குப் பொறுக்கிப் பட்டம் கட்டப் பார்த்தா.. இவன் எனக்கு அரைகுறை அறிவாளிங்கிற பட்டத்தை வாங்கிக் கொடுக்கிறான்..’
பற்களை நறநறத்தபடி வீடு வந்து சேர்ந்திருந்தாள் வந்தனா.. வந்தவளை வாசலிலேயே மடக்கி உன்னை நான் அறிவேன் என்று அறிவித்து தலை குப்புற விழ வைத்து விட்டான் விவேகானந்தன்..
“என்ன..? இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மிரட்டிப் பார்க்கறிங்களா..? அங்கே என்னவோ நாணயஸ்தன் மாதிரிப் பேசினீங்க.. பணத்தாசை இல்லாத போதி மரத்தடி புத்தன் போல நடிச்சீங்க.. இங்கே வந்து நான்தான் உங்களுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டதைப் போல குத்தம் சொல்கிறிங்க.. என்ன..? விளையாடறீங்களா..?”
“விளையாடத்தான் போறேன்.. என் வாழ்க்கையிலே விளையாடி விட்ட உன்னுடன் விளையாடத்தான் போகிறேன்..”
“உங்க வாழ்க்கையிலே நான் விளையாடினேனா..? என்ன விளையாட்டு..? ஃபுட்பாலா..? டென்னிஸா..? இல்லை.. கிரிக்கெட்டா..?”
“நீயெல்லாம் பாண்டி விளையாடக்கூட லாயக்கில்லை.. வாய் மட்டும் எட்டூருக்குக் கிழியுது..”
“ஆமாமாம்.. நீங்க பெரிய சச்சின் டெண்டுல்கர்.. நீங்க சொன்னாக் கேட்டுக்க வேண்டியதுதான்..”
“நான் சச்சின் டெண்டுல்கரோ இல்லையோ.. நீ வெறும் சப்பாணி..”
‘அன்றைக்கு ‘அட்டு பிகர்..’ இன்றைக்கு ‘சப்பாணி..’யா..?’
வந்தனாவின் ரத்தம் கொதித்தது.. ஏற்கனெவே அவள் எண்ணியிருந்தது ஈடேறாமல் போனதில் மனம் நொந்திருந்தாள்.. இதில் அவன் விட மாட்டான் விவேகானந்தன் என்று வாசலிலேயே வழி மறித்து வாதுக்கு அழைத்ததில் டென்சன் தலைக்கு ஏறியது..
“என்ன..? கேட்கிறதுக்கு ஆளில்லைங்கிற நினைப்பா..? ஒரு சத்தம் கொடுத்தாப் போதும்.. தெருவே கூடிரும்.. கொடுக்கவா..?”
“தாராளமாக் குடு.. ஏற்கனெவே எங்கம்மா பெரிய இடத்துச் சம்பந்தம் தட்டிப் போயிருச்சேங்கிற மன வேதனையில இருக்காங்க.. உன்னாலதான் அது தட்டிப் போச்சுன்னு தெரிஞ்சா உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விட்டிருவாங்கன்னா நினைக்கிற..? என்னத்தைப் பொண்ணு வளர்த்து வைச்சிருக்கீங்கன்னு ஆரம்பித்து அடுக்கடுக்காக் கேள்வி கேட்டா உன் குடும்பமே இருக்கிற இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சுக்குவீங்க.. தெரியுமில்ல..”
விவேகானந்தன் விவரிக்க.. விவரிக்க.. வந்தனா நடுநடுங்கி விட்டாள்.. வாள் வீச்சைக்கூட அவள் எதிர்கொண்டு விடுவாள்.. மீனாட்சியின் வாய் வீச்சை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.. மதுரை வட்டாரப் பேச்சில் மீனாட்சி கொடுத்துக் கட்ட வேண்டும் என்று நினைத்து விட்டால் எவராலும் தப்பிப் பிழைக்க முடியாது..
“இங்கே பாருங்க.. நீங்க பெண் பார்க்கப் போனிங்க.. பெண்ணை வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்துட்டிங்க.. இதில் நான் எங்கே வந்தேன்..? பெண்ணோட தங்கை என்னோட கிளாஸ்மேட்.. இதைத்தவிர இந்த விசயத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..?”
“பெண்ணை ஏன் வேண்டாம்ன்னு சொன்னேன்..? உன்னால்தானே.. தோதா அதை மறைக்கிற பார்த்தியா..?”
“என்னால் வேண்டாம்ன்னு சொன்னீங்களா..?”
“யெஸ்.. உன்னால்தான் வேண்டாம்ன்னு சொன்னேன்.. இல்லைன்னா.. கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்திருக்கிற பேரழகியை வேண்டாம்ன்னு சொல்ல நான் என்ன பைத்தியக்காரனா..?”
‘நீயேண்டா பைத்தியமாகப் போகிற..? ஊரில இருக்கிறவங்களையில்ல பைத்தியமாக்குவ..’
விவேகானந்தனின் ஊடுறுவும் பார்வை அவள் மனதில் நினைப்பதை படிக்கவா என்று கேட்டதில் அரண்டு போனவள் ஒழுங்கு மரியாதையாக அதை அழித்துவிட்டு.. ஒன்றும் அறியாத குழந்தையைப் போல முகத்தை வைத்துக் கொண்டு..
“அப்புறம் ஏன் அவங்களை வேண்டாம்ன்னு சொன்னீங்க..?” என்று கேட்டாள்..
அவளுக்கே அதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது.. விவேகானந்தன் ஆற்றிய சொற்பொழிவை அவள் நம்பத் தயாராக இல்லை.. அவன் எப்பேற்பட்ட ‘கேத்தரவாடு..’ என்பதை அவள் அறிவாளே.. அவனாவது.. நீதி, நேர்மை, நியாயம் என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசுவதாவது.. அவனது முடிவிற்குப் பின்னால் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது..”
“ஏன்னா.. நான் அந்தப் பெண்ணை வேண்டாம்ன்னு சொல்லாமல் இருந்திருந்தா… அந்தப் பெண் என்னை வேண்டாம்ன்னு சொல்லியிருக்கும்.. அதுதானே உன் திட்டம்..?”
“என்னது..?” அவள் ‘ஙே..’ என திருதிருத்தாள்..
“இந்த சுகுணாவை நாங்க பெண் கேட்கலை.. அவளோட அப்பாதான் வலிய வந்து மாப்பிள்ளை கேட்டார்.. வருந்தி, வருந்தி பெண் பார்க்க அழைத்தார்.. அப்படிப்பட்டவங்க பெண் பார்க்கப் போயிருக்கிறவனை.. ‘வெட்டவா, குத்தவா..’ என்கிறதைப் போல முறைத்துப் பார்த்தா ஏதோ வில்லங்கம் வந்திருக்குன்னுதானே அர்த்தம்..? அங்கே நீ இருந்த.. ஓகே.. வில்லங்கம் வில்லங்கத்தை விதைக்க வந்திருக்குன்னு புரிந்துக்கிட்டேன்.. சுதாரிச்சுக்கிட்டேன்.. எப்படி..?”
அவனது புருவங்கள் ஏறி இறங்கிய அழகில் மயங்க முடியாமல் வெறுத்துப் போனாள் வந்தனா.. அவள் சுகுணாவின் வீட்டில் இருந்து அவன் பார்வையில் பட்டு விட்டால்.. ஏதோ ‘திரிசமன்’ வேலையைச் செய்ய வந்திருக்கிறாள் என்று அவன் கண்டு பிடித்து விடுவான் என்பதை அவள் ஏன் உணராமல் போனாள்..? இதில் அவனுடைய முகம் கருக்கும் அழகைப் பார்க்க அவள் அங்கே இருந்தாளாம்.. கடைசியில் முகம் கருத்தது யார்..?
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.