Chapter 16
அன்று முழுவதும் விவேகானந்தனின் கண் பார்வையில் பட்டு விடாமல் ஜாக்கிரதையாக ஒதுங்கியிருந்தாள் வந்தனா.. அவனுடன் வம்புச் சண்டை போடுவதென்றால் அவளுக்கு அல்வாச் சாப்பிடுவதைப் போல இருக்கும்.. காலையில் அவனை ஜாடைப் பேச்சுப் பேசி வம்பிழுப்பதற்காகவே வாசல் தெளித்துக் கோலம் போடும் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தவள் அவள்.. அவனை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் நாள் அவளுக்கு வாய்க்கவேயில்லை.. மாறாக அவள் புறமுதுகு காட்டி ஓடி வந்து விட்டாளே..
“வந்தனா.. ஸ்டேண்ட் அப்..”
வகுப்பில் லெக்சரர் மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி காட்டுக் கத்தல் கத்தியதில் உலுக்கி விட்டவளைப் போல விதிர்த்துப் போன வந்தனா பக்கத்திலிருந்த வசந்தியை மலங்க மலங்க விழித்துப் பார்த்தாள்..
“மொச்சைக் கொட்டை கண்ணை உருட்டிக்கிட்டு என்னையேண்டி பாத்துத் தொலைக்கிற.. லெக்சரர் மேடம் என்னையும் ஸ்டேண்ட் அப்பச் சொல்லும்..” தாழ்ந்த குரலில் வசந்தி சீறினாள்..
“எதுக்குடி என்னை எழுந்து நிற்கச் சொல்கிறாங்க..?”
“ஊம்.. முழிச்சுக்கிட்டேத் தூங்கறது எப்படின்னு டெமான்ஸ்ட்ரேசன் பண்ணிக் காமிச்சியில்ல.. அதுக்கு மலர்மாலை போட்டு வாழ்த்துச் சொல்லிக் கை குழுக்க எழுந்திரிச்சு நிற்கச் சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்.. போதுமா..”
“வசந்தி..”
“இம்சையே.. ஒரு நிமிசமாக மேடம் உன்னை ‘வந்தனா, வந்தனா..’ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.. நீ என்னடான்னா மெகால் பிடிச்சதைப் போல உட்கார்ந்துக்கிட்டு இருக்க.. என்னடி ஆச்சு உனக்கு..?”
அவளுக்கு என்ன ஆனது..? பதில் சொல்ல முடியாமல் துயரப் பந்து தொண்டையைக் கவ்விக் கொள்ள எழுந்து நின்றாள்..
“வாட் ஹேப்பன்..?”
வசந்தி தமிழில் கேட்டதை லெக்சரர் ஆங்கிலத்தில் கேட்டாள்.. வந்தனா செய்து வைத்த சிலை போல அசையாமல் நின்றாள்.. லெக்சரரின் கண்கள் இடுங்கின.. வந்தனாவை உன்னிப்பாகப் பார்த்து..
“ஆர் யு ஆல்ரைட்..?” என்றாள்..
வந்தனா சோகையாக தலையை அசைத்தாள்.. இது வேலைக்கு ஆகாது என்று வசந்தி..
“இவளுக்கு செம ஃபீவர் மேம்..” என்று புளுகினாள்..
“ஈஸிட்..?”
லெக்சரர் வந்தனாவை ஏற இறங்க பார்த்தாள்.. சோர்ந்து நின்ற வந்தனாவின் தோற்றம் காய்ச்சல்காரியைப் போலவே இருந்ததில்.
“வீட்டுக்குப் போறியாம்மா..?” என்று கனிவாகக் கேட்டாள்.
“இவளைத் தனியா அனுப்பினா வழியில் பொத்துன்னு விழுந்துருவா மேம்.. இது லாஸ்ட் கிளாஸ் ஃiவ் மினிட்ஸில கிளாஸ் முடிஞ்சிரும்.. நான் துணைக்குப் போய் இவள் வீட்டில் சேர்ந்திருவேன் மேம்..” குறுக்கிட்டாள் வசந்தி..
“தட்’ஸ் கரெக்ட்..”
லெக்சரர் வந்தனாவை உட்காரச் சொல்லி விட்டாள்.. அவளது காருண்யத்தைப் பாராட்டாமல்.
“இது என்ன என்ஜினியரிங் ஃபைனல் இயர் கிளாஸா.. இல்லை எல்.கே.ஜி கிளாஸா..? பப்பாவைப் போல ஸ்டேண்ட் அப்புன்னு அதட்டறாங்க..” என்று சிடுசிடுத்தபடி உட்கார்ந்தாள் வந்தனா..
“உன்னையெல்லாம் ஃபீவர்ன்னு காப்பாத்தி விடாம மாட்டிக்கிட்டு முழிடின்னு விட்டிருக்கனும்.. இவங்ககிட்ட நம்ம இண்டர்னெல் மார்க் சிக்கியிருக்கு.. ஞாபகம் வைத்துக்க..” எச்சரித்தாள் வசந்தி..
வகுப்பு முடிந்ததும் புத்தகப் பையைத் தோளில் மாட்டிக் கொண்ட வந்தனா சிந்தனையுடன் நடந்து பாதையோரக் கற்களில் கால் தடுக்கி விழுகப் போக.. அவளது கை பிடித்து நிறுத்தி தடுத்தாட் கொண்டாள் வசந்தி..
“கண்ணையென்ன பிடறியிலா வைத்திருக்க.. பார்த்து நடக்க மாட்டியா..? இதில அறிவாளி போல யோசனை வேற.. உன் மூஞ்சிக்கெல்லாம் இந்த சிந்தனை செட் ஆக மாட்டேங்குதுடி..
என்ன நடந்துச்சுன்னு சொல்லித் தொலை.. நீ இப்படி இருக்கிற ஆளில்லையே..”
வசந்தி மரத்தடி பெஞ்சில் வந்தனாவின் தோள்களை அமுக்கி அமர வைத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள்.. வந்தனாவுக்கு மனது பாரமாக இருந்தது.. எதிரிக்காரன், அவள் அவனை வசியம் பண்ண முயல்வதாக குற்றம் சாட்டியிருந்ததில் மனதுக்குள் நொறுங்கிப் போயிருந்தாள்..
மலையளவு மனபாரம் சுமப்பவர்களுக்கு ஆறுதலான சிறு சொல் போதும்.. மடி சாய்ந்து மனதைக் கொட்டி விடுவார்கள்..
வந்தனாவும் அப்படித்தான்.. விவேகானந்தனைப் பற்றியும் அவனுக்கும் அவளுக்கும் ஆகாது என்பதைப் பற்றியும்.. அவளைப் பற்றி அவன் செந்தில்நாதனிடம் செய்த வர்ணனைகளைப் பற்றியும் சொல்லி அழுதாள்..
“என்னை ‘அட்டு பிகர்’ன்னு சொன்னான்டி.. நசுங்கிப்போன தகர டப்பான்னு வர்ணிச்சான்.. என் மனசே தாங்கலை வசந்தி..”
வசந்திக்குப் பாவமாக இருந்தது.. வந்தனாவின் மன வேதனையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.. சுடு சொற்களை வீசுபவர்கள் ஓர் நொடியில் வார்த்தைகளைச் சிதற விட்டுப் போய் விடுவார்கள்.. கேட்க நேரிடுபவர்கள் அதைத் திரும்பத் திரும்ப நினைத்து காலம் முழுவதும் மனதில் சுமந்து மருகி உருக்குலைந்து போவார்கள்.. வந்தனா அந்த நிலையில்தான் இருந்தாள்..
“அவனை உனக்குப் பிடிக்குமா வந்தனா..?”
“அப்படின்னு அவன்தான் சொல்றான்.. இத்தனை நாளாச் சொல்லலை.. திடிர்ன்னு நேத்து நைட்டு குண்டைத் தூக்கிப் போடறான்.. அவன் மேல எனக்கு ஆசையாம்.. அதனாலதான் சுகுணாக்காவின் மனதில் விசத்தை விதைத்தேனாம்..”
“சுகுணாக்கா யாருடி..?”
“நம்ம வீணாவோட அக்கா.. அவ வீட்டுக்கு நேற்று சாயங்காலமா போயிருந்தேன் வசந்தி.. போன பின்னாலதான் தெரிஞ்சது.. இந்த வில்லன் சுகுணாக்காவைப் பெண் பார்க்க வர்றான்னு.. அவனைப் பழிவாங்க செம்மயான சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு மகிழ்ந்து போனேன்.. என் பிளானும் வொர்க்-அவுட் ஆயிடுச்சு.. இத்தனை வில்லத்தனத்தையும் ஸ்கெட்ச் போட்டுச் செய்தவள்.. என்னை அவன் அங்கே பார்த்து விட்டால் நான் ஏதாவது வில்லத்தனம் செய்து வைத்திருப்பேன்னு சுதாரிச்சுக்குவான்னு தோணாம போயிருச்சுடி..”
“அவன் சுதாரிச்சுக்கிட்டானா..?”
“ஆமாண்டி..”
நடந்தவற்றை விவரித்தாள் வந்தனா.. கேட்டுக் கொண்டிருந்த வசந்தி, ஒரு கை தேர்ந்த கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களும் விவேகானந்தனிடம் குடி கொண்டிருக்கின்றன என்று திருவாய் மலர்ந்தருளினாள்.. ஒவ்வாமையுடன் முகம் சுளித்தாள் வந்தனா..
“அவனும்.. அவன் மூஞ்சியும்.. அவனைப் போய் ஹீரோன்னு சொல்றியேடி.. அவன் பக்கா வில்லன்..”
“என்னவோ போ… அவன் சொல்வதைப் போல உனக்கொன்னும் அவன்மேல ஆசையில்லையே..”
“சேச்சே..”
“அப்ப அவனை எனக்கு இண்ட்ரொடுயூஸ் பண்ணி வையேன்..”
“ஆமாண்டி.. உனக்கு ‘மாமி’ வேலை பார்க்கத்தான் நான் காத்திருக்கேன்..”
பொத்துக் கொண்டு வந்த கோபத்துடன் எழுந்த வந்தனா ஸ்கூட்டியை கோபத்துடன் ஓங்கி ஒரு உதை உதைத்தாள்.. அது அலறிக் கொண்டு கிளம்பியது.. புத்தம் புது ஸ்கூட்டியை ஆசையுடன் தொட்டுப் பார்த்த வசந்தி..
“இந்த ஸ்கூட்டி அவனோட ரெக்கமெண்டேசனிலதான கிடைச்சது..? அந்த நன்றி விசுவாசம் உனக்கு இருக்கா..?” என்று கடுப்பைக் கிளப்பினாள்..
“கொன்னுருவேன்.. கொலை வெறியில இருக்கேன்.. பேசாம தள்ளிப் போயிரு..” எரிச்சலுடன் எச்சரித்த வந்தனா ஸ்கூட்டியில் பறந்து விட்டாள்..
வீட்டு போர்டிகோவில் ஸ்கூட்டியை நிறுத்திப் பூட்டியபோது ‘இது அவனோட ரெக்கமென்டேசனில் வந்து சேர்ந்த வண்டிதானே..’ என்று தோன்றியது..
மழைநாளின் இருட்டில் அவள் கல்லூரிவாசலில் இருந்த பஸ்ஸ்டாப்பில் செந்தில் நாதனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு வருணிடம் விவேகானந்தன் சப்தம் போட்டதில் வருண் நாராயணனிடம் விவரத்தைச் சொல்லி மறுநாளே வந்தனாவுக்காக ஸ்கூட்டியை வாங்க வைத்து விட்டான்..
“ஆசையாசை.. இப்பொழுது..
பேராசை இப்பொழுது..
ஆசை தீரும் காலம் எப்பொழுது..?”
எதிர் வீட்டு வாசலில் பாடல் சப்தம் கேட்டது.. திரும்பிப் பார்க்காமலே, அது விவேகானந்தன் என்பதைப் புரிந்து கொண்ட வந்தனாவின் உடல் நடுங்கியது.. இவன் விடவே மாட்டானா என்று மனம் சோர்ந்தாள்.. ஓடி, ஒளிய இடமேது..? எதிர்வீட்டில் இருந்து தொலைக்கிறான்.. அவள் வீட்டுக்கு வந்து போகிறான்.. அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாதே..
திரும்பிப் பார்க்காமல் வந்தனா வீட்டுப் படிகளில் ஏறினாள்..
“குரு..” வருண் வீட்டுக்குள் இருந்து எதிர் வீட்டு வாசலுக்குப் பாய்ந்தான்..
‘வசியக்காரன்..’ என் குடும்பத்தை வசியம் பண்ணி வைச்சுக்கிட்டு என்மேல பழிபோடறான்..
வந்தனா மனதுக்குள் குமைந்தாள்..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.