Chapter 17

0Shares

மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி படித்துக் கொண்டிருந்தாள் வந்தனா.. மாடிப்படியில் ‘தொம், தொம்’ எனக் காலடியோசையும், அதைத் தொடர்ந்து பேச்சுக் குரல்களும் கேட்டன.. வந்தனாவின் நடை நின்றது.. காது கூர்மையானது.. வருணுடன் பேசிக் கொண்டு வருவது யார்..? விவேகானந்தனா..?

“அவன் காருக்கு ஒரு குணமிருக்கு குரு.. எங்கே போகனுமுன்னாலும் அது லேடிஸ் காலேஜ் வழியாத்தான் போகும்.”

“அப்படின்னு கார் சொல்லுச்சா..?”

“அவன் சொல்லிக்கிட்டுத் திரியறான் குரு.. கார் அவன் சொல் பேச்சுக் கேட்காதும்பான்.. அப்படிக் காரே சைட் அடிக்கக் கிளம்பும் போது என்னைப் போல இளைஞன் கிளம்ப மாட்டானா குரு..?”

“டேய்.. ரெண்டு வருசத்துக்கு முன்னாலே இருந்த விடலைப் பையனாடா நீ..?”

“அது பிளஸ் டூ படிச்ச வயசு..”

“இப்ப..?”

“இன்ஜினியரிங் காலேஜில் செகண்ட் இயர் ஸ்டூடண்ட் குரு.. காலேஜிக்கே நான்தான் ‘சிய்யான்..'”

“என்னது.. ‘சிய்யானா..?'”

வருணை ஏற இறங்கப் பார்த்தபடி ஒரு தினுசான குரலில் கேட்டான் விவேகானந்தன்.. இருவரும் மொட்டை மாடியில் கால் பதித்து விட்டார்கள்.. வந்தனாவைக் கண்டதும் பேச்சு நின்றது..

“இங்கே என்ன பண்ற..?” வருண் கேட்டான்..

“பாத்தாத் தெரியலை..?” வந்தனா கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கிக் காண்பித்து விட்டு..

“படிக்கிறேண்டா.. உன்னைப் போல வெட்டி ஆபிசரோட வெட்டி அரட்டை அடிக்கலை..” என்று விவேகானந்தனை முறைத்தபடி சொன்னாள்..

“உலகத்திலேயே என்ஜினியரிங் பாடத்தை நடந்துக்கிட்டே படிக்கிற ஒரே ஆள் நீதான் வந்தனா..”

“அக்கான்னு கூப்பிடுடா குரங்கே..”

“முடியாது தேவாங்கே.. கால்குலேசனை மனப்பாடம் பண்றாளாம்.. போ.. உன் ரூமில போய் அடங்கி உட்கார்ந்து கால்குலேசனைப் போட்டுப் பழகு..”

“ஒரு சீனியர்கிட்ட.. அதுவும் ஃபைனல் இயர் படிக்கிற சீனியர்கிட்டப் பேசுகிற மாதிரியாடா பேசற..?”

“சீனியரெல்லாம் காலேஜில்தான்.. வீட்டில இல்ல..”

“இங்கேயும் நான்தாண்டா சீனியர்.. உனக்கு அக்கா..?”

“அதனால நான் உனக்குத் தொக்கா..?”

“இங்கே பாரு.. இது அப்பா கட்டின வீடு.. எனக்கும் ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு.. போகிறதா இருந்தா நீ போ..”

வந்தனா வருணிடம் சொல்லியபடி விவேகானந்தனை முறைத்தாள்.. அவனோ புருவங்களை உயர்த்தி அவளைத் தடுமாறச் செய்தான்..

“நல்லா இருக்கே உன் நியாயம்.. நான் எதுக்குப் போகனும்..? நீதான் இன்னொரு வீட்டிற்கு வாழ்க்கைப் பட்டுப் போகப் போகிறவ.. ஸோ.. நீதான் போகனும்.. இது என் வீடு..”

“நான் படிக்க வந்திருக்கேன்..”

“நான் அரட்டையடிக்க வந்திருக்கேன்..”

“அதான் பாத்தாலே தெரியுதே..”

வந்தனா விவேகானந்தனை அலட்சியமாகப் பார்த்தாள்.. அவனுக்குப் பதில் வருண் கொதித்தான்..

“எது பேசறதா இருந்தாலும் என்கிட்டப் பேசு.. குருகிட்ட மோதற வேலையை வைச்சுக்காதே.. அப்ப என்னடான்னா வெட்டி ஆபிசர்ன்னு சொல்ற.. குரு பேங்க் ஆபிசர்..”

“தெரியும்டா போடா..”

“என்ன தெரியும்..?”

“உன் லட்சணமும், உன் குருவின் லட்சணமும் தெரியும்..”

வந்தனா வாய் விட்டுவிட.. அதுவரை பேசாமல் இருந்த விவேகானந்தன் அவள் விட்ட வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்..

“என் லட்சணம் தெரியுமா..? சாமுத்திரிகா லட்சணம் போலச் சொல்கிற.. இது எனக்குத் தெரியாம போச்சே.. தினமும் இதைத்தான் செய்கிறாயா..?”

என்னை சைட் அடிக்கிறாயா என்று கேட்காமல் அவன் கேட்டுவிட.. வருணின் முன்னால் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்.. தம்பியை பக்கத்தில் வைத்துக் கொண்டு எதிர் வீட்டுப் போக்கிரியின் பேச்சுக்கு என்னத்தைப் பதில் சொல்வது..?

“குரு கேட்கிறாரில்ல.. பதில் சொல்லு..” வருண் அதட்டினான்.

அறிவிருக்காடா உனக்கு என்று தம்பியின் கன்னத்தில் நான்கு அப்பு அப்ப வேண்டும் போல அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. இவனெல்லாம் காலேஜீக்குப் போய் சைட் அடிக்கிறானாம்.. குரு, குரு என்று கொண்டாடுகிறானே.. அந்தக் கள்ளன் இவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இமை சிமிட்டி இவளை சைட் அடிக்கிறான்.. அது தெரியாத கூதரை அந்தக் கள்ளனுக்கு என்ன பதிலென்று துள்ளுகிறது.. காலக் கொடுமைடா சாமி..

“உன் குருவுக்கு பதில் சொல்லத்தானே வந்திருக்கேன்..”

“பதில் சொல்ல முடியாதுன்னா இடத்தைக் காலி பண்ணு..”

“முடியாதுடா.. போடா..”

வந்தனா பிடிவாதமாக மொட்டை மாடியின் அந்தப் பக்கமாக போய் கைபிடி சுவரில் உட்கார்நது கொள்ள.. வருண் டென்சனாகி நம்பியாரைப் போலக் கைகளைப் பிசைந்தான்..

“இருக்கட்டும் வருண்.. விடு..”

விவேகானந்தன் இந்தப் பக்கமாக ஒதுங்க.. அவனும் வருணும் கைபிடி சுவரின் மீது உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்தார்கள்..

அந்தி மயங்கி.. இருள் சூழ்ந்த நேரம்.. மொட்டை மாடியில் எட்டிப் பார்க்கும் தென்னங்கீற்றுக்கள்.. தேகம் வருடும் குளிர் காற்று.. ரம்யமான அச்சூழல் வந்தனாவின் மனதில் மயக்கத்தைத் தந்தது..

மொட்டை மாடியிலிருந்த டியூப் லைட்டின் வெளிச்சத்தில் விவேகானந்தன் பேரழகனாகத் தெரிந்தான்.. வருணிடம் பேசியபடி நொடிக்கொரு முறை அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.. இருவரின் பார்வைகளும் சந்திக்கும்போது இமைக்கும் பொழுதுக்குள் கண்சிமிட்டி அவளை ஸ்தம்பிக்க வைத்தான்..

அங்குதான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்து உட்கார்ந்து விட்டு.. விவேகானந்தனின் கண்சிமிட்டலுக்குப் பயந்து ஓடினால் அவள் தோற்றுவிட மாட்டாளா..?

அவனைப் பார்த்தால்தானே வம்பு என்று கையிலிருந்த புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள்.. உடலெங்கும் அவனது பார்வை ஊர்வதைப் போன்ற பிரமை.. சிலுசிலுவென்ற காற்றிலும் தேகம் முழுவதும் வியர்வை சுரந்தது.. தொண்டை உலர்ந்தது.. இது போன்றதொரு நூதனமான இம்சையை அதற்கு முன்னால் அவள் உணர்ந்ததில்லை..

“ஆக.. நீதான் உன் காலேஜீக்கு ‘சிய்யான்ங்கிற..?'”

“பசங்க அப்படித்தான் சொல்லிக்கிறாங்க குரு.. உங்க காலேஜ் டேஸில எப்படி குரு..?”

“எப்புடின்னா..?”

“நீங்கதானே ‘சிய்யான்..’? தட் மீன்ஸ் வெயிட்டான பார்ட்டி..?”

வருண் கண்சிமிட்டினான்.. விவேகானந்தன் யதேச்சையாகப் பார்ப்பதைப் போல வந்தனாவைப் பார்த்தான்.. அவள் குனிந்த தலை நிமிராமல் கையிலிருந்த புத்தகத்தைப் படிப்பதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.. மனதோ..

‘பேங்க் மேனேஜரா இருக்கிறப்பவே இம்புட்டு ரௌடித்தனம் பண்றானே.. படிக்கிறப்ப எம்புட்டு ரௌடித்தனம் பண்ணியிருப்பான்..’ என்று தாளித்துக் கொண்டிருந்தது..

விவேகானந்தன் தஞ்சாவூர் கல்லூரியில் படிக்கவில்லை.. சென்னை இன்ஜினியரிங் காலேஜில் படித்தவன்.. ஹாஸ்டலில் வாசம் செய்தவன்..

“காலேஜில வெயிட்டான பார்ட்டின்னு பேர் வாங்கறது ஒன்னும் அத்தனை ஈஸியில்லைடா வருண்.. அதிலயும் சென்னை காலேஜில சொல்லவே வேணாம்.. அதர் ஸ்டேட் ஸ்டூடண்ட்ஸ்தான் அதிகமா இருப்பாங்க.. அத்தனை பேரையும் ஓவர் லுக் பண்ணி தலைவன்னு இமேஜை கிரியேட் பண்ணனும்னா கடுமையா உழைக்கனும்டா.. உழைப்புன்னா உழைப்பு.. அப்படியொரு உழைப்பு.. அதுக்குப் பதிலா தஞ்சாவூரு கல்வெட்டில் கூட நம்ம பேரை பொறிக்க வைச்சிரலாம்..”

“அதைச் சொல்லுங்க..”

அன்றைய தலைவனும் இன்றைய சிய்யானும் ஒருவரையொருவர் புரிதலுடன் பார்த்துக் கொண்டார்கள்.. தாள முடியாத வந்தனா புத்தகத்தால் தலையில் அடித்துக் கொண்டாள்..

“தலை வலிக்கப் போகுது..” அக்கறைப்பட்டான் விவேகானந்தன்..

“குரு சொல்கிறது காதில விழுகுதா..” வருண் அதட்டினான்..

“உன் தலை..” வெடித்தாள் வந்தனா..

“ஊஹீம்.. உன் தலை..” அறிவுறுத்தினான் வருண்..

வந்தனா கையை உயர்த்தி வாயைப் பொத்தி எடுத்து வருணின் பக்கமாகத் திருப்பி அவனது வாயை மூடுமாறு சைகை செய்தாள்..

“அதை நீ செய்..” அதிகாரமாக உத்தரவிட்ட விட்டு..

“நீங்க சொல்லுங்க குரு..” என்று விவேகானந்தனின் மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டான் வருண்..

“நிறையக் கம்பு வைச்சுக்கனும்டா..”

“எதுக்கு குரு..?”

“என்னடா இப்படிக் கேட்டுட்ட.. பில்ட் அப் முக்கியம்டா.. நாம வீரனில்ல.. சோதாங்கிறது நமக்குத் தெரியும்.. மத்தவங்களுக்குத் தெரியக் கூடாது.. மாவீரன் போலக் காண்பிச்சுக்கனும்..”

விவேகானந்தன் விவரிக்க.. வந்தனா உதட்டைப் பிதுக்கி விட்டு..

“கேட்டுக்கடா..” என்றாள் ஏளனமாக..

“நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீ படிக்கத்தான உட்கார்ந்த..? எங்க பேச்சை ஏன் கவனிக்கிற..?” வருண் சத்தம் போட்டான்..

“‘ஆசை’ப்பட்டுக் கேட்கிறாப்புல.. கேட்டாக் கேட்டுட்டுப் போகட்டுமே..” விவேகானந்தன் ‘ஆசை..’ என்ற வார்த்தையில் மட்டும் அழுத்தம் கொடுத்து பரிந்துரை செய்தான்..

வந்தனா வெடுக்கென தலையை நிமிர்த்தி அவனை அக்கினி பார்வை பார்த்து வைத்தாள்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல அவனது பார்வை அவளது பார்வையுடன் கலந்து கவ்விக் கொண்டது.. வந்தனாவின் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற பரபரப்பான உணர்வலைகள் உற்பத்தி ஆகின.. விடுபட முடியாத ஒரு சுழலில் அவள் சிக்கிக் கொண்டதைப் போல திகிலடைந்தாள்..

ஆழிப்பேரலை அமுக்குவதைப் போன்ற இந்த உணர்வு.. என்ன உணர்வு..?

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link