Chapter 19
வெந்நிற விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.. தரையின் டைல்ஸீம் சுவரின் பெயிண்டும் அழுத்தமான வெண்மையில் இருந்ததில் ஹைடெக் சூழல் பேங்கில் பரவியிருந்தது.. வழக்கம் போல அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்க.. விவேகானந்தன் மட்டும் கம்யூட்டரில் உற்று நோக்கிக் கொண்டிருந்தான்..
ஆறுமுகத்திற்கு பற்களை நறநறத்து பல்வலி வந்து விட்டிருந்தது.. என்னதான் பல்லைக் கடித்தாலும் உடைபடப் போவது அவனது பற்கள்தான்.. விவேகானந்தன் கருணை கொள்ளப் போவதில்லை..
சுவரைப் பார்த்தான்.. பல்லி ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.. வெந்நிறச் சுவரில் பல்லி ஊர்வது வித்தியாசமாகத் தெரிந்தது..
‘அந்தக் காலத்தில சுவத்தில வெள்ளையை மட்டும் அடிச்சிருந்தா இல்லாதவன்னு பட்டம் கட்டிருவாங்க.. விதம் விதமான கலரில டிஸ்டம்பரை அடிப்பாங்க.. இப்ப என்னடான்னா வெள்ளைக்கலரில பெயிண்ட் அடிச்சு வைச்சிருக்காங்க.. ம்ஹீம்.. பாட்டி காலத்து நகையும், ஜாக்கெட் டிசைனும் இப்ப ஃபேஷனாகிப் போனதப் போல எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு..’
சிந்தனை ஓடிய ஓட்டத்தில் ஆறுமுகம் பயந்து போனான்.. இந்த நிலை நீடித்தால் எங்கே தான் சிந்தனை சிற்பி ஆகி புத்தம்புது மனைவியிடம் கருத்துச் சொல்கிறேன் பேர்வழியென்று மொக்கை போட்டு விடுவோமோ என்ற பயம் பிடித்து ஆட்டி வைத்ததில் விவேகானந்தனைப் பற்றிக் கவலைப்படாமல் வாசல் பக்கம் ஓடி விட்டான்..
‘தெருப்பக்கம் போனாலாவது நாலு மக்க மனுசங்களைப் பார்க்கலாம்.. ஏஸிக்கு ஆசைப்பட்டு இங்கேயே குந்திக்கிட்டு இருந்தா அவ்வளவுதான்..’
“என்ன ஆறுமுகம்.. சந்தோசமா இருக்கிறாப்புல இருக்கு..?” பக்கத்து பில்டிங்கில் இருந்த டிராவல்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சங்கர் கேட்டான்..
‘என்னைப் பாத்தா இவனுக்கு சந்தோசத்தில கும்மாளம் போடறதைப் போலத் தோணுதா..?’ திகிலாகிப் போனான் ஆறுமுகம்..
சங்கர் காதல் தோல்வி கேஸ்.. மாதத்திற்கு ஓர் காதல் பண்ணுவான் என்பது வேறு விசயம்.. ஒன்றாம் தேதி ஆரம்பிக்கும் காதல் முப்பதாம் தேதிக்குள் ஊற்றிக் கொள்ளும் என்பதுதான் மிகப் பெரும் சோகம்.. அவனும் விதம் விதமான முறைகளின் காதல் சொல்லிப் பார்த்து விட்டான்.. ஒன்றும் தேறவில்லை.. அவன் முன்னால் எவரும் சந்தோசமாக சிரித்து விட்டாலே அவனுக்குப் பொறுக்காது..
“என்ன சார்.. சந்தோசமா இருக்கீங்க போல..” என்று ஒரு கேள்வியைத்தான் கேட்பான்.. சிரித்த மனிதனுக்கு அடுத்த சில நிமிடங்களில் சோதனை மேல் சோதனையாக வந்து சேர்ந்து விடும்.. ஆண்பிள்ளை என்பதையும் மறந்து வாய்விட்டு அழுது விடுவான்.. அப்படி அவன் அழுவதைப் பார்த்தவுடன் சங்கரின் முகத்தில் தெரியுமே.. ஒரு நிம்மதி..! அட, அட, அட.. முகத்தில் ஒளிவட்டம் சுற்றும்..
அப்பேற்பட்ட காருண்யக் கண்ணனின் கண்களில் படும்படியா ஆறுமுகம் நின்று தொலைப்பான்..?
‘இதுக்குப் பேசாமல் பேங்குக்குள்ளேயே இருந்து தொலைச்சிருக்கலாம்.. வெளியுலகத்தைப் பார்க்க ஆசைப்பட்டு இவன் பார்வையில பட்டுத் தொலைப்பேனா..?’
காலம் கடந்த ஞானோதயங்களால் யாதொரு பயனும் இல்லை.. எவன் கண்ணில் படக் கூடாதோ.. அவன் கண்ணில் பட்டுத் தொலைத்தாகி விட்டது.. இனிப் பின்வாங்கி ஓட முடியாது.. வாழ்க்கையின் நிகழ்காலம் துரத்தும்போது, எதிர்காலத்தின் வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதைப் போல பயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.. விதியின் கைகளில் ஓடவும், ஒளியவும் இடமிருப்பதில்லை.. காலம் கருணை கொண்டு.. வாழ்க்கை வசப்பட்டு.. விதி தோழமை கொண்டால்தான் உண்டு..
‘கடவுளே.. வாசலுக்கு ஓடி வந்தாலும் தத்துவம்தானா..? நான் புதுமாப்பிள்ளைன்னு சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டான்..’ வெறுத்துப் போன ஆறுமுகம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு..
“என்ன சங்கர்.. கிண்டல் பண்றியா..? என்னைப் பார்த்தா சந்தோசமா இருக்கிறவனைப் போலவா இருக்கு..? நானே வாழ்க்கை வெறுத்துப் போய் சாமியாராப் போகலாமான்னு இருக்கேன்..” என்று சொன்னான்..
அதைக் கேட்டவுடன் சங்கரின் முகம் ஒளிர்ந்தது..
‘அடுத்தவன் கஷ்டப்பட்டா இவனுகளுக்கெல்லாம் அல்வா சாப்பிட்டதைப் போல இனிப்பா இருக்குமே..’
“என்னப்பா இப்படிச் சொல்ற.. புதுமாப்பிள்ளை நீ..”
‘அதானே உனக்கு காண்டு..’
“சும்மா ஜாலியா.. ஜல்ஸாவா இருப்பேன்னு பார்த்தா சோகரசம் பிழியற..”
‘சும்மாக்காச்சும் சோகரசம் பிழியலைன்னா, நீ நிசமாவே சோகரசம் பிழிய வைச்சிருவியேடா சங்கரு..’
“என்னதான் ஆச்சு..?”
என்னதான் ஆனது என்பதை எப்படி இட்டுக் கட்டிச் சொல்வது என்று ஆறுமுகம் யோசித்தான்..
‘பேசாம பொண்டாட்டி கூடச் சண்டைன்னு சொல்லிரலாமா..?’
ஐடியா வந்துவிட்டது.. ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன்..
“உனக்கென்னப்பா.. கல்யாணம்ங்கிற கூண்டுக்குள்ள மாட்டிக்கலை.. சந்தோசமா இருக்க.. அது தெரியாம என்னத்தையோ திரவியத்தக் கொண்டு வந்துட்டதப் போலத் தாலியக்கட்டி.. பொண்டாட்டின்னு ஒரு ராட்சசியைக் கொண்டு வந்துட்டேன்..”
அண்டப்புளுகாக புளுகினான் ஆறுமுகம்.. அவன் மனம்..
‘அழகான ராட்சசி..’ என்று ஜொள்ளியது..
ஆறுமுகம் அவனது பெண்டாட்டியை வெறுத்துப் பேசியதில் சங்கருக்கு ‘சால சந்தோசம்..’ அதை வெளிகாட்டிக் கொள்ள முடியுமா..? அதனால்..
“ஏம்ப்பா இப்படிப் பேசற.. பாவம்.. அது உன்னை நம்பி வந்த பொண்ணு..” என்று பரிதாபப் படுவதைப் போலக் காட்டிக் கொண்டான்..
அவன் சொன்ன விதம்.. ஆறுமுகத்தின மனைவி அவனை நம்பி வந்தது மாபெரும் தவறு என்பதைப் போல இருந்ததில் ஆறுமுகத்துக்குள் கொலைவெறி வந்தது..
“நீ வேறப்பா.. நம்பி வந்தவ பேசறதைப் போலவா அவ பேசறா..? வாயைத் திறந்தாலே சண்டைதாம்ப்பா.. ஒரு தடவை, ரெண்டு தடவை சண்டை போட்டாக் கூடப் பொறுத்துப் போகலாம்.. இருபத்தி நாலு மணி நேரமும் சண்டை போட்டா ஒரு மனுசன் என்ன பண்ணுவான்..? வீட்டுக்குப் போகவே பிடிக்கலை சங்கர்..”
வீட்டுக்குப் போக முடியவில்லையே என்ற ஏக்கத்தை மறைத்துக் கொண்டு அவன் புளுக..
“அடப்பாவமே..! அதனாலதான் பேங்க் முடிஞ்சும் இங்கேயே ரோந்து சுத்தறியா..? த்சு.. த்சு.. த்சு..” சூள் கொட்டினான் சங்கர்..
‘அடங்குடா.. டேய்.. ரோட்டில போற நாயெல்லாம் உன்னைத் தேடி ஓடி வந்திரப் போகுது.. பேங்க் முடிஞ்சு என்னடா பண்ண..? எங்க மேனேஜருக்கு வேலை முடியலையே..’
சாந்தியடைந்த மனதுடன் சங்கர் போய்விட.. ஓட்டமாக ஓடி அவன் முதுகில் கும்மாங்குத்து வைத்து விட்டு திரும்பி வந்து விடலாமா என்று வெறி கொண்டான் ஆறுமுகம்..
“என்ன ஆறுமுகம்.. நேத்து நைட் ஷோவுக்குப் பெண்டாட்டி கூட வந்திருந்த போல..” சத்தமாகக் கேட்டபடி சத்தியசீலன் படியேறி வந்தான்..
“சத்தமாப் பேசாதீங்க சார்.. போனவன் திரும்பி வந்திரப் போறான்..” பதட்டத்துடன் சங்கர் போன திசையில் பார்த்தான் ஆறுமுகம்..
“அவனுக்கு ஏன் இவ்வளவு பயப்படற..? ஆமாம்.. நேத்து தியேட்டரில நீயும் உன் பெண்டாட்டியும் சந்தோசமாத்தானே பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தீங்க..? சங்கர்கிட்ட ஏன் சண்டைன்னு பொய் சொல்கிற..?”
“மனுசனா சார் அவன்..?”
“என்னப்பா இப்படிக் கேட்கிற..? நம்மளப் போல ரெண்டு காலு, கையி, முகம்ன்னுதான அவனும் இருக்கான்..?”
“நல்ல மனசும் இருக்கனும் சார்.. அடுத்தவன் கஷ்டத்தில சிரிக்கிற பிறவியெல்லாம் மனுசப்பிறவியா..? இவன் அந்த மாதிரிப் பிறவி சார்.. காசா, பணமா..? கஷ்டப்படறேன்டான்னு சொன்னா அவன் சந்தோசமாகிருவான்.. அவனைச் சந்தோசப் படுத்தத்தான் நான் சந்தோசமா இல்லேன்னு சொன்னேன்..”
“எங்கேயோ போயிட்ட ஆறுமுகம்..”
“முதல்ல வீட்டுக்குப் போக விடச் சொல்லுங்க சார்.. வேற எங்கேயும் போக எனக்கு இஷ்டமில்லை.. ஏன்னா என் பெண்டாட்டி வீட்டிலதான் இருக்கா..”
“திரும்பத் திரும்ப எங்கேயோ போயிட்டன்னு பிரமிக்க வைக்கறியே.. வா, வா.. உன் மேனேஜரை நான் இழுத்துக்கிட்டுப் போறேன்.. நீ பேங்கைப் பூட்டிட்டு வீட்டைப் பார்த்து ஓடு..”
தன்யனானேன் பிரபு என்று சொல்லாத குறைதான்.. என்னவோ ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகனைப் பார்ப்பதைப் போல பக்தி பரவசத்துடன் சத்தியசீலனைப் பார்த்தபடி குடுகுடுவென பேங்குக்குள் போனான் ஆறுமுகம்.. விவேகானந்தனின் தோளில் தட்டி எழுப்பி விட்ட சத்தியசீலன்..
“வாடா போகலாம்..” என்று கையைப் பிடித்து இழுத்தான்..
“எங்கே..?”
“தஞ்சாவூரில் என்ன மெரினா பீச்சா இருக்கு..? பிரகதீஸ்வரர் கோவிலுக்குப் போகலாம்ன்னா நீ வரமாட்ட.. காவிரிக்கரையில காலாற நடந்துட்டு வரலாம்ன்னா.. அது தூரத்தில இருக்கு.. ஏதாச்சும் ரெஸ்ட்டாரரெண்டில உட்கார்ந்து டிபன், காபிய மொக்கிக்கிட்டேப் பேசலாம் வா..”
சத்தியசீலனின் வற்புறுத்தலினால் வேலைகளை ஏறக்கட்டி விட்டு நண்பனுடன் கிளம்பினான் விவேகானந்தன்..
Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.