Chapter 20

0Shares

கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பால் தெரிந்த தஞ்சை மாநகரம் ஜெக ஜோதியாக ஒளிர்ந்தது.. சும்மாவா தஞ்சை சோழவளநாட்டின் தலைநகரமாக கோலோச்சியது..? என்று நினைத்துக் கொண்டான் விவேகானந்தன்.. ‘சோழவளநாடு சோறுடைத்து..’ என்ற பழமொழி உண்டு.. வற்றாத காவிரியாறும் அதன் கரையோரம் ஆற்றுப்பாசன வயல்களுமாக தஞ்சை பூமி தமிழகத்திற்கே சோறு போடும் பூமியாக இருந்ததே.. எப்போது அது மாறியது..? ஆறும், நீரும் இயற்கை அளித்த கொடை.. அதை தனியொரு மாநிலத்திற்கு சொந்தமான உரிமை கொண்ட ஆங்கிலேயர் அனுமதித்ததில்லை.. நாம் எப்படி அனுமதித்தோம்..?

‘கங்கை நதிப்புரத்து

கோதுமை பண்டம்..

காவிரி வெற்றிலைக்கு

மாறு கொள்ளுவோம்..’

என்று பாடினானே எட்டயபுரத்தின் முண்டாசுக் கவிஞன்..! பாரதி கண்ட கனவு நனவாகியுள்ளதா..? கங்கை நதிப்புரத்தில் விளையும் கோதுமையின் உற்பத்தி பெருகிக் கொண்டேதான் இருக்கிறது.. சோழவளநாடு சோறுடைத்து என்ற பெருமைதான் மங்கிக் கொண்டே வருகிறது.. முப்போகம் நெல் விளைய வைக்கும் ஆற்றுப் பாசன விவசாயிகளின் பூமி வறண்டு போய் கிடக்கிறது..

“எந்தக் கோட்டையைப் பிடிக்க இம்புட்டு சீரியஸா திங் பண்ணிக்கிட்டு இருக்கிற..?” உளுந்த வடையைக் கெட்டி சட்னியில் தோய்த்தபடி கேட்டான் சத்தியசீலன்..

பதில் சொல்லாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தான் விவேகானந்தன்.. சரித்திர காலத்திற்குள் அவன் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டது.. இரண்டு வழிச்சாலை ராஜபாட்டையாக மாறியது.. ஓடிக் கொண்டிருந்த கார்களும், இரண்டு சக்கர வாகனங்களும்.. தேர்களும், குதிரைகளும் ஓடிக் கொண்டிருப்பதைப் போலத் தோற்றமளித்தன.. தூரத்தில் தெரிந்த தஞ்சை பெரிய கோவில் தான் கோட்டை.. என்றென்றும் தஞ்சையை ஆளும் மாமன்னன்..

‘பிரகதீஸ்வரன்..!’

“அப்பா..! சாமி..! இப்படித் தவம் பண்றதைப் போல முகத்தை வைத்துக்கிட்டா நான் ஏமாந்திருவேன்னு நினைக்காதே.. நீ யாரு.. எப்பேற்பட்ட வல்லாள கண்டன்.. அப்படிங்கிற புள்ளி விவரமெல்லாம் எனக்குத் தெரியும்.. இப்ப எதுக்கு இம்புட்டு ஆழமா யோசிக்கிறதைப் போல முகத்தை வைச்சுக்கிட்டு இருக்கிற..? உனக்கெல்லாம் இது ஷீட் ஆகாதுன்னு தெரியுமா.. தெரியாதா..?”

சுள்ளென எரிந்து விழுந்த சத்தியசீலனின் வார்த்தைகள் விவேகானந்தனுக்கு உறைக்கவில்லை.. கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட மாடிப்பகுதியில் அமர்ந்திருந்ததால் சாலையின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.. ஜன்னலோரங்கள் ரம்யமானவை.. பேருந்திலும், ரயிலும், விமானத்திலும் ஜன்னலோர இருக்கைகளை மனம் தேடுவது எதனால் என்ற சூட்சுமத்தை யாரறிவார்..?

“பேருந்தில் நீ எனக்கு

ஜன்னலோரம்..”

வாய் விட்டுப் பாடியவனை வெட்டவா, குத்தவா என்பதைப் போல முறைத்து வைத்தான் சத்தியசீலன்..

“சூப்பரான இடத்தில பொண்ணு அமைஞ்சிருந்தது.. சந்தோசமாப் பெண் பார்க்க வந்து தலையாட்டியிருந்தா.. இந்நேரத்துக்கு உனக்கு அம்மா கல்யாணம் பேசி முகூர்த்த நாளைக் குறிச்சிருப்பாங்க.. கிளம்ப மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணி.. அம்மாவை அழ வைச்சு.. ஒரு வழியாக் கூட வந்து பொண்ணு வீட்டில லெக்சர் கொடுத்துக் கல்யாணத்தைக் கலைச்சிட்டு வந்து அப்பாம்மாவை காய்ச்சலில் விழ வைச்சுட்டு எப்படிடா ஜாலியாய்  பாட்டுப் பாடற..?”

“வாயிலதான் பாடறேன்..”

“பல்லை உடைப்பேன்.. படவா ராஸ்கல்… அழகும், பணமுமா பெண் கிடைத்தா வேண்டாம்ன்னு சொல்லிவிட்டு எதிர்வீட்டு வந்தனாகிட்ட எதுக்குடா கரைச்சல் பண்ணிக்கிட்டு இருக்கிற..?”

விவேகானந்தனின் இமைகள் சுருங்கின.. கண்கள் இடுங்க நண்பனைப் பார்த்தவன்..

“அப்படின்னு உனக்கு யாரு சொன்னது..?” என்று கேட்டான்.. 

“எல்லாம் சம்பந்தப்பட்டவதான் சொன்னா..”

“யாரு..? வந்தனாவா..?”

“ம்ம்ம்..”

“என்ன சொன்னா..?”

“அவளுக்கு உன் மூஞ்சியைக் கண்டாலே பிடிக்கலையாம்.. குரங்கு மூஞ்சின்னு சொன்னா.. என்னம்மா இப்படிச் சொல்ற.. அப்பப்ப அவன் முகம் அப்படி இருக்கும்தான்.. அதுக்காக ஒட்டு மொத்தமா குரங்கு முகம்ன்னு சொன்னா எப்படிம்மான்னு கேட்டேன்.. குரங்கு மூஞ்சியைக் குரங்கு மூஞ்சின்னுதானே சொல்ல முடியும்ன்னு எதிர் கேள்வி கேட்டா.. எதுக்கு வம்புன்னு ஆமாம்ன்னு தலையாட்டிட்டேன்..”

“ஓஹோ..”

“உனக்கேண்டா புத்தி இப்படி புல் மேயப் போகுது..? பணக்கார வீட்டு சம்பந்ததத்தை தட்டி விட்டுட்டு.. எப்பவும் பார்க்கிற எதிர்வீட்டுப் பொண்ணுகிட்ட மல்லுக்கு நிற்கறியே.. உனக்கே இது நல்லாயிருக்கா..?”

“எது..? வந்தனாவா..?”

“அது நல்லாயிருக்குன்னு நீ சொல்லி நான் கேட்டதேயில்லையே.. அதைச் சொல்வேனா..? அதுகிட்ட நீ நடந்துக்கிற விதத்தைச் சொல்றேன்.. என்னவோ அவளுக்கு உன் மேல ஆசைன்னு சொன்னியாமே.. ஒருநாள்கூட அவ உன்னை ஆசையாப் பார்த்ததை நான் பார்த்ததே இல்லையேடா.. கத்தியை எடுத்துக்கிட்டு வந்து செருகவா என்கிறதைப் போலயில்ல உக்கிரமாப் பார்ப்பா..?”

“அதுக்கு என்ன இப்ப..?”

“அதுக்கு.. என்னவா..? அறிவோடதான் பேசறயா.. யாருடா நீ… பொறுப்பான உத்தியோகத்தில இருக்கிறவன்.. பேங்க் மேனேஜர்.. அப்பாம்மாவுக்கு ஒற்றைப் பிள்ளை.. உன் லெவலுக்கு இஷ்டமில்லாத பெண்ணைத் துரத்தலாமா..?”

“இதையும் அவதான் சொன்னாளா..?”

“எதையும்..?”

“நான் துரத்தறேன்னு..”

“ஆமாம்… எனக்கு பத்திக்கிட்டு வந்துச்சு.. உலக அழகி மாதிரி ஃபிலிம் காட்டறா.. உனக்கென்ன தலையெழுத்தா..?”

“இதையெல்லாம் எப்ப உன்கிட்ட ஒப்பிச்சா..?”

“இப்பத்தான்.. உன்னைப் பார்க்க பேங்குக்கு வர்றதுக்கு முன்னாடி உன் வீட்டுக்குப் போயிருந்தேன்.. உன்னைப் பத்திப் புகார் சொல்ல அப்பாம்மா வரச் சொல்லியிருந்தாங்க.. பாவம்டா அம்மா.. அவங்க வாயைத் திறந்தா அப்பா மட்டுமில்ல.. தஞ்சாவூரே கிடுகிடுக்கும்.. அப்பேற்பட்டவங்க அழுத கண்ணீரும், சிந்தின மூக்குமா இருக்காங்க.. இதெல்லாம் சரியில்லைடா விவேக்…”

“புரியாமப் பேசாதேடா சத்யா.. அந்தப் பெண் அழகுதான்.. ஒப்புக்கறேன்.. ஆனா கோடிஸ்வரி…”

“அது ஒரு தப்பா…?”

“என்னைப் பொறுத்தவரை அது தப்புத்தான்.. அவ ஸ்டேட்டஸில இருந்து இறங்கி வந்து எனக்கு வொய்பா… என் அப்பாம்மாவுக்கு மருமகளா.. ஒரு அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ அவளால் முடியாதுடா..”

“உன் ஸ்டேட்டஸ்க்கு அவளால இறங்கி வர முடியலைன்னா.. நீ அவ ஸ்டேட்டஸ்க்கு ஏறிப் போ…”

“எப்படி…? என் வேலையை ரிசைன் பண்ணிட்டு.. என் அப்பாம்மாவைத் தனியா விட்டுட்டு.. அவ வீட்டோட மாப்பிள்ளையாப் போய் விடச் சொல்கிறியா…?”

விவேகானந்தனின் கேள்வியில் இருந்த நியாயம் சத்தியசீலனின் வாயை அடைத்து வைத்தது.

“எங்கம்மா இவ்வளவு வியாக்கினம் பேசறாங்களே.. அவங்க வீட்டை விட்டு.. மருமகள் வீட்டுக்கு ஷிப்ட் ஆவாங்களா..? சம்பந்தகாரங்க குடும்பத்தோடு சேர்ந்து இருக்கிறது அசிங்கம்ன்னு சொல்லிருவாங்க.. அந்த அசிங்கம் எனக்கு இருக்காதா..? ஆம்பளைன்னா, சுய சம்பாத்தியத்தில தலைநிமிர்ந்து வாழனும்டா.. பெண்டாடியையும் வாழ வைக்கணும்.. அப்படியில்லாம பொண்டாட்டி சொத்தில வாழ நினைச்சா அவனுக்கு சுயமரியாதை பறி போயிரும்டா.. எனக்கு என் சுயமரியாதை ரொம்ப முக்கியம்..”

சத்தியசீலன் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு நண்பனையே பார்த்தான்.. விவேகானந்தன் சிரித்ததில் தானும் சிரித்தான்.

“பேச்சுன்னு வந்துட்டா.. பாயிண்ட், பாயிண்டா பிச்சு உதறுவியே.. இதில உன்னை அடிச்சுக்க முடியாதுடா மச்சான்… உன் பாயிண்ட் ரைட்டுத்தான்.. ஸோ, அந்தப் பிரச்சனை ஓவர்.. இப்ப இந்தப் பிரசனைக்கு வா.. நீயாத்தானே அந்தப் பெண் வேண்டாம்ன்னு முடிவு பண்ணின.. இதில எதுக்கு வந்தனாவை கோர்த்து விடற…”

விவேகானந்தன் மர்மமாகச் சிரித்து வைத்தான்..

“புரியலைடா.. சாமி..” என்றான் சத்தியசீலன்..

“இந்தப் பக்கி.. அந்தப் பெண் மனசைக் கலைத்து விடப் பிளான் பண்ணியிருக்குடா..”

“அது உனக்கு எப்படித் தெரியும்..?”

“முயல் பிடிக்கிற ஆளின் முகத்தைப் பார்த்தாத் தெரியாதா..? திருதிருன்னு தேவாங்கு மாதிரி, திருட்டு முழி முழிச்சுக்கிட்டு அங்கே நின்றிருந்தப்பவே கண்டு பிடிச்சுட்டேன்.. பக்கி ஏதோ பக்காவா பிளான் பண்ணியிருக்குன்னு.. இந்தப் பக்கியும் அந்தப் பொண்ணோட தங்கையும் கிளாஸ்மேட்ஸாம்.. அதை யூஸ் பண்ணிக்கிட்டு என்னைப்பற்றி இல்லாததையும், பொல்லாததையும் போட்டுக் கொடுத்திருக்கா..”

“நீயென்ன அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவிலயா போன..? ரிஜக்ட் பண்ற பிளானோடதானே போன..? அங்கே இவ என்ன பிளான் பண்ணினா உனக்கு என்ன..?”

“சப்போஸ்.. அந்தப் பெண் கோடிஸ்வரியா இல்லாம இருந்து.. எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக்கிற ஆசை வந்திருந்தா என்னவாகியிருக்கும்..? இவளாலே எல்லாம் கெட்டுப் போயிருக்கும்தானே..? அதான்.. பக்கிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. நீ இதையெல்லாம் கண்டுக்காதே..”

விவேகானந்தன் டிபன் காபியில் கவனமாக.. சத்தியசீலன் நண்பனின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

‘நிஜமாத்தான் சொல்றானா..?’

அவனால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.. விவேகானந்தனின் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டு பிடிப்பது என்பது அத்தனை சுலபமான ஒன்றல்ல..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link