Chapter 21

0Shares

“அவன் சொல்கிறது நியாயம்தானே மீனாட்சி..” 

விசுவநாதனின் பேச்சுக்குப் பதில் சொல்லாமல் மீனாட்சி காய் வெட்டுவதில் கவனமாக இருந்தது விஸ்வநாதனுக்கு வேதனையை அளித்தது.. இதுபோல மௌனமாக இருப்பவளா அவள்..? மௌனத்திற்கும் அவளுக்கும் வெகுதூரம்.. பேச்சு, பேச்சு.. பேச்சு… இடைவிடாத பேச்சு மழையில் நனைந்து கொண்டிருந்த வீடு அது.. இப்போது சிறு தூறல் கூட இல்லாமல் வறண்ட பூமியாக காட்சி தந்தது.

விசுவநாதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. மனைவியின் ஆளுமைக்கு ரசிகர் அவர்.. ஒவ்வொரு பேச்சிற்கும் சரியான ‘எச’ பேச்சை உடனடியாக எப்படி அவளால் பேச முடிகிறது என்று ஆச்சரியப்பட்டுப் போவார்.. வாயைத் திறக்க விடாமல் வாயடித்து வாய் மூடவைக்கும் மனைவியின் பேச்சாற்றல் அவரை வசீகரித்திருந்தது…

“வாயாடி இது.. வாயாடி வாய் இது..”

நொடிக்கொரு முறை சலித்துக் கொண்டாலும் அந்த வாயாடியின் வாய் பேசும் பேச்சுக்களில் கட்டுண்டிருந்த மனிதர் அவர்..

அப்படித் தன் வாயாடித்தனத்தால் கணவர் முதற்கொண்டு அனைவரையும் வசீகரித்து வைத்திருந்த மீனாட்சி அமைதியாகி விட்டதில் வீடே களையிழந்து விட்டதைப் போல அவர் தவித்துப் போனார்.. மீனாட்சியின் பேச்சுச் சப்தம் கேட்காத வீடு வீடாகவே இல்லை.. உயிர்ப்பில்லாத சூண்யவெளி போல காட்சிதந்தது..

“பேசுடி…” மனைவியிடம் கெஞ்சினார்..

விழியுயர்த்திப் பார்த்த மீனாட்சியின் கண்கள் கலங்கியிருந்தன.. மனைவியின் துயரத்தில் மனம் உடைந்து விட்டார் விசுவநாதன்.. எவராலும் அசைக்க முடியாத வல்லமை கொண்ட மீனாட்சியின் மனதை அசைக்கும் வல்லமை ஒருவனுக்கு மட்டுமே உண்டு.. அவன்.. விவேகானந்தன்..!

“அவன் சொல்ற நியாயத்தை என்னிடம் சொல்லியிருக்கலாமில்ல.. சத்யாகிட்டத்தான் சொல்லனுமா..? நான் அவனுக்கு மூணாம் மனுஷியா..?”

மகனுக்கும், தனக்குமான உறவின் நடுவே கணவர் நுழைவதைக் கூட அனுமதிக்க மாட்டாள்.. மகனின் நண்பன் நுழைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்வாளா..?

“நீதானேடி சத்யாவை இதுக்குள்ள இழுத்து விட்ட..?”

“வேற என்னங்க செய்றது..? பெத்தவ பேச்சைக் கேட்க மாட்டேன்னு தலைகீழாப் பாய்கிறானே.. பிரண்டு பேச்சை மட்டும் காது கொடுத்துக் கேட்கிறானே.. என் பிள்ளை என் கைக்குள்ள இல்லைங்க..”

தோற்றுப் போன துயரத்துடன் சொன்னார் மீனாட்சி.. மகனை  மருமகளிடம் ஒப்படைத்து விலகி நிற்கலாம்.. அது நியாயமும் கூட.. அவனுடைய நண்பனிடம் ஒப்படைத்து விலகி நிற்பதா..?

“தோளுக்கு மேல வளந்துட்டா தோழன்டி…”

“அப்படித்தானே வைச்சிருந்தோம்.. கண்டிச்சா வளர்த்தோம்..?”

மனைவியின் மனக்குமுறலைத் தீர்த்து வைக்கும் வழி தெரியாமல் திகைத்தார் விசுவநாதன்.. பொதுவாக மீனாட்சிதான் அவரை அதட்டி ஆறுதல் படுத்துவாள்.. நட்ட சாதகமாக நியாயம் பேசுவாள்.. அப்படிப்பட்ட மனதிடம் கொண்டவள் பிள்ளையென்று வரும்போது பாகாக உருகிப் போய் விடுவாள்..

வாசலில் சப்தம் கேட்டது.. மீனாட்சியின் கை காய் நறுக்குவதை நிறுத்தியது.. வாசல் பக்கம் எட்டிப் பார்த்த விசுவநாதன்..

“விவேக் வர்றான் மீனாட்சி..” என்று கட்டியம் கூறினார்..

மீனாட்சியின் முகம் கனிந்தது.. எத்துனைதான் கோபம் இருந்தாலும் மகனிடம் அதைக் காட்டிக் கொள்ள மாட்டாள்.

‘இவள் இரும்பு மனுஷின்னு யார் சொன்னது…?’ மனைவியின் இயல்பில் விசுவநாதனின் மனம் கனிந்தது.

உள்ளே வந்த விவேக் டைனிங் டேபிளில் காய் நறுக்கிக் கொண்டிருந்த மீனாட்சியின் பக்கத்தில் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.. குனிந்து மீனாட்சியின் முகம் பார்த்தான்.. உம்மென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த மீனாட்சி மகனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.. தாய்க்கும் மகனுக்குமான ஊடலை வாத்சல்யத்துடன் ரசித்தார் விசுவநாதன்.. இது போன்ற பாசமான உணர்வுகளின் நுட்பங்களால் நெய்யப்பட்டதுதான் குடும்ப வாழ்வு…!

“ம்ம்மா…” கன்றின் மழலையாக அழைத்து மீனாட்சியின் மனதை அசைத்தான் விவேகானந்தன்.

அவனுக்குத் தெரியும்.. அந்த ஒரு அழைப்பில் மீனாட்சி மலையிறங்கி விடுவாள் என்று.. அன்னையின் கோபம் மதம் கொண்ட யானையென்றால்.. அதை அடக்கும் அங்குசம், மகனின் ‘அம்மா…’ என்ற ஓர் அழைப்பு..

“சும்மா பப்பா மாதிரி நடிக்காதேடா…”

அவள் பேசி விட்டாள் என்பதில் தகப்பனும், மகனும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்..

“இப்பச் சிப்பு என்ன வேண்டிக் கிடக்கு..?” அவர்களைக் கவனித்து விட்ட மீனாட்சி சிடுசிடுத்தாள்..

“சிரிச்சாத் தப்பாம்மா..?”

“என்னைப் பார்த்துச் சிரிச்சாத் தப்புத்தான்..”

“அப்ப அழுகவா…?”

மீனாட்சிக்கு கோபம் வந்து விட்டது.. அவள் என்ன சொல்கிறாள்.. மகன் எப்படி எடுத்துக் கொள்கிறான்..

“எல்லாத்துக்கும் எகனைக்கும் மொகனைக்குமா அர்த்தப் படுத்திக்குவியா..? உன் பிரண்டுகிட்ட ஒழுங்காப் பேசற.. அம்மாகிட்ட விதண்டாவாதம் பண்ற.. உனக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..?”

“என் அம்மா தங்க அம்மான்னு இருக்கு…”

விவேகானந்தன் தாயின் தோளைக் கட்டிக் கொண்டு தலையைச் சாய்த்துக் கொண்டான்.. மீனாட்சியின் கை அனிச்சையாக மகனின் தலையைக் கோதி விட்டது… தாய்க்கும் மகனுக்குமான நேசப் பிணைப்பைக் கண்ட விசுவநாதனுக்குப் பொறாமையாக இருந்தது.. அவரிடம் மகன் இந்த நெருக்கத்தைக் காண்பிப்பதில்லையே..

‘இதனாலதான் விவேக் இவளிடம் மனம் விட்டுப் பேசாம சத்யாவிடம் பேசியதில் கோபப்படறா..’

“ஐஸ் வைக்காதேடா.. நான் உன்மேல கோபமா இருக்கேன்.. என்கூடப் பேசாதே..”

“வேற யார்கிட்டப் பேச…?”

மகனின் இந்தக் கேள்வியில் வெறுத்துப் போனார் விசுவநாதன்.. அந்த வீட்டில் மீனாட்சி மட்டும்தான் இருக்கிறாளா..? அவர் இல்லையா…? அவரிடம் மகன் பேசினால் ஆகாதா..?

எங்கே…! அங்கே விசுவநாதன் என்ற குடும்பத் தலைவர் இருக்கும் பிரக்ஞை துளியும் இல்லாமல் தாயும் மகனும் மட்டும் இருப்பதைப் போலல்லவா மீனாட்சியும் விசேகானந்தனும் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள்.

மீனாட்சியாவது உன் அப்பாவிடம் பேசிக் கொள் என்று சொல்லியிருக்கலாம்.. அவள் அதைச் சொல்லாமல்..

“போடா.. போய் உன் பிரண்ட் சத்யாகிட்டேயே கொஞ்சிக்க..” என்று மகனைத் தள்ளி விட்டாள்..

“நான் அம்மாவைத்தான் கொஞ்சுவேன்..” விவேகானந்தன் மறுபடியும் மீனாட்சியின் தோள் சாய்ந்தான்.

மீனாட்சி துயரத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு வெளியே வந்தாள்.. அவள் மகன் மாறிவிடவில்லை.. அவளை விட்டுத் தூரமாக விலகிப் போய் விடவில்லை என்பதில் அவளுக்கு ஆயிரம் யானை பலம் வந்து விட்டதைப் போல இருந்தது.

“உனக்கு அந்த சுகுணாப் பெண் மேல இஷ்டமில்லைன்னா என்கிட்டச் சொல்லியிருக்கலாமில்ல.. சிங்காரிச்சுத் தலையில் கொட்டின கதையா.. பெண் பார்க்கப் போய் கருத்துக் சொல்லிட்டு வரனுமா..?” மனத்தாங்கலுடன் கேட்டாள்.. 

“ஏம்மா.. ஊருக்கே புத்தி சொல்கிறவங்க நீங்க.. உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா..? அந்தப் பொண்ணு அழகுதான்.. ஆனா கோடிஸ்வரிம்மா.. அவ கூட எனக்குக் கல்யாணம் நடந்தா அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதா இருக்காதும்மா.. அவளுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததாத்தான் இருக்கும்.. நம்ம வீட்டுக்கு மருமகளா அவ வாழ வரமாட்டா.. அவ வீட்டோட மாப்பிள்ளையா நான் வாழப் போக வேண்டியதா இருக்கும்.. அதில உங்களுக்குச் சம்மதமா..?”

“சேச்சே…! இதையெல்லாம் நான் யோசிக்கலைடா விவேக்.. உங்கப்பாவைக் கூறு கெட்ட மனுசன்னு சொல்லிட்டு.. நானில்ல கூறு கெட்ட கூதரையா இருந்திருக்கேன்… கோடிஸ்வர வீட்டு சம்பந்தம் தேடி வரவும் மகனுக்குக் கிடைக்கிற நல்ல வாழ்க்கைய மறிக்கக் கூடாதுன்னு நினைச்சிட்டேண்டா..”

“ஏம்மா.. பணத்தை விட சுயமரியாதை முக்கியமில்லையா..? நான் உங்க மகன்ம்மா.. பணம்தான் முக்கியம்ன்னு நீங்க சொல்லி வளர்க்கலையே.. மரியாதைதான் பெரிசுன்னுல்ல சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கீங்க..”

“என் தங்கமே…!”

மீனாட்சி உருகிவிட்டாள்.. மகனின் கன்னத்தில் கைவிரல்களை வைத்து திருஷ்டி கழித்துக் களித்தாள்.. ஏதோ நினைவில் அவள் முகம் வாடியதில்…

“இப்ப என்ன…?” என்று அதட்டினான் மகன்..

“அந்தப் பொண்ணு அடக்கமா.. குடும்பப் பாங்கா.. அழகா இருந்தாடா விவேக்..” பெருமூச்சு விட்டாள் மீனாட்சி..

“ம்ம்மா.. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையில் அழகு.. அடக்கமா இருக்கிற சுகுணா ஒர்வகையில் அழகுன்னா.. துடுக்குத்தனமா வாயடிக்கிற எதிர்வீட்டு வந்தனா வேறொரு வகையில் அழகு..” யதார்த்தமாகச் சொல்வதைப் போல தாயின் மனதில் விதையை விதைத்து மாடியேறி விட்டான் விவேகானந்ததன்.

விசுவநாதனும் மீனாட்சியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. இருவரின் முகங்களிலும் பிரகாசம்..

“என்னடி மீனாட்சி.. இவன் இப்படிச் சொல்லிட்டுப் போறான்..?”

“இந்த யோசனை நமக்கு ஏன் வரலை..?”

“தெரியலையே….”

“கையில வெண்ணையை வைச்சுக்கிட்டு நெய்யைத் தேடி அலைஞ்சிருக்கோம்.. வந்தனா அழகானவ.. அத்தை, அத்தைன்னு உயிரா இருப்பா.. மாமான்னு மரியாதை கொடுப்பா.. பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்திலே அவ பேரில இடம் வாங்கி அபார்ட்மெண்ட்க் கட்டி வாடகைக்கு விட்டிருக்காங்க.. சீர் செனத்தியிலே குறைவைக்காம சிறப்பாச் செய்வாங்க.. இத 

விட அருமையான இடம் எங்கே தேடினாலும் கிடைக்காது..” மீனாட்சி ஒன்றை நினைத்து விட்டால்.. நடந்திவிட்டுத்தான் வேறு வேலையைப் பார்ப்பாள்..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link