Chapter 22

0Shares

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை திக் பிரமையுடன் பார்த்தாள் வந்தனா.. மணப் பெண்ணின் அலங்காரத்தில் தேவதையைப் போல ஜொலித்தாள்.. சற்று நேரத்தில் பெண்ணழைக்க வந்து விடுவார்கள்.. மண்டபத்திற்குச் சென்றாக வேண்டும்..

‘அதன் பின்…?’

நினைத்துப் பார்க்க முடியாமல் இமைகளை மூடினாள்.. கண்ணீர் வழிந்தது.. அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு சற்று முற்றும் பார்த்தாள்.. அறையில் அவளைத் தவிர யாருமில்லை.. திருமணம் வரை வந்து விட்டதை அவளால் நம்ப முடியவில்லை..

எந்த நொடியில் அந்தப் பேச்சு ஆரம்பமானதென்று அவள் அறியவில்லை.. ருக்மிணியும் மீனாட்சியும் கூடிக்கூடிப் பேசியதை அவள் சந்தேகிக்கவில்லையே… அது வழக்கமாக நடக்கும் சிநேகிதக் குழாவல் என்று நினைத்து விட்டாளே.. விசுவநாதனும் நாராயணனும் உலாவப் போகிறேன் பேர்வழியென்று  அவர்களின் ஏரியாவில் இருந்த பூங்காவில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசி அளவளாவியதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டாளே.. எதிரெதிர் வீடுகளில் இருப்பவர்கள்.. வருடக் கணக்கில் சொந்த பந்தங்களாக பேசிக் பழகிக் கொண்டிருப்பவர்கள்.. சந்தேகப்பட என்ன இருக்கிறது…?

அவள் தேர்வுகளை எழுதி முடித்து விட்டு.. ரிசல்ட்டுக்காக காத்திருந்த போதுதான் என்ன இருந்தது என்று தெரிய வந்தது..

“வந்தனா… நம்ம மீனாட்சியைப் பத்தி என்ன நினைக்கிற..?”

ஒரு பொன்மாலைப் பொழுதில்.. குடும்பத்தினர் ஹாலில் ஒன்று கூடி உட்கார்ந்து காபி, டிபனை மொக்கிக் கொண்டிருந்த போது ருக்மிணி இந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“எந்த மீனாட்சிம்மா…?”

“எதிர் வீட்டு மீனாட்சிடி…”

“ஓ..! நம்ம மீனாட்சியத்தையைக் கேட்கறிங்களா..? அவங்க சூப்பர் லேடியாச்சே.. எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்ன்னு உங்களுக்குத் தெரியுமே…”

“அவங்க மகனுக்குப் பெண் பார்த்துக்கிட்டு இருக்காங்க..”

“அதுவும் தெரியுமே.. என் கிளாஸ்மேட் வீணாவோட அக்கா சுகுணாவைப் பெண் பார்க்க வந்திருந்தாங்களே.. அப்ப நானும் அங்கே இருந்தேனே.. அதுதான் ஊத்திக்கிச்சே..”

“இப்ப அதைச் சொல்லுடின்னு நான் சொன்னேனா…?”

எதற்காக ருக்மிணி எரிந்து விழுகிறாள் என்று தெரியாமல் விழித்தாள் வந்தனா.. அவள் இப்போது என்ன தவறு செய்து விட்டாள் என்று அவளது தாய் கோபம் கொள்கிறாள்..? இல்லாததையா சொல்லி விட்டாள்…?

“அம்மா.. அத்தையை நினைத்தால் எனக்குப் பாவமாத்தான் இருக்கு.. அத்தைக்கு மருமகளாய் வர அந்த சுகுணா அக்காவுக்குத்தான் கொடுத்து வைக்கலை…”

தாயின் கோபத்தைப் போக்குவதற்காக வந்தனா சொன்ன வார்த்தைகள்தான் அவளுக்கு வினையாக முடிந்து விட்டன.

“அப்ப.. மீனாட்சிக்கு மருமகளாகப் போக கொடுத்து வைத்திருக்கனும்ங்கிற…?”

“ஆமாம்மா… ஆமாம்.. மீனாட்சி அத்தைக்கு மருமகளாகப் போகக் கொடுத்து வைத்திருக்கணும்தான்.. ம்ஹீம்.. யாருக்குக் கொடுத்து வைத்திருக்கோ…?”

விவேகானந்தனின் நினைவில் பல்லைக் கடித்தபடி எகத்தாளமாக அவள் சொன்னதை ஏக்கத்துடன் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொண்டு மகளுக்கு அனர்த்தம் விளைவித்து விட்டாள் ருக்மிணி.

தேர்வு முடிவுகள் வெளியாகி வந்தனா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டாள்.. வேலைக்குப் போகிறேன் என்று அவள் ஆரம்பிக்க.. அதை உன் கணவன் வீட்டிலிருந்து போய்க் கொள் என்று அவளது வீட்டில் சொல்லி விட்டார்கள்.

“என்னது.. என் ஹஸ்பெண்ட் வீட்டில இருந்து போய்க்கவா..? எவன்.. அவன்…?”

“எதிர்வீட்டு விவேகானந்தன்…!”

“என்னது…!”

நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவள் உட்கார்ந்து விட்டதை யாரும் கவனிக்கவில்லை.. மறுநாள் அவளுடைய திருமண நிச்சயதார்த்தம் என்றார்கள்.. பதறிக் கொண்டு அவள் விசாரிப்பதற்குள் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வீடு முழுவதும் உறவினர் கூட்டம் வந்து இறங்கி விட்டது.. தாயையும் தந்தையையும் தனிமையில் சந்திக்க அவள் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் பலனற்றுப் போயின..

“அம்மா…”

“என்னடி…? சீக்கிரம் சொல்லு.. பாலுக்குச் சொல்லி வைக்கணும்.. கேட்டரிங்காரன் எப்ப வருவானோ.. என்னன்னு கேக்கணும்.. வருண்.. மொட்டை மாடியில் ஷாமியானாக் கட்ட ஆள் வந்தாச்சான்னு பாரு..”

“என் பர்மிசன் இல்லாம எப்படிம்மா மேரேஜை பிக்ஸ் பண்ணினீங்க…?”

“அறைஞ்சேன்னா பாரு.. நீதானேடி மீனாட்சிக்கு மருமகளாப் போகக் கொடுத்து வைத்திருக்கணும்னு சொன்ன.. வருண்.. எங்கேடா போய் தொலைஞ்ச…?”

வந்தனா நின்றிருப்பதை லட்சியமே பண்ணாமல் ருக்மிணி பரபரப்பாகச் சென்று விட்டாள்.. வந்தனாவுக்கு அழுகையழுகையாய் வந்தது.. பேச்சுவாக்கில் அவள் எதையோ சொல்லப் போக.. அது திருமணம் வரை கொண்டு வந்து விட்டு விடும் என்று அவள் கனவா கண்டாள்…? அவள் பேசியதை பெரிதாக எடுத்துக் கொண்டு அவளைப் பெற்றவர்கள் விவேகானந்தனின் வீட்டில் சம்பந்தம் பேசி முடித்து விட்டார்களே.. அந்த விவேகானந்தன் என்னவென்று நினைப்பான்..?

‘வேறென்ன நினைப்பான்..? அவன் மீது எனக்கு ஆ….சை… அதனால் சுகுணாக்காவின் மனதைக் கலைத்து கல்யாணம் பேச்சை நிறுத்த வைத்து விட்டு.. இந்தப் பக்கம் என்னைப் பெத்தவங்களை தூண்டி விட்டு.. அவனை அடையப் போகிறேன்னு படு மட்டமா நினைப்பான்…’

நினைக்க நினைக்க அவளுக்கு ஆறவில்லை.. துயரம் தொண்டையை அடைத்தது.. சொல்லி அழுதால் தீர்ந்து விடும் துயரமா இந்தத் துரயம்..? சொல்வதாக இருந்தாலும்.. யாரிடம் சொல்லி அழுவது..? பெற்றவளே.. நீதானேடி எதிர்வீட்டு மீனாட்சிக்கு மருமகளாகப் போக யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்று சொன்னாய் என்று கேட்டு விட்டாள். 

‘அறிவு கெட்ட அம்மாவே.. யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோன்னுதான சொன்னேன்..? எனக்குக் கொடுத்து வைக்கலையேன்னா ஏக்கப் பட்டேன்..?’

தனிமையை நாடி மொட்டை மாடிக்குப் போனாள்.. அங்கே ஷாமியானா கட்ட வந்திருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்த நாராயணன் மகளைப் பார்த்ததும்.

“என்னம்மா..?” என்று கனிவுடன் கேட்டார். தந்தையின் கனிவில் துளியளவு தைரியம் வரப் பெற்றவளாக “அப்பா.. உங்களிடம் கொஞ்சம் பேசனும்..” என்றாள் வந்தனா..

நாராயணனின் புருவங்கள் சுருங்கின.. சற்றுத் தள்ளி நடந்து நின்றார். வந்தனா தந்தையின் அருகில் வந்து தயக்கத்துடன் முகம் பார்த்தாள்.. நாராயணனின் முகத்தில் தெரிந்த கறார்த்தனம் அவளது வயிற்றைக் கலக்கியது.. மொட்டை மாடியின் கைபிடியில் சரிந்திருந்த தென்னாங்கீற்றுக்களை வருடியபடி திக்கித் திணறிச் சொன்னாள்.

“எனக்கு இந்த மேரேஜில் இஷ்டமில்லைப்பா..”

“நினைச்சேன்…”

“என்னப்பா நினைச்சீங்க…”

“இந்த பக்குவம் இல்லாத பொண்ணு என்ன குண்டைத் தூக்கிப் போடப் போடுதோன்னு நினைச்சேன்.. அதைப் போலவே வாய் விடற.. கல்யாணம் என்கிறது உனக்கு விளையாட்டா இருக்கா..?”

“அப்பா…”

“பேசாதே.. கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்..! விளையாட்டு விசயமில்லை.. என்ன.. எப்போதும் போல விவேகானந்தனுடன் வம்பிழுத்து சண்டை போட்டியா…?”

“என்னை சண்டைக்காரின்னே முடிவு கட்டிட்டீங்களாப்பா…”

வந்தனாவுக்குத் தாங்கவில்லை.. அவளது குணாதிசயத்தையே மாற்றி நினைக்க வைத்து விட்ட பகையாளியுடன் அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறது.. அதைத் தடுக்கும் வழி தெரியாமல் அவள் அலை மோதி நிற்கிறாளே.. நாளை அவன் மீது இருக்கும் ஆசையினால் அவள்தான் தவ்விக் கொண்டு வந்து அவனுக்கு கழுத்தை நீட்டியதாக பட்டம் கட்டி விடுவானே..

மகனின் மனதில் அலை மோதும் எண்ணங்களைப் பற்றிய அக்கறை கிஞ்சித்தும் இன்றி சகட்டு மேனிக்கு அவளைச் சாட ஆரம்பித்தார் நாராயணன்.

“விவேகானந்தனைப் பற்றி எனக்குத் தெரியும்.. தெரியாத ஆளா அவர்..? இன்று நேற்றுப் பழக்கமில்லை.. அவர் ஸ்கூல் போன வயதிலிருந்தே பார்த்துக்கிட்டு இருக்கேன்.. பி.ஈ. படித்து பேங்க் மேனேஜரா வேலை பார்க்கிறார்.. சென்ட்ரல் கவர்ண்ட்மெண்ட் உத்தியோகம்.. சொந்த வீடு.. கிராமத்தில் பொன் விளையிற பூமி ஏக்கர்க் கணக்கில் இருக்கு.. வீட்டுக்கு ஒரே பையன்.. ஆளும் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கார்.. எங்கே கிடைப்பார் இப்பேற்பட்ட மாப்பிள்ளை..? கோடிஸ்வர வீட்டுப் பெண்ணை வேண்டாம்ன்னு சொன்ன சுயமரியாதை சிங்கம்..! இப்பேற்பட்டவர் மாப்பிள்ளையாய் கிடைக்க நான்தான் கொடுத்து வைச்சிருக்கனும்.. போ.. சிறுபிள்ளைத்தனமாய் எதையும் பேசாம கல்யாணப் பொண்ணாய் லட்சணமாய் கலகலப்பா இரு…”

அதற்கு மேல் மகளுக்கும் அவருக்கும் பேச்சில்லை என்பதைப் போல அவர் நகர்ந்து விட்டார்.. அழுகையை அடக்கியபடி மாடிப் படிகளில் தடதடத்து இறங்கினாள் வந்தனா. எதிரில் வருண் வந்தான்.

“வருண்…” தம்பியாவது கை கொடுக்க மாட்டானா என்ற பரிதவிப்புடன் உருக்கமாக அழைத்தாள்.. அவனோ..

“பேசாமப் போயிரு.. நானே செம கடுப்பில் இருக்கேன்.. என் குருவுக்கு ஏத்தவளா நீ.. எப்படியோ அப்பாம்மாவைத் தாஜா செய்து குரு தலையில விழப் போறயில்ல..? இப்பவே சொல்லிட்டேன்.. நாள, பின்னே குருவுக்கும் உனக்கும் சண்டை வந்தா.. நான் குருபக்கம்தான் சப்போர்ட் பண்ணுவேன்.. உன்னை ஏன்னு கூடக் கேட்க மாட்டேன்..” என்று அறிவித்தான்.

வந்த கோபத்தில் “போடா…” என்று கையை விசிறிவிட்டுக் கீழே இறங்கி வந்த விட்டாள்.. தடையின்றி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இதோ.. மறுநாள் திருமணம் என்று வந்து நின்று விட்டது..

‘என்மீது உனக்கு ஆசை….’ அவனது எகத்தாளமான குரல் காதுகளில் ஒலித்ததில் அவள் இமைகளை மூடிக் கொண்டாள்.

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link